கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒடுக்குமுறை ஆட்சியின் கீழ் நாட்டு மக்களின் மனதில் பல்வேறு விதமான உணர்ச்சிகள் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றன. 2021 மே 26 அன்று வரலாற்றில் முதன்முறையாக மக்கள் பெரும்திரளான முறையில் தில்லி எல்லைகளிலும் மற்றும் நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) சார்பில், மோடி அரசாங்கத்தின் கொடூரமான விவசாய விடிவு அணுகுமுறையைக் கண்டித்து கருப்புதினம் பல லட்சம் மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் எழுச்சி
மே 26 அன்று, முன்னெப்போதும் இல்லாத விதத்தில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தின் ஆறு மாதங்கள் நிறைவடைந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் சரித்திரம் படைத்த அகில இந்திய வேலை நிறுத்தம் நடைபெற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்ததையும் குறிக்கிறது,இத்துடன் நாடு சுதந்திரம் பெற்றபின் மிகவும் பேரழிவினை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக அரசாங்கத்தின் தலைமையிலான மோடி ஆட்சியின் ஏழு ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. கடந்த மே 21 அன்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பிரதமருக்குக் கடுமையான கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் அரசாங்கம் விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்றும், இல்லையேல் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
மே 26 அன்று கருப்புக் கொடி ஏற்றும் நிகழ்வுகளையும், மோடி அரசாங்கத்தின் கொடும்பாவிகளை எரிக்கும் நிகழ்வுகளையும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் கவுஹாத்தி வரை மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பல லட்சக்கணக்கான குடும்பத்தினர் பல்லாயிரக்கணக்கான இடங்களில் நடத்தியுள்ளனர். மே 26 அன்று காலையிலிருந்தே ஐக்கிய விவசாயிகள் முன்னணி, அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு விவசாயிகள் – தொழிலாளர்கள் சங்கங்களின் சமூக வலைத்தளங்களில் நாடு முழுதும்கிராமங்களிலும், நகரங்களிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் ஆயிரக்கணக்கான அளவில் பதிவேற்றம் செய்யப்பட்டு, வலம் வந்தன. குறிப்பாக, கொடும்பாவி எரிக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான வீடியோக்களில் மக்களின் கோபம் கடுமையாக பிரதிபலிக்கிறது. பல லட்சக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் டிராலிகளில் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் விதத்தில் கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டன. சமூக ஊடக மேடைகளில் நாள் முழுவதும் இவ்வியக்கத்தினை ஆதரித்து பல்வகை ஃஹேஸ்டேக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. நாடு முழுவதும் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையிலும் இவ்வியக்கம் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்றிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். பெருந்தொற்றின் காரணமாக, அமைப்பாளர்கள் மக்கள் கூடுவதைத் தவிர்த்திடுமாறு எச்சரித்திருந்தார்கள். கிராமங்கள்மற்றும் நகரங்களுக்குள் மட்டும் இதனை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள். மக்களும் கோவிட்-19கட்டுப்பாடுகளைக் கறாராக மேற்கொண்டே இவ்வியக்கத்தினை நடத்தியிருக்கிறார்கள்.
அனைத்து மக்கள் இயக்கங்களின் ஆதரவு
கருப்புக்கொடி தினத்திற்கு அனைத்து விவசாய முன்னணி (சம்யுக்த கிசான் மோர்ச்சா) அறைகூவல் விடுத்தது. இதனை மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை, 12 பெரிய எதிர்க்கட்சிகள் மற்றும் எண்ணற்ற வர்க்க-வெகுஜன ஸ்தாபனங்கள் ஆதரித்தன. இவற்றில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், சிஐடியு, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவையும் அடங்கும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், தொழிலாளர்கள், மத்தியதர ஊழியர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், பொறியாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், இதழாளர்கள் முதலானவர்களும் இக்கிளர்ச்சிப் போராட்டங்களில் மிகவும் உறுதியுடன் பங்கேற்றார்கள். இவ்வாறு அனைத்துத்தரப்பினரும் பெரும்திரளாகக் கலந்து கொண்டிருப்பது மோடி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள நியாயமான கோபத்தையே பிரதிபலிக்கிறது.
