articles

img

வாரிச் சுருட்டிய அதிமுக ஆட்சி... அம்பலமாக்கும் சிஏஜி அறிக்கை....

மக்களுக்கு சிறந்த ஆட்சியை கொடுப்பது ஒன்றிய மாநில அரசுகளின் கடமை. சிறந்த ஆட்சிக்கு தகுந்த கொள்கை முடிவுகளை உருவாக்குவது மிக மிக அவசியம். அத்தகைய அரசின், நோக்கங்கள் எந்த அளவுக்கு சிக்கனமானதாகவும், சிறந்த முறையிலும், பயனுள்ளதாகவும் நிறைவேறியது என்பதை தணிக்கை செய்யும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் (சிஏஜி) ஆய்வுகளை மாநில சட்டமன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்வது வழக்கம்.ஆட்சியின் இறுதிக் காலத்தில் இப்படி ஒரு நடைமுறை இருப்பதையே வசதியாக மறைத்துக் கொண்டது அதிமுக. ஆனால், அதிமுக விட்டுச்சென்ற அறிக்கைகளை புதிய அரசு, முதல் கூட்டத் தொடரிலேயே  சமர்ப்பித்தது. அதை அலசியபோது “எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்” என்று அடிக்கப்பட்ட கொள்ளைகளை ‘வெளிச்சம்’ போடுகிறது சிஏஜி அறிக்கை.

துரோகம்!
டி.ஜெயக்குமார் மீன்வளத் துறைக்கு அமைச்சராக இருந்தும், அந்த மக்களின் மேம்பாட்டுக்காக  பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 186.90 கோடி ரூபாயை முழுமையாக பயன்படுத்தவில்லை என இடித்துரைத்துள்ளது.மீனவர்களின் சமூக பொருளாதாரம், முன்னேற்றம், நிலையான மேம்பாட்டிற்கான முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தவில்லை என்பதோடு, ஒன்றிய நிதியை பாஜக அரசிடம் கேட்டுப் பெறாமல், மாநில நிதி ரூ.130 கோடியை பயன்படுத்தியது அதிமுக அரசின் ‘விவேகமற்ற’ நிதி மேலாண்மைக்கு சான்றாக அமைந்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறது.

பூம்புகார் மீன்பிடித் துறைமுகத்தில் பகுதியளவு கட்டப்பட்ட மதகு அணையின் சுவர் கட்டுமானப்பணிளை முடிப்பதில் ஏற்பட்ட தாமதம், குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளை வேறு இடத்துக்கு மாற்றியதால் ஏற்பட்ட கூடுதல் செலவினம், இந்த இரண்டு மீன்பிடி தளங்களில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்த முடியாமல் போனது, அனுமதியில்லாமல் மீனவர் குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ததால் பயன்பாடு இல்லாமல் போனது ஆகியவற்றாலும் 345 கோடி ரூபாய் நிதியை முடக்கவும் ஜெயக்குமார் வழி வகுத்துள்ளார் என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டை அடுக்கியிருக்கிறது.

தானே வெட்டிய பள்ளத்தில்...
தமிழ்நாட்டின் வேளாண்மை வளர்ச்சிக்கு நீர்வள ஆதாரம் தடையாக இருக்கும் என்பதை 11 ஆவது ஐந்தாண்டு திட்ட ஆவணம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், 8 நதிகளை இணைக்கும் திட்டத்தை 2008 ஆம் ஆண்டில் கண்டறிந்த திமுக அரசு,வற்றாத ஆறுகளில் ஒன்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக வங்கக் கடலில் சங்கமிக்கும் தாமிரபரணி ஆற்றின் மிகை வெள்ள நீரை பயன்படுத்த கருமேனியாறு-நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டம் கொண்டு வந்து 23,040 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசனம்,நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடிவு செய்தது.அதேபோல், காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தையும் அறிவித்தது.அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட, இந்த திட்டத்திற்காக அதிமுக அரசு ஒப்புதல் கொடுத்த ரூ.797.78 கோடியில் 694 கோடி வரைக்கும் செலவு செய்துஏழு ஆண்டுகள் கடந்தும் ஆரம்பக் கட்டத்தை  கூட தாண்டாமல் செலவை 48 சதவீதம் அதிகரித்தது தான் மிச்சம்.

