articles

img

தோழர் ஏ.நல்லசிவனிடம் கற்க வேண்டிய பண்புகள்....

தோழர் ஏ.என். என்று தோழர்களாலும், நண்பர்களாலும்  பாசத்துடனும் நேசத்துடனும் அழைக்கப்பட்ட தோழர் ஆ.நல்லசிவன், தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகவும் முக்கியமான தலைவர்களில் ஒருவராவார். தோழர் ஏ.என். 1922பிப்ரவரி 22 அன்று பிறந்தார். 2021 பிப்ரவரி 22 அன்று  தொடங்கிடும் அவரது நூற்றாண்டு பிறந்த தினத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு பொருத்தமான விதத்தில் கொண்டாட முடிவு செய்திருக்கிறது.  

தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சாதாரணமான குடும்பத்தில் பிறந்த தோழர் ஏ.என். பள்ளி நாட்களில் மிகவும் புத்திசாலி மாணவராகத் திகழ்ந்தார்.  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநிலத்திலேயே மூன்றாவது மாணவனாகத் தேர்வு பெற்று, கல்லூரிக்குச் செல்வதற்கு, கல்வி உதவிப்பணம் பெறும்  வாய்ப்பையும் வென்றார். தோழர் ஏ.என். பதின்பருவத்தினை எட்டிய சமயத்தில், அரசியல் ஆர்வம் மற்றும் விடுதலை இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, காந்திஜியின் தீவிரமான பக்தராக மாறினார்.

தோழர் ஏ.என்.-க்கு 18 வயதான சமயத்தில் அவர் மார்க்சியத்தை ஏற்றார். 1940இல் சட்டவிரோதம் என்று அரசால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.  விரைவில் அதன் முழுநேர ஊழியராக உயர்ந்தார். அதன்பின்னர் 57 ஆண்டுகள் ஓர் அர்ப்பணிப்பு மிக்க கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து, அவருடைய கடைசிக் காலத்தில் உடல் கடுமையாக நலிவுற்றபோதும் அதனைத் துணிவுடன் எதிர்த்து அவர் போராடிய நிலையில், 1997 ஜூலை 20இல் நம்மைவிட்டுப் பிரிந்தார்.
1940இல் தொடங்கி, 1960கள் வரை, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தோழர் ஏ.என்., கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும், ஆளும் வர்க்க அரசுக்கு எதிராக போராடும், ஓர் அரசியல் ஊழியனாக தன்னுடைய தத்துவார்த்த அறிவையும், நடைமுறைத் திறமைகளையும் வளர்த்தெடுத்துக் கொண்டே, தொழிற்சங்க அமைப்பாளராகவும், திருநெல்வேலி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டார். அவர் காலனிய ஆட்சியாளர்களாலும்,  சுதந்திரத்திற்குப் பின்னர்காங்கிரஸ் ஆட்சியாளர்களாலும் ஓர் ஆபத்தான எதிரியாகவே கருதப்பட்டார்.

அவருடைய நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில், அவர்மீது எண்ணற்ற வழக்குகள் புனையப்பட்டிருந்தன. அவர், தலைமறைவாக இருந்துகொண்டே, சுமார்மூன்றரை ஆண்டு காலம், தன் அரசியல் நடவடிக்கைகளைமிகவும் திறமையுடன் தொடர்ந்து கொண்டிருந்தார்.தோழர் ஏ.என். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் லட்சியங்களுக்காக உறுதியுடன் செயல்படுவதைத் தடுத்து நிறுத்திட,காலனிய ஆட்சியாளர்களாலோ அல்லது அதற்குப்பின் வந்த ஆளும் வர்க்க அரசாங்கங்களாலோ முடியவில்லை.
அவர் 1959இல் பிரிக்கப்படாதிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே அவர் திருநெல்வேலி மாவட்ட செயற்குழுஉறுப்பினராகப் பல ஆண்டு காலத்திற்கு செயல்பட்டு வந்தார். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானபின், தோழர் ஏ.என். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1968இல் கட்சியின் மாநிலச் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970இல் சிஐடியு அமைக்கப்பட்ட பின்னர், தோழர் ஏ.என். தமிழ்நாடுமாநில செயலாளராகவும், அகில இந்திய செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். அவருடைய பிரதானகவனம், தொழிற்சங்க அரங்கத்தில் ஸ்தாபன வேலைகளின் மீதே இருந்தது. அவருடைய வளமான அனுபவங்கள்,கட்சிக்கு மிகவும் மதிப்புமிக்கவை என்பது மெய்ப்பிக்கப்பட்டது.

