articles

img

அரசு எனும் அமைப்பின் உண்மை சொரூபம்!

அரசு எனும் அமைப்பின்  உண்மை சொரூபம்!

அரசு எனும் அமைப்பு பற்றி ஒவ்வொரு கம்யூனிஸ்டு ஊழிய ரும் தெளிவாக புரிந்து வைத்தி ருப்பது மிகவும் அவசியம் ஆகும். ‘கம்யூனிஸ்டு அறிக்கை’யில் தொடங்கி ‘பாரிஸ் கம்யூன் படிப்பினை’ மற்றும் ‘குடும்பம்/ தனிச்சொத்து/ அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல் வரை பல  சந்தர்ப்பங்களில் மார்க்சும் ஏங்கெல்சும் அரசு பற்றி ஆய்வுகள் செய்துள்ளனர். எனினும் சோச லிச அரசை நிர்மாணிக்கும் மகத்தான பணியை லெனின் செய்ததால் அரசு பற்றிய ஆய்வு மட்டுமல்ல; அதனை நடைமுறைபடுத்தும் அனுபவமும் இணைந்து லெனினின் நூல்கள் அமைந்தன. 1917ஆம் ஆண்டு நவம்பர் புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்னால் “அரசும் புரட்சியும்” எனும் மகத்தான படைப்பை லெனின் எழுதினார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்  1919ஆம் ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்களிடையே அரசு பற்றிய உரையை லெனின் நிகழ்த்தினார். இந்த உரை “அரசு” எனும் தலைப்பில் சிறு நூலாக வெளியிடப்பட்டது. அரசு பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்தையும் சோவியத் அனுபவத்தையும் இணைத்து இந்த உரையில் லெனின் வெளிப்படுத்துகிறார்.

பெண்ணின் தலைமைப் பாத்திரம்

அரசு எனும் கோட்பாட்டைப் போல முதலாளித்துவ தத்துவவாதிகள்/ அரசியல் பொரு ளாதார நிபுணர்கள்/ நீதிதுறையினர்/ பத்திரிக்கை யாளர்கள் உட்பட அனைவரும் வேறு எந்த பிரச்ச னையிலும் இவ்வளவு ஆழமான குழப்பத்தை ஏற்படுத்தியது இல்லை என தனது உரையில் தொடக்கத்திலேயே லெனின் குறிப்பிடுகிறார். சுரண்டலையும் முதலாளித்துவத்தையும் நிலை  நிறுத்த அரசு எனும் அமைப்பு உத்தரவாதப் படுத்துவதால் அரசு பற்றிய பாரபட்சமற்ற கருத்து இருக்கும் என எவரும் எதிர்பார்க்க கூடாது எனவும் அறிவியல் அடிப்படையில் இந்த கோட்பாடு குறித்து சொல்கிறோம் என சொன்னா லும் இது அறிவியல் அடிப்படையில் அமையாது என்பதையும் லெனின் எச்சரிக்கிறார். அரசு எனும் கோட்பாட்டை கம்யூனிச கோணத்தில் ஆழமாக உள் வாங்கிக் கொண்டால் பல்வேறு வர்க்கங்களின் போராட்டங்களை புரிந்து கொள்ள முடியும் எனவும் அந்த போராட்டங்களும் முரண்பா டுகளும் எப்படி அரசு பற்றிய கண்ணோட்டத்தில் முரண்பட்ட கருத்துகளாக வெளிப்படுகின்றன என்பதை அறியலாம் எனவும் லெனின் தனது உரையில் குறிப்பிடுகிறார்.  அரசு எனும் அமைப்பு எப்பொழுதுமே இருந்தது இல்லை; அது இல்லாத ஒரு காலமும் இருந்தது. எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் சுரண்டப்படுபவர்கள் எனவும் சுரண்டுபவர்கள் எனவும் சமூகம் வர்க்கங்களாக பிரிகிறதோ அப்பொழுதெல்லாம் அரசு எனும் அமைப்பு தோன்றியது. மனித குலத்தின் தொடக்க காலத்தில் இனக்குழு குடும்ப அமைப்பு இருந்த பொழுது அரசு எனும் அமைப்பு இல்லை. ஒரு பிரிவை அடக்க  இன்னொரு பிரிவு எவ்வித அடக்குமுறை ஏற்பாடு களையும் கொண்டிருக்கவில்லை. அந்த இனக்குழு முறையில் பல சமயங்களில் பெண் தலைமைப்பாத்திரத்தை ஏற்றிருந்தார் எனவும் நவீன சமூகத்தில் இருப்பதைப் போல பெண் அடிமையாக அந்த காலத்தில் இருந்தது இல்லை லெனின் குறிப்பிடுகிறார். உலகம் முழுவதி லுமுள்ள அனைத்து சமூகங்களும் விதிவிலக்கி ன்றி இந்த கட்டத்தைத் தாண்டியே பரிண மித்துள்ளன எனவும் லெனின் குறிப்பிடுகிறார்.

