இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியன்று ஒன்றியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த போது, வள்ளுவரின் ஒரு குறளை மேற்கோள்காட்டிப் பேசியிருந்தார். “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு” என்பதே அந்த குறள்.
ஆனால், வள்ளுவர் இன்னொரு குறளையும் இயற்றியிருக்கிறார். அந்த குறள் (552) “வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு”. இதன்பொருள் ஆட்சியிலிருப்போர் தன் மக்களிடம் அநியாயமாகவரி கேட்பது வழிப்போக்காளர்களிடம் ஆயுதத்தைக் காட்டி பணத்தை பறித்துக் கொள்வதற்குச் சமம் என்பதாகும்.ஒன்றிய அரசின் வரிக்கொள்கை வள்ளுவனின் மேற்சொன்ன குறளுக்கு ஒப்பானதாகவே இருக்கிறது. வரிவிதிப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கையில் தோழர் மார்க்சும், ஏங்கெல்சும் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
கடுமையான வளர்வீத அல்லது படித்தர வருமான வரி ( A heavy progressive or graduated income tax.) அதாவது,கூடுதல் வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பும், குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு அவர்களது வருமானத்திற்கு தகுந்தாற்போல் குறைந்த வரியோ அல்லது பூஜ்ஜிய வரியோ விதிக்கப்பட வேண்டுமென்கிறது. ஆனால், இந்திய ஒன்றிய அரசுகளின் வரிவிதிப்புக் கொள்கைகள் இதற்கு நேர் மாறாக, ஏழை, எளிய மக்களிடம் வரிவிதிப்பை அதிகரித்துக் கொண்டே பெரும் பணக்காரர்களுக்கு வரியை குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.
இரண்டு வகை வரிகள்
உலகம் முழுவதும் இரண்டு வகையான வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒன்று, நேரடி வரி. இன்னொன்று மறைமுக வரி. நேரடி வரி என்பது தனி மனிதர்கள் செலுத்தும் வருமானவரி மற்றும் பெருநிறுவனங்கள் செலுத்தும் வரி,சொத்துவரிபோன்றவை.மறைமுக வரி என்பது, பொருட்கள் அல்லது சேவைகளின் மீது விதிக்கப்படும் வரியாகும்.அதாவது, ஒரு பொருளையோ அல்லது சேவையையோ பெறுகிற ஒருவர் அவற்றின் விலை அல்லது கட்டணத்தின் மீது கூடுதலாக செலுத்துவது, அனைவரும் செலுத்துகிற வரியாகும். அதாவது, நேரடி வரி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களும் வருமான வரி கட்டுகிற அளவுக்கு சம்பளம்பெறுவோரும், பெருமளவுக்கு சொத்து வைத்திருப்பவர்களும் கட்டுவது.மறைமுக வரி என்பது ஏழை, எளிய மக்கள் உட்பட அனைவரும் கட்டும் வரியாகும். பெருநிறுவனங்களும், சொத்து படைத்தோரும் வருமான வரி கட்டுவோரும் இந்தவரியை குறைப்பதற்காக குறிப்பிட்ட முதலீடுகள் சேமிப்புகள் உள்ளிட்ட வாய்ப்புகள் இருக்கின்றன. சில கடன்கள்பெறும்போதும் வரியில் விலக்குகள் எல்லாம் அளிக்கப்படுகிறது. ஆனால், மறைமுக வரிகளுக்கு இந்த சலுகைகள் எதுவும் கிடையாது. என்ன வரி விதிக்கப்பட்டிருக்கிறதோ, அது பொருட்களின் விலையோடு சேர்ந்தே வசூலிக்கப்பட்டுவிடுகிறது.
நேரடி வரிகளைப் பொறுத்த வரையில் ஆண்டின் இறுதியில் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், மறைமுக வரிகள் எந்த நிமிடத்தில் ஒருவர் பொருள் அல்லது சேவைக்கான பணத்தைக் கட்டுகிறாரோ அந்த நிமிடத்திலேயே அந்த வரி வசூலிக்கப்பட்டு விடுகிறது.இந்த பின்னணியில் தான் உலகின் பல நாடுகளிலும் அரசின் வரி வருவாயில் நேரடி வரி அதிகமாகவும், மறைமுகவரி குறைவாகவும் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இந்த நிலை கொஞ்சம், கொஞ்சமாக மாறி தற்போது நேரடிவரிகள் பெருமளவுக்கு குறைக்கப்பட்டு மறைமுக வரிகள் அதிகமாக்கப்பட்டிருக்கின்றன.
