மார்ச் 26 அன்று, விவசாயிகள் போராட்டம் தொடங்கி நான்கு மாதங்களை நிறைவு செய்கிறது. நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, கல்லுளிமங்கன் போல் அசையாது இருந்துவரும் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை அசைப்பதற்கும் அன்றைய தினம், பாரத் பந்த் நடத்திட வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவல் விடுத்துள்ளது. இதற்கு முன்பு பாரத் பந்த் 2020 டிசம்பர் 8 அன்று நடைபெற்றது. அது நாடு தழுவிய அளவில் மகத்தான வெற்றியைப் பெற்றது.
போராட்ட அறைகூவல்கள்
சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் சார்பில், மார்ச் மாதத்தில் விடுக்கப்பட்ட பல்வேறு போராட்ட அறைகூவல்களும், தில்லியின் எல்லைப் பகுதிகளில் மட்டுமல்ல, நாடு முழுவதுமே மிகவும் வெற்றிகரமான முறையில் அமல்படுத்தப்பட்டன. மார்ச் 6 அன்று போராட்டத்தின் நூறாவது நாளையொட்டி நடைபெற்ற போராட்டத்தில் நாட்டின் நெடுஞ்சாலைகள் அனைத்தும் பல லட்சக்கணக்கான விவசாயிகளால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டன. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 அன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தில்லி எல்லைகளில் திரண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அனைத்து நிகழ்ச்சிகளும் முழுமையாக பெண்களே நடத்தினர். அப்போது விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு முக்கியமானதாக இருக்கிறது என்பது வலியுறுத்தப்பட்டது.
சம்யுக்த கிசான் மோர்ச்சா, மார்ச் 15 அன்று, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திடும் மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிராகவும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளைக் கடுமையாக உயர்த்திக்கொணண்டிருப்பதற்கு எதிராகவும் மத்தியத் தொழிற்சங்கங்களின் அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற போராட்டத்தையும், முழுமையாக ஆதரித்தது. இதுதொடர்பான நடவடிக்கைகள் நாடு முழுதும் நடைபெற்றன. மார்ச் 15, 16 தேதிகளில் லட்சக்கணக்கான வங்கி ஊழியர்கள் நாடு முழுதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பொதுஇன்சூரன்ஸ் ஊழியர்கள் 17ஆம் தேதியன்றும், ஆயுள்இன்சூரன்ஸ் ஊழியர்கள் 18ஆம் தேதியன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
பகத்சிங் நினைவு நாளில்...
இந்தப் போராட்ட நடவடிக்கைகளை எதிர்காலத்தில் ஒன்றுபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்தில் மார்ச் 17 அன்று சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் அனைத்துத் தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், போக்குவரத்து சங்கங்கள் மற்றும் அனைத்து வெகுஜன அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகள் தினமானமார்ச் 23 அன்று, நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்திடவும், பகத்சிங் மற்றும் அவருடைய தோழர்கள் உயர்த்திப்பிடித்த லட்சியங்களை முன்னெடுத்துச் செல்லவும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவல் விடுத்தது.மார்ச் 28 அன்று ஹோலிப் பண்டிகை தொடங்குகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் மூன்று வேளாண் சட்டங்களும், தொழிலாளர் சட்டங்கள் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டிருக்கும் நான்கு தொழிலாளர் விரோத சட்டங்களும், மின்சார திருத்தச் சட்டமுன்வடிவும் தீயில் போட்டுக் கொளுத்தப்படும்.
நெஞ்சைத் தொடும் நிகழ்வுகள்
வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்தின் நூறாவது நாளான மார்ச் 6 அன்று, ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜ்பிர் சிங் என்னும் 48 வயது விவசாயி, திக்ரி எல்லையருகில் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு இரு ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. அதில் அவர் நெல், கோதுமை பயிர் செய்து வந்தார். அவருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். தில்லி எல்லையில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் இவர் எட்டாவது நபராகும். இப்போராட்டத்தில் இதுவரை சுமார் 280 பேர் தியாகிகளாகி இருக்கிறார்கள்.