குடியாட்சியிலும் அரசு ஓர் அடக்குமுறை கருவியே!

முதல் சுரண்டல் சமூகமாக அடிமைச் சமூகம் உருவானதையும் அதற்குப் பின்னர் நிலபிரபுத்துவ சமூகமும் அதற்கு அடுத்தபடியாக முதலாளித்துவ சமூகமும் உருவானது என்பதைக் குறிப்பிடும் லெனின் இந்த அனைத்து சுரண்டல் சமூகங்களிலும் அரசு எனும் அமைப்பு இருந்தது என்பதையும் அது பல்வேறு வடிவங்களை எடுத்தது என்பதையும் குறிப்பிடுகிறார். உபரி மதிப்பைப் பறிப்பதில் தொடங்கிய அரசு எனும் அமைப்பு எவ்வாறு ஓர் அடக்குமுறை எந்திரமாக உருவெடுத்தது என்பதை லெனின் விவரிக்கிறார். அரசு என்பது ஒரு வர்க்கத்தின் ஆட்சியை இன்னொரு வர்க்கத்தின் மீது திணிக்கும் அடக்குமுறை எந்திரம் என்பதையும் சமூகத்தில் பெரும்பான்மையாக உள்ள பிரிவினர் சிறுபிரிவினராக உள்ள இன்னொரு பிரிவினரின் நலனுக்காக உழைப்பது, என்பது வன்முறை ஏவும்  அரசு எனும் அமைப்பு இல்லாமல் சாத்தியப் படுவது இல்லை எனவும் லெனின் குறிப்பிடுகிறார். அரசு எனும் அமைப்பு பல வடிவங்களை எடுக்கலாம். அடிமை சுரண்டல் சமூகத்திலேயே ரோமிலும் கிரேக்கத்திலும் முடியாட்சியும் இருந்தது; குடியாட்சியும் இருந்தது. குடியாட்சியில் வாக்கெடுப்பு முறை இருந்தது. ஆனால் வாக்குரிமை அடிமைகளுக்கு இல்லை; வசதி  படைத்த கனவான்களுக்கே இருந்தது. அடிமை களின் உழைப்பு சுரண்டப்பட்டது; அவர்கள் கிட்டத்தட்ட விலங்குகள் போலவே நடத்தப்பட்டனர். அடிமைகளைச் சுரண்டும் எஜமானர்களின் அமைப்பாக அரசு இருந்தது. சுரண்டலுக்கு எதி ராகவும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக வும் நடந்த அடிமைகளின் பல கலகங்களில் ஸ்பார்ட்டகஸ் தலைமையில் நடந்த மகத்தான வர்க்கப் போராட்டத்தை லெனின் குறிப்பிடுகிறார்.  

