கம்பீர சங்கநாதம் என்றென்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்!
பிரதாபசந்திரன் என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட சங்கரய்யா 1922 ஜூலை 15 அன்று பிறந்தார். அவரது குடும்பம் சுயமரியாதை குடும்பமாகவே இருந்ததால், பள்ளிப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர், கல்லூரிப் பருவத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் நீக்கத்தை எதிர்த்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எழுந்த போராட்டத்தில் சங்கரய்யா முன்நின்றார். அதனால், கல்லூரி இறுதித் தேர்வு எழுதுவதற்கு 15 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
1936 சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி என்கிற பெயரில் செயல்பட்டனர். இந்தக் காலத்தில் தோழர்கள் ஏ.கே.கோபாலன், சுப்ரமணிய சர்மா உள்ளிட்டோர் அரசியல் வகுப்புகள் நடத்தினர். அதில், ‘மொட்டையரசு முகாம்’ குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பின்னணியில், 1940 இல் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை அமைக்கப்பட்டது. அதில், கே.பி.ஜானகியம்மாள், ஏ.செல்லையா, குருசாமி, எம்.ஆர்.எஸ். மணி, வி.ராமநாதன், எம்.எஸ்.எஸ். மணி, எம்.ரத்தினம் ஆகியோருடன் சங்கரய்யாவும் உறுப்பினர் ஆனார். மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மதுரையில் சிறையில் இருந்த காலத்திலும் பல்வேறு அரசியல் முகாம்கள் நடைபெற்றன. அவற்றில், சங்கரய்யாவும் கலந்து கொண்டார். மதுரை மாணவர் சங்கம், உத்தமபாளையம் மாணவர் சங்கம், திண்டுக்கல் மாணவர் சங்கம் என மாவட்டம் முழுவதும் சங்கங்களை உருவாக்கினார். அதன் நிறைவாக, மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆனார். மாணவர் சங்க போராட்டங்களுக்கு வழிகாட்டுவதற்காக நெல்லை சென்ற போது, பாளையங்கோட்டை கல்லூரியில் நடந்த போராட்டத்தில் தடியடிபட்டார். 1940 ஆம் ஆண்டு வங்கப் பஞ்சம் தீவிரமான போது, அதற்காக நிதி திரட்டவும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கவும் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட நாடகத்தில் பங்கேற்று நடிக்கவும் செய்தார். இந்தக் காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி மதுரை வந்த போது, அவரது உரையை தமிழாக்கம் செய்தார். பொதுவாக, கையில் எந்தக் குறிப்பும் இன்றி, ஆங்கில உரையை தமிழாக்கம் செய்வது சங்கரய்யாவின் பழக்கம்.
மதுரை சதி வழக்கு கட்சியின் வளர்ச்சியைத் தடுப்பதற்காக போடப்பட்ட மதுரை சதி வழக்கில் பி.ஆர். முதல் குற்றவாளியாகவும், சங்கரய்யா 2 ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு தொடரப்பட்ட வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை முறியடித்து, நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட 1947 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் பி.ஆர்., என்.எஸ். உள்ளிட்டோர் விடுதலை ஆனார்கள். அவர்களது விடுதலையும், நாட்டின் விடுதலையும் கட்சியினரால் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்தக் காலத்தில், மீண்டும் கட்சி மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு, கட்சி தடை செய்யப்பட்டது. தலைவர்கள் தலைமறைவானார்கள். சங்கரய்யாவும் தலைமறைவானார். இந்த வாழ்க்கையின் தொடர்ச்சி அவருக்கு பின்னாளில் தோல் நோயை தந்தது. சாதாரண சலவைத் தொழிலாளியின் வீட்டில் இருக்கும் அழுக்கு மூட்டைகளுக்கு இடையே மறைந்து வாழ்ந்ததால், இந்த நிலை ஏற்பட்டது. ஜானகியம்மாவுக்கு சிறை வாழ்க்கை ஆஸ்துமாவை பரிசாகத் தந்தது போல், என்.