articles

img

அடக்கம், அர்ப்பணிப்பு, கடமையுணர்வின் அடையாளம் அப்துல் வகாப்! - ஏ.லாசர்

அடக்கம், அர்ப்பணிப்பு, கடமையுணர்வின் அடையாளம் அப்துல் வகாப்! - ஏ.லாசர்

அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற வள்ளுவனின் குரல் நெறிக்கு அடையாளமாக வாழ்ந்தவர் தோழர் அப்துல் வகாப்.  தோழர் ஏ. அப்துல் வகாப் அவர்கள், தளராத  மனம் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட நெடும்பயணம் செய்த தோழர். உறுதியான செயல், உன்னதமான நடவடிக்கை கொண்டு சுமார் 97 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்தவர். 1924 ஆம் ஆண்டு பிறந்த தோழர் அப்துல் வகாப் அவர்கள் 2020இல் இயற்கை எய்தினார். ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் கட்சியின் கொள்கையையும் கோட்பாடுகளையும் அதனுடைய ஸ்தாபனத்திற்கும் அது வகுத்துக் கொடுத்த நெறிமுறைகளையும் வாழ்வின் இறுதிவரை பின்பற்றி செயல்பட்டு அமைதியின் அடையாளமாக வாழ்ந்து கட்சிக்கு பெருமை சேர்த்த தோழர் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த மாமனிதன் என்றால் அது தோழர் வகாப்புக்கு சாலப் பொருந்தும். இவை வர்ணனைக்கான வார்த்தைகள் அல்ல, வாழ்க்கையை எப்படி ஒரு சிறந்த லட்சியத்தோடு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டினார்.  

இளமைக்கால போராட்டங்கள்  

பள்ளிப் பருவத்திலேயே கல்லூரியில் மாணவர் சங்கத்தின் அமைப்பை கட்டுவதிலும் மாணவர்களுக்கான கோரிக்கைகளோடு சுதந்திரப் போராட்டத்திற்கான கோரிக்கை களையும் இணைத்து ஒருங்கே செயல்பட்ட தோழர் வகாப், தோழர் என். சங்கரய்யாவுடனும் மாணவர் சங்கத்தை கட்டுவதில் இணைந்து செயல்பட்டுள்ளார். மூன்று பேர் கொண்ட ஒரு கட்சி கிளையையும் அங்கே உருவாக்கினார். இந்நிலையில் அமெரிக்கன் கல்லூரி இவருக்கு நெருக்கடிகளை கொடுத்தது. சங்கம் அமைத்து போராடக் கூடாது என்று எச்சரித்தது. அதன் காரணமாக இரண்டு ஆண்டுகளிலேயே இவர் அங்கிருந்து வெளியேறி திருச்சி விமானப் படை பயிற்சி மையத்திற்கு சென்று, பின்பு அங்கிருந்து பெங்களூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் போய் சேர்ந்தார்.  

ஜனசக்தியும் கட்சிப் பணிகளும்

 இவர் ஊரில் இருக்கும் ஏலத்தோட்டத்தை கவனிக்க குடும்பத்தினர் நிர்பந்தித்த போதிலும், கட்சியின் மாநில மையத்திலிருந்து வந்த அழைப்பை ஏற்று ஜனசக்தி பத்திரிகை அலுவல கத்தில் தன்னுடைய கட்சிப் பணிகளை துவக்கி னார். இவர் ஜனசக்திக்கு சென்ற பொழுது அங்கே எழுத்தாளர் ஜெயகாந்தனும் சிறுவய தில் ஜனசக்தி பத்திரிகையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அன்று துவங்கி பத்திரிகை துறையில் தான் அவர் நீண்ட காலம் பணி யாற்றினார். அதனால் தான் மதுரையில் இருந்த தீக்கதிர் அலுவலகத்தில் கட்சி பிரிந்ததற்கு பின்பு அதனுடைய தலைமை நிர்வாகியாக இருந்து செயல்பட்டார். இக்காலங்களில் கட்சி முடிவு களை அவர் அமலாக்கிய விதம் சிறப்பானது. மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் விதத்தி லான ஆசானை போன்று அவருடைய ஒவ் வொரு நடவடிக்கைகளும் அமைந்திருந்தது.  

அடக்குமுறைக் காலத்திலும் அஞ்சாமல்

 கடுமையான அடக்குமுறை காலம், கட்சி  தடை செய்யப்பட்ட காலத்திலும் தலைமறை வாக இருந்து கொண்டே போலீசின் கண்களில் மண்ணை தூவி விட்டு கட்சிப் பணிகளில் ஈடு பட்டார். ஜனசக்தி மூடப்பட்டதின் காரணமாக திருச்சியில் உள்ள ரயில்வே தொழிற்சங்கமான பொன்மலை அலுவலகத்தில் இருந்து செயல்பட வேண்டும் என்ற கட்சி மையத்தின் அறிவுறுத்தலை ஏற்று, தலைமறைவாக அங்கி ருந்தும் பணிபுரிந்தார். இந்த காலங்களில் இவர் கட்சியினுடைய முன்னணி தோழர்கள் அனைவரோடும் தொடர்புகளில் இருந்து தலை மறைவு வாழ்க்கையில் கூரியராக செயல்பட்டு கட்சியின் பணிகளை ஒருங்கிணைக்கும் தகவல் தொடர்பு மையமாகவும் இருந்து செயல்பட்டுள் ளார்.

