கடந்த கால வரலாறு என்பது நிகழ்காலத்திற்கான வழிகாட்டி என்பதை அடிப்படையாக கொண்டு நம்முடைய ஆரம்பகால வரலாற்றை அணுகுவது நமக்கு மேலும் மேலும் உறுதுணையாக அடுத்த கட்டத்திற்கு வழிவகுக்கும்.
1960 முதல் இன்றைய நாள் வரை மின் துறையில் தினக்கூலிகளின் போராட்டங்கள் இயக்கங்கள் என்பது தமிழ்நாடுமின் ஊழியர் மத்திய அமைப்பின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது. 1960 களில் நீர் மின் உற்பத்தி வட்டங்களிலும் விநியோக வட்டங்களிலும் நாமினல் மஸ்டர் ரோல்(என்.எம்.ஆர்) தினக்கூலி தொழிலாளர்கள் (டி.சி.எல்) என்றும் 30,000 க்கும் மேற்பட்டோர் பணியாற்றிய காலகட்டம். தினக்கூலி என்பது ரூபாய் 2 லிருந்து ரூபாய் 5 வரைதான். ஆண்டுயர்வு என்பது வெறும் 24 பைசா மட்டும்தான். எனவே கூடுதலான கூலி, நிரந்தரம் ஆகியவற்றைஎதிர்பார்த்து இந்த தொழிலாளர்கள் ஏங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக கோவை ஆனைமலைப்பகுதிகளிலும் விநியோக வட்டங்களில் பரவலாகவும், திருநெல்வேலியில் அதிக அளவிலும் இத்தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைந்திருந்த சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்த்து பல்வேறு கட்டங்களில் இயக்கங்கள் நடைபெற்றன. இருப்பினும் து.ஜானகிராமன் மற்றும் திருநெல்வேலியில் பி.சி.வேலாயுதம் போன்றவர்கள் இவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பி இயக்கங்களை நடத்தி வந்தனர்.
சிஐடியு காட்டிய பாதை
இக்காலகட்டத்தில் மின்துறையில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருந்தது. நிரந்தரமில்லா இளம் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. முதலாளித்துவத்திற்கு நெருக்கடி ஏற்பட்டால் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கவே இந்த உத்தி பயன்படுத்தப்படுகிறது. இன்றும் இது தொடர்கிறது. இந்த காலத்தில் நிரந்தர தன்மைக்கு வேட்டு வைத்து தினக்கூலிகளாக மாற்றும் நடவடிக்கை மின்வாரியத்தில் அதிகரித்தது. எனவே தினக்கூலிகளின் உரிமைகளுக்காக போராடுவதன் மூலம் தான் நிரந்தரத் தொழிலாளர்களும் தங்களின் தற்போதைய உரிமைகளை பாதுகாக்க இயலும் என்ற து.ஜானகிராமனின் வழிகாட்டுதலில் பல்லாயிரம் தொழிலாளர்கள் பாடுபட்டனர்.
அப்போது துவங்கி, தொடர்ச்சியான போராட்ட அலைகளின் பின்னணியில், 1970ல் மே மாதம் 30ஆம் தேதி சிஐடியு (இந்திய தொழிற்சங்க மையம்) துவங்கப்பட்ட பின்னர் 1970 நவம்பர் 14 ஆம் நாள் மதுரையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு துவக்கப்பட்டது. சி.கோவிந்தராஜன் தலைவராகவும், து.ஜானகிராமன் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் காலகட்டம் தமிழக மின் தொழிலாளர்களின் தொழிற்சங்க வரலாற்றில் ஒரு திருப்பு முனை மட்டுமல்ல, புரட்சிகர தொழிற்சங்கத்தில் ஒரு முக்கிய காலகட்டம் என்பதோடு நமக்கென வாழ்வு பெறுவதற்கான வழியை வகுத்து கொடுத்த நிகழ்வாகும்.1960ல் தினக்கூலிகளின் போராட்டம் துவங்கியபோது கிட்டிய பலன்கள் வெவ்வேறு வகையாக இருந்தபோதிலும் தொடர்ந்து போராடிய காரணத்தால் 13 ஆண்டுகள் கழிந்த பின்னர் நிரந்தரம் என்ற முதல் அடி எடுத்து வைத்த பெருமை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் வழிகாட்டுதலையே சாரும்.
காடம்பாறையில் காண்ட்ராக்ட் தொழிலாளர் இயக்கம்
தினக்கூலி தொழிலாளி முறை 1973-ல் முடிவிற்கு வந்ததும் 1976-ல் காண்ட்ராக்ட் தொழிலாளி முறை வாரியத்தில் புகுத்தப்பட்டது. 1976 மத்திய அமைப்பின் கீழ் எண்ணற்ற போராட்டங்கள். சட்டப்படியான கூலி நிர்ணயம். கூடுதல் வேலைக்கு ஊதியம், சுகாதார வசதி ஆகியவற்றிற்காக போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த இயக்கத்தை அடக்கி ஒடுக்க அஇஅதிமுக அரசு கையாண்டஅடக்குமுறைகள் ஏராளம். மின் உற்பத்திக்கான கட்டுமான வட்டங்களிலும் இது தொடர்ந்தது. காடம்பாறையில் மலையைக் குடைந்து குகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் விஷயத்தில் தொழிலாளர் இலாகா தலையீட்டையும் தமிழக அரசு ஏற்கவில்லை. உரிமைகள் பலவற்றை கேட்டுப்போராடிய தொழிலாளர்களின் இயக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டது.
காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு சலுகைகள் ஏதும் தர மறுத்து காண்ட்ராக்ட் முதலாளியான இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேசன் பக்கம் அரசு நின்றது. 26.01.1981 ல் நடைபெற்ற கிளர்ச்சியின் போது ஒப்பந்த தொழிலாளர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தது. நிரந்தரத் தொழிலாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் சேர்த்து 200 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர். காடம்பாறை மத்தியஅமைப்பின் கிளைச் செயலாளர் கட்பலூர் ராமசாமி என்றும் நாகமலை ராமசாமி என்றும் அழைக்கப்பட்ட தோழர் 265 நாட்கள் அதாவது கிட்டத்தட்ட 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கொடுமையான அடக்குமுறையை சங்கம் எதிர்கொண்டது.
உறுதி மிக்க போராட்டங்களின் விளைவாக தமிழ்நாடு மின் வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஆய்வு செய்ய குழு ஒன்றை அரசு நியமித்தது. இக்குழு முன்புமத்திய அமைப்பினர் அனைத்துப் பகுதிகளிலும் சாட்சியங்களை அளித்தனர். பின்னர் குழு ஒப்பந்தத் தொழிலாளர் பற்றி ஆலோசனையும் விரிவான விவாதமும் நடத்தியது. இக்குழுவில் து.ஜானகிராமன் கலந்து கொண்டதன் விளைவாக பல தொழிற்பிரிவு நிரந்தரத் தன்மையை சுட்டிக்காண்பித்ததோடு ஒப்பந்தக்கூலி முறை ஒழிப்பிற்கு ஆலோசனை தரப்பட்டது.
இதன்பின்னர் தான், மின் விநியோக வட்டங்களில் உள்ள தொழில் முறைகளோடு, அனல் மின் நிலையங்களில் உள்ள பல பிரிவுகளில் ஒப்பந்தக்கூலி முறையை ஒழிப்பதோடு, தொழிலாளர்களின் நிரந்தரம் குறித்து ஆலோசனைகள் வலுப்பெற்றன. தொடர்ச்சியான, விடாப்பிடியான முயற்சிகள், சட்டப் போராட்டங்கள், களப் போராட்டங்களின் பின்னணியில், 1973ல் துவங்கி இதுநாள் வரை 72000 தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி ஒரு எழுச்சி மிகு தொழிற்சங்கத்தை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு நடத்தி காட்டியுள்ளது. மிகவும் கீழ்மட்டத்திலிருந்த பகுதி நேர ஊழியர்களையும் திரட்டி அவர்களில் 5000 பேரை நிரந்தரப்படுத்திய பெருமை மத்திய அமைப்பிற்கு உண்டு.
திரும்பிப் பார்க்கும் போது தெளிவாகும் அரசியல்இந்தியாவில் மிகப் பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரிகின்ற அணிதிரட்டப்பட்ட மற்றும்அணி திரட்டப்படாத துறையில் ஊதியம், உழைப்பு நிலைகளில் - ஒரே விதமான பணி நிலைகளில் கூட ஏற்றத்தாழ்வுகள் மிகவும் மோசமாக இன்றும் இருந்து வருகின்றன. இந்த முரண்பாடான ஏற்றத்தாழ்வுகள் தொழிலாளி வர்க்கத்தின்மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. இதை ஆய்வு செய்து, ஒப்பந்த தொழிலாளர்களும் மின்சாரத் தொழிலாளர்கள் தான் என்ற கோஷத்தையும் மத்திய அமைப்பு எழுப்பியது உத்வேகத்தை உருவாக்கியது.
இதேபோன்று தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் இணைகின்ற போதுதான் அவர்களுக்கு வெற்றி கிட்டும் என்பதை மத்திய அமைப்பு நிரூபித்து காட்டியது. 72,000 பேர் நிரந்தரம் பெற்றதில் 60 சதவீதத்தினர் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் 35 சதவீதத்தினர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சார்ந்தவர்கள் என்ற நிலையானது மின் ஊழியர் மத்திய அமைப்பின் வரலாற்றின் புரட்சிகர எழுச்சிமிகு அம்சங்கள் என்பதை நாம் பெருமையுடன் பார்க்க வேண்டும்.
1997ல் நமது வழிகாட்டுதலின் பேரிலும் து.ஜானகிராமன் முன்முயற்சியின் காரணமாகவும், மின்வாரியத்தில் ஓய்வு ஊதியர் நல அமைப்பு உருவாக்கப்பட்டது. 2002 ஜூன் மாதம் நமது அணியில் உள்ள பொறியாளர்கள் அனைவரையும் திரட்டி தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன் உருவாக்கப்பட்டது. இந்த நமது தொழிற்சங்க அணியை மேலும் வலுப்படுத்தும் கடமை நம்முன் உள்ளது.
கட்டுரையாளர் : எஸ்.பஞ்சரத்னம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) ஸ்தாபக தலைவர்களில் ஒருவர்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்