கூட்டாட்சி கலாச்சாரத்தை மதியுங்கள்! கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்!!
“அவசரநிலைப் பிரகடனம் தொடர்பான நிலைப்பாட்டில் நீங்கள் (பாஜக-வினர்) உண்மையிலேயே நேர்மையானவர்கள் என்றால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு அளித்திடுங்கள்!” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் முனைவர் ஜான் பிரிட்டாஸ் வலுவான கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டா வது அமர்வில் கடந்த செவ்வாய் அன்று கல்வி விவகாரங்கள் குறித்து விவாதிக்கும்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூட்டாட்சி உணர்வை மதிக்காத ஒன்றிய அரசின் போக்கை கடுமையாக விமர்சித்தார்.
“கேரளம் கல்வியில் முன்னோடி”
“நான் கேரளாவிலிருந்து வந்திருக்கிறேன். கல்வி தொடர்பாக நாட்டிலுள்ள அரசாங்கங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு கேரளம் வழி காட்டியிருக்கிறது,” என்று பெருமையுடன் தொடங்கிய பிரிட்டாஸ், நாட்டின் வேற்றுமைப் பண்புகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “நம் நாடு வளமான வேற்றுமைப்பண்புகளைக் கொண்ட ஒரு நாடாகும். இங்கே நீங்கள் தில்லியில் அமர்ந்துகொண்டு, நாட்டிலுள்ள அரசாங்கங்களு க்குக் கட்டளை பிறப்பிக்கிறீர்கள் என்றால் இந்த வேற் றுமை முடிவுக்கு வந்துவிடும்,” என்று எச்சரித்தார்.
“அவசரநிலையால் பறிக்கப்பட்ட உரிமை”
பிரிட்டாஸ் தனது உரையில் வரலாற்று உண்மை களை முன்வைத்து பாஜகவின் இரட்டை நிலைப் பாட்டை அம்பலப்படுத்தினார்: “ஆளும்கட்சித்தரப்பில் அமர்ந்திருக்கின்ற உறுப்பினர்கள் அனைவருமே அவசரநிலையைக் கண்டித்துப் பேசுபவர்கள். ஆனால் அவசரநிலைக் காலத்தில்தான் அரசமைப்புச்சட்டத்தில் 42-ஆவது திருத்தம் செய்யப்பட்டதன் மூலம் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. அவசரநிலைப் பிரகட னத்தைக் கண்டிப்பது தொடர்பாக நீங்கள் உண்மை யானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் இருந்தால், அப்போது மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட கல்வியை மீண்டும் மாநில அரசாங்கங்க ளிடமே ஒப்படையுங்கள்.”
“பல்கலைக்கழகங்களை கைப்பற்றும் முயற்சி”
உயர்கல்வி விவகாரத்தில் ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் ஆதிக்க முயற்சிகளை விமர்சித்த பிரிட்டாஸ், “இந்த அரசாங்கமானது உயர்கல்வித்துறையை முழு மையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பு கிறது. பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரை கள் வந்திருக்கின்றன. இந்தப் பரிந்துரைகளின் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்று அவருக்குத் தெரியும்,” என்று சுட்டிக்காட்டினார். “நாட்டில் 1,074 பல்கலைக் கழகங்கள் இருக்கின் றன. இவற்றில் 54 மட்டுமே மத்தியப் பல்கலைக் கழகங்களாகும். ஒருசில தனியார் பல்கலைக் கழகங்க ளும் உண்டு. மாநிலங்களின் ரத்தத்தாலும் வியர்வை யாலும் கட்டி எழுப்பப்பட்ட அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் அப்படியே முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பு கிறார்கள்” என்று அம்பலப்படுத்தினார்.
“ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கட்சி கொள்கை ஆபத்தானது”
பன்முகத்தன்மையே இந்தியாவின் வலிமை என்பதை வலியுறுத்திய பிரிட்டாஸ், “நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் நம் மொழிதான். இந்தியும் நம் மொழிதான். ஆனால் ஒரே தலைவர், ஒரே அரசியல் கட்சி, ஒரே மொழி என்று ஒரேதன்மையை (uniformity) கொண்டுவர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், இந்த நாடு இல்லாது ஒழிந்துவிடும். இந்த நாடு நம் அனைவருக்குமானது,” என்று எச்சரித்தார்.
