articles

img

சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாடு வரைவு நகல் அரசியல் தீர்மானமும் சிறுபான்மையினர் நலனும்- எஸ்.நூர்முகம்மது

சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாடு  வரைவு நகல் அரசியல் தீர்மானமும் சிறுபான்மையினர் நலனும் - எஸ்.நூர்முகம்மது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரை யில் நடைபெறுகிறது. மதுரையில் நடைபெறும் 3ஆவது அகில இந்திய மாநாடு என்றாலும், சுமார் 53 ஆண்டுகளுக்குப் பின்னர் நடை பெறும் அகில இந்திய மாநாடு என்பதனால் மதுரை நகரமும், மாநாட்டை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள தமிழ்நாடு கட்சியும் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அம்மாநாட்டை ஒட்டி பிரமாண்டமான பேரணி, பொதுக் கூட்டம் என பல சிறப்புகள் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில் கடந்த மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்றுள்ள சர்வதேச, தேசிய நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்துவதோடு, எதிர் வரும் காலத்திற்கான கொள்கைகளையும், அரசியல் நடைமுறை உத்தியையும் தீர்மானிக்கும் அரசியல் தீர்மானத்தை நிறைவேற்றுவதும் முக்கிய நிகழ்வாகும்.  மற்ற கட்சிகளைப் போலல்லாமல் கட்சியின் கொள்கைகளையும், அரசியல் நடைமுறை உத்திகளையும் வடிவமைப்பதில் தலைமைக்கு மாத்திரமல்லாமல் அணிகளுக்கும் சம வாய்ப்பளிக்கும் வகையில் மத்தியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நகல் அரசியல் தீர்மானத்தை ஒவ்வொரு உறுப்பினரும், கிளைகளும், குழுக்களும் விவாதிக்கவும், அவற்றின் பேரில் திருத்தங்கள் கொடுத்து தங்க ளது பங்களிப்பைச் செய்யும் வாய்ப்பையும் கொடுக்கும் உள்கட்சி ஜனநாயகத் தன்மை கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி. அவ்வாறு நகல் தீர்மானம் சுற்றுக்கு விடப்பட்டு, தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் அத்தீர்மானத்தில் சிறுபான்மையினரின் நலன் குறித்த அம் சங்கள் மிகவும் அழுத்தமாக அமைந்துள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

சர்வதேச அரங்கில்

நகல் தீர்மானத்தின் சர்வதேசப் பகுதியில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலால் நடத்தப்படும் இனப்படுகொலை முக்கிய இடம் பெற்றுள்ளது. 7.10.2023 இல் துவங்கி 15 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இஸ்ரேலின் தாக்குதலில் 47,035 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன் ஒரு லட்சம் பேர் காயமடைந்தது குறித்தும், கொல்லப்பட்டவர்களில் 60 சதவிகிதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என்பதும் கவலையுடன் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. அகதி கள் முகாம் கூட தாக்கப்பட்டு, ஆயுதமற்ற பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டு, சர்வதேச சட்டங்களை எல்லாம் இஸ்ரேல் மீறி வருவதை யும் அறிக்கை சுட்டிக்கட்டுகிறது. அமெரிக்கா  மற்றும் அதன் கூட்டாளிகளின் உடந்தையோடு மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமிக்க முனைகிறதையும் அறிக்கை அம்பலப்படுத்து கிறது. இதற்காக அமெரிக்கா 1790 கோடி டாலர் அளவிற்கு ஆயுத உதவி செய்துள்ளது.  ஐநாவில் கொண்டு வரப்பட்ட போர் நிறுத் தத்திற்கான அனைத்து தீர்மானங்களையும் அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன் படுத்தி ரத்து செய்து விட்டது. சிரியா, ஏமன், ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் மீதும் தாக்கு தல்கள் நடந்துள்ளன. நகல் தீர்மானம் சுற்றுக்கு வந்த பின்னர் டிரம்ப் ஆட்சியில் போர்நிறுத்தத்திற்கான முயற்சிகள் நடை பெற்றாலும், காசாவைக் கையகப்படுத்தும் தனது நோக்கத்தை டிரம்ப் வெளிப்படையா கவே கூறியது கவனிக்கத்தக்கது. இறுதியாக பாலஸ்தீன மக்களுடனான தனது ஒருமைப் பாட்டை வலியுறுத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் தீர்மானம் 1967-க்கு முந்தைய எல்லைகளு டன் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட பாலஸ்தீன நாட்டை நிறுவுவதற்குத் தன் ஆதரவைத் தெரிவிக்கிறது.

