articles

img

மாணவத் தியாகிகள் சோமு-செம்பு டாக்டர் க.செல்வராஜ், இந்திய மாணவர் சங்க முன்னாள் தலைவர் (மறைவு)

மாணவத் தியாகிகள்  சோமு-செம்பு டாக்டர் க.செல்வராஜ், இந்திய மாணவர் சங்க முன்னாள் தலைவர் (மறைவு)

“வீரர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்” என்ற சொல்லுக்கு உயிரோட்டம் கொடுத்தவர்கள் சோமசுந்தரமும் செம்புலிங்கமும். 1981 மார்ச் 31-இல் இவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, இந்திய மாணவர் சங்க உறுப்பினர் எண்ணிக்கை 3,000-க்கும் குறைவு. இன்றோ 3,00,000-க்கும் அதிகம். “மாணவர் சங்கத்தை அழித்துவிடலாம்” என்று நினைத்தவர்கள் வியக்கும் வண்ணம் அது வளர்ந்ததற்குக் காரணம், இந்த இளம் மாவீரர்களின் தியாகமே.

எளிய தொடக்கம், உயர்ந்த இலட்சியம்

தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள ‘எப்போதும்வென்றான்’ கிராமத்திலிருந்து 5 கிமீ தூரத்தில், கருவேலமரங்கள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதை வழியே சென்றால் (இன்று தார்ச்சாலை அமைந்துள்ளது) துரைச்சாமியாபுரம் என்ற கிராமத்தை அடையலாம். நூறு தலித் குடும்பங்கள் வாழும் இந்தக் கிராமத்தில் பிறந்தவர்தான் சோமசுந்தரம். வறுமையின் கோரப்பிடியில் சிக்கிய அவரது குடும்பம், தந்தை சுப்பையா வளர்த்த நான்கு ஆடுகளை விற்றுத்தான் முதல் கல்விக்கட்டணத்தைச் செலுத்தியது. அதேபோல, தூத்துக்குடி போல்டன்புரத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்த செம்புலிங்கமும், தனது இடைவிடாத முயற்சியால் ஏழ்மையை வென்று, பொறியியல் கல்லூரி மாணவரானார்.

உணர்ந்த உண்மைகள்

பொறியியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் எல்லாம் வசதியானவர்கள் என்ற பார்வை இருந்தாலும், உண்மை வேறு. உதவித்தொகை தாமதித்தால் உணவு விடுதியில் அனுமதி மறுக்கப்பட்டு பசியோடு இருக்கும் மாணவர்கள், சாதாரண உடைகளுக்கே உதவித்தொகையை எதிர்பார்ப்பவர்கள், தேர்வுக்கட்டணம் கட்ட முடியாமல் தவிப்பவர்கள் என ஒருபுறம்; வசதி படைத்த மாணவர்கள் கார்களிலும் பைக்குக ளிலும் வலம் வருவது மறுபுறம் - இந்த முரண்பாட் டைப் புரிந்துகொண்டார்கள் சோமுவும் செம்புவும்.

மாணவர் போராட்டத்தின் முன்னணி வீரர்கள்

தங்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க மாணவர்களுக்குள்ள ஒரே வழி இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து போராடுவதுதான் என உணர்ந்த இவர்கள், கல்லூரியில் நிலவிய ராக்கிங் கொடுமைக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டினார்கள். மாணவர்கள் மத்தியில் செல்வாக்குமிக்க தலைவர்களாக உயர்ந்தார்கள். அவசரகாலக் கொடுமைகளின் வீழ்ச்சிக்குப் பிறகு மாணவர்கள் மத்தியில் ஜனநாயக கோட்பாடுகள் கொந்தளிப்பாக வெளிப்பட்ட காலம் அது. துரைச்சாமியாபுரத்தில் ஒற்றையடிப்பாதையை தார்ச்சாலையாக மாற்றுவதற்கு நடந்த போராட்டத்தில் மக்களைத் திரட்டினார் சோமசுந்தரம். தூத்துக்குடி போல்டன்புரத்தில் இடதுசாரிக்கே உரிய கம்பீரத்துடன் செயல்பட்டார் செம்புலிங்கம்.

மாணவர் நலனுக்காக

கல்லூரி உணவு விடுதி சரியாகச் செயல்படுவதற்காகவும், கட்டணம் உயர்த்தப்படுவதைத் தடுப்பதற்காகவும், உணவின் தரத்துக்காகவும், மாணவர்களுக்கு உரிய வசதிகள் கிடைப்பதற்காகவும் நடந்த போராட்டங்களில் முன்னணி வகித்து மாணவர்களை ஒன்றிணைத்தார்கள். கல்லூரிக் கட்டணம், தேர்வுக்கட்டணம் உயர்த்தப்படும் போதெல்லாம் அதை எதிர்த்து நின்றார்கள்.

மாணவர் அன்பின் சின்னங்கள்

1980-இல் நடைபெற்ற மாணவர் பேரவைத் தேர்தலில் செம்புலிங்கம் மாணவர் பேரவைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளராக சோமசுந்தரம் அவருக்கு வழிகாட்டினார். சாதி ஆதிக்க சக்திகளால் பொறுக்க முடியாத அளவுக்கு அவர்களின் செல்வாக்கு வளர்ந்தது. இந்தியாவின் சாபக்கேடான சாதிவெறி அவர்கள் மீது பாய்ந்தது. மாணவர்களின் ஆதரவோடு செல்வாக்குப் பெற முடியாத சாதிவெறியர்கள், கூலிப்படையினருடன் இணைந்து 1981 மார்ச் 31 அன்று சோமசுந்தரத்தையும் செம்புலிங்கத்தையும் கொன்றொழித்தனர்.

இறப்பில் இறவாத உண்மைகள்

“சாவைக்கண்டு நாங்கள் அஞ்சுவதில்லை. ஏனென்றால், இறப்பில் நாங்கள் இறப்பதில்லை” என்ற அறைகூவலே சோமு-செம்பு போன்ற தியாகிகள் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம். இன்று லட்சக்கணக்கில் பெருகியிருக்கும் மாணவர் சமுதாயம் தங்கள் உரிமைகளுக்கா கவும், ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் போராட வேண்டியது அவசியம். மதவாத சக்திகளும் சாதியச் சக்திகளும் நாட்டைக் கூறுபோட முயலும் இந்நேரத்தில், சோமுவும் செம்புவும் உயர்த்திப்பிடித்த “சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்” என்று பொறிக்கப்பட்ட வெண் கொடியைக் கம்பீரமாக உயர்த்திப்பிடித்து, சாதி, மத, இன, மொழி, பாலின பேதமற்ற சமுதா யத்தைப் படைக்க அணிதிரள்வதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.