கருப்புக்கொடி தினம் தில்லியின் சிங்கு, திக்ரி, காஸிப்பூர், ஷாஜஹான்பூர், பால்வால் ஆகிய அனைத்து எல்லைகளிலும் டிராலிகளிலும், முகாம்களிலும் கருப்புக்கொடிகளை ஏற்றியும், மோடி அரசாங்கத்தின் கொடும்பாவிகளை எரித்தும் அனுசரிக்கப்பட்டது. கிளர்ச்சி நடைபெற்ற இடங்கள் மிகவும் வேகமாக அதிகரித்து பல்லாயிரக்கணக்கானவர்கள் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டதைப் பார்க்க முடிந்தது. எல்லைகளில் போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் உருக்குபோன்ற உள்ள உறுதி அனைவராலும் பாராட்டப்பட வேண்டியதாகும். மிகப் பெரிய அளவில் நீண்டகாலமாக நடந்துவரும் இந்தப் போராட்டம் உலக அளவில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். கடும் குளிர், தொடர்ந்து பெய்த மழை, மண்டையைப் பிளக்கும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமலும், ஆர்எஸ்எஸ்/பாஜக-வினர் மற்றும் அவர்களின் ஏஜண்டுகள் மேற்கொண்ட அனைத்துவிதமான அடக்குமுறைகள் மற்றும் இழிவான பிரச்சாரங்களை முறியடித்தும், கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து வீரியத்துடன் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில்இதுவரை 470க்கும் மேற்பட்ட விவசாயிகள் வீரமரணம்அடைந்து தியாகிகளாகி இருக்கிறார்கள். ஆனாலும், ரோம்நகரம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல, இந்தியா எரிந்து கொண்டிருக்கும்போது மோடி மயிலுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
கருப்புக்கொடி மற்றும் கொடும்பாவி எரிப்பு கிளர்ச்சிப் போராட்டம் புதுதில்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் – அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் – இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் மத்திய அலுவலகங்கள் உள்ள இடத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இதில்அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்ஹன்னன் முல்லா, தலைவர் அசோக் தாவ்லே, இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன், நிதிச் செயலாளர் பி.கிருஷ்ணபிரசாத், சிஐடியு செயலாளர் ஏ.ஆர். சிந்து, அகில இந்தியவிவசாயத் தொழிலாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் விக்ரம் சிங், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே, இணைச்செயலாளர் ஆஷா ஷர்மா, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மைமுன்னா முல்லா, அர்ச்சனா பிரசாத், இந்திய மாணவர் சங்க இணைச் செயலாளர் தினீத் தெண்டா மற்றும் பலர் பங்கேற்றார்கள். அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில் மே 26 போராட்டத்தின் மகத்தான வெற்றிக்காக மக்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்தது.
இந்த ஆண்டு மே 26 புத்த பூர்ணிமா தினமுமாகும். உண்மை, அமைதி மற்றும் அஹிம்சை என புத்தர் வலியுறுத்திய அடிப்படை விழுமியங்களும், கொள்கைகளும் நடந்துவரும் விவசாய இயக்கத்திலும் அழுத்தமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. எனவே, புத்த பூர்ணிமாவும் தில்லி எல்லைகளிலும், நாடு முழுதும் விவசாயிகளால் பொருத்தமான முறையில் கொண்டாடப்பட்டது.
இரு முக்கியமான பிரச்சனைகள்
மே 26 தேசந்தழுவிய கருப்புதினம் போராட்டத்தின்போது இரு பிரதான பிரச்சனைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன.கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கையாள்வதில் மோடி-அமித் ஷா ஆட்சியாளர்கள் படுதோல்வி அடைந்து கிரிமினல்ரீதியாகப் பொறுப்பாளர்களாகியிருக்கிறார்கள். மே 25 தகவல்களின்படி, இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.72 கோடியைத் தாண்டிவிட்டது. இறந்தவர்களின் எண்ணிக்கை 3.11 லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஆனாலும், உண்மையான விவரங்கள் இதனைப்போல் ஐந்து முதல் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று வல்லுநர்களால் மதிப்பிடப்பட்டிருக்கிறது. கோவிட்-19இன் இரண்டாவது அலை காரணமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள். இவர்களில்பலரைக் காப்பாற்றியிருக்க முடியும். ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவ ஆக்சிஜன் இல்லாததாலும், வெண்டிலேட்டர்கள் இல்லாததாலும், மருந்துகள் இல்லாததாலும், மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாததாலும்தான் இறந்திருக்கிறார்கள். மயானங்களும், கல்லறைகளும் நிரம்பி வழிகின்றன. ஆயிரக்கணக்கான சடலங்கள் கங்கைநதியில் மிதந்து சென்றுகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ‘சவ-வாஹினி கங்கா’ (‘சவங்களை சுமந்து செல்லும் கங்கை நதி’)என்னும் குஜராத்தி கவிஞர் பாருல் காகரின் கவிதை, நாட்டின் அனைத்து மொழிகளின் செய்தித்தாள்களிலும் வைரலாக மாறியிருக்கிறது.