இந்துத்துவ  நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகல் அரசியல் தீர்மானம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனால் வழிநடத்தப்படும் பாஜக அரசின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை விரிவாக அம்பலப்படுத்துகிறது. இஸ்லாமியர்களை அவர்கள்  என்ற குறிவைத்து தனிமைப் படுத்துவதும், ஒரு பரந்த இந்து அடையாளத்தை உருவாக்குவதும் அவர்களின் திட்டம் என்கிறது. 2024 ஜனவரியில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு  விழாவை அரசு நிதி உத வியுடன், பிரதமர் மோடியே மதச் சடங்குக ளை முன்னின்று நடத்திடும் நிகழ்வாக நடந்த தைக் குறிப்பிடுவதோடு, அடுத்த கட்ட நடவ டிக்கையாக வாரணாசி கியான்வாபி மசூதியை யும், மதுரா ஈத்கா மசூதியையும் குறிவைக்கின்றனர் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. கீழமை நீதி மன்றங்கள் இத்தகைய வழக்குகளை ஊக்கு வித்து, இந்த இடங்களில் இதற்கு முன்னர் ஏதே னும் கோயில்கள் இருந்தனவா என ஆய்வு  செய்வதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்ததை யும், தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட் தலைமையிலான அமர்வு இது 1991 வழி பாட்டுச் சட்டங்களை மீறுவது ஆகாது என்று கூறி ஆய்வுகளைத் தொடர அனுமதித்ததை யும், அது பின்னர் சம்பல் மற்றும் ஆஜ்மீர் மசூதிக ளிலும் அத்தகைய வழக்குகள் தொடர வழி வகுத்ததையும் கூறுகிறது.

சிறுபான்மையினர்  மீதான தாக்குதல்கள்

ராமநவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் பூஜை போன்ற பண்டிகைகளின் போது மத ஊர்வலங்களை முன்னெடுப்பதும், சிறு பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் நுழைந்து மோதல்களுக்கு வழிவகுக்கும், ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் வாடிக் கையாகி வருகிறது என்று அறிக்கை வெளிப் படுத்துகிறது. இந்த அனைத்து சம்பவங்களி லும் சிறுபான்மை சமூகத்தினர் தான் காவல் துறையின் அடக்குமுறையைச் சந்திக்கின்ற னர் என்பதோடு இஸ்லாமியரின் வீடுகளை புல்டோசர்களைக் கொண்டு இடிப்பது உத்தரப் பிரதேசத்தில் துவங்கி, மத்தியப் பிரதேசம், ராஜஸ் தான், தில்லி என மற்ற பாஜக ஆளும் மாநிலங்க ளுக்கும் பரவி வருவதையும் குறிப்பிடுகிறது.

 சிறுபான்மையினருக்கு  எதிரான சட்டங்கள்

பாஜக ஆளும் மாநிலங்கள் சிறுபான்மையி னரைக் குறிவைத்து சட்டங்களை இயற்றி வருகின்றன. உத்தரப்பிரதேசத்தில் இரு மதத்தினருக்கு இடையிலான திருமணத்தை லவ் ஜிகாத் எனக் கூறி ஆயுள் தண்டனை கொடுக்கும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது போல் நில ஜிகாத், ஹலால் உணவு ஜிகாத் என பல நாமங்களுடன் சட்டங்கள் அணி வகுக்கின் றன. தற்போது இஸ்லாமியர் கடைகளில் இந்துக்கள் பொருட்கள் வாங்குவதைத் தடுக்கும் வகையில் உத்தரவுகள் வருகின்றன.

