articles

img

கலவரக்காரர்களை விரட்டியடித்த கம்யூனிஸ்ட்டுகள் உழைக்கும் மக்கள் நிலை உயர போராட உறுதி! - பி.சம்பத் மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

கலவரக்காரர்களை விரட்டியடித்த கம்யூனிஸ்ட்டுகள் உழைக்கும் மக்கள் நிலை உயர போராட உறுதி!

இந்திய விடுதலையைப் பற்றி விவாதிக்கும் போது அதோடு துயரமான இன்னொரு நிகழ்வையும் சேர்த்தே விவாதிக்க வேண்டி யுள்ளது. ஆம். அதுதான் இந்தியாவின் பிரிவினை. இந்திய மக்கள் பல்வேறு சமூக வேறுபாடுகளையும், இன வேறுபாடு களையும் கடந்து வெள்ளை ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக ஒன்றுபட்டு போராடிய தால்தான் இந்திய விடுதலை சாத்தியமானது.

ஒற்றுமையில் பலவீனம்

ஆனால், இந்த ஒற்றுமையில் ஒரு பலவீனம் இருந்தது என குறிப்பிடுகிறார் இடதுசாரி வரலாற்று ஆசிரியர் சுஜேதா மகாஜன். அவரது வார்த்தைகள்: “இந்திய விடு தலைக்கான தேசிய இயக்கத்தின் ஒற்றுமை யில் இருந்த ஒரு பலவீனம் ஒப்புநோக்கில் சிறிய எண்ணிக்கையிலான இஸ்லாமிய மக்களே இந்த ஒற்றுமையில் இடம்பெற்றி ருந்தார்கள். இதன் விளைவாக ஒருபுறம் இந்தி யாவுக்கு விடுதலை கிடைத்தது. கூடவே, மறு புறம் பாகிஸ்தானும் சேர்ந்தே கிடைத்தது.” இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த பல  தலைவர்களும், தியாகிகளும் விடுதலைப்  போராட்டத்தில் கடுமையான அடக்குமுறை களையும், உயிர் பலியையும் எதிர்கொண்டார் கள் என்ற உண்மையோடு இணைத்து தான் இந்த அம்சத்தையும் நாம் பார்க்க வேண்டும்.

பிரிவினைக்கு யார் பொறுப்பு

இந்திய பிரிவினைக்கு வரலாற்று ரீதியாக யார் பொறுப்பு?. இக்கேள்விக்கு பதிலாக பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன. ஏகாதி பத்திய வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்த வரை பிரிவினையை தவிர்த்திட பிரிட்டிஷ் நிர்வாகம் கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது சாத்தியமாக வில்லை - காரணம் நூற்றாண்டு கணக்கான இந்து - முஸ்லிம் பிளவும் பகைமையுமே என்கிறார்கள். காரணங்களில் இது ஒரு அம்சமே. ஆனால், இந்திய தேசிய வர லாற்று ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் இத்தகைய பிரிவினைக்கு பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தையே பிரதானமாக குற்றம் சாட்டுகிறார்கள். தங்களது காலனி யாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக காலம் முழுவதும் இந்து - முஸ்லிம் பிளவை பயன்படுத்தியும் ஊட்டி வளர்த்துமே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செயல்பட்டு வந்துள்ளது என்பது உண்மையே. இந்திய விடுதலைக்குப் போராடிய காங்கிர சையும், இடதுசாரி இயக்கத்தையும் பின்னுக்குத் தள்ள வகுப்புவாத சக்திகளை ஊட்டி வளர்த்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபையின் இந்து  ராஷ்டிர நிலைபாட்டையும், மறுபுறம், முஸ்லீம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கையையும் உறுதிபட நிராகரிக்கத் தவறியது பிரிட்டிஷ் அரசு. மாறாக, விடுதலைக்கான பேச்சு வார்த்தை நடத்திய மவுண்ட்பேட்டன் குழு முஸ்லீம் லீக்கின் பாகிஸ்தான் கோரிக்கைக்கு சாய்மானம் கொடுத்தே செயல்பட்டார்.