1981இல் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்ததோழர் ஏ. பாலசுப்பிரமணியம் இறந்தபின், தோழர் ஏ.என்.மாநில செயலாளரானார். பின்னர் 1982, 1985, 1988மற்றும் 1991களில் நடைபெற்ற கட்சியின் மாநில மாநாடுகளில் அவர் மாநில செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் ஏ.என். உடல்நிலை மிகவும் நலிவுற்றதை அடுத்து1994இல் அவர் தன் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

தோழர் ஏ.என். கட்சியால் தேசிய அளவில் அளிக்கப்பட்ட பொறுப்புகளையும் மிகவும் சிறப்புடன் செய்துமுடித்தார். முதலில் அவர் 1978இல் நடைபெற்ற கட்சியின் பத்தாவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சியின் 13ஆவது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1992இலும் 1995இலும் நடைபெற்ற 14ஆவது, 15ஆவது அகில இந்திய மாநாடுகளிலும் அரசியல் தலைமைக்குழுவிற்குத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

தோழர் ஏ.என். தமிழ் மாநில செயலாளராக இருந்த காலத்தில், கட்சி  உறுப்பினர் எண்ணிக்கையிலும்  கட்சியின் வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கையிலும் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்தது. இவ்வாறு விரிவடைந்ததற்கு அகில இந்திய அளவில் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் அடிப்படைக் காரணங்களாக இருந்தது என்ற போதிலும், அவற்றை கட்சி, அகில இந்திய  அளவிலும் மாநில அளவுகளிலும் அமல்படுத்துவதற்கு கட்சி மேற்கொண்ட அரசியல் உத்திகளும் முக்கிய அடிப்படையாகும். இதற்கு தமிழ் மாநிலத் தலைமையும் முக்கியத்துவம் கொடுத்தது. குறிப்பாக தோழர் ஏ.என். கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் அரசியல்-ஸ்தாபனக் கடமைகளிலும் கவனம் செலுத்தி, கட்சியை அனைத்து நிலைகளிலும் விரிவுபடுத்துவதற்குப் பங்கினைச் செலுத்தினார்.    

தோழர் ஏ.என். தமிழ்நாட்டில் கட்சியின் ஸ்தாபனப் பிரச்சனைகளில் சிறப்புக் கவனம் செலுத்துபவர் என்று கட்சிக்குள்அங்கீகரிக்கப்பட்டவர். அவர் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஊழியர்கள் மத்தியில் அரசியல் கல்வி போதிப்பவராகவும் அமைப்பாளராகவும் இருந்து கட்சியைவிரிவாக்குவதிலும், வலுப்படுத்துவதிலும் கட்சி ஊழியர்களின் வர்க்க உணர்வுநிலையை உயர்த்துவதற்கு ஆற்றிய பங்கினை அனைவரும் போற்றுவார்கள்.தோழர் ஏ.என். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் 1978இலிருந்து 1984 வரை உறுப்பினராக இருந்தார். 1989இல்மாநிலங்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1995 வரை மாநிலங்களவை உறுப்பினராகச் செயல்பட்டார். இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற மேலவையிலும், நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் அவர் செயல்பட்ட காலத்தில் சுரண்டப்பட்டு வந்த, மற்றும் ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் நலன்களை வலுவான முறையில் உயர்த்திப் பிடிப்பதற்கும், மாநிலங்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் பயன்படுத்திக்கொண்டார்.

இந்த சமயத்தில் அவர் ஆற்றிய சாதனைகளில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று என்பது, வாச்சாத்திக் கிராமத்தில் பழங்குடியினப் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நாடறியச் செய்து, அவர்களுக்கு நீதி வழங்குவதற்கு, அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பாகும். மற்றொன்று, தமிழில் தந்தி கொடுப்பதற்கு அவர் மேற்கொண்ட நடவடிக்கையாகும்.தோழர் ஏ.என்.-இடமிருந்து கட்சி ஊழியர்கள் கற்றுக்கொள்வதற்கு ஏராளமான பண்புகள் இருக்கின்றன. பல கட்சிக் கமிட்டிகளில் அவருடைய வழிகாட்டலின்கீழ்செயல்பட்டவன் என்ற முறையில்,  ஒவ்வொரு தோழரும் மேற்கொள்ளவேண்டிய கட்சிக் கட்டுப்பாடு குறித்தும், ஸ்தாபன நிலைமைகளைச் சரியானமுறையில் உயர்த்திப்பிடிப்பதற்காக அவர் காட்டிய மனிதாபிமான அணுகுமுறையும், பல ஆண்டுகள் கழிந்த பின்பும் இப்போதும் என் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கின்றன.   