 குடும்ப வாழ்வில் புதிய பாதை

 திருமணம் செய்ய வேண்டும் என்று குடும்பத்தினர் நிர்பந்தித்தனர். அப்பொழுதுதான் இவனை கட்டுப்படுத்த முடியும் என்று அவர்கள் கருதினர். ஆனால் அதிலும் கூட தோழர் வகாப் அவர்கள், கட்சிப் பணிகளுக்கு தடை யில்லாத வாழ்க்கைத் துணையை தேடி, திரு வனந்தபுரத்தில் உள்ள கட்சி குடும்பத்தைச் சேர்ந்த தோழர் ஆயிஷா அம்மா அவர்களை தேர்வு செய்தார். தோழர் ஆயிஷா அம்மா அவர்கள் இடுக்கி மாவட்டத்தில் இருந்த இவர்களுக்கு சொந்தமான ஏல தோட்டத்தை அவரே கவனித்துக் கொண்டு குடும்பத்தையும் முறையாக நிர்வகித்தார். இவருக்கு கட்சிப் பணிகளில் ஈடுபட தடையில்லாத அளவுக்கு குடும்பத்தை அமைத்துக் கொண்டார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். இவர்களுடைய கல்வி, திருமணம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பையும் தோழர் ஆயிஷா அவர்களே நிறைவேற்றிக் கொடுத்தார்.

 இடுக்கியும் கட்சியின் வளர்ச்சியும்

 1972 காலகட்டத்தில் இடுக்கி மாவட்டம் தனி யாக பிரிக்கப்பட்ட போது அங்கு கட்சியின் ஸ்தா பன வேலைகளை செய்வதற்கு தமிழர்களோடு பேசிப் பழகி தொழிற்சங்கப் பணிகளிலும் கட்சிப் பணிகளிலும் போராட்ட நடவடிக்கைகளிலும் அவர்களை கொண்டு வர ஒரு தமிழ் தோழர் வேண்டுமென்று கேரள கட்சி கேட்டுக்கொண் டது. அதன் அடிப்படையில் தோழர் வகாப் அவர்கள் மீண்டும் இடுக்கி மாவட்டத்தின் கட்சி  பொறுப்பாளராக சில ஆண்டுகள் பணிபுரிந் தார். கட்சிக்கு நெருக்கடி ஏற்படுகிற காலம் முழு வதும் அவருடைய குடும்பத்திலிருந்து பெரிய அளவுக்கு நிதிகளை வாங்கி கட்சிக்கு கொடுத்துள் ளார்.  

தீக்கதிரில் தன் பங்களிப்பு  

ஜனசக்தி பத்திரிகையாக மதுரையில் செயல்பட்ட அலுவலகத்தை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் விற்க முயற்சித்த பொழுது, தோழர் பி. ராமமூர்த்தி அவர்களுடைய தலை யீட்டின் அடிப்படையில், அதை மார்க்சிஸ்ட் கட்சிக்கு விலைபேசி வாங்கினார்கள். அப்படி வாங்கப்பட்ட அலுவலகத்தை செயல்படக்கூடிய ஓரளவு வசதிகளை கொண்ட அலுவலகமாக மாற்றுவதற்கான பணிகளில்  முழுமையாக கவனம் செலுத்தியவர் தோழர் அப்துல் வகாப். தன்னு டைய தோட்டங்களில் இருந்த தேக்கு மரங் களையும் இதர தேவையான மரங்களையும் கொண்டு வந்து கொடுத்ததோடு அந்த பணிகளுக்கான நிதிகளையும் கூடுதலாக பெற்றுக் கொடுத்து அது சிறப்பாக இருப்பதற்கு பெரும்பங்காற்றினார்.  

இளைஞர்களுக்கான வழிகாட்டி

 கட்சிக்குள் இளைஞர்களை கொண்டு வருவ திலும் அவர்களை பராமரிப்பதிலும் அவர் களுக்கு பயிற்சி கொடுப்பதிலும் இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு தேவைப் பட்டால் பொருளாதார உதவிகளை செய்து  கொடுப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியவர் தோழர் அப்துல் வகாப். கட்சியில் நீண்ட காலமாக பத்திரிகை துறையில் தலைமை பொறுப்பில் இருந்து செயலாற்றியது மட்டுமின்றி கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக, மாநில செயற்குழு உறுப்பினராக நீண்ட காலம் செயல்பட்டார்.  

அடக்கத்தின் உச்சம்

 எந்த கடினமான பிரச்சனையாக இருந்தா லும் அதிர்ந்து பேசுவது என்பது அவரிடம் இருந்ததே இல்லை. அதே நேரத்தில் தன்னு டைய கருத்தில் நிதானமாக அழுத்தமாக உறு தியாக நின்று பேசுபவர். சில நேரங்களில் எடுக்க ப்படுகிற முடிவுகள் அவருடைய கருத்துக்கு மாறாக இருந்தாலும் கட்சியின் முடிவில் இருந்து மட்டுமே அவர் செயல்படுவார். தனிப்பட்ட மனிதராக எப்பொழுதும் அவர் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியதே இல்லை. ஒரு  பெரிய மனிதனாக, பொறுப்புகளில் உயர்ந்த இடத்தில் இருந்தாலும் அதை வெளிப்படுத்துகிற விதத்தில், தான் என்ற அகங்காரத்தோடு நான் சொல்லுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற நிலையில் அவர் நடந்து கொண்டதை அவருடன் சுமார் 50 ஆண்டுகள் கட்சிப் பணியில் இருந்து செயல்பட்ட எந்த காலத்திலும் நான் பார்த்ததில்லை. அறிவும் அதோடு இணைந்த அடக்கமும் தான் அவருடைய வாழ்க்கையில் மரணிக்கும் வரை நீடித்தது.