முதல் இரு தேர்தல்களிலும் முத்திரை பதித்த கம்யூனிஸ்ட்டுகள் - பி.சம்பத்
வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியில் நீண்ட நெடுங் காலம் கம்யூனிஸ்ட்இயக்கம் தடை செய்யப்பட்டிருந்தது. பின்னர் நாடு விடுதலை பெற்றவுடன் காங்கிரஸ் ஆட்சியிலும் 1948 முதல் 1952 வரை கட்சி மீண்டும் தடை செய்யப்பட்டது. இவ்வாறு தடைசெய்யப் பட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் அமைதி காக்கவில்லை. இதன் தலைவர்களும், ஊழி யர்களும் தலைமறைவாக வாழ்ந்து ஏராள மான போராட்டங்களை நடத்தினார்கள். இப்போராட்டங்களில் நாடு முழுவதும் லட்சோ பலட்சம் மக்கள் பங்கேற்றது மட்டுமல்ல; அப் போராட்டங்கள் பல வெற்றி பெற்று மக்கள் பயனும் அடைந்தார்கள்.
தேர்தல் வியூகம்
1952 தேர்தல் முடிவுகள் இதனை பிரதிபலித்தன. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரதான தலைவர்களில் ஒருவ ரான தோழர் பி. சுந்தரய்யா 1952 தேர்தல் முடிவுகள் குறித்து கூறிய வார்த்தைகள்: “எங்கள் எதிர்பார்ப்பை விட அதிக வாக்குக ளும், இடங்களும் இத்தேர்தலில் பெற்றுள் ளோம். எங்கள் போராட்டங்களும், தியாகங்க ளும் வீண்போகவில்லை. மக்கள் எங்களை ஆழமாக நேசிக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.” 1952 தேர்தல் கால நிகழ்வுகள் எவை?. தேர்தல் காலத்திலும் கட்சி தடைசெய்யப்பட்டி ருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வேட்பா ளர்களை நிறுத்த முடியவில்லை. எனவே, “மக்கள் ஜனநாயக முன்னணி” என வெளிப் படையாகச் செயல்பட்ட அமைப்பு சார்பாகவே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தலைமறை வாக வாழ்ந்த பிரபலமான கம்யூனிஸ்ட்டுகளை வேட்பாளராக நிறுத்த முடியாத நிலையில் வேட்பாளர் பஞ்சமும் பெரும் பிரச்சனையாக இருந்தது. இதனால் ஒரு தோழரே பல தொகுதி களுக்கு வேட்பாளராக சில இடங்களில் நிறுத்தப்பட்டனர். வியப்பான உண்மை என்ன வென்றால், பி.ராகவராவ் என்ற தோழர் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு நாடாளு மன்ற தொகுதிக்கும் வேட்பாளராக நிறுத்தப் பட்டார். மக்கள் அளித்த தீர்ப்பு என்னவென் றால் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் இதோடு நாடாளுமன்ற தொகுதியிலும் கணிச மான வாக்குகளுடன் அவர் வெற்றி பெற்றார் என்பதே.
பொதுத்தேர்தல் வெற்றி
1952 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் 16 பேர் வெற்றி பெற்றனர்.இது தேர்தல் ஆணைய அதிகாரப்பூர்வ முடிவு. ஆனால் தோழர் சுந்தரய்யா அவர்க ளின் கூற்றுப்படி, கம்யூனிஸ்ட்டுகளுக்கு நாடு முழுவதும் 30 மக்களவை தொகுதிகளில் வெற்றிகிடைத்தது. இதர இடதுசாரி கட்சிக ளுடன் இணைந்து கூட்டணி அமைத்து செயல் பட்ட நிலையில் இந்த கூட்டணிக்கு 49 மக்களவைத் தொகுதிகள் கிடைத்தன. இக் கூட்டணி பெற்ற மொத்த வாக்குகள் 20.9 சதமானம் ஆகும். இதுபோக மாநிலங்களவை யில் 12 கம்யூனிஸ்ட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர். அக்கா லத்தில் ஜனசங்கம், இந்துமகா சபை, ராமராஜ் ஜிய பரிசத் போன்ற வகுப்புவாத வலதுசாரி கட்சி கள் படுதோல்வியடைந்தன. இக்கட்சிகளுக்கு நாடு முழுவதும் வெறும் 10 மக்களவை இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரசின் பால் முதல் பொதுத்தேர்தலிலேயே அதிருப்தி அடைந்த கணிசமான மக்கள் வலதுசாரிகள் பக்கம் சாயாமல் கம்யூனிஸ்ட்டுகள் உட்பட இடதுசாரிகள் பக்கம் சாய்ந்தனர் என்பது 1952 தேர்தலில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றகரமான நிகழ்வாகும்.
