பூமியின் ஆற்றல் நிதி நிலை அறிக்கை
இப்போதே செயலில் இறங்கவில்லை என்றால் இன்று பிறக்கும் குழந்தைகள் அனைவரும் இயற்கைப் பேரிடர்கள் நிறைந்த வாழ்வையே எதிர்கொள்ள நேரிடும். அப்படியானால் அதை தவிர்க்க என்ன செய்வது? காலநிலை மாற்றத்தை நாம் எவ்வாறு மதிப்பிடுவது? வெவ்வேறு இடங்களில் நீண்ட காலம் நிலவிய வெப்பநிலை பதிவுகளை ஆராய்வது ஒரு வழி. ஆனால் இயற்கையான வேறுபாடுகளால் இவற்றை துல்லியமாகக் கண்டறிதல் கடினம். பூமியின் வங்கிக் கணக்கு பூமியின் வளி மண்டலத்திற்குள் நுழையும் வெப்பம் மற்றும் வெளியேறும் வெப்பத்தை அளவிடு வதன் மூலம் பூமியில் என்ன நிகழ்கிறது என்பதை அறியலாம். இதை பூமியின் நிதி நிலை அறிக்கை என லாம். உண்மையில் இதில் இப்போது வரவு என்பது சுழியமாகவே உள்ளது. பற்றாக்குறை கடந்த இருபது ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துவிட்டது என்று சமீப ஆய்வு கூறுகிறது. காலநிலை மாற்றம் பற்றிய மாதிரி ஆய்வுகள் கணிப்பதைவிட இந்த பற்றாக்குறை இப்போது மிக அதிகமாக உள்ளது. நாசாவின் செயற்கைக்கோள்கள் மாறும் பூமி யின் நிலையை விண்வெளியில் இருந்து கண்கா ணித்து விவரங்களை அனுப்புகின்றன. 2000 இன் நடுப்பகுதியில் பூமியின் ஆற்றல் பற்றாக்குறை சராசரியாக 0.06 வாட்ஸ்/சதுர மீட்டர் (watts per square metre W/m2) என்ற அளவில் இருந்தது. சமீப ஆண்டுகளில் இந்த சராசரி 1.3 வாட்ஸ்/சதுர மீட்டராக அதிகரித்துள்ளது. பூமியின் பரப்பிற்கு அருகில் சேரும் ஆற்றலின் அளவு இரு மடங்காகியுள்ளது. காலநிலை மாற்றம் ஏற்படுவதற்கான முதல் அறிகுறி யை 130 ஆண்டுகளுக்கு முன்பு விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வருங்காலத்தில் காலநிலை மாற்றம் மோசமடை யும் என்பதை இது காட்டுகிறது. முக்கிய காலநிலை ஆய்வுகளுக்கான நிதியுதவியை அமெரிக்கா போன்ற நாடுகள் நிறுத்துவது நிலைமையை தீவிர மாக்குகிறது. பூமியின் ஆற்றல் நிதி நிலை அறிக்கை என்பது நாம் சேமிக்கும் மற்றும் செலவிட எடுக்கும் பணத்தின் நிலையை கூறும் வங்கிக் கணக்கு போன்றதே. நாம் செலவைக் குறைத்துக்கொண்டால் நம் கணக்கில் பணம் அதிகமாக இருக்கும். இங்கு பூமியின் பண மதிப்பு என்பது ஆற்றலைக் குறிக்கிறது. சூரியனிடம் இருந்து வரும் ஆற்றல் மற்றும் வெளியேற்றப்படும் ஆற்றல் சமநிலையைப் பொறுத்தே பூமியில் உயிரினங்களின் வாழ்வு உள்ளது. ஆனால் இந்த சமநிலை இப்போது ஒருபக்க மாக சரிந்துகொண்டிருக்கிறது. சூரியனிடம் இருந்து வரும் ஆற்றல் பூமியை வெதுவெதுப்பாக வைத்துள் ளது. பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வை வளி மண்டலம் பிடித்து வைத்துக்கொள்கிறது. ஆனால் நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரி வாயுக்களை எரிப்பதாலும் மற்ற பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வினாலும் வளி மண்டலத்தில் 2 டிரில்லியன் (லட்சம் கோடி) டன்களுக்கும் அதிகமான கார்பன் டை ஆக்சைடு சேர்ந்துள்ளது. இதனால் பூமியின் மேற்பரப்பில் இருந்து வெப்பம் வெளியேற முடிவதில்லை. இந்த கூடுதல் வெப்பம் பூமியின் மேற்பரப்பை சுட்டுப் பொசுக்குகிறது. பனிப்பாறை களை உருக்குகிறது. கடல்கள் உறிஞ்சும் 90% வெப்பம் ஆனால் உமிழ்வின் 90 சதவிகிதமும் அதிக உறிஞ்சும் தன்மையுடைய கடல்களுக்குச் செல்கின் றது. மேகங்கள், பனி மற்றும் பனிக்கட்டிகளால் ஏற்படும் வெப்பத்தை பிரதிபலித்தல் போன்ற பல்வேறு வழிகள் மூலம் பூமி வெப்பத்தை வெளியேற்றுகிறது. புற