ஆட்சியாளர்கள் போதிய நிதி ஒதுக்காததன் விளைவாகபொது சுகாதாரத் துறை அநேகமாக முற்றிலுமாக சிதைந்து கிடக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் எவ்வித சுகாதார அமைப்பு முறையும் கிடையாது. இன்றைய கொடூரமான நிலையைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் மருத்துவமனைகளும், கள்ளச்சந்தைப் பேர்வழிகளும் தங்களை நாடி வரும் நோயாளிகளை முடிந்த அளவுக்கு கசக்கிப்பிழிந்துகொண்டிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் இவர்களுக்குத் தேவையான ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ வசதிகளைப் போர்க்கால அடிப்படையில் அளிப்பதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் மிகவும் அசிங்கமான முறையில் அற்பத்தனமான முறையில் சென்ட்ரல் விஷ்டா திட்டத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கூறி பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின்மூலமாக வசூலிக்கப்பட்ட தொகை என்ன ஆனது என்று எவருக்கும் தெரியாது. மத்திய அரசாங்கத்தின் தடுப்பூசிக் கொள்கை வெட்ககரமான முறையில் மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கையாகும். அனைத்து மக்களுக்கும் இலவசமான உடனடியான தடுப்பூசி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது.
நாடு தழுவிய அளவில் பல மாநிலங்களில் சமூக முடக்கங்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளபோதிலும், மக்களுக்கு இலவச ரேஷன் என்பதுமோடி அரசாங்கத்தால் இரண்டு மாதங்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது. அதுவும் கூட பல இடங்களில் மக்களுக்கு முறையாகப் போய்ச்சேரவில்லை. தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக நிதி உதவி அளித்திட அரசாங்கம் மறுக்கிறது. நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கிறது. இவை அனைத்துடனும், கோவிட் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளையும் இணைத்தும், மே 26 கிளர்ச்சிப் போராட்டத்தை உயர்த்திப் பிடித்தும், நாட்டிலுள்ள 12 பிரதான எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளன.மோடி அரசாங்கத்துடன் நமக்கு இருந்துவரும் அடுத்து மிக முக்கிய பிரச்சனைகள் என்பவை, உழைக்கும் மக்கள்மீதும், நம் நாட்டின் செல்வாதாரத்தின் மீதும் மோடி அரசாங்கம் ஏவிவிட்டிருக்கும் தாக்குதல்களாகும். மோடி அரசாங்கம் அம்பானிகள் மற்றும் அதானிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்குத் துணைபோகும் விதத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காலத்திலும் அவர்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டவும் நாட்டின் வளங்களைக் கொண்டுசெல்லவும் வழிவகைகள் செய்து தந்துள்
ளது. அதே சமயத்தில் நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்குழிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மூன்று மக்கள்விரோத வேளாண் சட்டங்களையும் ரத்து செய், தொழிலாளர் விரோதமான நான்கு சட்டத்தொகுப்புகளை ரத்துசெய், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெறு, குறைந்தபட்ச ஆதார விலையை டாக்டர் எம்.எஸ்.சுவாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சி2+50 சதவீத உயர்வு கொடுத்துகுறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதற்கு மத்தியச் சட்டம் இயற்றிடு, பொதுத்துறை நிறுவனங்களையும், நாட்டையும் தனியாருக்குத் தாரை வார்க்காதே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நாள்தோறும் உயர்த்திக்கொண்டிருப்பதை நிறுத்து, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலைநாட்களையும், ஊதியத்தையும் அதிகரித்திடு – ஆகிய இவைதான் மே 26 அன்று கிளர்ச்சிப்போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாகும்.அடிப்படையில் மே 26 போராட்டமானது, நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சமூக நீதி மற்றும் பொருளாதார நீதி – ஒரேவார்த்தையில் சொல்வதானால் – இந்தியாவின் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மே 26 போராட்டத்தை மாபெரும் வெற்றி பெற வைத்ததற்காக மக்களுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ள அதே சமயத்தில்தன்னுடைய பத்திரிகைச் செய்தியில் கீழ்க்கண்டவாறுகூறியிருக்கிறது: “விவசாயிகள் போராட்டம், கடந்த ஆறுமாதங்களாகப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கிடையே தொடர்ந்திருக்கிறது, 470 விவசாயிகள் தியாகிகளாகியிருக்கிறார்கள். இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் தங்கள்கோரிக்கைகள் நிறைவேறும்வரை, அது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப்பட்டாலும் சரி, அதனைத் தொடர்வதற்கு உறுதியாக இருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இனியும் புத்திசாலித்தனமின்றி இருக்குமானால், அதற்குத்தான் இழப்பாகும். பாஜக-வின் ஆதரவு தளத்தை அது அடியோடு இழந்துவிடும்.”
