க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)
கொரோனோ வைரசால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மருத்துவ, பொருளாதார பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு மிகப்பெரிய உதவி தேவைப்படுகிறது.
ஜிஎஸ்டி வந்த பிறகு எந்த மாநில அரசும் தன்னுடைய நிதியை தானே உருவாக்கிக் கொள்ள வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இந்த நிலையில்தான் மாநில அரசுகள் பலவும் மத்திய அரசின் உதவியை கேட்டுள்ளன. தமிழக அரசும் வெண்டிலேட்டர் வாங்குவதற்கு தற்போது ரூ.3000 கோடி உடனடியாக கொடுங்கள் என்று கேட்டுள்ளது.
முழுக்க இந்த பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தமிழகத்திற்கு 9,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும். மேலும் மாநில அரசாங்கம் கடனாக நிதி திரட்டுவதற்கு பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எனவே அந்த சட்டத்தை கொஞ்சம் தளர்த்துங்கள் என்றும் அவ்வாறு தளர்த்தப்பட்டால் தமிழக அரசின் சார்பாக ரூ.17,000 கோடி கடனாக திரட்டுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் சொல்லியுள்ளார்கள். இதேபோல் பல்வேறு விதமான யோசனைகளை பல மாநில அரசுகளும் சொல்லியுள்ளன. ஆனால், மத்திய அரசு அற்பமான தொகையைத்தான் ஒதுக்கியுள்ளது.
பணக்காரர்களுக்கு ஆபத்து என்றால்....
தொழில் நெருக்கடி என்று வருகிறபோது கார்ப்பரேட் வரியை ஒன்றரை லட்சம் கோடி குறைத்துக் கொள்கிறோம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். குறைக்கவும் செய்தார். ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசாங்கத்திற்கு பங்காதாயம் (டிவிடென்ட்) கொடுக்கிறது. அதுபோக ரிசர்வில் வைத்திருந்த பணத்தில் 1.45 கோடி ரூபாய் அப்படியே எடுத்து பெருமுதலாளிகளுக்கு கொடுத்தார்கள். தொழில் நெருக்கடி என்ற பெயரில், மத்திய அரசாங்கம் ‘ஸ்டிமுலெஸ் பேக்கேஜிங்’ என்ற பெயரில் இன்சென்டிவ் என்ற பெயரில், ஒவ்வொரு வருடமும் ஏராளமான சலுகைகளை பெரும் தொழிலதிபர்களுக்கு செய்கிறார்கள்.
ஆனால் சாதாரண மக்களுக்கு பிரச்சனை என்று வந்தால், அது ஒக்கி புயலாக இருக்கட்டும், சுனாமியாக, கொரோனா வைரஸாக இருக்கட்டும்; இதற்கெல்லாம் மக்களுடைய பணத்தைத் தான் திரட்டுகிறார்கள். திரட்டுகிறார்கள் என்பதைவிட பறிக்கிறார்கள் என்பதுதான் இதற்குப் பொருள். அதில் ஒரு பகுதிதான் 7900 கோடி ரூபாய் எம்பிக்களின் நிதியை மத்திய அரசாங்கம் எடுத்துக்கொள்வது.
சொத்து வரி போடுங்கள்...
அதேபோல் மத்திய அரசு இந்தியாவில் சொத்து வரி விதிப்பது இல்லை. இந்தியாவில் இருப்பவர்களின் சொத்து எப்படி உயர்ந்துள்ளது என்று பல புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் உயர்ந்தபட்சமாக இருக்கக்கூடிய பணக்காரர்கள் ஒரு சதவீதம் பேரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இந்தியாவின் 70% மக்களுடைய சொத்தை விட அதிகம். அதாவது நூறு கோடி மக்களின் சொத்து மதிப்பை விட அதிகம். இந்தப் பெரும் கோடீஸ்வரர்களுக்கு சொத்து வரி போட்டால் இதில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் கோடியை உருவாக்கிட முடியும்.
அதேபோல, பெரிய நிறுவனங்கள் தங்கள் சம்பாதிக்கின்ற லாபத்தில் சிறு பகுதியை சமூக நல நடவடிக்கைகளுக்காக (சிஎஸ்ஆர்) கொடுக்க வேண்டும். இது கடந்த வருடம் 17 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கியதாக விபரம் உள்ளது. இந்த சிஎஸ்ஆர் நிதி முழுவதும் தற்போதைய தேவைகளுக்கு கொண்டு வருவதில் என்ன பிரச்சனை உள்ளது?
ஏழைகளுக்கு பிரச்சனை என்றால் ஏழை மற்றும் எல்லாரிடமும் வாங்கி ஏழைகளுக்கு கொடுப்பீர்கள்; பணக்காரர்களுக்கு பிரச்சனை வந்தால் பொது நிதியிலிருந்து கொடுப்பீர்களா? பொது நிதியைத் திரட்டுவது என்ற பெயரிலும் சாதாரண மக்களிடம் தானே வரி போடுவீர்கள்?
