உழைப்பாளிகளை குறி வைக்கும் இரட்டைக் குழல் துப்பாக்கி
தற்போதைய முதலாளித்துவம் கட்டவிழ்த்து விடும் தாக்குதல்கள் ஆரம்பகால முத லாளித்துவத்தின் செயல்பாடுகளை நினைவுபடுத்துகின்றன. இன்றைய தாக்குதல்கள் உலகம் தழுவியதாக இருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமின்றி வளர்ந்த முதலாளித்துவ நாடு களிலும் நாம் இதை காண முடிகிறது. மூன்று மட்டங்களில் இந்த தாக்குதல்கள் ஏவப்படுகின்றன. பொருளாதார, அரசியல், தத்துவார்த்த தளங்களில் அவை அரங்கேறுகின்றன. இதைப் பற்றிய கட்டுரையே பிரபாத் பட்நாயக் எழுதியுள்ள “The Worldwide Assault on Working People” ஆகும்.
இரட்டைக் குழல் துப்பாக்கி
பொருளாதார தளத்தில் அரங்கேறும் தாக்குதல்கள் பரந்த அளவில் பேசப்படுபவை ஆகும். அதிகமான பணவீக்கம், வேலையின்மை ஆகியன முதலாளித்துவ உலகில் வெளிப்பட்டு வருகின்றன. அதிக பணவீக்கம், பெரும் மூலதனத்தின் லாப விகித அதிகரிப்போடு சேர்ந்தே, குறிப்பாக அமெரிக்காவில் ஏற்பட்டது. பின்னர் உலகம் முழுக்க அந்த போக்கு விரிந்தது. எவ்வாறு அத்தகைய போக்கு விரிந்தது என்பதை இங்கே நாம் பேசவில்லை. அதிகரிக்கும் பண வீக்கமும், அதிகரிக்கும் வேலையின்மையும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. பண வீக்கத்தை கட்டுப் படுத்துகிற அரசின் முயற்சிகள் வெளிப்படையாகவே வேலைவாய்ப்புகளை வெட்டுவதாக உள்ளன. அரசாங்கங்களின் எதிர்பார்ப்பு என்னவெனில், அதிகமான வேலையின்மையை உருவாக்குவது தொழிலாளர்களின் கூட்டு பேர சக்தியை வெகுவாகக் குறைப்பதாகும்; ஆகவே அவர்கள் விலைவாசியை ஈடு கட்டுவதற்கான கூடுதலான ஊதியத்தை பெற முடியாது; இப்படி ஊதியம் குறைக்கப்படுவது பண வீக்கத்தையும் எதிர்கொள்வதற்கு உதவும் என்பதே ஆகும். ஆகவே பண வீக்கமும் வேலையின்மையும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல உழைப்பாளி மக்களையே குறி வைக்கின்றன.
ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கணக்கு
தொழில் புரட்சி காலத்திய முதலாளித்துவம், வறுமை அதிகரிப்பு என்கிற குணாம்சத்தையே கொண்டிருந்ததாக எரிக் ஹாப்ஸ்வாம் போன்ற வரலாற்றியலாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அதுபோலவே இன்றைய முதலாளித்துவமும் உழைப்பாளி மக்கள் மத்தியில் இல்லாமையை, அதன் விகிதத்தை பெருமளவு அதிகரித்து இருக்கிறது. பொரு ளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் முன்வைத்த கணக்கு முக்கியமானது. அமெரிக்க ஆண் தொழி லாளியின் 2011 ஆம் ஆண்டு சராசரி உண்மை ஊதியம் 1968ஆம் ஆண்டின் அளவுகளைக் காட்டிலும் சற்று குறைவு. தற்போதைய ஊதிய அளவுகள் பணவீக்கத்தோடு இணைத்துப் பார்க்கப்பட்டால் 2011 இல் இருந்ததை விட குறைவானதாகவே இருக்கும். 1968 உடன் ஒப்பிடும்போதும் இதே நிலைமைதான். ஆனால் அதிகாரப்பூர்வ வேலையின்மை மதிப்பீடுகள் இந்த உண்மையை திரை போட்டு மறைக்கின்றன. அதீத வேலையின்மையால், “தொழி லாளர்கள் ஊக்கம் இழந்ததன் விளைவு” தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் சரிவை ஏற்படுத்தி உள்ளது. இதை அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கணக்கில் கொள்வதில்லை. ஆகவே அமெரிக்க தொழிலாளர்கள் மத்தியில் வறுமை அதிகரித்திருக்கிறது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. மற்ற வளர்ந்த முத லாளித்துவ நாடுகளின் தொழிலாளர்களின் நிலைமை யும் மாறுபட்டு இருக்க வாய்ப்பில்லை. இந்தியா மற்றும் இதர மூன்றாம் உலக நாடுகளிலும் மக்கள் தொகையின் சத்துணவு விகிதங்களில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இதற்கு மிகத் தெளிவான சாட்சியம் ஆகும். இதை எப்படி மதிப்பிட முடிகிறது என்றால், உணவு தானிய தனிநபர் நுகர்வு 1980 லிருந்து சரிந்து கொண்டு வருவதில் இருந்துதான். உணவு தானிய நுகர்வு என்பது, நேரடியாக உட்கொள்ளப் படும் தானியம், கால்நடை தீவனங்களாக பயன் படுத்தப்படுபவை, உணவு பொருள்களாக தயாரிக்கப் படுபவை ஆகியவற்றின் மொத்தம் ஆகும். இதன் மூலம் உழைப்பாளி மக்கள் மத்தியில் வறுமை அதிகரித்து வருவதை எந்த குழப்பமும் இல்லாமல் அறிய முடிகிறது. ஆகவே முதலாளித்துவ உலகில் உழைப்பாளிகள் மீது, இன்னும் சொல்லப்போனால் எளிய தொழிலாளர்கள் மீது, பொருளாதார தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.
