வர மாட்டீர்களா தோழர்!
சிவப்புக் கொடிகள் காற்றில் படபடக்கின்றன; புரட்சிப் பாடல்கள் ஒலிக்கின்றன; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநாட்டுக்காக மதுரை மாநகரம் தயாராக உள்ளது. ஆனால் இந்த மாநாட்டில் நீங்கள் இல்லையே, தோழர் சீத்தாராம்! உங்கள் அணுக்கமான புன்னகை இல்லை, உங்கள் ஞானம் நிறைந்த சொற்கள் இல்லை, உங்கள் தலைமை இல்லை.
மதுரை உங்களைத் தேடுகிறது...
மதுரையின் வீதிகளில் அசைந்தாடும் சிவப்புக் கொடிகளும், ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்கும் புரட்சிப் பாடல்களும் உங்களை அழைக்கின்றன. அந்த அழைப்பிற்கு உங்கள் பதில் இனி கிடைக்காதெனும் வேதனை எங்கள் நெஞ்சத்தை அழுத்துகிறது. 2024 செப்டம்பர் 12 அன்று நீங்கள் விடைபெற்றுச் சென்றது, இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஒரு தீராத வேதனை. உங்கள் சொற்களில் சக்தி இருந்தது; உங்கள் அமைதியில் ஆழம் இருந்தது. இந்தியத் துணைக்கண்டத்தின் இடதுசாரி அரசியலின் முக்கிய தூணாக விளங்கிய உங்களை இழந்த வலியை, மதுரை இப்போதும் உணர்கிறது.
மதுரையும் யெச்சூரியும்: பிரிக்க முடியாத பிணைப்பு
மதுரையும் நீங்களும் பிரிக்க முடியாதவர்கள். 1930-கள் முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர மையங்களில் ஒன்றாக விளங்கும் மதுரையில் பலமுறை உங்கள் குரல் ஒலித்திருக்கிறது. பி.ராமமூர்த்தி, என். சங்கரய்யா, கே.பி.ஜானகி அம்மாள் போன்ற மகத்தான தலைவர்களின் பாதையில் நீங்களும் மதுரை மண்ணில் கால்பதித்தீர்கள். “மதமாச்சர்யங்கள் இல்லாத மகத்தான சித்திரைத் திருவிழா நேரத்தில் மதுரை வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கடந்தாண்டு (2024) ஏப்ரல் மாதம்தான் இதே மதுரையில் பேசினீர்கள். “வைகை நாகரிகம் நமது தத்துவார்த்தப் போராட்டத்திற்கு உந்துகோலாக உள்ளது” என்று கீழடியின் பெருமையை உங்கள் சொற்களில் வடித்தீர்கள். மதுரையில் உங்கள் ஒவ்வொரு வருகையும் ஒரு விழாவாக இருந்தது. பொது மக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உங்களைச் சூழ்ந்துகொள்வார்கள். உங்கள் அனுபவம் நிறைந்த கண்களும், ஆழமான குரலும், அனைவரையும் அரவணைக்கும் நேசமும் மதுரை மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டது.
பன்முகப் புரட்சியாளர்
ஒரு மார்க்சியத் தலைவராக, அரசியல் தத்துவஞானியாக, மதச்சார்பின்மையின் காவலராக, தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக, மாணவர் இயக்கத்தின் முன்னோடியாக - நீங்கள் எண்ணற்ற முகங்களில் இந்திய மக்களை, இந்திய கம்யூனிச இயக்கத்தை வழிநடத்தினீர்கள். 1974 இல் மாணவர் இயக்கத்தில் இணைந்த நீங்கள், நெருக்கடி நிலையின்போது கைதுசெய்யப்பட்டீர்கள். தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றீர்கள். 1977-78இல் ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவராகி, மீண்டும் மீண்டும் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனை உங்களுடையது. பல்துறை புலமை கொண்ட அறிஞராக, தமிழ், தெலுங்கு, இந்தி, வங்காளி, உருது, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக, பேச்சாற்றல் மிக்க தலைவராக, பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளுக்காக முழங்கியவராக, சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியவராக - உங்கள் பன்முகங்கள் இந்திய தேசத்தின் மக்களை கவர்ந்தன.