ஏ.கே.ஜி. - பி.சுந்தரய்யா
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்தது. தோழர் ஏ.கே. கோபாலன் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வுசெய்யப்பட்டார். 1952 முதல் 1977 இல் அவர் மரணமடையும் வரை அப்பொறுப்பில் இருந்தார். மிகத் திறம்படச் செயல்பட்டார். நாடாளுமன்றத்திற்கு வெளியே பல போராட்டங்களுக்கு தலைமையேற்ற தில் ஏ.கே. கோபாலனுக்கு தனிச்சிறப்பு உண்டு. உண்மை என்னவென்றால் இப்போராட் டங்களை நாடாளுமன்றத்திற்குள்ளும், அவர் பொருத்தமாக நடத்தினார். பிரதமர் நேரு மற்றும் பிரதான அமைச்சர்கள் நாடாளு மன்றத்தில் உரையாற்றும் போது அவர் பொருத்தமான நேரத்தில் எழுந்து குறுக்கீடு செய்வார். மொத்த சபை மட்டுமல்ல; நாடே திரும்பி பார்க்கும் வகையில் அந்த தலையீடு இருக்கும். தோழர் பி. சுந்தரய்யா மாநிலங்களவை க்கு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டார். அவரது செயல்பா டும் மிகுந்த போர்க்குணம் உடையதாகும். இந்த இருவரின் செயல்பாடு குறித்து கம்யூ னிஸ்ட் இயக்க மூத்த தலைவரும், சிறந்த மார்க்சிய சிந்தனையாளருமான தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் குறிப்பிடுவதாவது: “நாடாளுமன்றத்தை வர்க்கப் புரட்சிகர போரா ட்டங்களுக்கான ஒரு தளமாக பயன்படுத்திய இவ்விரு புரட்சியாளர்களைப் போன்று தங்க ளது கட்சியிலும் இருப்பதாக நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் பிரதிநிதித்துவம் வகிக்கும் எந்த ஒரு கட்சியும் கோர முடியாது.”
சட்டமன்றத் தேர்தல்கள்
நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல; அப்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்க ளிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு குறிப்பி டத்தக்க வெற்றிகள் கிடைத்தன. சென்னை ராஜ தானி, கொச்சி திருவாங்கூர் சமஸ்தானம் ஆகிய இரண்டு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி முக்கியமானது. வேறு எந்த கட்சியையும் விட அரசு அமைப்ப தற்கான வாய்ப்பு கம்யூனிஸ்ட் கட்சிக்கே இம்மாநிலங்களில் அதிகம் இருந்தது. ஆனால், இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தனக்கே உரித்தான சாகசங்களையும், சந்தர்ப்பவாதத்தையும் செய்து பிற கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை தன்பக்கம் இழுத்து கம்யூனிஸ்ட்டுகள் அதிகாரத்திற்கு வர விடாமல் பார்த்துக் கொண்டது. ஆனாலும், இந்த இரண்டு சட்டமன்றங்களிலும் கம்யூனிஸ்ட்டு கள் வகித்த பாத்திரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். சென்னை ராஜதானியில் ராஜாஜி முதல்வராகவும், தோழர் பி.ராமமூர்த்தி எதிர் கட்சி தலைவராகவும் செயல்பட்ட நிகழ்வுகளும் வகித்த பாத்திரமும் இன்றளவும் மெச்சப்படக் கூடிய அம்சங்களாக விளங்குகின்றன. தோழர் பி.ராமமூர்த்தி மட்டுமல்ல; தோழர்கள் ப. ஜீவானந்தம், மணலி கந்தசாமி, எம். கல்யாணசுந்தரம் போன்றவர்களும் சட்ட மன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சிம்மசொப்பன மாக விளங்கினர். இதேபோல ஆந்திர மாநிலத்திலும் கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் வெற்றி குறிப்பிடத்தக்க தாகும். இங்கு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு 40 சட்டமன்ற தொகுதிகளும், 33 சதவிகித வாக்கு களும் கிடைத்தன. மறுபுறம், 100 இடங்கள் கொண்ட தெலுங்கானா பகுதியில் 45 இடங் களை கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. ஆந்திரா, தெலுங்கானா இருபகுதிகளிலும் உள்ள 237 இடங்களில் 85 இடங்களை கம்யூ னிஸ்ட்டுகள் கைப்பற்றினார்கள் என்றால் அக்காலத்தில் இதன் தாக்கம் எவ்வாறு இருந்திருக்கும் என யூகிக்க முடியும்.