வெளித் தோற்றமும் உண்மையான நோக்கமும்

நிலப்பிரபுவ சமூகத்திலும் நில உடமை யாளர்களின் நலனைப் பாதுகாக்க விவசாயி களை அடக்கும் அமைப்பாக அரசு இருந்தது. நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்துவ உற்பத்திமுறை உருவான பொழுது ஏற்பட்ட ஜனநாயகக் குடியரசும் அனைவருக்குமான வாக்குரிமையும் மிகப்பெரிய முன்னேற்றம் என லெனின் குறிப்பிடுகிறார். இந்த புதிய சூழல்தான் தொழிலாளி வர்க்கம் தான் யார் என்பதை யும் தனது அரசியல் பலம் என்ன என்பதையும் உணர்ந்து கொள்ள வழிவகுத்தது. இந்த  அமைப்பின் சிறந்த குடியரசுகளாக அமெரிக்கா வையும் சுவிட்சர்லாந்தையும் லெனின் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் இந்த குடியரசு வடிவத்திலும் கூட சுரண்டலைப் பாதுகாக்கும் அமைப்பாகவும் பாட்டாளிகளை வன்முறை மூலம் அடக்கும்  ஒரு கருவியாகவே  அரசு உள்ளது என்பதை லெனின் தெளிவுபடுத்துகிறார். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் எனவும் அனைவருக்கும் வாக்குரிமை எனவும் முதலாளித்துவ அரசு சொல்கிறது; ஆனால் நடைமுறையில் அது மூலதனத்தை பாதுகாக்கும் கடமையையே செய்கிறது. அனைவருக்கும் சொத்துரிமை உள்ளதாக கூறிக்கொள்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு எந்த சொத்தும் இருப்பது இல்லை. எனவே நடை முறையில் அது முதலாளியின் அல்லது வணிக ரின் அல்லது நிலப்பிரபுவின் சொத்துரிமையை மட்டுமே பாதுகாக்கிறது. ஆகவே முதலாளித்துவ அரசும் உழைக்கும் வர்க்கங்கள் மீது வன்முறையை ஏவி மூலதனத்தை பாதுகாக்கும் அமைப்பே என லெனின் குறிப்பிடுகிறார். எப்பொழுதெல்லாம் உழைப்பாளிகள் தீவீரமாக போராடுகின்றனரோ அப்பொழுதெல்லாம் முதலாளித்துவ அரசு உள்நாட்டு போர் போன்ற சூழலை ஏற்படுத்தத் தவறுவது இல்லை என லெனின் கூறுகிறார்.

