2025ஆம் ஆண்டு கல்வி அமைப்பு முறையில் மற்றுமொரு தாக்குத லுடன் தொடங்கியிருக்கிறது. மோடி அரசாங்கம், பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக, “பல்கலைக்கழக மானியக்குழு (பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் நியமனத்திற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிர்ணயத்திற் கான நடவடிக்கைகள்)” என்று தலைப்பிட்டு புதிய வரைவு விதிகளை அறிவித்திருக்கிறது. இது, நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள மற்றுமொரு முயற்சியாகும்.
பல்கலைக்கழகங்களின் நிலவரம்
பல்கலைக் கழக மானியக்குழுவின் கூற்றின்படி, நாட்டில் மொத்தம் 56 மத்தியப் பல்கலைக்கழகங்க ளும், 481 மாநிலப் பல்கலைக்கழகங்களும் இருக்கின் றன. இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் வரைவு விதிகள் மூலம் மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்கான உரிமையைப் பறித்துக்கொள்வதுடன், அவை எப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது. இது நம் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகிற கூட்டாட்சித் தத்து வத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
உரிமைப் பறிப்பும் மத்தியத்துவமும்
வரைவு விதிமுறைகள், நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் துணைவேந்தர்களை நியமிக்கும் முறையை பரிந்துரைக்கின்றன. துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் நியமிப்ப தற்கும் இதுவரை இருந்துவந்த நடைமுறையை இந்த வரைவு விதிமுறைகள் மாற்றி அமைத்திருக்கின்றன. இதுநாள்வரையிலும், இதற்கான குழுவில் மூன்று நபர்கள் இடம்பெற்றிருந்தார்கள். ஒருவர், பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதி. இன்னொருவர் மாநில அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட வேந்தரின் பிரதி நிதி. மூன்றாமவர், பல்கலைக் கழகத்தின் சிண்டி கேட்/செனட்/நிர்வாகக் குழுவிலிருந்து ஒருவர்.
மாநில உரிமைகள் மீதான தாக்குதல்
புதிய வரைவு விதிமுறைகள் ஒன்றிய அரசாங்கத்தி ற்கு ஆதரவாகவும், துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் மாநில அரசாங்கங்க ளுக்கு எவ்விதப் பங்களிப்பையும் மறுத்திடும் விதத்தி லும் இதனை அடியோடு மாற்றி அமைத்திருக்கிறது. துணை வேந்தர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாநில அரசாங்கத்திடமிருந்து பறிக்கப்பட்டு, ஒன்றிய அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்திடும் ஆளுநர்/வேந்தரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் நோக்கங்களுக்கான முயற்சி
இது, ஆளுநர் நியமனங்களை மத்தியத்து வப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் ஆதரவாளர்களை நியமனம் செய்வ தையும் நோக்கமாகக் கொண்டதாகும். கேரளாவில், இதற்கு முன்பிருந்த ஆளுநர் மாநில அரசின் பரிந்துரைகளை நிராகரித்துவிட்டு, ஆர்எஸ்எஸ் அனுதாபி ஒருவரை துணை வேந்தராக நியமனம் செய்ததை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
தேசியக் கல்விக் கொள்கையின் தாக்கம்
பாஜக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஒரு தலைப்பட்சமான தேசியக் கல்விக் கொள்கையா னது இந்தியக் கல்வி முறையை மத்தியத்துவப் படுத்துவதற்கும், மதவாதத்தை பரப்புவதற்கும் ஏற்ற விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் இதனைக் கல்வி அமைப்புமுறையின் ஆணி வேராக இருந்துவரும் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகச் சரியாகவே எதிர்த்து வருகிறார்கள். புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் வரைவு விதிமுறைகள் தேசிய கல்விக் கொள்கையின் இந்தக் கொள்கைத் திசை வழியை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன.
