articles

img

களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் - கட்சியின் வேராகச் செயல்பட்ட கைத்தறித் தொழிலாளி - ஜி.ராமகிருஷ்ணன்

தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருந்தது கைத்தறித்தொழில். ஆனால், குடும்பம் குடும்பமாக ஈடுபட்டிருந்த  அந்தத் தொழில் இன்று நலிவடைந்து, ஒரு சிறு பகுதியினரே அதனை நம்பி வாழ்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால் அவர்கள் தங்களது வாழ்க்கைக் காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய ஒரு எளிய கை நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, சிறு வயதிலேயே தானும் தொழிலில் ஈடுபட்டு, 60 ஆண்டு களுக்கும் மேலாக தொழிற்சங்கப் பணிகளிலும், கட்சிப் பணிகளிலும் பங்காற்றி வந்திருப்பவர் தோழர் ஆர்.அருணாசலம்.  கடலூர் மாவட்டம், கடலூர் வட்டம், சி.என்.பாளையம் கிராமத்தில் 1940ஆம் ஆண்டு பிறந்தவர் அருணாசலம். குடும்பத்தின் வறிய நிலை காரண மாக இவரால் பள்ளிப் படிப்பை 8ஆம் வகுப்புக்கு மேல் தொடர முடியவில்லை. இவரது தந்தை தனது உழைப்பில் தொழிலில் வரும் வருமானத்தை மட்டும் சார்ந்து குடும்பத்தை நடத்த இயலாததால் இவ ரையும் தறிக்குழியில் உட்கார வைத்துவிட்டார். அன்றைய (ஒன்றாகயிருந்த) தென்னாற்காடு மாவட்டத்தில்,  குறிப்பாகக் கடலூர் வட்டத்தில் பரவ லாகக் கைத்தறி நெசவுத் தொழில் நடைபெற்று வந்தது. அந்த வட்டத்தின் பெரும்பாலான கிராமங்க ளில் (கழிமுக ஆற்றுப் பாசனம் நடைபெற்ற டெல்டா பகுதியைத் தவிர்த்து) கைத்தறியே பிரதானத் தொழி லாக இருந்து வந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின்போதே மதராஸ் மாகாண அளவில் பலமான கைத்தறித் தொழி லாளர் சங்கம் அமைக்கப்பட்டிருந்தது. 1946ஆம் ஆண்டு கடலூர் வட்டத்திற்கு உட்பட்ட புதுப்பேட்டை யில் கைத்தறித் தொழிலாளர் சங்க மாநாடு நடை பெற்றது. மாகாண அளவிலான அந்த மாநாட்டில்  சங்கத் தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு எழுத்தாளர் ‘கல்கி’ கிருஷ்ண மூர்த்தியும் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார்.

கைத்தறி  தொழிலாளர்களை பாதுகாக்க...

நவீன பஞ்சாலைகள் வந்த பிறகு கைத்தறித் தொழில் நலிவடையத் தொடங்கியது. நாட்டின் விடு தலைப் போராட்டக் களத்தில் நின்ற கம்யூனிஸ்ட் கட்சி  கைத்தறித் தொழிலைப் பாதுகாப்பதற்கான போராட் டத்தையும்  கையிலெடுத்தது. இத்தகைய போராட்டத் தில் கலந்துகொண்ட நெசவாளர்களிடையே  கம்யூ னிஸ்ட் கட்சி வலுவான இயக்கமாக வளர்ந்தது. சி.என். பாளையத்திலும் அதற்கு அருகில் அமைந்திருந்த நடுவீரப்பட்டு கிராமத்திலும் பிரதான தொழிலாகக் கைத்தறி நெசவு இருந்து வந்தது. இரண்டு கிராமங்க ளுக்கு இடையில் ஓர் ஓடை மட்டுமே. பொதுவாக இந்த இரண்டு கிராமங்களையும் ஒரே பெயரில் நடு வீரப்பட்டு - பாளையம் என்றே அழைப்பார்கள். 1965ஆம் ஆண்டு, தோழர் அருணாசலம், கைத்தறி சங்கத்தில் உறுப்பினரானார்.  அடுத்தடுத்து சங்கத்தின் கிராம அளவிலான நிர்வாகியானார். கைத்தறித் தொழிலாளர்களுடைய போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். அதே ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார். செங்கொடி ஆறுமுகம் என்ற  மூத்த தோழர்தான் தூண்டுதலாக இருந்து இவரைக் கட்சியில் சேர்த்திருக்கிறார். 