அரசியல் தாக்குதலும் அதன் பகுதியே!
அரசியல் உரிமைகளை உழைப்பாளி மக்களிட மிருந்து பறிக்காமல் பொருளாதார தாக்குதல்களை தொடர்ந்து கட்டவிழ்த்து விட முடியாது. ஆகவே அரசியல் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இத்தகைய அரசியல் தாக்குதல் முதலாளித்துவ உலகம் முழுக்க பெரிய அளவில் உருவெடுத்துள்ள நவீன பாசிச வடிவ மாக இருக்கிறது. நவ பாசிச தலைவர்கள் பல நாடு களின் - அர்ஜென்டினாவின் மிலேய்யில் துவங்கி, இத்தாலியின் மெலோனி, அமெரிக்காவின் டிரம்ப், இந்தியாவின் மோடி, ஹங்கேரியின் ஆர்பன், துருக்கி யின் எர்டோகான் வரையிலானவர்கள் - ஆட்சித் தலை மையாக இருக்கின்றனர். இஸ்ரேலின் நேதன்யாகு பற்றி கூறவே வேண்டாம். இன்னும் பல நாடுகளில் நவ பாசிச அரசியல் இயக்கங்கள் ஆட்சியைக் கைப் பற்றுவதற்கு சிறகுகள் விரித்து காத்திருக்கின்றன. ஜெர்மனியின் ஏஎஃப்டி, பிரான்சின் மெரின் லி பென் ஆகியோர்கள் அந்த வகையைச் சார்ந்தவர்கள். இதில் பிரான்சில் ஒன்றுபட்ட இடதுசாரிகள், வலதுசாரிகளை ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாமல் தடுத்துள்ளார்கள்.
சித்தாந்த தாக்குதல்கள்
உழைப்பாளி மக்கள் மீதான நவ பாசிச அமைப்பு களின் அரசியல் தாக்குதல்கள், தொழிலாளர்கள் மீதான தொழிற்சங்க வாதிகள் மீதான அடக்கு முறைகளை உள்ளடக்கியதாகும். தொழிலாளர் களின் உரிமைகளை சட்டரீதியாகவே சுருக்குவது, அப்பாவி சிறுபான்மை மக்களை “பிறர்” என்கிற கருத்தாக்கம் மூலமாக வெறுப்பிற்கு ஆளாக்குவது ஆகியனவும் இத்தோடு இணைந்து நடந்தேறுகின்றன. வெகுஜன விவாதத்தில் ஏற்படுகிற இத்தகைய திசை திருப்பல், உழைப்பாளி மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை பின்னோக்கித் தள்ளுகிறது; அவர்களை மத இன அடிப்படையில் பிரிக்கிறது; தங்கள் மீது ஏவப்படும் பொருளாதார தாக்குதலை எதிர்த்து ஒன்றுபட்ட எதிர்வினையை ஆற்ற விடாமல் தடுக்கிறது. அண்மைக் காலங்களில் அரசியல் பொருளாதார தாக்குதல்களோடு இணைந்து சித்தாந்த ரீதியான தாக்குதல்களும் தொடுக்கப்படுகின்றன. இவை யெல்லாம் ஏதோ தற்செயலாக அங்கும் இங்கும் யாரோ முன் வைக்கிற சில விமர்சனங்கள் அல்ல. உழைப்பாளி மக்களுக்கு எதிரான கருத்துக்கள் உலகம் தழுவிய தாக அமைந்திருப்பது உழைப்பாளி மக்களின் மீதான ஒருங்கிணைந்த சித்தாந்த தாக்குதலின் பிரதிபலிப்பே ஆகும்.