இந்துத்துவா நிகழ்ச்சி நிரல்
ஒன்றிய அரசை பாஜக அமைத்ததிலிருந்து, அது பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்க ளை குறிவைத்து தனது இந்துத்துவா மதவாத நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தி வருகிறது. அரசுத் துறைகளில் உள்ள அனைத்து முக்கிய பதவிகளிலும் அத்தகைய பதவிகளில் அமர்வதற்கு எவ்விதத் தகுதியும் இல்லாத ஆர்எஸ்எஸ்/இந்துத்துவா நபர்களை நியமித்து வருகிறது.
மாநில எதிர்ப்பு
பாஜக அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில், இந்த வேலைகளுக்காக அது ஆளுநர்களைப் பயன் படுத்துகிறது. கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்காளத்துடன் சேர்ந்து, மாநில பல்கலைக் கழகங்களை நிர்வகிப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் ஆளுநர்களின் இத்தகைய தலையீட்டை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எதிர்த்தது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ள அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடி, மாநிலங்களின் உரிமை களை அவர்கள் காலில்போட்டு மிதிக்கின்றனர்.
ஆணைய அறிக்கைகளின் பரிந்துரைகள்
1988இல் தனது அறிக்கையை சமர்ப்பித்த சர்க்கா ரியா ஆணையம், ‘முதலமைச்சர் அல்லது சம்பந்தப் பட்ட பிற அமைச்சர்களுடன் ஆளுநர் கலந்தாலோ சிப்பதில் ஒரு தெளிவான நன்மை இருக்கிறது’ என்று கூறியிருந்தது. குறிப்பாக வேந்தர்களாக இருப்பவர் கள் முக்கியமான விஷயங்களில் ‘அமைச்சருடன் கலந்தாலோசிப்பது நல்லது’ என்று பரிந்துரைத் தது. இந்த இரண்டு பரிந்துரைகளும் பின்பற்றப் படவில்லை.
புஞ்சி ஆணையத்தின் கருத்துகள்
இரண்டாவது ஆணையமான புஞ்சி ஆணையம், சர்க்காரியா அறிக்கை வெளியான பின்னர், இருப தாண்டுகள் கழித்து, 2010இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன் பரிந்துரைகள், சர்க்காரியா ஆணையத்தின் பரிந்துரைகளைக் காட்டிலும் அதிகமாகும். அது கூறியதாவது: “ஆளுநரைப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆக்குவதும், அதன் மூலம் வரலாற்று ரீதியாக சில பொருத்தப்பாடுகளைக் கொண்ட அதிகாரங்களை அவருக்கு வழங்குவதும் காலங்கள் மற்றும் சூழ் நிலைகளின் மாற்றத்துடன் நின்றுவிட்டது. பல் கலைக்கழக கல்வியை ஒழுங்குபடுத்துவதில் அமைச்சரவை இயல்பாகவே ஆர்வம் காட்டும். மேலும் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்களில் அமைச்ச ரவைக்கும் ஆளுநருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.”
பாஜகவின் கூட்டாட்சி எதிர்ப்பு
பாஜக கூட்டாட்சி என்ற கருத்தை கோட்பாட்ட ளவில் கூட எதிர்க்கிறது மற்றும் மத்தியத்துவப் படுத்தலை ஆதரிக்கிறது. எனவே ஒன்றிய-மாநில ஆணையங்களின் பரிந்துரைகளை செயல்படுத்துவ திலோ அல்லது ஆளுநரின் அதிகாரங்களைக் குறைப்ப திலோ அது சிறிதும் ஆர்வம் காட்டாது. தண்டனை நடவடிக்கைகளின் கடுமை இந்த வரைவில் மிகவும் கடுமையான பகுதி என்ன வென்றால், மாநிலங்கள் அல்லது வேறு எந்த நிறுவனமும் இந்த விதிமுறைகளை செயல்படுத்தத் தவறினால் அவற்றின்மீது தண்டனை நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்படும் என்பதாகும். வரைவின்படி, அத்தகைய நிறுவனங்கள்: l பல்கலைக்கழக மானியக் குழுவின் திட்டங்களில் பங்கேற்பதிலிருந்தும் l பட்டப்படிப்புகளை வழங்குவதிலிருந்தும் l பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும் உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலிலிருந்தும் நீக்கப்படும்.