மறியலாக மாறிய உண்ணாவிரதம்

கைத்தறித் தொழிலாளர் சங்கத்தில் துடிப்புடன் செயல்பட்ட அருணாச்சலம் அதன் மாவட்டத் துணைச் செயலாளராகவும் 10 ஆண்டுகள் செயல்பட்டார். கைத்தறித் தொழிலாளர்களின் அன்றைய போராட் டங்களைப் பற்றிக் கேட்டபோது உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார். “1969ஆம் ஆண்டு ஒரு பாவுக்கு 12 ரூபாய் கூலி தரப்பட்டது. தினக்கூலி 16 அணா. பாவுக்கு 20 ரூபாய் கூலி உயர்வு கேட்டு நடுவீரப்பட்டு – பாளையம் இரண்டு கிராமங்களிலும், தோழர் அமிர்தலிங்கம் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அதில் நானும் பங்கேற்றேன். உண்ணாவிரதப் போராட்டத்தின் 15-ஆவது நாளில் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் இருந்த எஸ்.  நடராஜன் தலையிட்டு உண்ணாவிரதத்தை மறியல் போராட்டமாக மாற்றினார். அதன் பிறகு அரசாங்கம் தலையிட்டது. 12 ரூபாயாக இருந்த கூலி 15 ரூபாயாக உயர்த்தப்பட்டது.  போராட்டம் விலக்கிக்கொள்ளப் பட்டது,” என்று விவரித்த அருணாசலம், அந்தப் போராட்டத்தில் பங்கேற்றது தனக்குப் பெருமிதமாக இருக்கிறது என்றார். கைத்தறி சங்க நிர்வாகியாக செயல்பட்ட தோழர் அருணாசலம், நடுவீரப்பட்டு - பாளையம் இரண்டு கிராமங்களிலும் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி அமைப்பை உருவாக்கினார். 1980ஆம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாக அந்த அமைப்பு உரு வெடுத்தபோது கடலூர் வட்டத்திலேயே பலம் வாய்ந்த கிளைகளாக நடுவீரப்பட்டு – பாளையம் கிளைகள் செயல்பட்டன. நடுவீரப்பட்டு - பாளையம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, வாலி பர் சங்கத்தின் சார்பாக வட்டத் தலைநகரமான கடலூரில் மறியல் போராட்டம் நடத்தி, ஊராட்சி ஒன்றிய ஆணையரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டது, வாலிபர் சங்கத்தின் முன்முயற்சியால் குடிநீர்ப் பிரச்சனை தீர்க்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லில் கட்சியின் சார்பில் தோழர் சி. கோவிந்தராஜன் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டார். நடுவீரப்பட்டு – பாளையம் இரண்டும் தொகுதிக்கு உட் பட்ட கிராமங்களாக இருந்தன. கட்சியின் வேட்பாள ருக்காக சுற்றுவட்டாரக் கிராமங்களிலும் ஆர்வத்துடன் பணியாற்றியதை நெகிழ்வுடன் குறிப்பிட்டார். 

3 மாதம் சிறை

நெசவாளர் சங்கத்தில் வேலை செய்து கொண்டே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் எல்லா இயக்கங்களிலும் தவறாமல் பங்கேற்பார் அருணா சலம். கட்சியின் மாநிலக்குழு அறைகூவலுக்கு இணங்க, 1970ஆம் ஆண்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு மற்ற தோழர்களுடன் கைதாகிய அவர் கடலூர் மத்தியச் சிறையில் 3 மாதங்கள் அடைக்கப் பட்டார்.  1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்த லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி “இண்டிகேட் காங்கிரசும் வேண்டாம், சிண்டிகேட் காங்கிரசும் வேண்டாம்” என்று தனித்துப் போட்டியிட்டது. தேர்தல் பணிமுடித்துவிட்டு நடுவீரப்பட்டு கட்சி அலுவ லகத்தில் இருந்தபோது அன்றைய ஆளும் கட்சி யைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அலுவல கத்தைச் சூழ்ந்துகொண்டு தாக்குதலில் ஈடுபட்டார் கள். கட்டடத்திற்குத் தீ வைத்தார்கள். இரண்டு கிரா மங்களிலும் இருந்த கட்சித் தோழர்கள் திரண்டு அவர் களை ஓட ஓட விரட்டியடித்தார்கள். அதற்கு பின்பு கம்யூ னிஸ்ட் கட்சியோடு மோதுவதை அவர்கள் நிறுத்திக் கொண்டனர்.  1976ஆம் ஆண்டு, இந்திரா காந்தி அவசர நிலை ஆட்சியை அறிவித்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் மற்ற எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்க ளும் கைது செய்யப்பட்டனர். தோழர் சி. கோவிந்த ராஜன் மற்றும் பலர் தலைமறைவாகச் செயல்பட்டார் கள். தோழர் அருணாசலத்தின் மீதும் பிடிவாரண்ட் இருந்தது. தோழர் சி. கோவிந்தராஜன் தலைமறை வாகச் செயல்பட்ட நாட்களில் நடுவீரப்பட்டு – பாளை யத்தில் அவர் சில நாட்கள் தங்கியிருப்பதற்கு கட்சியின் சார்பாக தான் செய்த உதவிகளை பெருமைக்குரிய வாய்ப்பாகக் கருதுகிறார்.