கட்ட மறுப்பவர்களுக்கு நிறுத்தி விடலாமாம்
உதாரணமாக, 2020-21ஆம் ஆண்டு ஒன்றிய அரசின்வரிவருவாய் ரூ. 20.16 லட்சம் கோடியாகும். இதில் நேரடிவரி ரூ. 9.45 லட்சம் கோடி. மறைமுக வரி ரூ. 10.71 லட்சம்கோடியாகும். அதாவது, சதவிகிதத்தில் சொன்னால் பெரும்பணக்காரர்கள் மற்றும் வருமான வரி கட்டுவோர் அனைவரும் சேர்ந்து கொடுக்கும் வரி 46.87 சதவிகிதமாகவும், ஏழைகள் செலுத்தும் மறைமுக வரி ரூ. 53.13 சதவிகிதமாகவும் இருக்கிறது. இந்த மறைமுக வரி அதற்கு முந்தையஆண்டை விட 12 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஆனால்,நேரடி வரி பெருமளவு குறைந்திருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணம் 2019 நிதி நிலை அறிக்கையில் பெருநிறுவன வரி 30 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாககுறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று புதிதாக துவங்கப்படும் நிறுவனங்களின் வரி 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம்குறைவு ஏற்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், தனிநபர் ஒருவர் வரி கட்ட வேண்டிய வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அவர் 30 சதவிகிதத்திற்கும் அதிகமாக வரி கட்ட வேண்டும். ஆனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனம் 22 சதவிகிதம் வரி கட்டினால் போதுமானது.
இதேபோன்று 1975ஆம் ஆண்டிலிருந்து விதிக்கப்பட்ட சொத்துவரி 2015ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. அப்படிகைவிட்டதற்கான காரணமாக அப்போதைய நிதியமைச்சர்குறிப்பிட்டது இந்த வகையில் வரும் வரி 1000 கோடி ரூபாய் அளவிற்கு தான் இருக்கிறது. ஆனால் அதை வசூலிப்பதற்கே நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்பதாகும். அவருடைய கூற்றின் உண்மை என்னவெனில், சொத்துவரி கட்டக் கூடியவர்கள் முறையாக கட்ட மறுக்கிறார்கள். எனவே, வசூலிப்பதை நிறுத்தி விடலாம் என்பதாகும்.
கைவிடப்பட்ட வரிகள்
இதேபோன்று, பாரம்பரியமாக பெரும் சொத்து படைத்தோர் அந்த சொத்தை தனது வாரிசுக்கு மாற்றிக் கொடுக்கும் போது, வாரிசு வரி (Inheritance Tax) விதிக்கப்பட்டு வந்தது. அதுவும் 1985 கால கட்டத்திலேயே கைவிடப்பட்டது. ஒருபக்கம், பெருநிறுவனங்களுடைய வரி கொஞ்சம், கொஞ்சமாக குறைக்கப்பட்டு 22 சதவிகிதம்என்ற அளவுக்கு கீழே வந்தது. மற்றொரு புறம், பெரும்சொத்து படைத்தோரின் வரிகள் மொத்தமாக கைவிடப்பட்டன.இத்தனைக்கும் இந்த காலத்தில் தான் பெரு நிறுவனங்கள் மற்றும் மிக உயர்ந்த வருவாய் பிரிவினரின் சொத்துக்கள் தாறுமாறாக உயர்ந்தன. உதாரணமாக, ஆக்ஸ்ஃபார்ம் என்கிற அமைப்பும், கிரிடிட் சுசி என்கிற அமைப்பும் ஆண்டுதோறும் வருவாய் இடைவெளி பற்றிய விபரங்களை வெளியிட்டு வருகிறார்கள். 2014ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சொத்து அடிப்படையில் மேலேயுள்ள 10 சதவிகிதம் பேரின் சொத்து மதிப்பு அதாவது, 13 கோடி பேரின் சொத்து மதிப்பு கீழேயுள்ள 70 சதவிகிதம் பேர் அதாவது 90 கோடி பேரின் சொத்து மதிப்புக்கு சமமாக இருந்தது. இது, 2019ஆம் ஆண்டின் இறுதியில், மேலேயுள்ள ஒரு சதவிகிதம் பேரின் சொத்து மதிப்பு அதாவது 1.30 கோடி பேரின் சொத்து மதிப்பு கீழேயுள்ள 90 கோடி பேரின் சொத்து மதிப்பை போல நான்கு மடங்குக்கும் அதிகமாக மாறிவிட்டது. இதன் பொருள் என்னவெனில், இந்தியாவில் உள்ள 70 சதவிகிதம் பேரின் சொத்து குறைந்திருக்கிறது என்பதும், மேலேயுள்ள ஒரு சதவிகிதம் பேரின் சொத்து தாறுமாறாக உயர்ந்திருக்கிறது என்றும் ஆகும். இந்த ஐந்தாண்டு காலத்தில் மேலேயுள்ள பணம் படைத்தோரின் சொத்து மதிப்புக்கும், கீழேயுள்ளவர்களின் சொத்து மதிப்புக்கும் 40 மடங்கு இடைவெளி அதிகரித்திருக்கிறது. அதே அமைப்புகளின் கணக்குபடி, இந்தியாவில் உள்ள 63 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டு மொத்த பட்ஜெட்டான ரூ. 24,42,200 கோடியை விட மிகவும் அதிகமானது.