ஊதாக் கதிர்களும் வளி மண்டலத்திற்கு திருப்பி அனுப்பப்படுகின்றன. மனித நாகரீகம் தொடங்கியது முதல் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை தரைப்பரப்பு வெப்பநிலை சுமார் 14 டிகிரி செல்சியஸாக இருந்தது. ஆனால் அதிகரிக்கும் ஆற்றல் சமநிலையின்மை யால் சராசரி வெப்பநிலை 1.3 முதல் 1.5 டிகிரி செல்சி யஸாக மாறியுள்ளது. சூரிய வெப்ப ஆற்றல் போல பனிப்பாறைகள் மற்றும் மேகங்களால் ஏற்படும் வெப்பம் மீண்டும் பிரதிபலிக்கப்படுகிறது. பூமி சூடாவ தால் பிடித்துவைக்கப்படும் பெரும்பாலான வெப்பமும் கடல்களுக்குச் செல்கிறது. இந்த வெப்பத்தால் சிறு பகுதி பனிப்படலங்கள் உருகுகின்றன. நிலமும், காற்றும் சூடாகிறது. பூமியின் நிதி நிலையை விஞ்ஞானிகள் இரண்டு வழிகளில் கணக்கிடுகின்றனர். “சூரியனிடம் இருந்து வரும் வெப்பத்தையும் வெளியேறும் வெப்பத்தையும் கண்காணிப்பு செயற்கைக்கோள்களில் உள்ள அதிக உணர்திறன் உடைய ரேடியோ மீட்டர்கள் மற்றும் 1980கள் முதல் பதிவான தரவுகள் மூலம்நாம் நேரடி யாகக் கணக்கிடலாம். கடல்களின் வெப்பநிலை, வளி மண்டல வெப்பநிலையை அளவிட்டு துல்லியமாக அறியலாம். 1990கள் முதல் உலகக் கடல்களில் மிதக்கும் ஆயிரக்கணக்கான ரோபோட்டுகள் வெப்பநிலையை கண்காணித்து வருகின்றன. இரண்டு வழிகளும் ஆற்றல் சமநிலையின்மை வேகமாக மாறுவதையே காட்டுகிறது. இது இப்போது இருமடங்காக உயர்ந்துள் ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த மாற்றம் பெரிய அளவில், விரைவாக நிகழ்கிறது. இது பூமிக்கும் நமக்கும் ஆபத்தான நிலை” என்று ஆய்வுகளை நடத்திய சிட்னி பல்கலைக்கழக வளி மண்டல மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ஸ்டீவன் ஷெர் வுட் (Steven Sherwood), பிரான்ஸ் டூலூஸ் பல்கலைக்கழக(Université de Toulouse) காலநிலையியல் விஞ்ஞானி பென்வா மேசிக்னாக் (Benoit Meyssignac) மற்றும் ஸ்வீடன் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக காலநிலை அறிவியல் பேராசிரியர் தோஸ்ட்டென் மோரிட்ஸென் (Thorsten Mauritsen) ஆகியோர் கூறுகின்றனர். வெண் மேகக் கூட்டம் உண்மையாக உலகில் நிகழ்வதில் பாதியை மட்டுமே மாதிரிகள் கணித்துக் கூறுகின்றன. இதற்கான முழு விளக்கம் விஞ்ஞானிகளிடம் இல்லை. மேகங்க ளில் காணப்படும் மாற்றம் இதில் முக்கியப்பங்கு வகிக்கலாம். மேகங்கள் ஒட்டுமொத்த குளிர்ச்சியை ஏற்படுத்தும் இயல்புடையவை. ஆனால் பிரதி பலிக்கும் தன்மையுடைய பெருமளவிலான மேகங்கள் இருக்கும் பகுதிகள் சுருங்கிவிட்டன. ஆனால் குழப்பமான, குறைவான பிரதிபலிக்கும் திறனுள்ள மேகப் பகுதிகள் அதிகரித்துவிட்டன. மேகங்கள் ஏன் இவ்வாறு மாறுகின்றன என்று தெரியவில்லை. 2020 முதல் கப்பல்களில் பயன் படுத்தப்படும் சல்பர் கலந்த எரிபொருளும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அழுக்கான இந்த எரிபொருளால் மேகங்கள் பிரகாசமடைகின்றன. அடர்ந்த வெண் மேகங்களின் போர்வை அதிக வெப்பத்தை பிரதிபலிக்கிறது. ஆனால் இத்தகைய பகுதிகள் சுருங்குகின்றன. பசிபிக்கில் நிகழும் பத்தாண்டுகால ஊசலாட்ட மும் (Decadal Oscillation) இதற்கு காரணமாக இருக்க லாம். நீண்ட கோடை, அதி தீவிர மழைப்பொழிவு, கடல் வெப்ப அலை வீச்சு போன்றவை இதனால் ஏற்படும். புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை நிறுத்துதல், , வன அழிவை தடுத்தல் போன்றவை இதற் கான தீர்வுகள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றன.
