articles

img

வழிகாட்டும் சின்னியம்பாளையம் தியாகிகள் - கே.எஸ்.கனகராஜ்

இரண்டாம் உலகப் போரினை ஒட்டி தேவை அதிகரிக்க, கோவை பஞ்சாலைகள் அசுர வேகத்தில் உற்பத்தியை அதிகரித்து பெரும் லாபத்தை அடைந்து கொண்டிருந்த காலம் அது. லாபம் அதிகரிக்க அதிகரிக்க, உழைப்பு சுரண்டலும் தீவிரமானது. அதை எதிர்த்து போராட்டங்களும் தீவிரமடைந்தன. பஞ்சாலைத் தொழிலாளர்களின் தொடர் போராட்டங்களால் கொதிநிலையில் இருந்தது கோவை.

கோவை பஞ்சாலைகளின் தோற்றம்

1888-ஆம் ஆண்டில் கோவையின் முதல் பஞ்சாலை ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேய முதலாளியால் துவங்கப்பட்டது. பஞ்சாலைத் தொழிலுக்கு கோவையில் இருந்த சாதகமான சூழலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு உற்பத்தி முதலாளிகளோடு கொண்டிருந்த நெருக்கமும் இணைந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் பல பஞ்சாலைகள் பெருகின. இதன் காரணமாக கோவை “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று அழைக்கப்பட்டது.

தொழிலாளர் மீதான சுரண்டலும் போராட்டங்களும் 

துவக்க காலத்தில் கோவை பஞ்சாலைகளில் நிலைமை மோசமாக இருந்தது. 16 மணி நேர வேலையும், மிகக் குறைந்த கூலியுமே நடைமுறையாக இருந்தது. தொழிலாளர்களின் வேலைகளை கண்காணிக்க நிர்வாகத்தின் விசுவாசிகளாக மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பஞ்சாலையிலும் கணிசமான எண்ணிக்கையில் பெண்கள் பணிபுரிந்தனர். குறிப்பாக ‘ரீலிங்’ பிரிவில் அதிகளவில் பெண் தொழிலாளர்கள் பணியாற்றினர்.

மில் தொழிலாளர் சங்கம்

1936-ஆம் ஆண்டில் கோவையில் கம்யூனிஸ்டுகள் தலைமையில் மில் தொழிலாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது. தொடர்ந்து பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராட்டங்களை நடத்தினர். வேலை நேரம், சட்டப்படியான ஊதியம், பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம், பிரசவகால விடுப்பு, பணியிட பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்றன.

ஆங்கில அரசின் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு நடைபெற்ற தீரம் மிக்க போராட்டங்களின் விளைவாக, தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க நீதிபதி வெங்கட்ராமய்யா தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் முன் தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க தலைவர் பி. ராமமூர்த்தி ஆஜராகி திறமையாக வாதாடினார். ஊதிய உயர்வு, பணிச் சூழல் மேம்பாடு ஆகியவற்றை ஆணையம் பரிந்துரைத்தது. இந்த வெற்றி தொழிலாளர்கள் இடையே தொழிற்சங்க இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து எல்லா பஞ்சாலைகளுக்கும் தொழிற்சங்க இயக்கம் பரவியது. பெண் தொழிலாளர்களும் அமைப்பு ரீதியாக திரட்டப்பட்டனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை செங்கொடி தொழிற்சங்கம் முன்வைத்தது. பிரசவத்திற்கு முன் ஆறு வாரங்களும், பின்னர் ஆறு வாரங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. 1935-ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசு பிரசவகால உதவிகள் வழங்க சட்டம் கொண்டு வந்த போதும், பஞ்சாலை நிர்வாகிகள் அதனை நடைமுறைப்படுத்த மறுத்தனர். கோவை ராஜலட்சுமி மில் நிர்வாகம் திருமணம் ஆன பெண் தொழிலாளர்களிடம் ஐந்து ஆண்டுகளுக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதிமொழி கேட்கும் அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொண்டது. தொழிற்சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பெண் தொழிலாளர்களின் உரிமைப்போர்

பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் மேஸ்திரிகளால் பாலியல் தொந்தரவுக்கும் உள்ளாக்கப்பட்டனர். இவற்றுக்கு எதிராக செங்கொடி தொழிற்சங்கங்கள் தீவிரமாக போராடின. பெண்கள் அதிகம் பணிபுரியும் பிரிவுகளில் பெண் மேஸ்திரிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக சில பஞ்சாலைகளில் பெண் மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப்போர் காலத்தில் கிடைத்த அபரிமிதமான லாபம் முதலாளிகளை மேலும் உழைப்பு சுரண்டலை அதிகரிக்கத் தூண்டியது. இதன் காரணமாக தொடர் போராட்டங்கள் வெடித்தன. லட்சுமி மில்லில் நடைபெற்ற போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள் ராமமூர்த்தியும், ஜீவாவும் நேரடியாக வந்து வழிகாட்டினார்கள்.  இதனால் ஆத்திரமுற்ற பஞ்சாலை நிர்வாகங்கள், ஒவ்வொரு மில்லிலும் தொழிற்சங்க இயக்கத்தில் முன்னின்று போராடியவர்களை பழிவாங்கத் துவங்கின. வேலை மறுப்பு, தற்காலிக பணிநீக்கம் என பல்வேறு வகையில் தொல்லைகள் கொடுக்கப்பட்டன. பெண் தொழிற்சங்க தலைவர்களும் இந்த பழிவாங்கல்களிலிருந்து தப்பவில்லை.

தொழிற்சங்க வீரர்களின் தியாகம்

1944-ஆம் ஆண்டு கோவை ரங்கவிலாஸ் மில்லில் நடந்த சம்பவம் இந்த பழிவாங்கல்களின் உச்சகட்டமாக அமைந்தது. பெண் தொழிலாளிகளை அணிதிரட்டுவதில் முன்னின்ற ராஜி என்ற பெண் தொழிற்சங்க தலைவி, நிர்வாக ஆதரவு ரவுடிகளால் கடத்திச் செல்லப்பட்டு, மேஸ்திரி பொன்னான் என்பவரால் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.  இந்த கொடூரச் செய்தி அறிந்து வந்த தொழிற்சங்க தலைவர்களும் இளம் தோழர்களுமான ராமையன், ரங்கண்ணன், வெங்கடாச்சலம், சின்னையன் ஆகியோரும் பெண் தொழிலாளர்களும் பொன்னானை வழிமறித்து நியாயம் கேட்டனர். அப்போது நடந்த கைகலப்பில் பொன்னன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாட்களுக்குப் பிறகு இறந்து போனான். அந்த பஞ்சாலையின் தொழிற்சங்கப் பணியில் துடிப்போடு ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு தோழர்களையும் பழிவாங்க காத்திருந்த நிர்வாகம், ஆங்கிலேய அரசின் துணையோடு கொலை வழக்கைப் புனைந்தது. நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு வரும் போதெல்லாம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

தூக்கு தண்டனை!

உயர்நீதிமன்றம் நான்கு தோழர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கியது. கம்யூனிஸ்ட் இயக்கம் அன்றைய உச்சநீதிமன்றமான லண்டன் பிரிவி கவுன்சில் வரை மேல்முறையீடு செய்தது. தொழிலாளர்களுக்காக இங்கிலாந்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் டி.என்.பிரிட் ஆஜராகி வாதாடினார்.  நான்கு தோழர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டால் ஒருவருக்கு மட்டுமே தண்டனை என்ற நீதிமன்றத்தின் சலுகையை நால்வரும் ஒரே குரலில் மறுத்தனர். புனைந்தது பொய் வழக்கு என்பதில் உறுதியாக இருந்தனர். நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு கோவை தொழிலாளர்களின் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பாக, அவர்களை சிறையில் சந்திக்கச் சென்ற தலைவர்கள் பி.ராமமூர்த்தி, கே.ரமணி, பூபதி ஆகியோரிடம் கண்ணீர் மல்க நின்று, “சோசலிச லட்சியத்தை வெல்வதற்கான போராட்டத்தை தொடருங்கள்” என்று ஆறுதல் படுத்தி அனுப்பினர் தியாகிகள். “தொழிலாளர்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக எங்களை ஒரே குழியில் புதையுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். 1946 ஜனவரி 8 அன்று அதிகாலை 5.00 மணிக்கு கோவை மத்திய சிறைச்சாலை அதிர “புரட்சி ஓங்குக, உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கத்துடன் தூக்குமேடை ஏறினர் நால்வரும். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களது உடல்களை சுமந்து சென்று, அவர்களின் கடைசி விருப்பப்படி சின்னியம்பாளையத்தில் ஒரே குழியில் அடக்கம் செய்தனர். இந்த தியாகம் தொழிற்சங்க இயக்கத்தை பின்னுக்குத் தள்ளும் என்று முதலாளிகள் நினைத்தனர். ஆனால் மாறாக, தியாகிகளின் தியாகத்தால் உத்வேகம் பெற்ற தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது. 1946 ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி ஸ்டேன்ஸ் மில்லில் நடைபெற்ற போராட்டத்தில், பெண் தொழிற்சங்க தலைவர்கள் அம்மு, பாப்பம்மாள் உள்ளிட்ட 11 பேர் ஆங்கிலேய காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகினர். அலை அலையாய் பரவிய போராட்டங்களின் விளைவாக ஒவ்வொரு உரிமையாகப் பெற்றனர் தொழிலாளர்கள். அது மரியாதை மிக்க வாழ்வை பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தித் தந்தது. விடுதலைக்கு முன்பே ஆலைகளில் தொழிற்சங்க உரிமைகளுக்காக மட்டுமல்லாது, பாலின ஒடுக்குமுறைக்கு எதிராகவும் சமத்துவத்திற்காகவும் செங்கொடி இயக்கம் வீரியமிக்க போராட்டங்களை தமிழக மண்ணில் முன்னெடுத்தது.