இதேபோன்று, சம்பளத்திலும் மேலேயுள்ளவர்களின் சம்பளத்திற்கும், அடிமட்டத்தில் உள்ளவர்களின் சம்பளத்திற்கும் மிகப் பெரிய அளவுக்கு இடைவெளிகள் இந்த காலத்தில் அதிகரித்துள்ளன. ஒரு பெண், வீட்டு வேலை செய்கிறவர், இந்தியாவில் உள்ள ஒரு பெரு நிறுவனத்தில் வேலை செய்யும் தலைமை செயல் அதிகாரி ஒரு வருடத்தில் பெறும் சம்பளத்தை பெறுவதற்கு 22,277 வருடங்கள் உழைக்க வேண்டும். ஒரு தலைமை செயல் அதிகாரி 10 நிமிடத்தில் சம்பளமாக பெறுவதை வீட்டு வேலை செய்யும் ஒரு பெண் பெறுவதற்கு ஒரு வருடம் உழைக்க வேண்டும்.
இரண்டு வித இந்தியா
இதேபோன்று, மற்றொரு கணக்கின் படி, கொரோனா கடுமையாக பாதிப்பு ஏற்படுத்திய கடந்த ஆண்டின் இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதாவது, ரூ. 3 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. ஆசியா மற்றும் இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள பணக்காரரான முகேஷ் அம்பானி இந்த காலத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 90 கோடி என்கிற அளவிற்கு அவரின் சொத்து மதிப்பு உயர்ந்திருக்கிறது. ஆனால்,இதே காலத்து இந்தியாவில் இருக்கும் 24 சதவிகித மக்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 3 ஆயிரம் அளவிற்கே சம்பாதித்துக் கொண்டிருந்தனர். இந்த காலத்தில் அதிகரித்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை மட்டும் முறைசாரா தொழிலில் உழைத்துக் கொண்டிருக்கும் 40 கோடி தொழிலாளர்களுக்கு கொடுக்க முடியும் என்றால் 5 மாதத்திற்கு அவர்களை வறுமையிலிருந்து மீட்டுவிட முடியும். இதேகாலத்தில் இந்தியாவிலுள்ள 100 கோடீஸ்வரர்களின் அதிகரித்த சொத்தை மட்டும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்தியாவின் 13.8 கோடி மக்களுக்கு பிரித்துக் கொடுத்தால், ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 94,045 கொடுக்க முடியும்.
இதே காலத்தில் உணவுக்கு வழியின்றி மக்கள் உயிரிழந்ததை இந்தியா கண்டது. தற்போது இந்தியாவில் குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய மருத்துவம் கிடைக்காதோர் ஏராளமாக உள்ளனர். இவ்வளவு பெரும்பணக்காரர்கள் அபரிமிதமான சொத்து சேர்த்துக் கொண்டிருந்த இந்த காலத்தில் பெருநிறுவன வரிகளை அரசு குறைத்தது.இது தவிர, 6 லட்சம் கோடி ரூபாய் வராக் கடனை தள்ளுபடிசெய்திருக்கிறது. இவை தவிர்த்தும் ஏராளமான உதவிகளை பெருமுதலாளிகளுக்கு அரசாங்கம் தள்ளுபடி செய்து கொண்டே இருக்கிறது. ஆனால், ஏழை, எளிய மக்களின் மருத்துவத்திற்கு, கொரோனா காலத்தில் பயன்படுத்தும் தடுப்பூசி முதல் ரெம்டெசிவர், ஆக்சிஜன் என அனைத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அரசு கல்லாக் கட்டிக் கொண்டிருக்கிறது.
வள்ளுவன் சொன்னது போல, ஈட்டலை ஒன்றிய அரசுசெய்கிறது. ஆனால் அது யாரிடம் ஈட்டப்பட்டு, யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பது தான் முக்கியமான பிரச்சனை. ஏழை, எளிய, நடுத்தர மக்களிடமிருந்து அநியாயமாக விதிக்கப்பட்ட வரிகளை வசூலித்து இந்தியாவின் ஆகப்பெரும் பணக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சேவையை செய்கிறது. இந்தச் செயல் வள்ளுவர் சொன்ன“தனியே செல்லும் நபரிடம் ஆயுதத்தைக் காட்டி பொருளை அபகரித்துக் கொள்ளும் செயலுக்கு ஒப்பாகும்”.அரசு நடுநிலையானதோ, அனைவருக்குமானதோ அல்ல. லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் சொத்து சேர்ந்துகொண்டிருக்கும் போதே வரியிலிருந்து விலக்களிப்பதும், வாழ்வதற்கும், புசிப்பதற்கும் வழியற்ற மக்கள் நோயால் துன்பத்தில் உழன்றுக் கொண்டிருக்கும் போது அந்த மருந்திற்கும் வரி விதிப்பதும் ஒன்றிய அரசு யாருக்கான அரசு என்பதை புரிந்து கொள்ள உதவும் ஒரு சோற்றுக்கு உதவும்பதமாகும்.அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கை ஏழைகளிடம்பிடுங்கி, எட்டாத உயரத்தில் இருக்கும் பெருநிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுப்பதாகவே இருக்கிறது.வர்க்கம்தான் தீர்மானிக்கிறது.
கட்டுரையாளர் : க.கனகராஜ்,சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்