விழுப்புரம், ஜன. 5 - தமிழகத்தில் தொழிலாளர்கள், விவசாயி கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு தமிழகத்தில் இடது ஜனநாயக மாற்று அரசியலை முன்னெடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாடு அறை கூவல் விடுத்துள்ளது.
பேரணி - பொதுக்கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24-ஆவது மாநாடு விழுப்புரம் ஆனந்தா மஹாலில், ஜனவரி 3 அன்று துவங்கி ஜனவரி 5 வரை நடை பெற்றது. மாநாட்டின் துவக்கமாக செந் தொண்டர் அணிவகுப்பு - பேரணியும், பல்லா யிரக்கணக்கானோர் கலந்துகொண்ட மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு நடை பெற்றது.
தலைவர்கள் பங்கேற்பு
இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ஏ.கே. பத்மநாபன், உ. வாசுகி, பி. சம்பத், பெ. சண்முகம், ஆர். கருமலை யான், மூத்த தலைவர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஏற்றத் தாழ்வுகளுக்கு இடதுசாரி மாற்றே தீர்வு
இந்நிலையில், 3 நாள் மாநாட்டின் முடிவில், ஞாயிறன்று மாநாட்டு அறைகூவல் வெளியிடப்பட்டது. அதில், “தமிழகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழி லாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூ கத்தின் மேல் தட்டில் இருக்கும் ஒரு சிறு கூட்டத்தினர் நலன்களை பாதுகாக்கிற கொள்கைகளை அகற்றி உழைக்கும் மக்க ளின் நலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகள் கொண்ட இடதுசாரி மாற்று தமிழகத்தில் வலுப்பெற வேண்டும். நவீன தாராளமய பொருளாதாரப் பாதை உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகளையும், சீரழிவுகளையும் சரிசெய்வதற்கான வல்லமை இடது மாற்றுக்கே உண்டு. இடது ஜனநாயக மாற்று மட்டுமே தமிழக மக்களுக்கான உண்மையான விடியலாக அமைந்திடும். இந்த வரலாற்று மாற்றத்தை சாதிக்க ஜனநாயக சக்திகள், மக்கள் இயக்கங்கள், அனைத்துத்தரப்பு உழைக்கும் வர்க்கங்கள், மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் மனிதநேய சமூக ஆர்வலர்கள், அறிவுத்துறையினர் என அனை வரும் முன்வர வேண்டுமென இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24-ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது” என்று அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
உழைக்கும் மக்களின் நலன்கள் புறக்கணிப்பு
அறைகூவலில் மேலும் கூறப்பட்டிருப்ப தாவது: இதுகாறும் ஒன்றிய அரசு பின்பற்றி வந்த கொள்கைகள் தமிழகத்தின் உழைக்கும் மக்களுக்கு பெரும் பாதிப்புக்களையே ஏற்படுத்தி வந்துள்ளன. அனைத்து அதி காரங்களையும் தன்னிடம் கொண்டுள்ள ஒன்றிய அரசின் மக்களுக்கு விரோதமான கொள்கைகள் தமிழகத்திலும் அமலாக்கப் பட்டு வந்துள்ளன. அந்தப் பொருளாதாரக் கொள்கைகளை தமிழகத்தில் அமலாக்கி வரும் பாதையில் தான் மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அரசாங்கங்களும் பயணித்து வந்துள்ளன. தமிழக வரலாற்றில் மக்களிடையே அரை நூற்றாண்டுக்கும் மேலாக செல்வாக்கு செலுத்தி வந்துள்ள திராவிட இயக்கம் மற்றும் அதன் கட்சிகள் சமூகத் தளத்தில் சீர்திருத்தங் களையும் சில முன்னேற்றங்களையும் சாதித்துள்ளது உண்மையே!. எனினும், பிரதேச முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாத்து வந்துள்ள இந்தக் கட்சிகள், உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகி கொண்டிருக்கிற உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை உறுதிப்படுத்த தவறிவிட்டன. இத்தகைய சூழலில் மாற்றுக் கொள்கைகள் இன்றியமை யாத தேவையாக உள்ளது.