மோடி அரசாங்கம் வந்த பிறகு பெருநிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த தொகை மட்டும் ரூ.7 லட்சத்து 78 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கியில் எடுத்துக் கொடுத்தது ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி. கடந்த ஆண்டு கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைத்தது ஒரு லட்சத்து 55 ஆயிரம் கோடி ரூபாய்.
தனியார் மருத்துவமனைகள்
கொரோனா பாதிப்பின் பின்னணியில் தனியார் மருத்துவமனையில் செக்கப்புக்கு ரூ.4,500 என்று சொன்னார்கள். அதை அரசாங்கமே செலுத்தி விடும் என்று சொல்லுகிறார்கள். அரசு செலுத்திவிடும் என்றால் அந்தப் பணம் எங்கிருந்து வரும்?
கொரோனா பாதிப்பு காலத்திற்கு மட்டுமாவது, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஏழை- எளிய மக்களுக்கு தனியார் மருத்துவமனைகள் ஏன் இலவசமாக மருத்துவம் பார்க்கக் கூடாது? வெண்டிலட்டர் சரியாக உள்ளது, ஆக்சிஜன் உள்ளது, ஆகவே அதைக் கொடுங்கள் என்று தனியார் மருத்துவமனைகளிடம் சொல்வதில் என்ன தயக்கம் உள்ளது? ஆபத்தான காலத்தில் கூட தனியார் மருத்துவமனைகளை கொடுக்க வைக்க இந்த அரசாங்கத்தால் முடியாது என்று சொன்னால் அரசாங்கம் யார் பக்கம் நிற்கிறது?
மோசமான சுகாதாரக் கட்டமைப்பு
இந்தியாவில் இருக்கக்கூடிய மருத்துவக் கட்டமைப்பு மிகவும் மோசம் என்பது வெளிச்சத்திற்கு வருகிறது. இரண்டு மூன்று நாளைக்கு முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு தலையங்கம் எழுதி இருந்தது. உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நாடுகள் சுகாதாரத்திற்கு சராசரியாக ஒதுக்குவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 7 சதவீதம். இந்தியாவில் ஒரு சதவிகிதம் கூட கிடையாது. கடந்த ஆண்டு வெறும் 67 ஆயிரம் கோடி தான் இந்தியாவில் பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் சில முதலாளிகளை காப்பாற்ற ஒன்றரை லட்சம் கோடி முதல் பல லட்சம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கியிருக்கும் இடைப்பட்ட காலத்தில் தேசிய சேமிப்பு, ஜிபிஎப் பணம், வரிகளை சேமிக்கும் பணத்திற்கான வட்டி விகிதம் 1.4% அரசாங்கம் குறைத்துள்ளது. இதேபோல் கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான ஒதுக்கீடு செய்த தொகை கடந்த காலத்தில் 71 ஆயிரம் கோடி ரூபாய், இந்த காலத்தில் 61 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.
எப்படிப் பார்த்தாலும் ஒரு பேரழிவு வந்தாலும் சரி, மிகப்பெரிய அளவு லாபம் வந்தாலும் சரி அவை அனைத்தும் இந்தியாவின் பெருமுதலாளிகளுக்குத்தான் போகும். பிரபல பத்திரிகையாளர் பி.சாய்நாத் புத்தகத்தில், ‘முதலாளிகள் ஏன் ஒரு பஞ்சத்தை நேசிக்கிறார்கள் என்றால், பேரழிவோ பஞ்சமோ வரும்போது லாபம் அடைபவர்கள் பணக்காரர்கள். நஷ்டமடைபவர்கள் ஏழைகள்’ என்று குறிப்பிட்டிருந்தது, அப்படியே பொருந்துகிறது.
எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சில ஆலோசனைகளை அழுத்தமாக முன்வைக்கின்றது:
இந்தியாவில் ஏழரை கோடி டன் தானியம் கையிருப்பு உள்ளது, அதை எல்லாம் மாநில அரசுகள் கையில் கொடுத்து விநியோகிக்க சொல்லலாம்.
மிகப்பெரிய பணக்காரர்களுக்கு சொத்துவரி போடுவது மூலமாக ஒன்றரை லட்சம் கோடி நிதி திரட்ட முடியும்.
கார்ப்பரேட் சமூகநலநிதியில் இருந்து சுமார் 18 ஆயிரம் கோடி வரை எடுக்க முடியும்.
இவற்றை எல்லாம் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கும்போது அதை விட்டு விட்டு உழைப்பவர்கள் கையில் இருப்பது பறித்துக் கொள்வதற்கான ஒரு சிக்னலை மத்திய அரசாங்கம் நேரடியாக முன்வைப்பது ஆபத்தானது.
காணொலி தொகுப்பு: ஜி.ராணி