சித்தாந்தப் போராட்டம் இல்லை

காந்தி - நேரு போன்ற காங்கிரஸ் தலை வர்கள் துவக்கத்திலிருந்தே தேசப்பிரி வினையை உறுதிபட எதிர்த்தார்கள். காந்தி யை பொறுத்தவரை “மக்கள் இதயப்பூர்வமாக பிரிவினையை ஏற்க மறுத்தால் அரசு அதனை நிறைவேற்றுவது சாத்தியமில்லை” எனச்  சரியாகவே கூறினார். ஆயினும், மக்களி டையே பிரிவினைக்கு அடித்தளமாக விளங்கும் இந்துத்துவா - இஸ்லாமிய அடிப்படைவாதங்களுக்கு எதிராக சித்தாந்த ரீதியாக வலுவான போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைமை நடத்தவில்லை. இந்த விமர்சனம் இந்திய இடதுசாரிகளுக்கும் பொருந்தும். அன்றைய நிலைக்கு மட்டுமல்ல, மீண்டும் இந்துத்துவா மதவெறி சித்தாந்தம் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள இன்றைய நிலைக்கும் இந்த விமர்சனம் பொருந்தும். காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சி யாளர்களை நோக்கி “என் உடலை கூறு போட்டுவிட்டு பிறகு இந்த தேசத்தை கூறு போடுங்கள்” என ஆத்திரத்தோடு கூறினார். ஆனால், துயரம் என்ன? இரண்டுமே நடந்து விட்டது. தேசத்தையும் பிளவுபடுத்திவிட் டார்கள். மறுபுறம், இந்துத்துவா மதவெறி யர்கள் சதிசெய்து இஸ்லாமிய மக்களை தாஜா செய்வதாக குற்றம் சுமத்தி காந்தியையும் சுட்டுக் கொன்று அவரது உடலையும் கூறு போட வைத்துவிட்டார்கள். இந்திய விடுதலை யையொட்டி இரண்டு பெரும் விலைகளை நாம் கொடுக்க வேண்டிதாயிற்று. 1. தேசப்பிரி வினை. 2. காந்தி படுகொலை. கம்யூனிஸ்ட்டுகள் தேச விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதையும் 1945-46 ஆண்டுகால வெகுஜன எழுச்சிப் போராட்டங்களுக்கு தலைமையேற்றதையும் ஏற்கனவே விவரித்துள்ளோம். இதே காலத்தில் தேசத்தின் ஒற்றுமைக்காகவும், இந்து - முஸ்லிம் கலவரங்களை எதிர்த்தும், மதச்சார்பின்மையை நிலைநிறுத்தவும் கம்யூ னிஸ்ட்டுகள் வலுவாகச் செயல்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும். மதக்கலவரங்களில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலம் வங்காளம். இங்கு கம்யூனிஸ்ட்டுகள் தலை மையில் வலுவாகச் செயல்பட்ட டிராம்வே தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இதர பல தொழிற்சங்கங்களும் மறுபுறம் விவசாய சங்கமும் வகுப்புக் கலவரங்கள் பரவாமல் தடுக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளும், செய்த பிரச்சாரமும் மகத்தானவை. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஜோதிபாசு அன்றைய நாட்களை பின்வருமாறு விவ ரிக்கிறார்: “வங்கத்தின் நவகாளிப் பகுதியில் பெரும் கலவரங்கள் மூண்டன. சங்பரிவார் கும்பல் பெரும் கூட்டமாக அணி திரண்டு இஸ்லாமிய மக்களை கடுமையாக தாக்கிய தோடு அவர்களது குடிசைகளை தீயிட்டுப் பொசுக்கினர். அக்கும்பல் நவகாளிப் பகுதியிலிருந்து திரிபுராவிற்குள் நுழைந்து அங்கும் கலவரம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அச்சந்தர்ப்பத்தில் 10,000 கம்யூனிஸ்ட் ஊழி யர்கள் தங்களது கரங்களில் தடிகளோடு அப்பகுதிக்குள் நுழைந்து அந்த கலவரக் கும்பலை அடித்து விரட்டினர்.” இச்சம்பவம் அக்காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வாகும். ஜோதிபாசு மேலும் கூறுவதாவது: “காந்தி கலவரம் நடந்த வங்கத்தின் வீதிகளில் அழுது புலம்பிக்கொண்டே வலம் வந்தார். ஈஸ்வர - அல்லாஹ் தேரேநாம் (ஈஸ்வரனும் - அல்லா வும் ஒன்று தான்) என்பது அவரது முக்கிய  முழக்கமாக இருந்தது. இந்த கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றதோடு பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்கு ஆறுதலும், தைரி யமும் அளித்தார். அப்போது கம்யூனிஸ்ட்டு களாகிய நாங்கள் காந்தியைச் சந்தித்து உரையாடினோம். கலவரப் பகுதிகளில் அமைதி ஊர்வலங்களை நடத்துமாறு அவர் எங்களுக்கு ஆலோசனைக் கூறினார். அந்த ஆலோசனையை ஏற்று கலவரப் பகுதிகளில் பல்வேறு அமைதி ஊர்வலங்களை நாங்கள் நடத்தினோம்”. ஜோதிபாசுவும் இந்த அமைதி ஊர்வலங்களில் பங்கேற்று கம்யூனிஸ்ட் ஊழி யர்களுக்கு உத்வேகமூட்டினார். அப்போது ஜோதிபாசு துடிப்புமிக்க ஒரு இளைஞர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எழுச்சி ஏற்படுத்திய மிரட்சி

