tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

மயான பூமிக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதி

திருப்பத்தூர், ஏப்.1 - திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், பச்சூர் பழையப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அதே ஊரில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தை பல ஆண்டுகளாக மயான பூமியாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஆக்கிர மிப்பாளர் ஒருவர் இந்த இடத்தை சுடு காடாக பயன்படுத்த கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சுடுகாட்டை பயன்படுத்த தடை என முதலில் நீதிமன்றம் உத்தரவு என்றும், பின் மாவட்ட ஆட்சியர் உத்தரவு என விளம்பர பலகை வைத்தனர். ஆனால் சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டு வழங்க கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், நாட்றம்பள்ளி வட்டாட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்து 50 நாட்களாகி யும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதையடுத்து கடந்த மார்ச் 25 அன்று சிபிஎம் சார்பில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்  நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் ஒரு வார காலத்திற்குள் அதே ஊரில் வேறு இடம் வழங்குவதாக வட்டாட்சியர் உறுதி யளித்தார். இந்நிலையில் மார்ச் 30 அன்று  அதே ஊரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் இறந்ததை அடுத்து உறவினர்கள் அவரது உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது வருவாய் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் பழைய பேட்டை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டனர். இந்த தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி, வருவாய் அலுவலர் ராஜேஷ் ஆகியோர் சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.காம ராஜ், நிர்வாகிகள் சி.கேசவன், வி.சிங்காரம் மற்றும் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரும் ஏப்ரல் 2 க்குள் மாற்று இடம் தேர்வு செய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து இறந்தவரின் உடலை அவரது சொந்த நிலத்தில் அடக்கம் செய்த னர். பேச்சுவார்த்தையின் போது சிபிஎம் நிர்வாகிகள் வெங்கடேசன், கோவிந்தன், வீரபத்திரன், ஆனந்தன் உடனிருந்தனர்.

மாணவிகள் நீரில் மூழ்கி பலி

திருவண்ணாமலை, ஏப்.1- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சதுப்பேரி பாளையம் கிராமத்தில் வசிக்கும் மேகநாதன் மகள் மோனிஷா (15), அண்ணாமலை மகள் சிவரஞ்சனி (15) இவர்கள் இருவரும் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. புதன்கிழமை ஆங்கிலம் பொது தேர்வு நடைபெற உள்ள நிலையில், செவ்வாய்க்கிழமை மாணவிகள் இருவரும் கிராமம் அருகே  உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.  அப்போது நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் மாணவிகளின் சடலங்களை மீட்டனர். இதுகுறித்து களம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.