காலத்தை வென்ற கம்யூனிஸ்ட் தியாகிகள்
வீரத்தாய் அன்னை லட்சுமி
1920-களில் காரைக்காலில் இருந்து கணவனை இழந்து, மூன்று குழந்தைகளுடன் பொன்மலைக்கு வந்த அலமேலு என்ற பெண், வாழ்க்கையின் கடும் சோதனைகளை எதிர்கொண்டார். சகோதரனின் வீட்டில் தற்காலிகமாக தங்கிய பின், தனியாக வாழ்வதற்காக சிறிய குடிசையில் இட்லி கடை ஆரம்பித்தார். காலையும் மாலையும் இட்லியும், மதியம் தொழிலாளர்களுக்கு எடுப்பு சாப்பாடும் கட்டிக்கொடுத்து வாழ்வாதாரம் தேடினார். பலர் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க தாமதமானதால், இரவு நேரங்களில் அரிசி, உளுந்து வாங்கி, வெந்நீரில் ஊறவைத்து மாவரைத்து மறுநாள் வியாபாரம் செய்யும் அவரது சிரமங்கள் ஏராளம்.
சித்தாந்தத்தின் சூழலில் உருவான போராட்ட வாழ்வு
பொன்மலை ரயில்வே தொழிற்சங்க தலைவர்களின் செயல்பாடுகளும், விடு தலை வேட்கையும், பொதுவுடமை சித்தாந்த மும் அலமேலுவை ஆழமாக பாதித்தன. “நமக்கு சொந்தம் எல்லாம் இந்த சங்கம் தான். கடைசி வரை நம்மைக் காப்பாற்றப் போவதும் இவர்கள் தான்” என குழந்தை களிடம் அடிக்கடி கூறி வந்தார். இயக்கப் பணி களின் காரணமாக காவல்துறை தேடும் நிலை யில், அலமேலு என்ற பெயர் லட்சுமி என மாற்றப்பட்டது. மகள் தனலட்சுமியை அனை வரும் அன்புடன் ‘பாப்பா’ என அழைத்தனர். இவ்வாறு லட்சுமி, அன்னை லட்சுமியாக மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
விடுதலையின் வேதனை
சுதந்திரம் பெற்றாலும், “எல்லோருக் கும் எல்லாம் கிடைக்கும், ஜனநாயகம் தழைத் தோங்கும்” என்ற எதிர்பார்ப்புக்கு காங்கிரஸ் அரசு பெரும் ஏமாற்றம் அளித்தது. முதலாளி களுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும் சாதக மான கொள்கைகளை எதிர்த்த கம்யூனிஸ்ட் இயக்கம் 1948-இல் தடைசெய்யப்பட்டது. அன்னை லட்சுமியும், பாப்பாவும் திருச்சி பொன்மலையில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டு, தலைமறைவு இயக்கப் பணி களில் ஈடுபட்டனர்.
சிறைவாசத்தின் சித்ரவதைகள்
1950-இல் கைது செய்யப்பட்ட இருவரும், காவல் நிலையத்திலும், சைதாப்பேட்டை கிளைச் சிறையிலும் கொடூரமான தாக்கு தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். பாப்பா வின் தலையில் துப்பாக்கிக் கட்டையால் அடித்து ரத்தம் வரவைத்தனர், அவரது நீண்ட முடி நான்கு துண்டுகளாக வெட்டி எறியப் பட்டது. கைதிகளுக்கு குடிநீரில் சிறுநீர் கலப்பது, கைவிலங்குடன் கழிப்பறைக்கு அனுப்புவது போன்ற கொடுமைகளுக்கு எதி ராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னை லட்சுமி, எவ்வித சலுகைகளையும் ஏற்காமல், 23-ஆம் நாள் மார்ச் 4 அன்று சிறையிலேயே உயிர்நீத்தார்.
தீர்க்கமான தியாகத்தின் எதிரொலி
தாயின் இறப்புச் செய்தி அறிந்த பாப்பா விடம், “கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்க மாட் டேன், போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் என எழுதிக் கொடுத்தால் தாயின் முகத்தை காட்டுவோம்” என்ற சிறைத்துறையின் நிபந்த னையை முன்வைத்தனர். “அன்னையா? கட்சியா?” என உள்ளுக்குள் போராடிய பாப்பா, இறுதியில் “கட்சி தான் முக்கி யம்” என உறுதியாக பதிலளித்தார். அன்னை யின் உடலை பாப்பாவுக்குக் காட்டாமலேயே துணிமூட்டை போல் வாரிச் சுருட்டி எடுத்துச் சென்றனர். அன்னையின் உடல் என்ன ஆனது, புதைத்தார்களா, எரித்தார்களா என்பது இன்றும் தெரியவில்லை. ஒரு புகைப்படம் கூட இல்லாதது வேதனை நிறைந்த உண்மை. அன்னையின் முகம் நமக்குத் தெரி யாவிட்டாலும், அவரது தியாகமும் உறுதியும் என்றென்றும் நம்மை அர வணைத்துக் கொண்டே இருக்கி றது. லட்சியத்திற்காக உயிரையே நீத்த அந்த வீரத்தாயின் நினைவு, போராளிகளின் இதயங்களில் என்றென்றும் சுடர்விட்டு ஒளிரும்!