சோசலிச அரசு

சோசலிச அரசு எப்படி இருக்கும்? 1872ஆம் ஆண்டு கம்யூனிஸ்டு அறிக்கைக்கு எழுதிய கடைசி கூட்டு முகவுரையில் மார்க்சும் ஏங்கெல்சும் குறிப்பிட்ட - பாரிஸ் கம்யூன் அனுபவங்களை லெனின் ஆழமாக உள்வாங்கினார்:  “பாரிஸ் கம்யூன் ஒரு விஷயத்தை மிக தெளிவாக நிரூபித்தது; அது என்னவெனில் தொழிலாளி வர்க்கம் பழைய முதலாளித்துவ அரசு இயந்திரத்தை எடுத்து அதனை மாற்றாமலேயே தனது (சோசலிச) நோக்கத்துக்காக பயன்படுத்த முடியாது” சோசலிச சமூகத்தைப் படைக்கும் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ அரசு அமைப்பை பயன்படுத்த இயலாது; பயன்படுத்தவும் கூடாது. முதலாளித்துவ அரசு அமைப்பை முற்றிலுமாக அழித்தொழித்துவிட்டு புதிய அரசு அமைப்பை உருவாக்க வேண்டும். அதனையே சோவியத் சோசலிச அரசு செய்தது. சோவியத் சோசலிச அரசு கீழ்கண்ட வகையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்தியது.  v    பெண்களுக்கு முதல்முறையாக வாக்குரிமையை அளித்தது. v     சோவியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் சொத்துரிமையை அகற்றியது. v    இயற்கை வளங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமாக மாற்றப்பட்டன.   v    தொழிலாளி வர்க்கம் உட்பட ஏனைய உழைப் பாளிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்வது சட்டங்கள் மூலம்  உத்தராவதப்படுத்தப்பட்டது. v    தேர்தல் காலத்தில் மட்டுமல்லாது அனைத்து தருணங்களிலும் மக்களின் கருத்தை கேட்கும் முறைகள் உருவாக்கப்பட்டன.  v    சரியாக செயல்படாத பிரதிநிதிகள் திரும்ப அழைக்கப்படும் முறை உருவாக்கப்பட்டது.  v    தொழிற்சாலைகள் தொழிலாளர்களால் நிர்வகிக்கப்பட்டன.  இப்படி பல மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக உருவான  சோசலிச அரசு பெரும்பான்மை உழைக்கும் மக்களால் தலைமை தாங்கப்பட்ட பாட்டாளி வர்க்க முழு அதிகாரமாக இருந்தது. இயற்கையிலேயே இந்த அரசு ‘மூர்க்கத்தனமாக தலையெடுக்க முனைந்த’ தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களுக்கு எதிராக தனது வலிமையையும் சில சமயங்களில் வன்முறையையும் பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டது. ஆனால் உலகம் முழுவதிலுமிருந்த மிக செல்வாக்கான முதலாளித்துவ பத்திரிக்கைகள் விதிவிலக்கின்றி  ரஷ்ய கம்யூனிஸ்டுகளை ‘சர்வாதிகாரிகள்’ எனவும் ‘ஜனநாயகத்தின் எதிரிகள்’ எனவும் வசைபாடின. அரசு பற்றிய கம்யூனிஸ்டுகளின் கொள்கையை புரிந்துகொள்ளாத முதலாளித்துவவாதிகள் அவதூறுகளை பரப்புகின்றனர் என லெனின் கூறினார். இத்தகைய அவதூறுகள் இன்றும் தொடர்கின்றன. வர்க்க முரண்பாடுகள்  முற்றிலும் மறையும் பொழுது அரசு எனும் அமைப்பும் உலர்ந்து, உதிர்ந்து விடும் எனும் மார்க்சிய கோட்பாட்டை லெனினும் வலியுறுத்துகிறார். எனினும் சோசலிச நிர்மாணத்தில் லெனினிய கோட்பாடுகள் புறக்கணிக்கப்பட்டதால் அரசு பற்றிய அணுகுமுறையில் சில தவறுகளும் நிகழ்ந்தன. அவற்றை படிப்பினைகளாக கம்யூனிஸ்டுகள் கவனத்தில் கொள்கின்றனர்.

 இந்துத்துவா- கார்ப்பரேட் அரசு

இந்தியாவில் உள்ள முதலாளித்துவ- நிலபிரபுத்துவ அரசு மிகப்பெரும்பாலான உழைக்கும் மக்கள் மீது தனது மேலாதிக்கத்தை மூர்க்கத்தனமாக நிறுவியுள்ளது. நிகழ்காலத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. பாசிச குணமுடைய ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழி நடத்தப்படுவதால் அரசு இயந்திரத்தை அதற்கு இசைந்ததாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. ஒரே நேரத்தில் சுரண்டும் வர்க்கங்களின் அடக்குமுறைக் கருவியாகவும் இந்துத்துவாவை அமலாக்கும் கருவியாகவும் அரசு அமைப்பை மாற்ற முனைப்புகள் நடக்கின்றன. இத்தகைய அரசுமுறை தடுக்கப்படுவது மிக அவசியம். அந்தப் பணியில் பாரதி புத்தகலாயத்தால் மறுவெளியீடு செய்யப்பட்ட லெனினின் இந்த சிறு நூல் மிகவும் பயன்படும். எனினும் இந்த நூலுடன் லெனினின் அரசும் புரட்சியும்/ ஏங்கெல்சின் குடும்பம், தனிச்சொத்துரிமை, அரசு ஆகியவற்றின் தோற்றம்/ பாரீஸ் கம்யூன் படிப்பினை ஆகிய நூல்களையும் கற்பது அவசியம்.