காந்தி, நேரு போன்ற செல்வாக்குள்ள தலைவர்களும், மறுபுறம் கம்யூனிஸ்ட் இயக் கத் தலைவர்களும் மதக்கலவரங்களுக்கு எதி ராகவும், தேச ஒற்றுமையை நிலைநாட்டவும் வலுவாக செயல்பட்ட போதிலும் ஏன் தேசப்பிரிவினையை தடுக்க முடியவில்லை?. இதற்கு வேறு எதுவும் காரணமல்ல. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தேசத்தை கூறுபோடுவதில் கவனமாகவும் உறுதியாகவும் இருந்து  செயல்பட்டதுதான். இந்திய ராணுவத்தினரும் பங்கேற்கும் வகையில் 1945-46 ஆண்டு கால கம்யூனிஸ்ட்டுகள் தலைமையிலான மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்டுபோனது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். இனி இந்தியாவை தொடர்ந்து ஆள முடியாது என முடிவுக்கு வந்தது. இந்த விரக்தியோடு மதக்கல வரங்களை தீவிரமாக பரவச் செய்யும் வகை யில் அதன் நடவடிக்கைகள் அமைந்தது. தேசத்தை கூறுபோடும் பணியை முடுக்கி விட்டது. அன்றைய வைசிராய் வேவலின் அறிக்கைகள் மற்றும் பிரபல மூத்த பிரிட்டிஷ் இந்திய அரசு அதிகாரி வி.பி. மேனனின் ஒப்புதல் வாக்குமூலங்கள் இதனை உறுதி படத் தெரிவிக்கின்றன.

நம்பிக்கையளித்த கம்யூனிஸ்ட்டுகளும் நம்பிக்கையற்ற காங்கிரசாரும்

அன்றைய சூழலில் தேசத்திற்கு மாற்றுத் தலைமையை ஏற்படுத்தி தரும் வலுவான நிலையில் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் இருந்தன. ஆனால், அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் இந்து - முஸ்லிம் மக்களை ஒன்றுபடுத்தி வலுவான வெகுஜன போராட்டம் நடத்த முடியும் என்பதில் நம்பிக்கை யற்று இருந்தார்கள். மறுபுறம், கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி இயக்கங்களின் வளர்ந்து  வரும் செல்வாக்கை கண்டு காங்கிரஸ் தலை வர்கள் அச்சமடைந்தனர். இப்பின்னணியில் தான் அவர்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விரித்த சதி வலையில் விழுந்தார்கள். பிரிவினையை ஒப்புக் கொண்டார்கள். இன்னொரு புறம் பல்வேறு காரணங்களால் இஸ்லாமிய மக்களிடம் வலுவான செல்வாக்கு பெற்றிருந்த முஸ்லீம் லீக், மேற்கண்ட சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பிரிட்டிஷ் அரசிடம் பிரிவினைக்கு நிர்ப்பந்தம் கொடுத்து அது அரங்கேற துணை நின்றது.

மதச்சார்பற்ற நாடாக  இந்தியா - எப்படி?

