tamilnadu

img

அவர் காலத்தில் வாழ்கிறோம், என்பதே எங்களுக்கு பெருமை!

அவர் காலத்தில் வாழ்கிறோம், என்பதே எங்களுக்கு பெருமை!

ஒரு வளமான வாழ்க்கையை, வேண்டாம் என்று விட்டுவிட்டு மக்கள் பணி செய்வதற்காக துன்ப துயரங்களை விரும்பி  ஏற்றுக் கொண்டு, மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட பல தலைவர்களை நாம் பார்த்துள்ளோம். இப்படியான தியாகப்பூர்வமான தோழர்களை கம்யூனிஸ்ட் இயக்கங்களைத் தவிர வேறு எங்கும் நான் பார்க்க முடியாது. அப்படி ஒரு அற்புதமான தலைவர்தான் புதுக்கோட்டை மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு அடையாளமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தோழர் பெரி. குமாரவேல் .

1945-46-களில் அப்போதைய காங்கிரஸ் கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த வல்லத்தரசு அவர்களோடு இணைந்து மாணவர்களைத் திரட்டி சுதந்திர கொடியுடன் ஊர்வலம் சென்ற போது குமாரவேலுவிற்கு வயது 14. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, கருஞ்சட்டை அணிந்து மாணவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொண்டார். கீழத்தஞ்சையில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்களை பத்திரிகைகளில் பார்த்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சி மீது பற்றுக் கொண்டார். 1949 ஆம் ஆண்டு தோழர் பி.ஆர்.நாச்சிமுத்து அவர்களை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மாணவப் பருவத்தில் மாணவர் பெரு மன்றத்தின் சார்பில் மாணவர் பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார். குலக்கல்வி முறைக்கு எதிராக டி.கே.சீனிவாசன், வல்லத்தரசு உள்ளிட்ட தலைவர்களை அழைத்து வந்து, புதுக்கோட்டையில் பொதுக்கூட்டங்களை நடத்தினார். கல்லூரிக் காலத்தில் தீவிர அரசியல் செயல்பாட்டுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். மாணவர் பெருமன்றத்தின் அகில இந்தியத் தலைவர் சத்தியா பால்டன், மாநிலச் செயலாளர் கார்த்திக் கோபால் உள்ளிட்டோரை அழைத்து வந்து மாணவர்கள் மத்தியில் உரையாற்ற செய்தார்.

கல்லூரியில் தமிழ் பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அங்கு கி.ஆ.பெ. விஸ்வநாதன், ஒளவை துரைசாமி பிள்ளை, இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து வந்து உரையாற்ற வைத்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கான தடை நீக்கப்பட்ட பிறகு சீர்காழியில் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில் கல்லூரி மாணவராக பங்கெடுத்தார். அன்னவாசல் ரங்கசாமியோடு இணைந்து புதுக்கோட்டை சமஸ்தானத்தில் விவசாயிகள் சங்கத்தை கட்டி வளர்த்தார். ஒரே காலகட்டத்தில் மாணவர்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு இயக்கங்களை திறம்பட நடத்தியுள்ளார் தோழர் பெரி.குமாரவேல். இயக்கப் பணிகளுக்கு மத்தியில் தகுதித் தேர்வு எழுதி 1956-இல் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்தார். அப்போது அரசு ஊழியர் சங்கத்தை கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டார். ஆனால், 1960-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை காவேரி மில் தொழிற்சங்க நிர்வாகியாக கட்சி அவரை அறிவித்ததும், இன்முகத்தோடு அரசு பணியை ராஜினாமா செய்து விட்டு சங்க பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இன்றைக்கும் அவர் பணியில் இருந்திருந்தால் உயர் நீதிமன்றம் வரைக்கும் பதவி உயர்வு பெற்று மிகப்பெரிய இடத்தைப் பெற்று இருப்பார். தோழர் ஆர்.உமாநாத்துடன் இணைந்து காவிரி மில், நமுனை பஞ்சாலைகளில் தொழிலாளர்களுக்கான எண்ணற்ற போராட்டங்களை முன் நின்று நடத்தினார். 1964-இல்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது அதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைவர்களோடு  ஒன்றரை ஆண்டு காலம் கடலூர் சிறையிலிருந்தார். கட்சியின் திருச்சி மாவட்டக் குழு உறுப்பினராக செயல்பட்டார். புதுக்கோட்டை மாவட்டமாக பிரிந்தது முதல் இப்போது வரை கட்சிக்காக அவர் ஆற்றிய பணி மிக முக்கியமானது. புதுக்கோட்டையை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி அனைத்து பகுதி மக்களும் போராட்டம் நடத்திய போது போராட்டக் குழு அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக  திறம்படப் பணியாற்றியவர்.  தோழர் குமாரவேல் இனாம் விவசாயிகளுக்கு பட்டா கொடுக்க முடியாது என்ற அரசின் முடிவை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்களை திரட்டி புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தினார். புதுக்கோட்டை நகர மன்றத்தில் நடைபெற்ற மாநாட்டில் மைனர் இனாம் விவசாயிகள் இனி வாரம் கொடுக்க மாட்டோம் என்று அறிவித்தார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை எந்த விலையும் கொடுக்காமல் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்க பாடுபட்டார்.  

கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட முதல் செயலாளராக பல ஆண்டுகாலம் சிறப்பாக பணியாற்றினார். விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் முதல் மாநிலச் செயலாளராகவும்,  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின்  தலைவராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தோழர் பெரி.குமாரவேல் இன்று தனது 96 ஆவது வயதிலும் ஒரு இளைஞரை போல சுறுசுறுப்புடன் இளம் தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக  வாழ்ந்துவருகிறார். அவர் வாழும் காலத்தில்  வாழ்வதும், அவரோடு கட்சி பணியாற்றுவதும் எங்களுக்கு கிடைத்த பெருமை...! - எஸ்.கவிவர்மன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர், புதுக்கோட்டை