இந்தியாவிலும்...
இந்தியாவிலும் இத்தகைய அரசியல் அமைப்புகள் அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மக்களுக்கு நேரடி பண மாற்றத்தை வழிமுறையாக கையாளுகின்றன. ஆனால் பொருளாதார அமைப்பு, பெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு சக்தி யற்றதாகவே தொடர்கிறது. நேரடி பண மாற்றமும் உழைப்பாளி மக்களின் ஏழ்மையை ஈடு செய்யக் கூடியதாக இல்லை. மிகச் சொற்ப அளவிலான நிவாரணமே அது. அத்தகைய பணமாற்றங்கள் ஈடு செய்கிற அளவில் இருந்திருந்தால், இவ்வளவு சத்து ணவுக் குறைபாட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. இந்த நிவாரணங்கள் கூட ஆளும் நவ பாசிச குணாம்சங்களைக் கொண்டவர்களோ அல்லது பிரதமர் மோடியோ “இலவசங்கள்” என கொச்சைப் படுத்தி பேசி வந்தவைதான். ஆனால் இப்போது ஆளுங்கட்சியே தேர்தல் நிர்ப்பந்தங்களுக்காக அத்தகைய பண மாற்றத்தை மக்களுக்கு செய்ய வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. ஆகவே இத்தகைய வழிமுறை மீதான கருத்தியல் தாக்குதல்களை வேறு சிலர் செய்து வருகின்றனர். ஒரு தொழிலகத்தின் தலைமை நிர்வாகி அண்மையில் 90 மணி நேர வேலை வாரத்தை ஆலோசனையாக முன் வைத்தார். அதாவது இந்திய தொழிற்சாலைகளுக்குள் நாஜி வதை முகாமான “ஆஸ்விட்ஸ்ச்” வகைச் சூழலை விரும்புகிறார். அவர், இலவசங்கள் மக்களின் வேலை பார்க்கும் ஊக்கத்தை கெடுப்பதாக தெரிவித்தார். தற்போது இந்த கோரசில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரும் சேர்ந்து கொண்டார். உழைப்பாளி மக்களை வேலை பார்க்க விடாமல் இலவசங்கள் தடுப்பதாக வும், அவர்கள் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு இலவசங்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் விமர்சித்தார். கௌரவமான வேலையை தருவது கட்டாயம் என்று அரசுக்கு அவர் உத்தரவை பிறப்பித்திருந்தால் வேறு விஷயம். ஆனால் எளிய மக்களுக்கு கிடைக்கிற நிவாரணத்துக்கு எதிராகவே பேசினார். கௌரவமான வேலைவாய்ப்பு தருவது பற்றி எதுவுமே கூறவில்லை.
ஐ.எல்.ஓ கூறுவது என்ன?
இப்படி எல்லாம் பேசுபவர்கள் இன்னொரு வாதத்தை முன் வைக்கிறார்கள். வேலைகள் நிறைய இருக்கிறது, ஆனால் நாடிப் போகிறவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பதே. ஆனால் அவர்களால் இந்த வாதத்திற்கு எந்த ஆதாரத்தையும் தர முடிய வில்லை. அல்லது இத்தகைய வேலை வாய்ப்பு களுக்கு எந்த மட்டத்திலான ஊதியம் தரப்படுகிறது என்றும் அவர்களால் கூற முடியவில்லை. உலக தொழி லாளர் ஸ்தாபனம் (ஐஎல்ஓ) கூறுவது என்னவெனில், இந்தியாவில் கௌரவமான வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கிறது என்பதையே. அரசின் வேலை குறித்த புள்ளி விவரங்கள் அரைகுறை யானவை. குடும்பங்களில் பெண்களின் ஊதியமற்ற வேலை அதிகரிப்பதாக கூறும் அந்த புள்ளி விவ ரங்கள், அத்தகைய அதிகரிப்பை வேலைவாய்ப்பு அதி கரிப்பாக கணக்கில் காட்டுகின்றன. உண்மையில் வேறு பயன் தரும் வேலை வாய்ப்புகள் கிடைக்காத தால்தான் அவர்கள் ஊதியமற்ற வேலைகளில் ஈடுபடு கிறார்கள். ஆகவேதான் பொருளாதார நிபுணர்கள் இத்தகைய வேலை வாய்ப்புகளை “மறைமுக வேலையின்மை” என்று சித்தரிக்கிறார்கள். அமெரிக்காவிலும் இதே