 கிறிஸ்தவர்களுக்கு எதிராக

இந்துத்துவ சக்திகள் கிறிஸ்தவ சிறு பான்மையினரையும் குறி வைப்பதை எடுத்துக் காட்டும் நகலறிக்கை 2023இல் கிறிஸ்தவர்க ளுக்கு எதிரான734 வன்முறைகள் நடந்துள் ளதையும், இந்த எண்ணிக்கை 2024இல் 834 ஆக அதிகரித்துள்ளதையும் சுட்டுகிறது. தேவாலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் மீதான தாக்குதல்கள், ஒதுக்கி வைத்தல் மற்றும் கடுமையான மத மாற்ற தடுப்பு சட்டங்களைப் பயன்படுத்தி கிரிமினல் வழக்குகளை பதிவு செய்வது ஆகியவை தொடர்கின்றன. மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்த அமைப்புகள் மதம் மாறிய அனைத்து ஆதிவாசி களையும் பழங்குடியினர் பட்டியலிலிருந்து வெளியேற்ற அழுத்தம் கொடுக்கின்றன.  2023 மே 3இல் துவங்கி மணிப்பூரில் தொடரும் கலவரத்தில் 250 பேர் படுகொலை, 60000 மக்கள் இடம் பெயர்வு. ஓன்றிய அரசின் செயல்படாத தன்மையும், ஒருதலை பட்ச செயல்பாடும் அமைதி மற்றும் நல்லி ணக்கத்திற்கு எதிராகவுள்ளது என்பதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.  மார்க்சிஸ்ட் கட்சியின்  அறைகூவல் இந்துத்துவாவையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் பல்வேறு செயல்பாடுக ளையும், செல்வாக்கையும் எதிர் கொள்வதற்கு மார்க்சிஸ்ட் கட்சி அரசியல், கருத்தியல், பண்பாடு, பொருளாதார, சமூக தளங்களில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டுமென தீர்மானம் வற்புறுத்து கிறது. அதற்காக கட்சியும், வெகுஜன அமைப்பு களும் பின்வரும் பணிகளைச் செய்ய கட்சி கட்டளையிடுகிறது.  இந்துத்துவ சக்திகளின் தீய பிரச்சா ரத்தையும், செயல்பாடுகளையும் பல் ஊடகப்  பிரச்சாரங்கள் மூலம் அம்பலப்படுத்த வேண்டும். பொருளாதாரக் கோரிக்கைக ளுக்காகவும், மக்கள் பிரச்சனைகளுக்காகவும் நடத்தப்படும் பிரச்சாரங்களிலும், போராட்டங்க ளிலும் இந்துத்துவ எதிர்ப்பு பிரச்சாரங்க ளையும், போராட்டங்களையும் ஒருங்கி ணைக்க வேண்டும். உழைக்கும் வர்க்கத்தின ரிடையே சமூக, பண்பாடு நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் வகுப்புவாத எதிர்ப்பு பணிகளை ஒழுங்கமைக்க வேண்டும். வரலாற்றைத் திருத்தவும், கல்வி முறையில் வகுப்புவாத அம்சங்களைத் திணிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எதிர்க்க வேண்டும்.  அரசியல் நோக்கங்களுக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும், மத நம்பிக்கைக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்குவதற்கு மத நம்பிக்கையாளர்கள் மத்தியில் கட்சி வேலை செய்ய வேண்டும். திருவிழாக்கள், சமூகக் கூட்டங்கள் வகுப்பு வாத மயமாக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மக்கள் அறிவியல் இயக்கங்களை ஊக்கு விப்பதோடு, மனுவாத-மூட நம்பிக்கை கருத்தாக்கங்களை எதிர் கொள்ளத்தக்க மதச்சார்பற்ற, அறிவியல் சிந்தனையை முன்னெடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் நகல் அரசியல் தீர்மானம் அறைகூவல் விடுக்கிறது.