தீக்கதிர் வாசகர்

தொடக்கத்திலிருந்தே தீக்கதிர், மார்க்சிஸ்ட், செம்மலர் ஏடுகளின் சந்தாதாரராகவும், வாசகராக வும் உள்ளார். இவருடைய துணைவியார் கலியம்மாள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கிளை நிர்வாகியாகச் செயல்பட்டவர். கட்சி நடத்தும் எல்லாப் போராட்டங்களிலும் பங்கேற்றவர். கைத்தறித் தொழில் கடுமையான பாதிப்புக்கு உள்ளானாலும் அந்தத் தொழிலில் ஈடுபட்ட குடும்பங்க ளுக்கு மாற்று வழி இல்லையென்ற காரணத்தால் இப்போதும் அந்தத் தொழிலிலேயே ஈடுபட்டு வருகிறார்கள். இன்றும் நடுவீரப்பட்டு – பாளையம் பகுதியில் 150 குழித்தறிகள் உள்ளன. 103 பெடல் தறிகள் இயங்கி வருகின்றன. இரண்டு கிராமங்களி லும் கைத்தறி நெசவாளர் சங்கக் கிளைகள் இயங்கி வருகின்றன. தோழர் அருணாசலத்தின் துணைவியார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகன்களும், மகள்களும் கட்சியின் ஆதரவாளர்கள். தையல் தொழில் செய்து வரும் மூத்த மகனோடு தோழர் அரு ணாச்சலம் சி.என்.பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறார். கைத்தறி நெசவாளராக வாழ்க்கையைத் தொடங்கிய தோழர் அருணாசலம் தற்போது தறியில் வேலை செய்ய இயலவில்லை. இருப்பினும் குடும்பத்தி ற்கு தான் பாரமாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஏதாவது உழைத்துக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடலூர் நகரத்தில் குறைந்த சம்ப ளத்திற்கு கட்டடக் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளராக (13 ஆண்டுகள்), வட்டக்குழு உறுப்பின ராக (10 ஆண்டுகள்), கைத்தறி நெசவாளர் சங்கத்தின்  மாவட்டத் துணை நிர்வாகியாக பல ஆண்டுகள் அர்ப்பணிப்போடு செயல்பட்ட அனுபவம் நிறைந்த வர் அருணாசலம். தற்போது நடுவீரப்பட்டு-பாளையம் கிராமங்களில் மூன்று கட்சிக்கிளைகளும், 47 கட்சி உறுப்பினர்களும், 17 துணைக்குழு உறுப்பி னர்களும் உள்ளனர். சி.ஐ.டி.யு, வி.ச, வி.தொ.ச, வாலிபர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்டு வர்க்க வெகுஜன அமைப்புகள் அனைத்தும் இயங்கி வருகின்றன. நடுவீரப்பட்டு - பாளையம் கிராமங்க ளில் கட்சியின் தூண்களாக இருந்து வேலை செய்த தோழர்கள் பொன்னம்பலம், சொக்கலிங்கம், அமிர்த லிங்கம் ஆகியோர் இறந்து விட்டார்கள். 1978ஆம் ஆண்டு பண்ருட்டி நகரத்தில் கட்சியின் வட்ட மாநாடு (கடலூர் – பண்ருட்டி - குறிஞ்சிப்பாடி மூன்று பகுதிகளும் இணைந்த வட்டக்குழு) நடை பெற்றது. அம்மாநாட்டில் தோழர் அருணாச்சலம் மீண்டும் வட்டக்குழுவுக்கு தேர்வானார். அப்போது கடலூரில் வழக்கறிஞராகவும் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியின் (இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும் இயங்கி வந்த நான் அந்த மாநாட்டில் கட்சியின் வட்டக்குழுவிற்குத் தேர்வு செய்யப்பட்டேன். எனக்கு முன்னதாகவே தோழர் அருணாசலம் வட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார். தோழர் அருணா சலத்துடன் சில ஆண்டுகள் இடைக்குழு உறுப்பின ராக நானும் இருந்து செயல்பட்டதை இப்போதும் பெரு மையாகக் கருதுகிறேன்.

தன்னுடைய இளமைக் காலத்தில் போர்க்குண மிக்க போராளியாக செயல்பட்டவர். இப்போது எலும்பும் தோலுமாக இருக்கிறார். படத்தை பார்க்க லாம். முன்புபோல் கட்சிப் பணியாற்றுவதற்கு வயதும், உடல் நலமும் ஒத்துழைக்காத நிலையில், இயக்க உணர்வை விட்டுவிடாதவராகக் கட்சி உறுப்பினராக இருந்துகொண்டு, தன்னால் இயன்ற அளவில் இயக்கப் பணிகளைச் செய்து வருவதைத் தோழர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அருணாசலம் போன்ற தோழர்கள் அக்கா லத்தில் செய்த அர்ப்பணிப்பு மிக்க இயக்கப் பணிக ளால்தான் இப்போதும், நடுவீரப்பட்டு - பாளை யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துடிப்போடு இயங்கி வருகிறது. கைது, சிறை, வழக்கு போன்ற சோதனைகளை எதிர்கொண்டு 84 வயதிலும் கடந்த 60 ஆண்டுகளாக இயக்க ஈடுபாட்டிற்கு ஓர்  எடுத்துக்காட்டாகத் தோழர் அருணாசலத்தின் பங்களிப்பு இயக்கப்பணி போற்றுதலுக்குரியது, பின் பற்றத்தக்கது.