திருமெய்ஞானம் தியாகிகள்
1982 ஜனவரி 19, நாட்டின் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நாள். சுதந்திர இந்தியாவின் முதல் அகில இந்திய பொதுவேலைநிறுத்தம் நடைபெற்ற அந்நாளில், உழைக்கும் மக்களின் வீரம் உச்சம் தொட்டது. காங்கிரஸ் அரசு அப்போது பொதுத்துறை நிறுவனங்களைச் சீரழிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. உலகில் தரம் வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியா வின் ‘பெல்’ நிறுவனத்திற்குப் பதில், வெளிநாட்டு கம்பெனிகளுக்கு ஓப்பந்தங் கள் வழங்கப்பட்டன. விவசாயிகள் தற்கொலைகள் பெருகின. அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்வும், வேலையின்மையும் மக்களைப் பிழிந்தெடுத்தன. போராட்டத்திற்கு விவசாயிகளும் தோள்கொடுத்தனர் . தஞ்சை மாவட்டத் தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உழவர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் திருமெய்ஞானம் கிராமத்தில் அமைதியாக முழக்க மிட்ட உழைப்பாளிகள் மீது, காவல்துறை கொடூரமான தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச் சூட்டில் அஞ்சான், நாகூரான் என்ற இரு தோழர்கள் உயிர்நீத்தனர். தென்னை, பனை மரங்கள்கூட குண்டுகளால் துளைக்கப்பட்டன - அந்தள விற்கு காவல்துறை கோரத்தாண்டவம் ஆடியது. மன்னார்குடி அருகே ரெட்டைபுளி கிராமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஞானசேகரன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 1982-ஐ விட இன்று தீவிரமடைந்துள்ள தொழிலாளி-விவசாயி ஒற்றுமைக்கு என்றென்றும் உத்வேகம் அளிக்கும் சக்தியாய் திருமெய்ஞானம் தியாகிகள் நம்முன் வழிகாட்டுகிறார்கள். அவர்களின் உயிர்த்தியாகம் வீணாகாது. வருங்காலத்தில் உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு வழிகாட்டும் ஜோதியாக என்றென்றும் ஒளிவீசும்.
புரட்சி மலர் லீலாவதி
கை நெசவுத் தொழிலில் வாழ்வாதாரம் கண்ட எளிய குடும்பத்தில் பிறந்த லீலாவதி, வறுமையால் பத்தாம் வகுப்போடு கல்வியை நிறுத்த வேண்டியிருந்தது. ஆனால் மனம் தளராத அவர், 20 வயதில் ஜனநாயக வாலிபர் சங்கத்திலும், பின்னர் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினராகவும் தன்னை அர்ப்பணித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர உறுப்பினராக மக்கள் பணியில் ஈடுபட்டார். 1996-இல் முதன்முதலாக பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட போது, மதுரை மாநகராட்சியின் 76 வார்டு களில் 24 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட் டன. வில்லாபுரம் பகுதியின் 59-ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லீலாவதி போட்டி யிட்டார். பணபலமும் அதிகாரமும் கொண்டோர் அவரை எளிதில் வீழ்த்தலாம் என்று நினைத்த னர். ஆனால் அம்மக்களுக்கு லீலாவதி செய்த அயராத சேவைகள் வெற்றியைத் தேடித்தந்தன. மதுரை மாநகரம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாயினும், வில்லாபுரம் பகுதியில் பாதுகாப்பான குடிநீர் இல்லை. கள்ளச்சாராயம் கரைபுரண்டோடி யும், குடிநீருக்காய் பெண்கள் குடங்களுடன் காத்தி ருந்தனர். தேர்தலில் வெற்றிபெற்ற லீலாவதி, பொய் வாக்குறுதிகள் அள்ளிவீசும் அரசியல்வாதிகளி டையே, குடிநீர் இணைப்புகளையும், ரேஷன் கொள்ளையைத் தடுப்பதையும் மட்டுமே வாக்குறு தியாக அளித்தார். மக்கள் அவரை வெற்றிபெறச் செய்தனர். மக்கள் அழைத்த இடமெல்லாம் ஓடோடிச் சென்று பிரச்சனைகளைத் தீர்த்தார் லீலாவதி. ரேஷன் பொருள் கடத்தல், குடிநீரில் கொள்ளை லாபம் அடித்த ரவுடிக் கும்பலுக்கு அவரது வெற்றி பெரும் அச்சம் ஏற்படுத்தியது. மார்க்சியம் கற்றுக்கொடுத்த