புதிய சவால்களும் போராட்டப் பாதையும்

ஆனால் 1990-களுக்குப் பிறகு பஞ்சாலை முதலாளிகள் புதிய உத்திகளை கையாண்டனர். அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்கள், தங்கள் கொள்ளை லாபக் கனவுக்கு பெரும் தடையாக இருப்பார்கள் என்று கருதினர். புதிய தாராளமயக் கொள்கைகளைப் பயன்படுத்தி பஞ்சாலைகளை மாற்றியமைத்தனர். சிறு சிறு அலகுகளாகப் பிரித்து கிராமங்களுக்கு ஆலைகளை மாற்றினர். இந்த கிராமப்புற ஆலைகளில் மிகக் குறைந்த கூலிக்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து பெண் உழைப்பாளிகளை கொண்டு வந்து, வளாகத்தில் அடைத்து வைத்து ஒப்பந்த ஊழியர்களாக வேலை வாங்கி வருகின்றனர். தற்போது வெளி மாநில புலம்பெயர் தொழிலாளர்களையும் ஒப்பந்த ஊழியர்களாக்கி உள்ளனர். ஒன்றிய அரசுக்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகத்தைச் சேர்ந்த பஞ்சாலைகள் நான்கு ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ளன. அவற்றை இயக்க எந்த நடவடிக்கையும் ஒன்றிய அரசு எடுக்க மறுக்கிறது. கடும் உழைப்பு சுரண்டல் நிகழ்ந்து வரும் நிலையிலும் கூட பஞ்சாலைகள் இன்று நெருக்கடியை சந்தித்து வருகின்றன. மூலப்பொருளான பருத்தி விலையில் நிலையில்லாத தன்மை, ஒன்றிய அரசின் கடும் வரிகள், அதிகரிக்கும் பணவீக்கம், பெரு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதரவான ஒன்றிய அரசின் நிலைப்பாடு ஆகியவற்றின் காரணமாக பஞ்சாலைத் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது. ரிலையன்ஸ், பிர்லா, டாடா போன்ற பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் இன்று ஜவுளித் தொழிலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நாடெங்கிலும் சிறு நகரங்களில் கூட இவர்கள் விற்பனை நிலையங்களைத் திறந்து வருகின்றனர். இந்திய பருத்தி கழகத்தின் (சிசிஐ) நிர்வாக குழுவில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒருவர் கூட உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் கொள்கைகளால் தொழில் நெருக்கடி ஏற்படும் போது, பல்லாயிரக்கணக்கில் திரண்டு அரசுக்கு எதிராக போராடி நிர்பந்தம் தர அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட தொழிலாளர்களும் இன்று இல்லை.

முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் ஒரு பகுதியான நவீன தாராளமயம் அதற்கே உரிய குணங்களோடு சிறு, குறு உற்பத்தியாளர்களை விழுங்க காத்துக் கிடக்கிறது. இதை உணர்ந்து அக்கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய உற்பத்தியாளர்கள் ஒன்றிய அரசு ஏதாவது செய்யும் என்று இலவு காத்த கிளி போல காத்துக் கிடக்கின்றனர். இன்றைய சூழலில் தொழிலாளர்கள் மற்றும் சிறு-குறு உற்பத்தியாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து சமரசமின்றி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அந்தப் போராட்டத்தில் சின்னியம்பாளையம் தியாகிகளின் தியாகம் நமக்கு என்றென்றும் உத்வேகத்தைத் தந்து கொண்டே இருக்கும்.