ஆயினும் இந்த சோக நிகழ்வுக்கு மத்தியில் நிகழ்ந்த ஒரு ஆறுதலான அம்சம் இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக பரிண மித்ததுதான். காந்தியின் பங்களிப்பு இதில் மகத்தானது என்பதில் ஐயமில்லை. இவரோடு பல காங்கிரஸ் தலைவர்களும் துணை நின்ற னர். மறுபுறம், கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடது சாரி இயக்கங்களும் இதில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தங்களது பங்கை நிறைவேற்றினார்கள்.  இந்து ராஷ்டிரம் கோரிய சங்பரிவார் கும்பல் களுக்கு ஆத்திரம் ஏற்படுத்திய நிகழ்வாகவும் இது இருந்தது. ஜவஹர்லால் நேரு தலைமையில் இந்திய அரசு பதவியேற்ற பிறகு இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு பிர கடனம் செய்தது. “இந்திய அரசியல் சாசனம் வலுவான ஜனநாயகம் மற்றும் மதச்சார் பின்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும். இக்கடமையை நிறைவேற்று வதற்கு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தேசிய தலைமைக்கு இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் முழு ஒத்துழைப்பு நல்கும்”. மேலும், ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள தேசிய தலைமை செயல்படுத்த வேண்டிய மற்றொரு அம்சம் குறித்து கம்யூனிஸ்ட் இயக்கம் அரசின் செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டிய மற்றொரு முக்கிய அம்சமாக கீழ்க்கண்ட கடமையை வற்புறுத்தியது. “முஸ்லிம்களுக்கு முழுமையான மதவழிபாடு மற்றும் கலாச்சார உரிமைகள் வழங்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக வேலை வாய்ப்புகளிலோ  அல்லது இதர அம்சங்கள் எதிலுமோ பாரபட்சம் காட்டக்கூடாது. முக்கிய மாக முஸ்லிம்களை அந்நியர்கள் என பழிச்சுமத்தும் சங்பரிவார் கும்பலை மக்களிட மிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.”.

லட்சோப லட்சம் பேர் பலி

தேசப்பிரிவினை - மதக்கலவரங்களுக்கு நாடு மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியதாயிற்று. அப்போதைய மதக்கல வரங்களில் 2.5 லட்சம் மக்கள் மரண மடைந்திருப்பதாக மவுண்ட்பேட்டன்  வெளிப் படுத்திய தகவல் தெரிவிக்கிறது. ஆனால், உண்மையில் மேலும் பல லட்சம் மக்கள் கலவரங்களில் மரணமடைந்ததாக பல ஆய்வு நிறுவனங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காந்தி படுகொலை

1948 ஜனவரி 30ஆம் நாள் காந்தியை இந்துத்துவா வெறியர்கள் சதி செய்து படுகொலை செய்தனர். இஸ்லாமிய மக்களை தாஜா செய்வதாக குற்றம் சுமத்தி இந்த படுகொலையை அவர்கள் அரங்கேற்றினர். காந்தி படுகொலை தேசத்தையும் கோடானு கோடி மக்களையும் உலுக்கிய நிகழ்வாக அமைந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களின் கவலை மற்றும் துயரங்கள் வெளிப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் காந்தி படுகொலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டனம் செய்தது. அவரது படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்து கடுமை யாக தண்டிக்க வேண்டுமென வலியுறுத்தி யது. நாடு முழுவதும் தேசபக்த சக்திகளுடன் இணைந்து காந்திக்கு அஞ்சலி செலுத்துவதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஊழியர்களும் முன்வரிசையில் இருந்தார்கள்.

மக்கள் ஏமாற்றமும் கம்யூனிஸ்ட் இயக்க உறுதிப்பாடும்

ஆயினும் விடுதலைக்குப் பிறகு வர்க்க  அடிப்படையில் இந்தியாவில் நிகழ்ந்தது என்ன?. நேரு பிரதமராக பொறுப்பேற்ற பிறகு  அவர் வெளியிட்ட கருத்துக்கள் மக்களை கவ ரும் வகையில் இருந்தன. கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய வகை யில் பல செயல்திட்டங்களை நிறைவேற்றப் போவதாக அவர் அறிவித்தார். மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அரசின் செயல்பாடு களை கூர்ந்து கவனித்தனர். ஆனால், பிற்காலத்தில் ஏமாற்றமே மிஞ்சியது. அரசியல் அதிகாரம் பெருமுதலாளிகள் தலைமையிலான முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் சென்றுவிட்டதை அரசின் நட வடிக்கைகள் நிரூபித்தன. இந்தியா பிரிட்ட னுடன் இணைந்து காமன்வெல்த் அமைப்பில் பங்கேற்க ஒப்புக் கொண்டதன் மூலம் ஏகாதி பத்திய செல்வாக்கும் முற்றிலும் துடைத்தெறி யப்படவில்லை என்பதை காண முடிந்தது. இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த கோடானு கோடி உழைப்பாளி மக்கள் - ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வாய்ப்பில்லாத நிலையை நோக்கி அரசின் செயல்பாடும், கொள்கையும் அமைந்தன. இந்நிலையில் இம்மக்களின் பொருளாதார விடுதலைக்காகவும் இவர்களின் போராட்ட ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், அவற்றை பலப்படுத்தவும் தொடர்ந்து போராடப்போவதாக கம்யூனிஸ்ட் இயக்கம் பிரகடனப்படுத்தியது. அதன் செயல்பாடு களும் அவ்வாறே அமைந்தன.