மதுரையில் உங்கள் இறுதி வார்த்தைகள்
கடைசியாக 2024 ஏப்ரல் 13 அன்று மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் உரையாற்றும் போது, “உங்களோடு வெற்றி விழா கொண்டாட நான் நிச்சயம் மீண்டும் மதுரை வருவேன்” என்று முழக்கமிட்டீர்கள். நீங்கள் அப்படிச் சொன்ன போது, மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்தது. இதோ, மதுரையின் தமுக்கம் மைதானத்தில் கட்சியின் 24 ஆவது மாநாடு தொடங்க இருக்கிறது. ‘சீத்தாராம் யெச்சூரி நகர்’ என்று உங்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அங்கு இருக்க மாட்டீர்களே தோழர் சீத்தாராம்! இந்த மாநாட்டை நடத்தும் போது, ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொருவர் முகத்திலும் உங்கள் இழப்பின் வலி தெரியுமே, எங்கள் ஆருயிர்த் தோழரே! ஏப்ரல் 2 முதல் 6 வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் 850 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். ஏப்ரல் 1 மாலையில் ஐந்து தியாகச் சுடர்கள் ஒருங்கிணையும் தமுக்கம் மைதானத்தில், உங்கள் இதயம் நிச்சயம் இருக்கும்; எங்கள் இதயமெலாம் உங்கள் நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும். நீங்கள் இறுதிச் சுவாசத்தை விட்ட பின், உங்கள் உடலை எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சிக்காக தானம் செய்தீர்கள் - இறுதிவரை சமூகத்திற்காக உங்களை அர்ப்பணித்த மகத்தான தியாகி நீங்கள்.
அரசியல் வெளியில் ஒரு வெற்றிடம்
தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் நடந்த ஊழலை அம்பலப்படுத்துவதில் நீங்கள் முக்கிய பங்காற்றினீர்கள். “தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் மிகப்பெரும் ஊழலைச் செய்திருக்கிறது பாஜக!” என்று 2024 ஏப்ரல் மாதம் மதுரையில் துணிச்சலுடன் குற்றம் சாட்டினீர்கள். மாநிலங்களவையில் உங்கள் விவாதங்கள், மக்களின் குரலாக ஒலித்தன. 2015 மார்ச் 3 அன்று, அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உரைக்கு நீங்கள் கொண்டு வந்த திருத்தம், மோடி அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 2017இல் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெற்றீர்கள். ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகளின் குரலாக, எளிய மக்களின் பிரச்சனைகளை எப்போதும் முன்னிலைப்படுத்தினீர்கள். மாணவர்களின் கல்விக் கடன் பிரச்சனைகளை நீக்க கோரிக்கை வைத்தீர்கள். தமிழ்நாட்டின் விவசாயிகள் மற்றும் கல்விக் கடன் பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தீர்கள். கூட்டணி அரசியலின் சிற்பியாக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் உங்கள் பங்கு மகத்தானது. 1996இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை உருவாக்கினீர்கள். 2004இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியையும், 2023இல் இந்தியா கூட்டணியையும் உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினீர்கள். உங்கள் புகழ்பெற்ற நகைச்சுவை உணர்வு, எளிமையான பேச்சுத்திறன், எல்லோரையும் அணைத்துச் செல்லும் தலைமைப் பண்பு - இவையெல்லாம் மதுரை மக்களின் நினைவில் பசுமையாக உள்ளன. “தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு நிச்சயமாக மாற்றத்தை உருவாக்கும்; தமிழ் மக்களே இந்திய தேசத்தின் அரசியலுக்கு வழிகாட்டியாக இருக்கிறார்கள்” என்று மதுரையில் கடைசியாகப் பேசினீர்கள். உங்கள் சொற்கள் இன்றும் மதுரை மக்களின் இதயங்களில் எதிரொலிக்கின்றன. மார்க்சியத்தை 21ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு ஏற்ப விளக்கினீர்கள்; அமலாக்கினீர்கள். எளிய வாழ்க்கை முறையைப் பின்பற்றி, எல்லோருக்கும் முன்மாதிரியாக விளங்கினீர்கள்.
உங்கள் கனவுகள் நிறைவேறும்
புரட்சிகர மதுரை மண்ணில், உங்கள் நினைவுகள் ஆர்த்தெழுகின்றன. தமுக்கம் மைதானத்தில்- உங்கள் பெயரால் அமைக்கப்பட்டுள்ள நகரில், உங்கள் சிந்தனைகள் ஒலிக்கும். 25,000 செந்தொண்டர்கள் மதுரையின் தெருக்களில் அணிவகுப்பார்கள், லட்சக்கணக்கான மக்கள் பொதுக்கூட்டத்தில் கூடுவார்கள். மொத்தக் கூட்டமும், உங்களைத் தேடுமே தோழர் சீத்தாராம்! ‘உங்கள் எல்லோருக்கும் வணக்கம்’ என்று கொஞ்சு தமிழில், அன்பும் கம்பீரமும் இழையோட நீங்கள் விளிக்கும் போது, ஆர்ப்பரித்து கைதட்ட குவிந்திருக்கும் கூட்டம், உங்களைத் தேடுமே, தோழர் சீத்தாராம்! நீங்கள் வரமாட்டீர்களா? ஆம் நீங்கள் வரமாட்டீர்கள்! “நான் இல்லாததால் போராட்டம் நின்றுவிடாது, தோழர்களே, புரட்சி தொடரும்!” என்று நீங்கள் கர்ஜிப்பதை காதுகளால் கேட்கிறோம். சீத்தாராம் யெச்சூரியின் வாரிசுகளாய் ஆயிரமாயிரமாய் வந்து கொண்டே இருக்கிறோம்! உங்களை நெஞ்சில் ஏந்தி! - எஸ்.பி.ராஜேந்திரன்