மானியக் குழுவின் அதிகார மீறல்
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்த விதிமுறை கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் பரிந்துரைக் கப்பட்ட ஒரு கட்டாய நடவடிக்கையாகும். இது அனைத்து பல்கலைக்கழகங்களையும் அதன் கட்ட ளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அச்சுறுத்து கிறது. இது பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆணைக்கு எதிரானது. பல்கலைக்கழக மானியக்குழு என்பது பிரதானமாக, பல்வேறு பல்கலைக்கழகங்க ளுக்கு மானியங்களை வழங்குவதற்காக அமைக்கப் பட்ட அமைப்பாகும். மாறாக அவற்றைக் கட்டுப் படுத்துவதற்காக அல்ல.
கல்வித் தரத்தை குறைக்கும் பரிந்துரைகள்
உயர்கல்வி அமைப்பின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிற முக்கியமான பரிந்துரை களும் இந்த வரைவு விதிமுறைகளில் உள்ளன. இந்த விதிமுறைகள் மூலம் கல்வித்துறை சாராத நபர்களை துணைவேந்தர்களாக நியமிப்பதை சட்டப்பூர்வமாக்க, பல்கலைக்கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னர் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்ட சம்பவங்கள் நமக்கு உண்டு.
தொழில்துறை ஆதிக்கம்
இப்போது, இந்த விதிமுறைகள் தொழில்துறை யுடன் தொடர்புடைய நபர்களையும் துணைவேந்தர் களாக நியமிக்க அனுமதிக்கின்றன. இது பல்கலைக் கழகங்களின் கல்வித் தன்மையின் மீதான தாக்கு தலாகும். மேலும் அவற்றை தொழில்துறையின் துணை அமைப்பாக மாற்றும் முயற்சியாகும். மேலும், இது நம் நாட்டில் நிறுவப்பட்ட அனைத்து தனியார் பல்கலைக்கழகங்களும் கல்வியாளர்களைத்தான் துணைவேந்தர்களாக நியமிக்க வேண்டும் என்று கவலைப்பட வேண்டாம் என்ற சுதந்திரத்தையும் அளித்திருக்கிறது. அத்தகைய நடவடிக்கை தனியார் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தை மேலும் சமரசத்திற்கு உட்படுத்திடும்.
ஆசிரியர்களின் எதிர்ப்பு
பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்க ளும் இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள் ளனர். ஏனெனில் இது ஆட்சேர்ப்பின் தரத்தை சமரசம் செய்கிறது. பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம் நீர்த்துப்போகச் செய்வதோடு, அதிகரித்து வரும் பணிச் சுமையும், தற்காலிக நியமனங்கள் செய்யப்படுவ தையும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கருத்துரைக்கான அழைப்பு
பல்கலைக்கழக மானியக்குழு இந்த வரைவின்மீது மக்கள் தங்கள் பரிந்துரைகளை அளித்திட 30 நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது. நம் கல்வி முறையில் அக்கறையுள்ள அனைவரும் இந்த வரைவு விதிமுறை களுக்குத் தங்கள் எதிர்ப்பினைப் பதிவு செய்திட வேண்டும்.
போராட்ட அறைகூவல்
இந்த விதிமுறைகளை ஒன்றிய அரசாங்கம் திரும்பப் பெற்றிடச்செய்யும் விதத்தில் மாணவர் சமுதாயமும், ஆசிரியர் சமுதாயமும் அனைத்து ஜனநாயக சக்திகளு டனும் ஒன்றுபட்டு நின்று போராட முன்வரவேண்டும்.
(ஜனவரி 8, 2025)
தமிழில் : ச.வீரமணி