articles

img

வெல்லற்கரியவர்கள் யாருமில்லை....

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசுகையில், முதலாளித்துவம் எப்போதும் உழைக்கும் மக்களுக்கான நீதியை வழங்காது. சின்னியம்பாளையம், வெண்மணி, கய்யூர் தியாகிகள் என எந்த வழக்கை எடுத்தாலும் அதுதான் நிலை. இன்று அதுபாஜகவாக இருக்கலாம். இதற்கு முன்னரும்அப்படித்தான். நமது இலக்கு ஏகாதிபத்தியத்தை, முதலாளித்துவத்தை எதிர்த்து போராடுவது, சோசலிச லட்சியத்தை நிறுவுவது.

முதலாளித்துவம் அரசு, காவல்்துறை, ராணுவம், நீதிதுறை என அனைத்தையும் உழைக்கும் மக்களுக்கு எதிராகப்பயன்படுத்தும். அது கோட் சூட் போட்டுக்கொண்டே ரவுடிகளை, குண்டர்களை பயன்படுத்தும். இது வரலாறு நெடுகிலும் உள்ளது.ஒரு கோட்பாட்டை ஏற்பது என்பது நேசிப்பும், வெறுப்பும் சேர்ந்ததே. சோசலிசத்தை நேசிக்கிற எவரும் ஏகாதிபத்தியத்தை வெறுக்கவே செய்வர். கம்யூனிசம் அழிந்தது. சோவியத் சோசலிச முகம் போனது. உலகத்தில் இல்லை, இந்தியாவில் மேற்குவங்கத்தில் இல்லை, திரிபுராவில் இல்லைஎன கிட்டத்தட்ட இரங்கற்பா எழுதிக் கொண்டிருந்தார்கள். மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சொல்லுவார், கம்யூனிஸ்ட்டுகளின் வெற்றி தேர்தல் எண்ணிக்கையில் இல்லை. மாறாக,அவர்கள் போராட்டத்தின் அணி திரட்டலில்தான் உள்ளது என்பார். 

தற்போது, சிலி நாட்டில் மக்களின்எழுச்சி, பொலிவியாவின் வெற்றி போன்றவை வெல்வதற்கரியவர்கள் என்பவர்கள் யாரும் இல்லை என்பதை நிரூபித்துள்ளது. சோசலிச தத்துவத்தின் உறுதிப்பாட்டால் கியூபா அமெரிக்காவிற்கு சவால் விடுகிறது.இந்தியாவில் பீகார் தேர்தலில் இன்னும்அதிகமாக இடதுசாரிகளுக்கு தொகுதிகள்கொடுத்திருந்தால் அவர்கள் வெற்றி பெற்றுஇருப்பார்கள், ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று பேச, எழுத வைத்திருக்கிறது. கேரளாவில் காங்கிரசும், பாஜகவும் கூட்டு சேர்ந்து இடது ஜனநாயக அரசுக்கு எதிராக அத்தனை துர்பிரச்சாரங்களை முன்னெடுத்தபோதும் கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் வெற்றி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர், கர்நாடகா என இந்த வெற்றிகள் தொடர்கிறது. இதில் எண்ணிக்கை பிரச்சனையில்லை. வீரியமிக்க நமது போராட்டங்கள்தான் நமது இலக்கை வெற்றியடையச் செய்யும். இந்தியாவை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மோடி அரசு மாற்றியுள்ளது.

குறைந்தபட்ச நிதி ஒதுக்கீடாக உள்ள எஸ்சி,எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கூட தரப்படவில்லை. மறுபுறம் பத்து லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட்டுகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலையை உயர்த்தி அதன்மூலம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை வரியினால் மட்டும் மோடி அரசு நம்மிடம் அபகரித்துள்ளது. இது நம்முடைய சொத்து என்பதை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். நமது தியாகிகள் எந்த லட்சியத்திற்காக தியாகம் செய்தார்களோ, அத்தகைய உன்னத லட்சியத்திற்கான போராட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்வோம்.இவ்வாறு க.கனகராஜ் பேசினார்.முன்னதாக, சின்னியம்பாளையம் தியாகிகள் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தாலூகா செயலாளர் பி.எஸ்.ராமசாமி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் தாலூகா செயலாளர் எம்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். சிங்கப்பூர் ஜி.ஆறுமுகம் நன்றி கூறினார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னணி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

=== க.கனகராஜ்===