எஸ்.க்கு இது கிடைத்தது. மாவட்டச் செயலாளர் இந்நிலையில், கட்சியின் மாவட்டச் செயலாளராக என்.எஸ். தேர்வு செய்யப்பட்டார். நாட்டின் முதல் பொதுத் தேர்தல் இந்தக் காலத்தில்தான் நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் உள்ள மூன்று தொகுதிகளுக்கான தேர்தலாக இருந்ததால், மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அந்தத் தொகுதிகளில் மகத்தான வெற்றியும் கிடைத்தது. இந்தப் பின்னணியில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆனார். கட்சியின் 3 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்ற போது, அதன் வெற்றிக்கு முழுமூச்சாக பாடுபட்டார். பின்னர், கட்சியின் மாநில மையத்தில் செயல்படுவதற்காக சென்னைக்கு அழைக்கப்பட்டார். இந்த சமயத்தில், தேசிய கவுன்சில் உறுப்பினராகவும் ஆனார். 32 பேரில் ஒருவர் 1962 இந்திய - சீன போரின்போது கைது செய்யப்பட்டு, 6 மாதம் சிறைவாசம் அனுபவித்தார். கட்சியில் தீவிரமான கருத்து வேறுபாடு அதிகரித்ததை ஒட்டி, தேசிய கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த 32 பேர்களில் சங்கரய்யாவும் ஒருவர். பின்னர் நடந்த அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பின்பு, தமிழ்நாட்டில் தீக்கதிர் இதழில் ஆசிரியர் பொறுப்பை என்.எஸ்.க்கு கட்சி வழங்கியது. பின்னர், கே.முத்தையா ஆசிரியராக நியமிக்கப்பட்டு, நீண்ட காலம் சிறப்பாக பணியாற்றினார். இந்தக் காலத்தில், கட்சித் தலைவர்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தது. சங்கரய்யா கைது செய்யப்பட்டு, 16 மாத காலம் சிறைத் தண்டனை பெற்றார். பின்னர், 1967 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, மதுரை வடக்குப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் ஏ.பாலசுப்பிரமணியம் தலைவராகவும், என்.எஸ். துணைத் தலைவராகவும் செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து நடந்த 1977, 1980 தேர்தல்களில் வெற்றி பெற்று, கட்சியின் சட்டமன்றத் தலைவராக செயல்பட்டார். இந்தக் காலத்தில்தான், மேற்குவங்கத்தைப் போல் வேலைக்கு உணவுத் திட்டம் கொண்டு வர வேண்டுமென சட்டமன்றத்தில் வலியுறுத்தினார். தமிழ்நாடு அரசு ‘தன்னிறைவுத் திட்டம்’ என்ற பெயரில், அந்தத் திட்டத்தை அமலாக்கியது. ரேசன் கடைத் திட்டத்தின் மூலவர் தஞ்சை பகுதியில் மட்டும் நடைமுறையில் இருந்த ரேசன் கடை திட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் சங்கரய்யா முன்வைத்தார். பட்ஜெட் இறுதி செய்யப்பட்டு விட்டதால், அதில் சேர்ப்பதற்கு வழியில்லை என்று நிதியமைச்சர் நாஞ்சில் மனோகரன் கூறினார். ஆயினும், என்.எஸ். விடாமல் பிற்சேர்க்கை என்ற பெயரில், சிறு குறிப்பை சேர்த்துவிட்டால் இந்த பட்ஜெட்டிலேயே அமல்படுத்தி விடலாம் என்று ஆலோசனை கூறினார். அதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டு, செயல்படுத்த உத்தரவிட்டதையடுத்து, தமிழகம் முழுவதும் ரேசன் கடை துவங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது. மாநிலச் செயலாளர் 1986 இல் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராக ஆனார். பின்னர், தோழர் ஏ.நல்லசிவனைத் தொடர்ந்து, மாநிலச் செயலாளராக 1995 இல் கடலூரில் நடந்த மாநில மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டார்.