வெற்றி பெற்றுள்ள ஹரியானா விவசாயிகள்
மே 24 அன்று, ஹரியானா விவசாயிகள் அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக-ஜேஜேபி அரசாங்கத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். அன்றையதினம், ஹிசார் நகரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கிராந்திமான் பூங்காவில் சங்கமித்தார்கள். விவசாயிகளின் போராட்டத்தை நசுக்குவதற்காக மாநில அரசாங்கம் மூவாயிரம் காவல்துறையினரையும், அதிரடிப்படையினரையும் இறக்கியது. எனினும் அவர்களை விவசாயிகள் துணிவுடன் எதிர்கொண்டார்கள். இத்தகைய பிரம்மாண்டமான அணியின் முன்னே காவல் துறையினரால் எதுவும் செய்ய முடியவில்லை.
இதேபோன்று மே 16 அன்று ஹிசாரில் நடைபெற்றபோராட்டத்தின்போது காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்குமுறையை ஏவினார்கள். தடியடிப் பிரயோகம் நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தனர். இவ்வளவையும் செய்துவிட்டு நிர்வாகம் 350 விவசாயிகளின் மீதே கொலைமுயற்சி மற்றும் இந்தியத்தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு புனைந்தார்கள். விவசாயிகள் செய்த ஒரேயொரு ‘குற்றம்’ அங்கே கூட்டத்திற்கு வந்த முதலமைச்சர் கட்டாருக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என்பதேயாகும்.
மே 24 அன்று விவசாயிகள் டிவிஷனல் கமிஷனர்அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்திருந்தார்கள். எனினும் அதற்கு முன்னதாக அனைத்து விவசாயமுன்னணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்குஅழைக்கப்பட்டார்கள். நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின்பு விவசாயிகள் மீது புனையப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசாங்கம் ஒப்புக்கொண்டது.மேலும் காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்ட விவசாயிகளின் வாகனங்களுக்கு உரிய நஷ்டஈட்டை அளித்திடவும் அரசாங்கம் ஒப்புக்கொண்டது. மேலும் மே 24 ஆர்ப்பாட்டத்தின்போது உயிர்நீத்த விவசாயி ராமச்சந்திராவின் உறவினருக்கு அரசாங்க வேலை கொடுக்கவும் ஒப்புக்கொண்டது. மேலும் மே 16 அன்று நடந்த துர்ப்பாக்கியமான சம்பவங்கள் குறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் கமிஷனர் வருத்தம் தெரிவித்தார்.
இதற்காக நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கலந்துகொண்ட தலைவர்களில் பல்பீர் சிங் ராஜேவால், ஜோகிந்தர் சிங் உக்ரகான், குர்ணாம் சிங் சாருணி, ராகேஷ் திகாயத், ஜக்ஜித் சிங் தாலேவால், அசோக் தாவ்லே, யுத்விர் சிங், பி.கிருஷ்ணபிரசாத், மேஜர் சிங் புன்னுவால், இந்தர்ஜித் சிங், சுரேந்திர சிங், பூல் சிங் சியோகாந்த், சுமித், கன்வாலிஜித் சாந்து, அபிமன்யு கோஹாத், ரஞ்சித் ராஜூ, சோம் வீர் சங்வான் முதலானவர்களும் இருந்தார்கள். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் அரசாங்கத்தின் மக்கள்விரோத, கார்ப்பரேட் ஆதரவு மோடி அரசாங்கம் மற்றும் அதன் பேரழிவுக்கொள்கைகளைத் தலைவர்கள் கடுமையாகச் சாடினார்கள்.
கட்டுரையாளர் : டாக்டர் அசோக் தாவ்லே, தலைவர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்
தமிழில்: ச.வீரமணி