இதேபோல், காவிரியின் குறுக்கே தடுப்பணை, வைகை-குண்டாறு இணைப்பு பணிக்காக ரூ.2,673 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்த அதிமுக அரசு, நிதி உதவி பெறுவதற்கான ஒப்பந்தங்கள் எதுவும் இல்லாமல் அவசரகோலத்தில் வேலையைத் துவக்கி ரூ.249 கோடியை தடுப்பணைக்காக மட்டுமே செலவிட்டது. திட்டம் தொடங்கப்பட்டு  பத்து ஆண்டுகளை கடந்தும் இணைப்புக் கால்வாய்கூட வெட்ட முடியாத ‘அலங்கோல’காட்சிகளை புகைப்படங்களுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது சிஏஜி.உண்மை நிலவரங்கள் இப்படி இருக்க, சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “கோதாவரி- காவிரி, கருமேனி- நம்பியாறு திட்டங்கள் இணைப்பு குறித்து முதலமைச்சரின் பதில் உரையிலும் இடம் பெறவில்லை என்று குற்றம்சாட்டி”தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார்.

‘பார்வையில்லா தொலைநோக்கு’
தமிழகத்தை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் சர்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என்கிற12-வது ஐந்தாண்டுத் திட்ட ஆவணத்தின் நோக்கம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ரூ.10,300 கோடியில் மாநில முழுவதும் 1,150 ஏக்கர் நிலப்பரப்பில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த கொண்டுவரப்பட்ட “தமிழ்நாடு தொலை நோக்குப் பார்வை 2023” திட்டத்தின் நோக்கத்தையும் துறையின் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சிதைத்துவிட்டார்.

“டாட்டா காட்டிய டாட்டா”
அரசுக்கு சொந்தமான வேளாண்மை தேயிலைத் தோட்டங்களை டாடா தேயிலை நிறுவனம், ஜெயஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட், பெரிய கருமலை டீ மற்றும் ப்ராட்யூஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய தனியார் நிறுவனங்கள் முறையே வால்பாறை, சோலையார், சிறுகுன்றா, மோனிகா, நல்லகாத்து, இஞ்சிபாறை, வெள்ளிமலை, நடுமலை ஆகிய பகுதிகளில் ஏக்கர் ஒன்றுக்கு மிகக் குறைந்த அளவாக ரூ.330 லிருந்து 750 வரை ஒரு ஆண்டுக்கு குத்தகை எடுத்திருக்கிறது.3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு குத்தகை வாடகையை உயர்த்த வேண்டும், குத்தகையைப் புதுப்பிக்க வேண்டும் என்பது அரசின் வழிகாட்டுதல். ஆனாலும், 10 ஆண்டு காலமாக தொடர்ந்து ஆட்சி செய்த அதிமுகவின் ‘ஆசி’யால் புதுப்பிக்காமல் அரசுநிலங்கள் இந்த தனியார் வசமே உள்ளதால் சுமார் 2 கோடி ரூபாய் வரைக்கும் குத்தகையும் குறைவாக வசூலிக்கப்பட்டுள்ளது.

‘மலை விழுங்கி மகாதேவன்கள்’
அரசு நிறுவனங்கள் மற்றும் சட்டமுறை கழகம் என்பதுதான் பொதுத்துறை நிறுவனங்கள் என குறிப்பிடப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் 2018 மார்ச் 31 முடிய 69 பொதுத்துறை நிறுவனங்கள், ஒரு சட்டமுறைகழகம் அதாவது, சேமிப்புக் கிடங்கு நிறுவனம் இருந்தன.அவை மின்துறை அல்லாத பிற துறையைச் சேர்ந்தவை. இவை அனைத்தும் 1948-49 முதல் 2018-19 ஆம் வரையிலான காலகட்டத்தில் தொடங்கப்பட்ட வகைகளாகும்.தற்போது தமிழ்நாடு அரசு கட்டுமானக் கழகம், தமிழ்நாடு வேளாண்மைத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்,தமிழ்நாடு கோழியின வளர்ச்சிக் கழகம், சதர்ன் ஸ்ட்ரைக்கரல்ஸ் லிமிடெட், தமிழ்நாடு பொருள் போக்குவரத்துக் கழகம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் செயல்படவில்லை.