1986 ஆம் ஆண்டு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொன் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்த சங்கரய்யா, சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனார். பின்னர், தலைவராகவும் செயல்பட்டார். தமிழ் இலக்கிய ஆர்வம் சங்கரய்யா இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பரிமேலழகர் மன்றம் போன்றவற்றில் செயல்பட்டவர். கட்சியின் கொள்கைகளை பாடல்கள், கலைநிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம் செய்வதை என்.எஸ். மேற்கொண்டார். இந்த காலத்தில்தான் ‘விடுதலைப் போரில் வீழ்ந்த மலரே’ போன்ற பாடல்கள் உருவாயின. 1974 ஆம் ஆண்டு நவம்பர் 23, 24 தேதிகளில் மதுரையில் எழுத்தாளர்கள் சங்கம் அமைப்பதற்காக நடந்த கூட்டத்தில் சங்கரய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, மிக தெளிவான இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய உரை நிகழ்த்தினார். அதையடுத்து, 1975 ஜூலை 12, 13 தேதிகளில் மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், கலந்து கொண்ட என்.எஸ். வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, இலக்கியம் தொடர்பாக பல அமைப்புகளின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலும் பங்கேற்றார். கல்வி நிலையங்களில் தமிழே பயிற்சி மொழியாக விளங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவார். 2000 ஆவது ஆண்டு துவக்கத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்று சங்கரய்யா ஆற்றிய உரை சிறப்பு மிக்கது. சங்கரய்யா மாநிலச் செயலாளராக இருந்த காலத்தில், தீண்டாமை ஒழிப்பு மற்றும் சாதிக் கலவரங்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள், இயக்கங்கள், மாநாடுகள் நடத்தப்பட்டன. தீண்டாமை ஒழிப்பு மாநாடு அதேசமயத்தில், தமிழ்நாடு அரசும் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடத்த வேண்டுமென என்.எஸ். விடுத்த கோரிக்கையை ஏற்று, அன்றைய முதல்வர் கலைஞர் மதுரையில் தமுக்கம் கலையரங்கில் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டில், என்.எஸ். நிகழ்த்திய உரையில் தீண்டாமையையும், சாதிக் கலவரங்களையும் ஒழிப்பதற்கு அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் மிக முக்கியமானது நிலச்சீர்திருத்தம் என்று வலியுறுத்தினார். அத்துடன், பள்ளி-கல்லூரிகளில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் சமத்துவம் பேணல் போன்றவற்றை பிரச்சாரம் செய்திடவும், மாவட்டங்கள் அளவில் இதுபோன்ற மாநாடுகள், கருத்தரங்குகள் நடத்திடவும் வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதுபோல், மத கலவரம் நடந்த கோவையில் அமைதியும் நல்லிணக்கமும் ஏற்பட கட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சுர்ஜித் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் அழைத்து பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. தொடர் முயற்சிகளும் மாவட்டக் குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. 8 ஆண்டு சிறை வாழ்க்கை என்.சங்கரய்யா தனது 102 ஆண்டு கால வாழ்க்கையில் நாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் சமத்துவமான நல்வாழ்க்கைக்காகவும் மதுரை, வேலூர், கண்ணனூர், தஞ்சாவூர் உள்ளிட்ட சிறைகளில் 8 ஆண்டு கால சிறைத் தண்டனையையும் அனுபவித்தார். 3 ஆண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். முதல் சிறை வாழ்க்கையின் போது, மாணவராக இருந்த போது 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கைதிகளின் கோரிக்கைகள் வெற்றி பெற போராடியது குறிப்பிடத்தக்கது. இந்தக் காலத்தில்தான் ‘தாய்’ நாவலை சோர்வின்றி படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த சிறை அதிகாரி, வியப்பில் ஆழ்ந்து போனார். அவரது நீண்ட கால கட்சிப் பணியில், சோவியத் ரஷ்யா, சீனா, சிரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார் என்.எஸ். சிரியாவில் விவசாயப் பகுதியை பார்வையிட்டு வந்தார். தோழர் என்.எஸ். முதல் அகில இந்திய மாநாடு காலத்தில் சிறையில் இருந்தார். 2 ஆவது மாநாடு முதல் 22 ஆவது மாநாடு வரை பிரதிநிதியாக கலந்து கொண்டார் என்பதும், கட்சியின் கட்டுப்பாட்டுக் குழு தலைவராக 2 முறை பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்கநாத முழக்கம் தோழர் என்.எஸ்.கட்சியின் மிகச்சிறந்த பேச்சாளராக, இலக்கியவாதியாக திகழ்ந்தார். சங்கம் வளர்த்த மதுரையின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே ‘சங்கநாதம் முழங்கியவர் சங்கரய்யா’ என்ற பெயரும் பெற்றார். வாழ்நாளின் இறுதியிலும்கூட, அந்த கர்ஜிக்கும் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.
கட்சியின் மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்தாலும்கூட, எளிமையாக வாழ்வது அவரது இயல்பாக இருந்தது. அவரது குடும்பம் சாதி, மத மறுப்பு திருமணங்களின் சங்கமமாக திகழ்கிறது. இளைஞர்கள், காதல் திருமணம் செய்வதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவரது வேண்டுகோளாக இருந்தது. தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்வதும் இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டிய கடமை என்று அவர் அறிவுறுத்துவது வழக்கம். அவரது உரையில், எந்த ஊரில் பேசுகிறாரோ, அந்த ஊரின் பெருமையும் அங்கிருந்த தலைவர்களின் புகழையும் எடுத்துக் கூறிய பின்னரே, உரையைத் துவங்குவார். அதேபோல், வங்கம் போல், கேரளா போல், திரிபுரா போல் இடதுசாரி திருப்பம் ஏற்பட உழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே, தனது உரையை நிறைவு செய்வார். அவரது அந்த உணர்வையும் வேண்டுகோளையும் நடைமுறைப்படுத்துவது நமது கடமை.