articles

img

விழுப்புரம் மாவட்டத்தில் சிபிஎம் பெருமைமிகு வரலாறு - ஆர். ராமமூர்த்தி ,சிபிஐ (எம்)முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வரவேற்புக் குழு தலைவர்

தமிழக விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சியை உருவாக்க வலியுறுத்தியும், தமிழ் மொழி, பண்பாடு, கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தவும், மாற்றிக் கொள்கைகள், மாற்றுத் திட்டங்கள் மற்றும் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தி தமிழக அரசியல் களத்தில் உழைப்பாளி மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்). தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் போர்க்குணமிக்க வரலாற்று சிறப்புகளைக் கொண்ட கட்சியின் 24 ஆவது மாநில மாநாட்டை, விழுப்புரத்தில் முதல்முறையாக நடத்தும் வாய்ப்பை பெற்றிருக்கும் இந்த தருணத்தில், ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தின் ஆரம்பகால வேர்களை நினைவு படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தென்னாற்காடு மாவட்டத்தின் முன்னோடிகள்

ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தின் போர்ப்படை தளபதிகளில் முன்னோடி தோழர் சி.ஜி என்று அழைக்கப்பட்ட சி.கோவிந்தராஜன். கிராமப்புற ஏழை-எளிய மக்களை அணி திரட்டிய மாபெரும் தலைவர். மின்சார வாரியம் ஊழியர்களுக்கு மாநில அளவில் ஒரு அமைப்பை உருவாக்கி தந்த ஸ்தாபக தலைவர். மாவட்டத்தில் மக்களுக்காக எண்ணற்ற போராட்டங்கள் நடத்தியவர். காவல்துறையினரின் மூர்க்கத்தனமான தடி அடியால் பற்களை முழுவதும் இழந்தவர். நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவராக தொடங்கிய அவரது பயணம், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இரண்டு முறை வெற்றிபெற செய்தது. தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தலைவர். அது மட்டுமின்றி, சிறை கொடுமைகளையும் அனுபவித்தவர். அன்புத் தோழரின் துணைவியார் தோழர் ஷாஜாதி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பெண்களை அணி திரட்டினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்கிய ஸ்தாபகர்களில் அவரும் ஒருவர். தோழர் சி. கோவிந்தராஜனைத் தொடர்ந்து, ஒன்றுபட்ட மாவட்டத்தில் கட்சியின் மாவட்ட செயலாளராக பணியாற்றியவர்களில் தோழர் எஸ்.நடராஜன் போற்றுதலுக்குரியவர். தோழர்கள் அனைவராலும் என்.ஆர்.ஆர். என்று அன்போடு அழைக்கப்பட்டவர் தோழர் என்.ஆர். ராமசாமி. மாவட்டம் முழுவதும் கட்சியை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றினார். கட்சியின் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் செயல்பட்டவர். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தில் கட்சியின் சிறந்த மேடைப் பேச்சாளராக தோழர் ஆர் விஸ்வநாதன். விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் சங்கத்திற்குள் கொண்டு வந்தவர். தோழர்கள் ராஜாராம், டி. மகாலிங்கம் உள்ளிட்டோரும் ஒன்றுபட்ட மாவட்டத்தில் கட்சியின் முன்னோடிகள் ஆவர்.

விழுப்புரம் மாவட்டத்தின் தலைவர்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் தோழர்கள் எஸ்.பத்மநாபன், கல்வராயன் மலையை பாஷா, செஞ்சி சி.கோவிந்தசாமி, எஸ் நெடுஞ்சேரலாதன், எம்.சின்னப்பா, குப்புசாமி, கே.ஆர்.கணேசன், ஜானகிராமன், கே.கலியன் என பலரும் விழுப்புரம் மாவட்டத்தின் முன்னோடிகளும். இப்போதும் கட்சி தோழர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் கே.எம். ஜெயராமன் உள்ளிட்ட மூத்த முன்னோடிகள் ஆவர்.

போராட்டங்களும் தியாகங்களும்

கட்சியின் ஆரம்பகால தூண்களாக துடிப்புடன் செயல்பட்ட தலைவர்களின் பணி மகத்தானது. மாவட்டம் முழுவதும் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும், உடல் உழைப்பு தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து ஏராளமான போராட்டங்களை நடத்தி அரசு கவனத்துக்கு கொண்டு சென்றவர்கள். காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்த்தவர்கள். தடியடிகளை சந்தித்தவர்கள். தலை மறைவு வாழ்க்கை மூலம் கட்சியை வளர்த்தெடுத்தவர்கள். சிறை வாழ்க்கையில் அனுபவித்தவர்கள். அவசரகால பிரகடனத்தின் போதும் கைது செய்யப்பட்டு சிறை கொடுமைகளை அனுபவித்தவர்கள்.

கட்சியின் வளர்ச்சி

மூத்த தலைவர்கள் தோழர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு பணிகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி என்று மூன்று மாவட்டங்களாக பிரிந்து பரவலாக மக்கள் மத்தியில் சென்று இருக்கிறது. இந்த வேர்களின் உழைப்பால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரம் மாவட்டம் முழுவதும் துடிப்புள்ள கட்சியாக மாறி இருக்கிறது.