மத்திய திட்டங்களில் வேடிக்கை
ஒன்றிய அரசின் திட்டங்களின் உண்மை நிலை மையை அம்பலப்படுத்திய பிரிட்டாஸ், “ஒன்றிய அரசாங்கத்தின் திட்டங்கள் மிகவும் வேடிக்கையான வைகளாகும். சில திட்டங்களை அறிவிக்கிறார்கள். ஒன்றிய அரசு கொஞ்சம் நிதி ஒதுக்குகிறது. மாநில அரசாங்கங்களும் நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரு கிறது. ஆனாலும் ஒட்டுமொத்த திட்டமும் ஒன்றிய அரசாங்கமே செய்வதுபோல் சித்தரிக்கப்படுகிறது.” “வீட்டு வசதித் திட்டங்களுக்கு மாநில அரசாங்கங் கள் நான்கில் மூன்று பங்கு செலவு செய்கின்றன. ஆனால் அந்தத் திட்டங்களை ஒன்றிய அரசாங்கத் தின் திட்டமாக முத்திரைகுத்த விரும்புகிறார்கள். சமக்ரா சிக்சா அபியான் என்கிற ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமும் அப்படிப்பட்ட ஒன்று தான்,” என்று விளக்கினார்.
கேரளாவுக்கு நிதி தடை
“கேரளாவிற்கு அளிக்கப்பட வேண்டிய 849 கோடி ரூபாய் அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டி ருக்கிறது. ஏன் தெரியுமா? நாங்கள் (கேரள அரசு) பிஎம் ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தவில்லையாம். பிஎம் ஸ்ரீ திட்டம் என்பது சமக்ரா சிக்சா அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்த தில்லை. அந்த பிஎம் ஸ்ரீ திட்டத்திற்குக்கூட மாநில அரசு 40 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டியிருக்கிறது.”
“கேரளம் முன்னேறிவிட்டது” “
கேரளம் அனைத்துத்துறைகளிலும் தங்களின் எல்லைகளைத் தாண்டி முன்னேறிக் கொண்டிருக்கி றது. ஒன்றிய அரசின் சில அதிகாரவர்க்கத்தினர் சில திட்டங்களைத் தயாரித்து அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அந்தக் கட்டங்க ளை எல்லாம் நாங்கள் ஏற்கனவே கடந்துவிட்டோம்.” “பீகாருக்கு எது பொருந்துமோ, ஒடிசாவிற்கு எது பொருந்துமோ அது கேரளாவுக்குப் பொருந்தாமல் போகலாம். கல்வியைப் பொறுத்தவரை நாங்கள் இந்த நாட்டிற்கே வெளிச்சத்தை அளித்துக் கொண்டிருக்கி றோம்,” என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
“மாநிலங்களை மதியுங்கள்”
முடிவாக, மோடி அரசுக்கு பிரிட்டாஸ் ஆணித்தர மான வேண்டுகோளை முன்வைத்தார்: “மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இங்கே தில்லியில் உட்கார்ந்துகொண்டு அனைத்தையும் மத்தியத்துவப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். இவற்றை முற்றிலுமாக நிறுத்திடுங்கள்; மாநிலங்களை, மாநில அரசாங்கங்களை மதித்திடுங்கள். திறமைசாலிகள் அங்கேயும் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு மாநில அரசாங்கத்திற்கும் ஒரு தொலை நோக்குப் பார்வை உண்டு.” “இந்திய அரசமைப்புச்சட்டத்தின் உணர்வுகளைத் தயவுசெய்து உயர்த்திப்பிடித்திடுங்கள். உண்மை யிலேயே அவசரநிலைப் பிரகடனம் தொடர்பான நிலைப் பாட்டில் நீங்கள் (பாஜக-வினர்) நேர்மையானவர்கள் மற்றும் உண்மையானவர்கள் என்றால், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு அளித்திடுங்கள்.”