இந்தப் பொதுத் துறை நிறுவனங்களுக்கு மாநில அரசு அவ்வப்போது பங்கு மூலதனம் கடன் மற்றும் உதவித்தொகை மானியங்கள் என்ற வடிவில் நிதி உதவி அளிக்கிறது. இந்த நிறுவனங்களின் மொத்த முதலீடு, ரூ.1.97 லட்சம் கோடி. இதில், 88.98 சதவீதம், மின் துறை நிறுவனங்களில் உள்ள முதலீடாகும். கடந்த 2018 - 19ஆம் ஆண்டில், மின் துறை நிறுவனங்கள், 13,176,20 லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.மின் துறை அல்லாத, தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம்ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளை புறம்தள்ளி சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சுண்ணாம்புக்கல் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரூ.57.72 கோடி அபராத தொகை கட்டியுள்ளது .மேலும்,2.77 கோடி ரூபாய் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.இதேபோல், சுற்றுச்சூழல் முன் அனுமதி இல்லாமல் மேற்கொண்ட நடவடிக்கைகளை தொடர்ந்ததால் ரூ.14.12 கோடி அபராதம் கட்டியிருக்கிறது கனிம நிறுவனம்.

தகுந்த ஆதாரங்களை பெறாமலேயே தனது விற்பனையாளர்களுக்கு ரூ.14.7 கோடி சுங்க வரி கொடுத்ததாக கணக்கு எழுதி வைத்திருக்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், நுகர்வோருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செட்டாப் பாக்ஸ் வழங்காமல் காலதாமதம் செய்த விற்பனையாளர்களிடமிருந்து 22.69 கோடி ரூபாயை வசூலிக்காமல் அனுசரணையாக நடந்து கொண்டுள்ளது அதிமுக அரசு.‘டைடல் பார்க்’ நிறுவனத்தின் இணை உரிமையாளர்களிடம் இருந்து முக்கிய ஆலை இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் மாற்றிய வகையில் அரசுக்கு வழங்க வேண்டிய உரிய பங்குத் தொகையான ரூ.5 கோடியை வசூலிக்கவில்லை.கடந்த பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையால் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் உள்ளிட்ட 70 பொதுத்துறை நிறுவனங்கள் 2018 -19ஆம்ஆண்டில், 3,789.54 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளன.

கடனாளிகள்!
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறையை நீக்கவும் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் கடன் சுமைகளை திறம்பட சமாளிக்கவும் “தமிழ்நாடு நிதி நிலை பொறுப்புடைமை சட்டம் 2003” கொண்டுவரப்பட்டது. இது கடைசியாக 2017ல் கடந்த கால ஆட்சியாளர்களால் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த 2014-15 ஆம் ஆண்டுகளில் ரூ.6,408 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை உயர்ந்துகொண்டே வந்து 2018-19 ஆம் ஆண்டுகளில் 23,459 கோடியாக உயர்ந்து விட்டது. நான்கு நிதி ஆண்டுகளில் 17 ஆயிரம் கோடியாக பற்றாக்குறையை அதிகரித்ததும் ஏழரைக் கோடி தமிழக மக்களின்தலையில் தலா 35 ஆயிரம்  ரூபாயை சுமத்தி கடனாளிகளாக மாற்றியதும்தான் அதிமுக அரசின் சாதனை! என்பதையும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