தோழர் பி. சுந்தரய்யா இதுகுறித்து கூறிய வார்த்தைகள். “தெலுங்கானாவில் நாம் எதிர்கொண்ட அடக்குமுறைகள், செய்த தியாகம் இவை மக்களால் பெரிதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அது மக்கள் செல்வாக்காக மாறி தேர்தலில் சிறப்பான வெற்றியாக வெளிப்பட்டுள்ளது. மறுபுறம், பரிதாபமான அம்சம் என்ன வென்றால் கம்யூனிஸ்ட்டுகள் விரட்டியடித்த நிலப்பிரபுக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதர வாளர்களாகவும் பல இடங்களில் வேட்பாளர்க ளாகவும் இருந்தது தான்.” தெலுங்கானா போராட்டம் கம்யூனிஸ்ட்டுகளின் ஆந்திரா, தெலுங்கானா வெற்றிக்கு மகுடம் சூட்டியது என்றால் அது மிகையானதல்ல. மேற்குவங்க மாநிலத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வெற்றி சிறப்பானதாக அமைந்தது. 71 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி 28 இடங்க ளை கைப்பற்றியது. 9 நாடாளுமன்ற தொகுதி களில் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. அன்றைய நிலைமைகளை கணக்கிட்டால் இந்த வெற்றி மிகுந்த உத்வேகம் அளிப்ப தாக இருந்தது. இந்த வெற்றி குறித்து தோழர் ஜோதிபாசு கூறியதாவது: “சித்ரவதைகள், பயங்கரவாதம் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை அழித்துவிடலாம் என்ற காங்கிரசின் கனவு தகர்ந்து போனது. மக்கள் கம்யூனிஸ்ட்டுகளை கைவிடவில்லை. மாறாக, உறுதியாகவும் நம்பு கிறார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது.” இருப்பினும் அப்போதைய மேற்கு வங்கம் வெற்றி பிரதானமாக நகர்ப்புறங்களைச் சார்ந்தே இருந்தது. இதனை பரிசீலித்த மேற்கு வங்க கட்சியின் மாநிலக்குழு கிராமப்புறங்க ளை குறிவைத்து தீவிர மக்கள் போராட்டங்க ளை நடத்தியது.
குறிப்பாக, நிலமில்லாத மக்களுக்கு நிலம் வழங்க மிகப் பெரும் போராட் டங்களை நடத்தியது. குறுகிய காலத்தில் கணிச மான கிராமப்புற மக்களை கட்சி தன் பக்கம் கொண்டு வந்துவிட்டது. இந்தியாவில் மட்டு மல்ல; உலகில் வேறு எங்கும் காண முடியாத வகையில் 35 ஆண்டு காலம் தொடர்ந்து தேர் தல் மூலமே கம்யூனிஸ்ட்டுகள் அதிகாரத்தில் தொடர்ந்த நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியது. இது இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு கிடைத்த பெருமை மிக்க நிகழ்வாகும். மேற்கண்ட மாநிலங்களில் மட்டுமல்ல; இந்தியாவின் வேறு சில மாநிலங்களில் கூட கம்யூனிஸ்ட் கட்சிக்கு சில தேர்தல் வெற்றி கள் கிடைத்தன. இந்தியாவின் முதல் பொ துத்தேர்தலிலே காங்கிரஸ் கட்சியால் பெரும் பான்மையான மக்கள் வாக்குகளை பெற முடியாமல் போயிற்று. இந்திய விடுதலைக்கு தலைமையேற்றதாக பறைசாற்றி செய்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகும் 43 சத வாக்கு களையே காங்கிரசால் பெற முடிந்தது.
