articles

img

அகில இந்திய மாநாடு 2

1953 - 3 ஆவது அகில இந்திய மாநாட்டுக் காட்சிகள்

டிசம்பர் 25ஆம் தேதி காலையில் சென்னையிலிருந்து ரயில் மூலம் வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய்கோஷ், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஹாரிபாலிட், கம்யூனிஸ்ட் தலைவர்கள் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், முசாபர் அகமது, எஸ்.ஏ.டாங்கே. எஸ்.வி.காட்டே, பி.சுந்தரய்யா, சோகன் சிங்ஜோஷ் பி.ராமமூர்த்தி ஆகியோருக்கு ஆயிரக்கணக்கானோர் கூடி ரயில் நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளித்தனர். அங்கே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் அனைத்து தலைவர்களையும் பிராமமூர்த்தி பலத்த கர முழக்கங்களுக்கிடையே அறிமுகப்படுத்தி வைத்தார். தலைவர்களை வரவேற்று மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமனும், மாவட்டச் செயலாளர் சங்கரய்யாவும் உரை ஆற்றினார். தியாகி மணவாளனின் இளம் புதல்வர்கள் ரவீந்திரனும், யதீந்திரனும் ஹாரிபாலிட்டிற்கும், அஜய் கோஷிற்கும் மாலை அணிவித்தனர். தூக்குமேடை தியாகி பாலுவின் புதல்வி சரோஜா, முசாபர் அகமதுவுக்கு மாலை அணிவித்தார். வரவேற்புக்கு நன்றி தெரிவித்து ஹாரிபாலிட் பேசினார். அதன்பின் பலத்த கரமுழக்கத்திற்கிடையே அஜய்கோஷ் நன்றி தெரிவித்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 299 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இலங்கையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் விக்ரமசிங்கா, உதவிச் செயலாளர் பீட்டர் கெனமன், மத்தியக்குழு உறுப்பினர் கே.ராமநாதன் மற்றும் யாழ்ப்பாணம் குழு உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் அப்பொழுது கட்டப்பட்டு வந்த ‘காலேஜ் ஹவுஸ்’ உணவு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். மாநாடு ஆரப்பாளையத்தில் இருந்த சுந்தரம் தியேட்டரில் நடைபெற்றது. மாநாட்டு அரங்கிற்கு அன்னை லட்சுமி பெயர் சூட்டப்பட்டது. முகப்பு வாயிலுக்கும், ஒவ்வொரு வாயிலுக்கும் தியாகிகள் பெயர் சூட்டப்பட்டிருந்தன. மாநாடு டிசம்பர் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு மூத்த தலைவர் முசாபர் அகமது செங்கொடி ஏற்றிவைக்க துவங்கியது. தியாகிகளுக்கும், மறைந்த தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியபின் பொதுச் செயலாளர் அஜய்கோஷ் உரையுடன் மாநாடு துவங்கியது. மாநாடு ஜனவரி 3ஆம் தேதி முடிய நடைபெற்றது. இந்த மாநாட்டை சிறப்பாக்கும் விதத்தில் ஜனவரி முதல் தேதியன்று மதுரை திலகர் திடலில் மாபெரும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அருணா ஆசப் அலி தலைமை தாங்கினார். இசை அமைப்பாளர் எம்.பி. சீனிவாசன் தியாகிகளுக்கு வணக்கம் செலுத்திப் பாடியதோடு பாரதியார் வேடமிட்டு ‘பாரதி வாக்கு’ என்ற இசை நாடகத்தையும் நடத்தினார். சாத்தூர் பிச்சைக் குட்டியின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாநாடு நிறைவு நாளன்று அஜய் கோஷை செயலாளராகக் கொண்ட 39 உறுப்பினர் மத்தியக்குழுவை தேர்ந்தெடுத்தது. அது அஜய்கோஷ், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத், எஸ்.ஏ.டாங்கே. பி.சுந்தரய்யா, சி.ராஜேஸ்வர்ராவ், பி.ராமமூர்த்தி, ரனேன் சென் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மற்றும் இஸட், ஏ. அகமது ஆகியோரைக் கொண்ட அரசியல் தலைமைக் குழுவைத் தேர்ந்தெடுத்தது. ஜனவரி 3ஆம் தேதியன்று மதுரையை குலுக்கிய மாபெரும் செம்படைப் பேரணி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற அந்தப் பேரணி இறுதியில் தமுக்கம் மைதானத்தில் முடிவுற்றது. மாநிலச் செயலாளர் எம்.ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற அந்த மாபெரும் கூட்டத்தில் வரவேற்புக்குழு சார்பாக என்.சங்கரய்யா உரையாற்றினார். பின்னர் பி.ராமமூர்த்தி மத்தியக்குழு உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் ஹாரிபாலிட், டாக்டர் விக்ரமசிங்கே மற்றும் அஜய் கோஷ் பேசியபின் நிறைவாக பிராமமூர்த்தி சிறப்புரையாற்றினார்.