தொழிற்சங்க இயக்கத்தின் நட்சத்திரம் தோழர் எம்.கே.பாந்தே
1925 ஜூலை 11இல் பிறந்த தோழர் எம்.கே. பாந்தே அவர்கள் தனது 13ஆவது வயதிலேயே பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். 1943ஆம் ஆண்டு மகாரஷ்ட்ரா சோலாப்பூர் மாணவர் சங்க தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், அதே ஆண்டிலேயே கம்யூனிஸ்டு கட்சியிலும் இணைந்தார். புனே பல்கலைக் கழகத்தில் பட்ட மேற்படிப்பும் பின்னர் கோகலே நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். கோவா விடுதலைப்போராட்டத்தில்... கோவா விடுதலை போராட்டத்திலும் முக்கியப் பங்காற்றினார். அவரது மிகப்பெரிய இணையற்ற பங்கு எனில், அவர் இந்திய தொழிற்சங்கத்துக்கு ஆற்றிய மகத்தான உழைப்பே. முதலில் ஏஐடியுசியிலும் பின்னர் சிஐடியுவிலும் அவரது செயல்பாடுகள் இந்திய தொழிற்சங்க இயக்கத்துக்கு மிகப்பெரிய வழிகாட்டுதலாக அமைந்தது எனில் மிகை அல்ல. சிஐடியு தொடங்கியதிலிருந்தே அதன் அகில இந்திய செயலாளராக தேர்வான அவர் பின்னர் 1990 முதல் 1999 வரை பொதுச் செயலாளராகவும் பின்னர் 2010 வரை அகில இந்திய தலைவராகவும் இருந்தார்.
இறுதிவரை அதன் துணைத் தலைவராக செயலாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான பொழுது அதில் தன்னை இணைத்துக் கொண்ட அவர் 1978ஆம் ஆண்டு நடந்த பத்தாவது அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1998ஆம் ஆண்டு 16ஆவது மாநாட்டில் அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வு செய்யப்பட்ட அவர் 2011ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 அன்று இறுதி மூச்சு வரை அந்த பொறுப்பில் தொடர்ந்தார். தனது வாழ்நாளில் 4 வருடங்கள் 6 மாதங்கள் தலைமறைவு வாழ்வு வாழ்ந்தார். ஒன்றுபட்ட போராட்டங்களில் முன்னின்றவர் அகில இந்திய சிஐடியு மையச் செயல்பாட்டின் சிற்பி அவர் எனில் மிகை அல்ல. தோழர்கள் பி.டி.ரணதிவே/ பி.ராமமூர்த்தி/ சமர் முகர்ஜி ஆகியோருடன் இணைந்து அவர் இந்திய தொழிற்சங்கத்தின் புரட்சிகரமான வரலாறு படைத்தார்.
1977 அவசரகால நிலைக்கு பின்னர் இந்தியாவில் நடந்த ஒவ்வொரு தொழிற்சங்க போராட்டத்திலும் அவரது முத்திரை இல்லாமல் இருந்ததே இல்லை. சிபிஎஸ்டியு (CPSTU), என்சிசி(NCC), என்பிஎம்ஓ (NPMO)- என எந்த வடிவத்திலான தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டங்களிலும் அவரது பங்கு முதன்மையாக இருந்தது. பொதுத்துறை தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் பொதுத்துறைகளை பாதுகாக்கவும் அவரது உழைப்பும் வழிகாட்டலும் இணையற்றது. தொழிலாளர்களின் மகத்தான தலைவர் நிலக்கரி/ ஸ்டீல்/ பெல்/ ஓ.என்.ஜி.சி./ பெட்ரோலியம் போன்ற பல பொதுத் துறைகளில் அவர் தொழிலாளர்களின் மகத்தான தலைவராக கொண்டாடப்பட்டார். அனைத்து பொதுத்துறை நிர்வாகங்களும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் அவரது கருத்துக்கு மிகவும் மதிப்பு அளித்தன. 1978க்கு பின்னர் இந்தியா முழுதும் உருவான பொதுத்துறைக்கான ஊதிய ஒப்பந்தங்களில் அவரது கையெழுத்து இல்லாமல் இருந்ததே இல்லை.
அதே சமயம் தொழிலாளர்களுக்கு பாதகம் எனில் ஒப்பந்தத்தை புறக்கணிக்கவும் அவர் தவறியது இல்லை. தொழிலாளர்களுக்கு புரியும் வகையில்... பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் என்பதால் நடப்பு பொருளாதார நிகழ்வுகள் குறித்து விவரங்கள் எப்பொழுதும் அவரது விரல் நுனியில் இருக்கும். அவற்றை மிக எளிதாக தொழிலாளர்களுக்கு விளக்கும் திறமையும் பெற்றவர். அவரது தொழிற்சங்க பணியில் காஷ்மீரி லிருந்து கன்னியாகுமரி வரையிலும் குஜராத்திலிருந்து மேற்கு வங்கம் வரை யிலும் இடைவிடாது பயணத்தில் இருந்தார். எந்த ஒரு சாதாரண தொழிலாளியும் அவரை எளிதில் அணுகமுடியும். தனது பணியின் மூலம் மிகப்பெரிய தொழிற்சங்க போதனையை நமக்கு எம்.கே. பாந்தே அவர்கள் அளித்து சென்றுள்ளார் எனில் மிகை அல்ல.