கட்சிக் குழுக்களில் நடைபெறும் விவாதங்களின்போது ஒவ்வோர் உறுப்பினரும் கூறும் கருத்துக்களை உள்வாங்கி, பின்னர் இறுதியில் அவற்றின்மீது தன் கருத்துக்களை நியாயமாகவும் சுருக்கமாகவும் முன்வைத்திடும் கலையில் தோழர் ஏ.என். நிகரற்றவராகத் திகழ்ந்தார்.உள்கட்சி விவாதம் என்பது எப்போதுமே பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்துவதாக  இருந்திட வேண்டுமே தவிர நபர்களின் மீதானதாக இருக்கக்கூடாது என்பதைத் தோழர் ஏ.என். எப்போதும் வலியுறுத்தி வந்தார். தோழர்கள் செய்திடும் தவறுகளை அவர்களிடம் சுட்டிக்காட்டும்போது, அவருடைய அணுகுமுறை எப்போதுமே தன்னுடைய விமர்சனம் அவர்களை உணரச் செய்திடும் விதத்திலேயே அமைந்திருக்குமாறும், தோழருடைய அரசியல் -சித்தாந்த
உணர்வு நிலைமையை உயர்த்திடும் விதத்திலே அமைந்திடுமாறும் இருந்திடும்.  அவருடைய வழிகாட்டுதலில் காணப்படும் மற்றுமொரு முக்கியமான அம்சம், தோழர்கள் வர்க்க வெகுஜன ஸ்தாபனங்களில் பணியாற்றும்போது   எப்படி“புரட்சிகரப் பொறுமையைக்” கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்பதையும் போதிப்பார்.

தோழர் ஏ.என். கட்சியின் அடிப்படைகளுடன் முரண்படாதவரை உத்திகள் கடைப்பிடிக்கப்படுவதில் நெளிவு சுழிவுகளைப் பின்பற்றலாம் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், கட்சியின் அடிப்படை நிலைப்பாட்டில் எப்போதுமே உறுதியாக இருப்பார் என்றும், அதில் நெளிவுசுழிவுகளுக்கு இடம் தர மாட்டார் என்றும் 1997இல் ஏ.என்.-க்கு அஞ்சலி செலுத்தும் சமயத்தில் முதுபெரும் தோழர் என். சங்கரய்யா சுட்டிக்காட்டினார்.தோழர் ஏ.என்.-இன் போற்றற்குரிய மற்றுமொரு முக்கிய நடைமுறைப் பழக்கம் என்பது, வாசிப்பில் அவருக்கிருந்த பற்றாகும். படிப்பதில் அவர் பெரு வேட்கை கொண்டிருந்தார்.  கட்சி மற்றும் நாடாளுமன்ற/சட்டமன்றப்பணிகளுக்காகத் தொடர்ந்து பயணம் செய்த காலத்தில், அவருடன்  படிப்பதற்கான புத்தகங்களும்  கூடவே செல்லும். ஓய்வு கிடைத்திடும் நேரத்தை அவர் படிப்பதற்காகச் செலவு செய்துகொள்வார்.

தோழர் ஏ.என். நம் கட்சித் தலைவர்கள் மற்றும் தோழர்களிடம் மட்டுமல்ல, இதர அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியிலும் மிகுந்த மரியாதை செலுத்தப்படும் தலைவராக இருந்தார். அவருடைய தனிப்பட்ட குணங்கள் எல்லோராலும் நேசிக்கப்படக் கூடியவைகளாகும். அவர் மிக மிக எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். அவர் அரசியல் மற்றும் அறிவுஜீவிகள் வட்டங்களிலும், இடதுசாரிகளால் மட்டுமல்லாது, அதற்கு அப்பால் உள்ளவர்களாலும், மகத்தான தலைவராக மதிக்கப்பட்டார். அரசியல் எதிரிகள்கூட அவரை மதிப்பார்கள்.தோழர் ஏ.என். பிறந்த நாள் நூற்றாண்டில்  அவருக்கு செவ்வணக்கம் செலுத்துவோம்.

கட்டுரையாளர் : பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

பீப்பிள்ஸ் டெமாக்ரசி

28.2.2021, தமிழில் : ச.வீரமணி