வெட்டாத கிணறுக்கு பணம்!
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை பெருநகர பகுதியில்100 விழுக்காடு பாதுகாப்பாக கழிவு நீரை வெளியேற்ற ‘தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023 ‘கொண்டுவரப்பட்டது. கழிவுநீர் கட்டமைப்பை விரிவுபடுத்த கணிசமான அளவு முதலீடு செய்தும் திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடி, மந்தமான போக்கு, திறமையின்மை திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்தது.கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை மாநகராட்சி 100 வார்டுகளை கொண்ட 5 மண்டலங்களை உள்ளடக்கியது. மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக திடக்கழிவு மேலாண்மையை செயல்படுத்த முடிவு செய்தது.இந்தத் துறைக்கு அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியின் சொந்த மாவட்டம் என்றபோதிலும் மக்கள் தொகையை தவறாக கணக்கீடு செய்துள்ளனர். இது திடக்கழிவு அளவை குறைத்து மதிப்பிட வழிவகுத்துள்ளது. மேலும் முறையான ஆய்வு செய்ய தவறியது தவறான மதிப்பீட்டுக்கு வித்திட்டது கொடுமையிலும் கொடுமை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி கோவில்பட்டி ராஜகுலம் பட்டியல் பிரிவு மக்களுக்கு குடிநீர், வீட்டு பயன்பாட்டிற்கான தண்ணீர் வழங்குவதற்காக 6 அங்குலஆழ்துளை கிணறு ஒன்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டியும் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள பணிக்கு பேரூராட்சி இயக்குனர் 2015ஆம் ஆண்டில்  நிர்வாக அனுமதி கொடுத்துள்ளார்.இந்தப் பணியை ஒப்பந்தம் எடுத்த நபர் குறிப்பிட்ட ஆறு மாத காலத்திற்குள் ஆழ்துளைக் கிணறுஅமைத்து அனைத்துப் பணிகளையும் செய்து முடித்ததை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ததும்,பிறகு ஒப்பந்ததாரருக்கு முழு தொகையும் பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் அளவு புத்தகங்களில் பதியப்பட்டுள்ளது.

வேடிக்கை என்னவெனில், அந்தப் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்திய ஒரு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ராஜகுலம் காலனி பகுதியில் ஆழ்துளை கிணறு எதுவும் அமைக்கப்படவில்லை என்பதையும் ஒப்பந்ததாரர் மோசடியாக கூறிய தொகையை வழங்கியது, ஆழ்துளை கிணறு வெட்டப்பட்டது உண்மை என்று அளவு புத்தகத்தில் சான்று அளித்தது அனைத்தும் அன்றைய அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மோசடிகளை தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து விட்டது.

பெயர் நீக்க ரூ.23 கோடி!
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் ‘விலையில்லா பாடநூல்கள் வழங்கும்’ திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை மூலம் அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கான தயாரிப்பு பணிகள் மற்றும் செலவுகளை, பள்ளிக்கல்வி துறை கவனிக்கிறது. தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி, மாநில கல்வி ஆராய்ச்சி நிறுவன இயக்குநரகங்கள் மற்றும் பாடநூல் கழகம் ஆகியன புத்தக தயாரிப்பு மற்றும் அச்சிடும் பணிகளை மேற்கொள்கின்றன.கூடுதலாக புத்தகம் அச்சடிப்பை கவனிக்கும் பாடநூல் கழகம், அரசிடம் செலவு தொகையை பெறுகிறது. 2019-20 ஆம் ஆண்டுக்கு அச்சு காகிதங்களை கையாளும் கட்டணம் எனக் கூறி, அரசாணையில் உள்ளதை விட 5 விழுக்காடு கூடுதல் தொகையை, பாடநூல் கழகம் அரசிடம் கேட்டது.இதற்கு தணிக்கையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், பாடநூல் கழகம் கைவிட்டதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த செலவு தொகையை நிர்ணயித்துபெற்றுத் தரும் தொடக்க, பள்ளிக்கல்வி இயக்குநரகங்கள், இது குறித்து முந்தைய ஆண்டுகளில், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை.இந்த அலட்சியத்தால், 2016 -17 ஆம் நிதி ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு, அரசாணையை விட கூடுதலாக ரூ. 21.85 கோடியை பாடநூல் கழகம் பெற்றதால் அது அரசுக்கு இழப்பாகும்.அதேபோல், 2006-11 ஐந்தாண்டு காலம் திமுக ஆட்சியின்போது, பாடப் புத்தகங்களின் முன்னுரை, முகவுரையில் முதல்வர் கருணாநிதி, அப்போது அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி கூறி எழுதப்பட்டிருந்தது.பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுகவிடம், 1 முதல் 8 உள் பக்கங்களில் ‘கருத்தியல் பிழைகள்’ இருப்பதாகவும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறி அந்த புத்தகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. முன்னுரை, முகவுரை மாற்றத்துக்காக 6.37 லட்சம் பிரதிகள் மீண்டும் அச்சடிக்கப்பட்டன.