போன்ற சித்தாந்த ரீதியான தாக்குதல்கள் உழைப்பாளி மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. டிரம்பால் நிய மிக்கப்பட்ட “அரசின் திறன் மதிப்பீட்டு துறை” (DOGE) தலைவராக உள்ள எலான் மஸ்க், அனேகமாக மருத்துவ உதவி, மருத்துவ சேவை, எளிய மக்களுக் கான சமூக பாதுகாப்பு பயன்களில் நிதிவெட்டை பிர யோகிப்பார் என, அவரது கருத்துக்களில் இருந்து செனட்டர் பெர்னி சான்டர்ஸ் கணித்துள்ளார். (எம்.ஆர். ஆன்லைன் பிப்ரவரி 13). ஆனால் எளிய மக்களுக்கான பண மாற்றத்தின் மீதான தாக்குதல்களை தொடரும் போதே பணக்காரர்களுக்கான வரிச் சலுகைகள் மூலம் மடைமாற்றம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் பெர்னி சான்டர்ஸ் கூறியுள்ளார். அத்தகைய மடை மாற்றத்தால் பலன் அடைபவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர். ஜெஃப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரும் உண்டு. இது பழிவாங்கல் உணர்வைக் கொண்ட சித்தாந்த ரீதியான தாக்குதலாகும். அதாவது “அளிப்பை மைய மாக” (Supply side economics) கொண்ட பொரு ளாதார வழிமுறையின் பக்கம் நிற்பவர்கள். ஜான் கென்னத் கால் ப்ரைத் என்கிற லிபரல் பொருளாதார நிபுணர், “அளிப்பை மையமாகக் கொண்ட பொரு ளாதாரம்” (Supply side economics) பற்றி குறிப்பிடுகையில் சொன்னது இது: “பணக்காரர்கள் நன்கு வேலை பார்ப்பார்கள் அதிக ஊதியம் தந்தால்... ஏழைகள் நன்கு வேலை பார்ப்பார்கள் குறைவான ஊதியத்தை தந்தால்”. டிரம்ப், மஸ்க் போன்றவர்கள் இப்போது பிரச்சாரம் செய்வதும் இதையே.
முரண் என்ன?
ஆனாலும் இந்த வழிமுறையில் ஒரு முரண் எழுவது நிச்சயம். எளிய மக்களிடமிருந்து பறித்து பணக்காரர்களுக்கு மடைமாற்றம் செய்வதென்ற சித்தாந்தத்தைப் பின்தொடர்ந்தால் முதலாளித்துவ நெருக்கடி மேலும் அதிகரிக்கவே செய்யும். காரணம் தங்கள் கைகளில் கிடைக்கிற வருவாயை அதிகமாக நுகர்வுக்கு பயன்படுத்துவது பணக்காரர்களை விட அதிகமாக ஏழை மக்களே. ஆகவே அத்தகைய வருமான மறுபங்கீடு மொத்த நுகர்வை சுருக்கவே செய்யும். முதலாளிகளின் முதலீடுகளும் சந்தை விரிவாக்கத்தை பொருத்தே அமையும் என்பதால் வெறும் வரிச்சலுகைகள் முதலீடுகளை அதிகரித்து விடாது. ஆகவே நிகர விளைவு உற்பத்திப் பொருட்களுக்கான கிராக்கி சுருங்கும் என்பதிலேயே போய் முடியும் என்பதில் கிராக்கி சுருக்கத்திலேயே ஐயமில்லை. அது நெருக்கடியை மேலும் தீவிரப் படுத்தவே செய்யும். அரசின் தலையீட்டின் மூலம் கிராக்கியை அதிகரிக்க வேண்டும் என்று 1930 இல் ஜான் மேனார்ட் கீன்ஸ் பரிந்துரைத்தார். அதுவே அப்போது நிலவிய உலகப் பெரு மந்தத்திலிருந்து மீள்வதற்கான வழி என்றும் கூறினார். அவர் முதலாளித்துவத்தின் பாது காவலராகவே இருந்தவர். போல்ஷ்விக் புரட்சி போன்ற நிகழ்வுகள் மேற்கத்திய முதலாளித்துவத்தை முந்திச் சென்று விடக்கூடாது என்பதற்காக இத்தகைய ஆலோசனைகளை முன் வைத்தவர். தற்கால முதலாளித்துவத்தில் நாம் காணும் காட்சிகள் 1930ன் நிலைமைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இவற்றின் அரசியல் விளைவுகள் இன்னும் தொலை தூர தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.