நேர்மை, உண்மை, எளிமை என்ற கவசங்களை அணிந்த லீலாவதி, 54 குடிநீர் இணைப்புகளைக் கொண்டு வர மாமன்றத்தில் போராடினார். ரேஷன் கடை களில் பகல்கொள்ளைக்கும், கள்ளச்சாராயத் திற்கும் எதிராக மக்களைத் திரட்டினார். ஆனால் அரசியல் வருமானத்திற்காக மக்களை ஏமாற்றியவர்கள் கோபம் கொண்டனர். பலமுறை கொலை மிரட்டல், காவல்துறை புகார் என்றும் அவர் அஞ்சவில்லை. காவல்துறை யும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏப்ரல் 23, 1997 அன்று காலை, ரூபாய் 16 சில்ல றையுடன் சமையல் பொருள் வாங்கச் சென்ற லீலாவதியை ரவுடிகள் சூழ்ந்தனர். குடிநீர் வியாபாரத்திற்கும், ரேஷன் கடத்தலுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் எதிராக உயர்த்திய அவரது கரங்களை வெட்டி வீழ்த்தினர். அநீதிக்கு எதிராக உயர்ந்த விரல்கள் சிதறின, ரத்தவெள்ளத்தில் வீரத்தாய் வீழ்ந்தார். லீலாவதி ஒரு பீனிக்ஸ் பறவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது தியாக உயிர் ஆயிரம் லீலாவதிகளாக இன்றும் எழுந்து நிற்கிறது.
ரயில்வே தியாகி ராமசாமி
1974-இல் இந்தியா வின் நெஞ்சைப் பிளந்த ஒரு தியாகம் மதுரையின் பாலம் ரயில் நிலையத்தில் அரங்கேறியது. நாடு முழுவதும் ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய வேளையில், அந்தப் போராட்டத்தின் தீவிரத்தை ஒரு சாதாரண தொழிலாளியின் இரத்தம் நாட்டுக்கு உணர்த்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் எம்.முனியாண்டி தலைமையில் 53 தொண்டர்கள் மதுரையில் கருங்காலிகளைக் கொண்டு ரயில்களை ஓட்டுவதைத் தடுக்க மறியல் செய்தனர். ரயில்வே நிர்வாகமோ சதியாக வழக்கமான ரயில் வண்டியை அனுப்பாமல், வெறும் டீசல் இஞ்சினை வேகமாக அனுப்பி, “எவ்வளவு தடை வந்தாலும் நிற்கக்கூடாது” என உத்தரவிட்டிருந்தது. இஞ்சின் வேகமாக வருவதைக் கண்ட தொண்டர்கள் ஓர மாகத் தாவித் தப்பினர். ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த ராமசாமி என்ற பந்தல் போடும் தொழிலாளி தாவும்போது தண்ட வாளத்தில் விழுந்துவிட்டார். அடுத்த கணமே இஞ்சின் அவர் உடலை துண்டாக்கியது - நிற்காமலேயே சென்றுவிட்டது. சிஐடியு உறுப்பினரான ராமசாமி, தன் மனைவி ராக்கம்மா ளின் கண்முன்னே உயிரை இழந்தார். மனைவியும் அதே மறி யலில் பங்கேற்றிருந்தார் - கணவரின் சிதைந்த உடலைக் கண்டும், ராக்கம்மாள் தன் போராட்டத்தைக் கைவிடவில்லை. கைதாகி சிறை சென்றார். ராமசாமியின் தியாகம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. ரயில்வே போராட்டத் தலைவரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் பின்னாளில் மதுரை வந்து ராமசாமியின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார். அரசாங்கம் 6-8 மாத சிறைத் தண்டனை என அச்சுறுத்தி யும், முனியாண்டி, நன்மாறன் உள்ளிட்ட 56 போராளிகள் துணிவுடன் மறியலில் ஈடுபட்டனர். நாடெங்கும் தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் - டிஆர்இயு சங்கத் தலைவர் ஆர்.ராமசாமி மிசா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார். சிஐடியு தலைவர் கே.வைத்தியநாதன் உள்ளிட்ட 47 பேர் 21 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர். ராமசாமியின் இரத்தம் தொழிலாளி வர்க்கத்திற்குப் புதிய வலிமை கொடுத்தது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாதா ரண தொழிலாளியின் உயிர்த்தியாகம், தொழிலாளி வர்க்கத்தின் உறுதியை உலகிற்கு உரக்கச் சொன்னது. அவரது தியாகம் இன்றும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கிறது. மதுரையின் மண்ணில் விழுந்த ஒரு துளி இரத்தம், தொழிலாளர் வர்க்க விடுதலையின் பாதையை ஒளிர்விக்கும் ஜோதியாக இன்றும் எரிகிறது.