இந்த வகையான தேவையற்ற செலவுக்கு, 23.27 கோடி ரூபாய் வீணானது. புத்தகத்தின் அம்சங்களை சரிவர செய்யாதது பள்ளிக்கல்வி துறையின் தவறு என்றும் பள்ளிக் கல்வி துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகளின் அலட்சியமான நடவடிக்கைகளால், அரசுக்கு ரூ. 53 கோடி ரூபாய் வீண் செலவாகியுள்ளது என்றும் தணிக்கை துறைதலைவர் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

காப்பீட்டுத் திட்டத்திலும்...
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகளாக சேர்வதற்கு ஆதரவற்றோர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இலங்கை அகதிகள் போன்ற விளிம்புநிலை பிரிவினருக்கு வருமான வரம்பு கிடையாது.அன்றைய கணக்குப்படி, 32,555 இலங்கை அகதிகள்குடும்பங்கள் இருந்தும் 4515 குடும்பங்களை மட்டுமே பயனாளிகளாக சேர்த்துள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 21 ஆயிரத்து 538 என்று அடையாளம் காணப்பட்டும் ஒருவரும் சேர்க்கப்படவில்லை. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்கள் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.விசித்திரம் என்னவென்றால், தகுதி இல்லாத நபர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக  மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்ததாக கணக்கு காட்டி ரூ.1,015 கோடி பிரீமியம் தொகை கட்டியதாக சுருட்டியிருக்கிறார்கள்.

பாலம் கட்டுவதிலும்...
சுனாமியால் உருக்குலைந்த நாகை மாவட்டத்தில் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டில் வெள்ளப்பள்ளம் - உப்பனாறு ஆற்றின் குறுக்கே ரூ.27.50 கோடியில் பாலம் கட்ட முடிவு செய்த அதிமுக அரசு, போதிய கள ஆய்வு செய்யாமல் வழித்தடத்தை தவறாக அமைத்துள்ளது.அதுமட்டுமின்றி அணுகுசாலைக்கு நிலம் எடுப்பதிலும் காலதாமதம் செய்து இழுத்தடித்து ரூ. 19.46 கோடியை முடக்கியதோடு, ரூ.16 லட்சத்திற்கு கூடுதலாக திருத்திய மதிப்பீடுதயார் செய்து கூடுதல் நிதி சுமையையும் ஏற்படுத்தியுள்ளது.அதேபோன்று, அம்மனாறு ஆற்றின் குறுக்கே சிறு பாலம் கட்ட  அரசு அனுமதி அளித்து பின்னர் பெரிய பாலமாக மாற்றியும் பணிகளில் முன்னேற்றம் இல்லை. இதனால் ரூ.3.91 கோடி நிதி முடக்கத்துடன் விலை உயர்வு காரணமாக ரூ.1.83 கோடி கூடுதல் நிதிச்சுமையை உருவாக்கி நோக்கத்தை சீரழித்தது. இதனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் போக்குவரத்து தேவையை கூட நிறைவேற்றிக் கொடுக்க முடியாமல் அரைகுறையாய் நிற்பதையும் காட்சிப்படுத்தியிருக்கிறது சிஏஜி அறிக்கை.

தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்ற ஒரே கட்சி என்று பெருமைக் கொள்ளும் அதிமுக ஆட்சியில் சமூக பொருளாதாரம், பொது சமூகப் பிரிவு, பொதுத்துறை நிறுவனங்கள், நிதி-நிலை மீதான சிஏஜி அறிக்கை விலாவாரியாக சுட்டிக்காட்டி இருக்கும் வருவாய் இழப்பு, முறைகேடு, திட்டங்கள் அறிவித்தும் நிறைவேற்ற கவனம் செலுத்தத் தவறியது, கால விரயம் உள்ளிட்டவற்றை பார்க்கும் பொழுது “அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் சொத்தை” என்பதாகவே இருக்கிறது.

தொகுப்பு: சி.ஸ்ரீராமுலு 

தொடர்ச்சி பத்திகள் இல்லாத ஒரே செய்தி தொகுப்பு....