அமெரிக்காவின் அலறல்
விடுதலை பெற்ற இந்தியாவில் முதல் பொதுத்தேர்தலிலேயே காங்கிரசுக்கு அடுத்த படியாக கம்யூனிஸ்ட் இயக்கம் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. இதனைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியம் பதற்றம டைந்தது. இதுகுறித்து அமெரிக்க வெளியுற வுத்துறை அமைச்சர் அக்கிசன் நடுக்கத்துடன் கூறியதாவது: “இந்தியாவில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் அதிக வாக்குகள் பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உரு வெடுத்துள்ளன. இந்த நிலை தொடருமானால் இந்தியாவில் அவர்களின் பலம் பெருகி தேசத்தின் அதிகாரத்தை கைப்பற்றும் நிலை உருவாகும். இந்நிலை உருவானால் அது ஆசியாவில் மிகப்பெரிய ஆபத்தாக மாறும்”. இதைத்தொடர்ந்து இந்தியாவுக்கு ஏராளமான கடன்களையும், இதர பல உதவிகளையும் அமெரிக்கா வழங்கியது. இந்தியாவில் கம்யூ னிஸ்ட்டுகளின் செல்வாக்கை முடிவுக்கு கொண்டு வர உறுதியான நடவடிக்கைகள் எடுக்குமாறு இந்திய அரசுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் நிர்ப்பந்தம் கொடுத்தது.
1957 பொதுத் தேர்தல்
1952 பொதுத்தேர்தலுக்கு பிறகு கட்சிக் குள் அரசியல் - சித்தாந்த பிரச்சனைகள் குறித்து ஆழமான விவாதங்களும் கருத்து பரிவர்த்தனைகளும் நடைபெற்றன. இதில் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்த போதிலும் கட்சி யின் நலன் கருதி 1957 இரண்டாவது பொ துத்தேர்தலை ஒன்றுபட்ட முறையில் சந்திக்க முடிவு செய்தனர். 1957இல் நடைபெற்ற பொ துத்தேர்தல் முடிவுகளையும் இங்கு குறிப்பிடு வது பொருத்தமானதாக இருக்கும். இத்தேர்த லில் காங்கிரஸ் மறுபடியும் மத்தியில் அரசு அதி காரத்தை தக்கவைத்துக் கொண்ட போதிலும் மக்கள் மத்தியில் பெரும் மனமாற்றங்கள் ஏற்பட்டு வருவதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. கேரளாவில் மக்களின் மகத்தான ஆதர வோடு கம்யூனிஸ்ட்டுகள் தலைமையில் மாநில அரசு அமைந்தது. தோழர் இ.எம்.எஸ். இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் முதல்வராக செயல்பட்டார். இந்த அரசு நிலச்சீர்திருத்தம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்க ளில் மாற்றுக் கொள்கைகளை அமல்படுத்தி பெரும் சாதனைகள் படைத்தது. இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ஆளும் வர்க்கங்கள் காங்கிரஸ் கட்சியை நிர்ப்பந்தம் செய்து கம்யூ னிஸ்ட் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்ய வைத்தன. விடுதலைப் போராட்டம் (விமோச் சன சமரம்) என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சாதி, மத அமைப்புகளுடன் கேரளம் முழுவதும் பல கலவரங்களை நடத்தியது. பிறகு, இவற்றை காரணம் காட்டியே சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக குற்றம் சுமத்தி மத்திய அரசு, கம்யூ னிஸ்ட் அமைச்சரவையை கலைத்தது. மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை களை கண்டித்து கேரளாவில் அக்காலத்தில் கணிசமான மக்கள் பங்கேற்ற ஆவேசமிக்க போராட்டங்கள் நடந்தன. 1957 பொதுத்தேர்தலில் தேசம் தழுவிய அளவில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைத்த வெற்றி 1952 தேர்தலுடன் ஒப்பிடும் போது ஏறத்தாழ இரண்டு மடங்காக இருந்தது. மீண்டும் தேசத்தின் இரண்டாவது பெரும் அரசி யல் சக்தியாக, ஆனாலும் முன்பிலும் வலுமிக்க தாக நாடாளுமன்றத்தில் பலம் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் மட்டுமல்ல; சட்ட மன்ற தேர்தல்களிலும் கம்யூனிஸ்ட்டுகள் முன் னேற்றம் பெற்றார்கள். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சட்ட மன்றங்களில் பிரதிநிதித்துவம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முந் தைய தேர்தல்களில் கிடைக்காத பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கூட கம்யூனிஸ்ட்டுகளுக்கு சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. இந்தியாவின் மிக பெருவாரியான பிரதான தொழில்நகரங்களில் கம்யூனிஸ்ட்டுகளின் வெற்றி பாராட்டும்படியாக இருந்தது. ஆயி னும், இந்தியாவின் கிராமப்புறங்களில் போது மான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து பரிசீலித்த கட்சியின் மத்தியக்குழு கிராமப்புற உழைக்கும் மக்களின் போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்க தீர்மானித்தது.