தமிழகத்திற்கு தீங்கு பயக்கும் நவ தாராளமய கொள்கை
தற்போது ஆட்சியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கமானது, தமிழ்நாட்டுக்கு உரிய நிதி அளிக்காதது; மாநில உரிமைகள் பறிப்பு, இந்தித் திணிப்பு என ஒன்றிய அரசு கூட்டாட்சி முறைக்கு எதி ராக பல நடவடிக்கைகளை மேற்கொள்கிற போது அவற்றை வலுவாக எதிர்க்கிறது. அதேபோன்று பாரதிய ஜனதா கட்சியின் வகுப்புவாத நடவடிக்கைகளையும் திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. திமுகவின் இத்தகைய நிலைபாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது. அதேநேரத்தில், நவீன தாராளமய பொருளாதாரப் பாதையில் திமுக அரசு பயணித்து வருகிறது. குறிப்பாக, தொழி லாளர்கள், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினருக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பல முக்கியத் துறைகளில் வெளிமுகமை நிறுவனங்கள் வழியாக பணியமர்த்துவது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதிய நிதி வழங்காதது, சொத்துவரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தியது போன்ற தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்வது தவறானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
குழந்தைகள், பெண்கள், தலித்துக்கள் மீதான வன்முறை அதிகரிப்பு
வேலையின்மை, நிரந்தர பணியிடங்கள் ஒழிப்பு, பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறை, பட்டியல் பழங்குடியின மக்கள் மீது நடக்கும் தாக்குதல்கள், மனித உரிமை மீறல்கள், சாதி ஆணவப் படுகொலைகள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. மேலும், தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது, காவல்துறை அத்துமீறல்கள், ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற அனைத்தும் மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே, இவற்றிற்கு எதிராக மக்கள் வலுவான ஒன்றுபட்ட குரலை எழுப்பிட வேண்டும். மக்களின் வாழ் வாதாரத்தை பாதுகாப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக குரலெழுப்பி போராடும். கட்சி நடத்தும் போராட்டங் களுக்கும், இயக்கங்களுக்கும் மக்கள் பேரா தரவு அளிக்க வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.
உறுதிமிக்கப் போராட்டத்தை சிபிஎம் முன்னெடுக்கும்!
ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து உறுதியான மக்கள் இயக்கம் கட்டுகிற பணி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும். மாநி லத்திற்குரிய நிதிப் பங்கீட்டை ஒன்றிய அரசு முறையாக ஒதுக்கிட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தும். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம் பாது காப்பதற்கும் வலுவான குரலை எழுப்பிடும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழகத்தில் கீழ்க்கண்ட மக்கள் நலன் காக்கும் பிரச்சனைகளில் மாற்று நடவடிக்கைகளுக்காக குரலெழுப்பும்
மாநாட்டுப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
* தொழிலாளர் நலன் பாதுகாப்பு, முறைசாராத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்துவது, சமூக பாதுகாப் போடு கூடிய வேலைவாய்ப்பை உருவாக்குவது.
* விவசாய விளைபொருட்களுக்கு நியாய விலையை உறுதி செய்வது, 100 நாள் வேலைதிட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூலி உயர்வு வேலை நாட்களை அதிகரிக்கச் செய்வது, நகர்ப்புறங் களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துவது, விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலம் கையகப்படுத்தலை எதிர்ப்பதோடு, கிராமப்புறங்களில் நில மறு விநியோகத்திற்கான கோரிக்கைகளை வலியுறுத்துவது.
* அரசுத்துறை மற்றும் பொதுத்துறையில்- ஒப்பந்தம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர், அரசு ஊழியர், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்வது, அரசு மற்றும்கலைக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது, வெளிமுகமை என்கிற அடிப்படையில் பணியமர்த்தப்படும் அரசாணைகளை ரத்து செய்யக் கோருவது.
* இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாக சூறையாடுவதை கைவிடக் கோருவது, தமிழ கத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளையும் வலியுறுத்துவது.
* மாநில நலன்களுக்கு விரோதமாக அந்நிய மூலதனத்தை வரன் முறையற்ற ஏராளமான சலுகைகளை அளித்து கொண்டு வருகிற அரசின் கொள்கைகளை எதிர்ப்பதோடு, உள்நாட்டு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கை களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.
* கடந்த காலங்களில் அதிகமான வேலைவாய்ப்புகளை அளித்து வந்திருக்கக் கூடிய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களான சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள், சிமெண்ட் ஆலைகள் பல நலிவடைந்து உரிய கவனம் செலுத்தப்படாமல் உள்ளன. பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த பொதுத்துறை நிறுவனங்களை புனரமைக்க கூடுதலான நிதி ஒதுக்கி செயல்படுத்துவது, இந்நிறு
வனங்களில் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவும், வேலை வாய்ப்பை விரிவுபடுத்துகிற வகையில் சிறு, குறு நடுத்தர தொழில்களை பாதுகாத்து, அந்தத் துறை வளர்ச்சிக்கான கொள்கைகளை பின்பற்ற அரசுகளை வலி யுறுத்துவது.
* பெண்கள் குழந்தைகள் மீதான வன்கொடுமை களுக்கு எதிராக போராடுவது, மதச்சார்பற்ற, அறிவியல் பூர்வமான, தரமான கல்வி அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் கல்விக் கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருவது.
* அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கும் வகையிலும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சுகாதாரக் கட்டமைப்பை பரவலாக்குவது.
* மக்கள் மத்தியில் வகுப்புவாத மதவெறி பிரச்சாரம் மேற்கொள்ளுகிற சக்திகள், சாதிய சமூக ஒடுக்குமுறைகள், தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து கருத்தியல் போராட்டத்தை வலுவாக முன்னெடுப்பது, கருத்துரிமையைப் பாதுகாப்பது, மதச்சார்பற்ற மாண்புகளை போற்றிப் பாதுகாப்பது.
* தமிழ்மொழி வளர்ச்சியை முன்னெடுப்பது, தமிழக பண்பாட்டின் முற்போக்கு கூறுகளை உயர்த்திப் பிடித்து மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பது.
* இவ்வாறான இடதுசாரி ஜனநாயக மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து கட்சி தமிழகத்தில் இடதுசாரி ஜனநாயக சக்திகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான அளவில் திரட்டும். இடது மாற்றினை உருவாக்கிட நவதாராளமய கொள்கைகளுக்கு எதிராகவும் மக்களை பிளவுப் படுத்தும் வகுப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் வலுமிக்க வர்க்கப் போராட்டங்களை இதர ஜனநாயக சக்திகளின் ஒத்துழைப்போடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும்.
* அகில இந்திய அளவில் மாற்றாக உருவாகும் இடதுஜனநாயக அணியின் பகுதியாக தமிழகத்தில் வலுவான ஒரு இடதுசாரி ஜனநாயக மாற்றினை கட்டமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக பாடுபடும்.
* “ஒரு கருத்து மக்களை கவ்விப் பிடித்துவிட்டால் அது பௌதீக சக்தியாக மாறும்’ என்பது பேராசான் காரல் மார்க்சின் கூற்று. இதற்கேற்ப தமிழகத்தில் இடதுமாற்றுக் கொள்கைகளை தமிழக
மக்கள் ஆதரித்து இடதுசாரி இயக்கத்தை வலுப்பெறச் செய்திடுவார்கள்.
* இதற்காக தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளை ஒருங்கிணைத்து செயல்படவும். மக்கள் ஆதரவை உறுதியாக திரட்டிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது முயற்சிகளை மேற்கொள்ளும் இந்த மேலான லட்சியத்தை அடைய தமிழக மக்கள் பேராதரவு நல்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டி கேட்டுக் கொள்கிறது.