ரஜ்பிர் எழுதிவைத்துள்ள தற்கொலைக் குறிப்பில், விவசாயச் சட்டங்கள் குறித்த விரக்தியின் காரணமாகவே இவ்வாறு அதீதமான முறையில் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததாக எழுதி வைத்திருக்கிறார். “அரசாங்கத்திற்கு, நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இறந்துகொண்டிருக்கும் என்னுடைய கடைசி ஆசையை நிறைவேற்றுங்கள், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுங்கள். பகத்சிங் நாட்டிற்காகத் தன்னுயிரை நீத்தார். என்னுடைய விவசாய சகோதரர்களுக்காக நான் என் உயிரை விடுகிறேன்,” என்று அவர் அதில் எழுதியிருக்கிறார். எனினும் மிகவும் சொரணையற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் அரசாங்கம் கிஞ்சிற்றும் அசைந்து கொடுக்கவில்லை.சென்ற மாதம் நடந்துள்ள, மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கொடூர அட்டூழியத்தை மோடி-அமித்ஷா அரசாங்கத்தின் கீழ் நேரடியான கட்டுப்பாட்டில் செயல்படும் தில்லிக் காவல்துறை புரிந்துள்ளது. குர்முக் சிங் என்பவர், 82 வயதுள்ள ஒரு விவசாயி. பஞ்சாப் மாநிலத்தில் ஃபதேகார் சாகிப் கிராமத்தைச் சேர்ந்தவர். 22 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார். 1962இல் நடைபெற்ற இந்திய – சீன யுத்தம், 1965இல் நடைபெற்ற இந்திய – பாகிஸ்தான் யுத்தம் மற்றும்1971இல் நடைபெற்ற இந்திய – வங்க தேச விடுதலைப் போராட்டம் ஆகிய மூன்றுபோர்களிலும் பங்கேற்றிருக்கிறார். 1984இல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு விவசாயியாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
10 பதக்கங்கள் பெற்றவர் பயங்கரவாதியாம்...
ஜனவரி 26 அன்று தில்லியில் அரசாங்கத்தால் வன்முறை வெறியாட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் 82 வயதான குர்முக் சிங் தில்லிக் காவல்துறையினரால் அடித்து நொறுக்கப்பட்டார், பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தில்லியில் நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளில் எதிலும் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத நிலையில் அவர் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானார். பின்னர் அவர் 16 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். கடைசியாக அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனினும் அவர் மீதான பொய் வழக்கு தொடர்கிறது.
“நான் ராணுவத்தில் 22 ஆண்டுகள் சேவை செய்தேன். ராணுவத்தில் எனக்கு அளவிடற்கரிய விதத்தில் மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது.என்னுடைய நாட்டிற்காக மூன்றுயுத்தங்களில்நான் பங்கெடுத்துக்கொண்டுபோராடினேன்.எனக்கு பத்து பதக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அவர்கள் என்னை ஒருபயங்கரவாதி என்றுஅழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த அவமானத்தை என்னால் விழுங்க முடியாது. சாவதற்கு முன் இத்தகைய அபாண்டமான பழியை நான்கேட்கவேண்டுமா? இப்போதெல்லாம் என்னால்நிம்மதியாக தூங்கவே முடியவில்லை,”என்று குர்முக்சிங்கூறுகிறார். இவ்வாறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ள விவசாயிகளில் குர்முக் சிங்கும் ஒருவர்.
அரசியல் நிகழ்வுகள்
கேரளா மாநில அரசும் மற்றும் சில மாநில அரசுகளும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, மார்ச் 5 அன்று, பஞ்சாப் மாநிலசட்டமன்றமும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.மார்ச் 8 அன்று, பிரிட்டனில் லட்சத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கையெழுத்து இட்டு மனு அளித்ததற்குக் கீழ்ப்படிந்து, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தியாவில், மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து விவாதித்தது. விவாதத்தின்போது பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் போராட்டத்தைக் கையாளும் விதத்தைக் கடுமையாக விமர்சித்தார்கள். இதேபோன்று மோடி அரசாங்கத்திற்கு எதிராக பல நாடுகளில் சர்வதேச நிர்ப்பந்தம் கட்டி எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சென்ற வாரம், ‘சுதந்திர இல்லம்’ (‘Freedom House’), வெளியிட்டுள்ள 2021 உலகில் சுதந்திரம் (‘Freedom in the World 2021’) என்னும் அறிக்கையில், உலகில் அதிகமக்கள் தொகை கொண்டுள்ள ஜனநாயக நாடான இந்தியா,முதன்முறையாக ‘சுதந்திர நாடு’ (‘Free’) என்கிற தன் அந்தஸ்தை இழந்து, ‘பகுதி சுதந்திரம்’ பெற்ற நாடு (‘partly free’) எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு குறிப்பிடப்படுவதற்கான காரணிகள் பல இருந்தபோதிலும், பாஜக அரசாங்கம் போராடும் விவசாயிகளுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு எதிராகவும் பல முனைகளிலும் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளிலிருந்தே இத்தகைய முடிவுக்கு அது வந்திருக்கிறது. இவர்களின் சமீபத்திய முயற்சி என்பது, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இருக்கின்ற அனுராக் காஷ்யப் மற்றும் தாப்சி பன்னு (Anurag Kashyap and Taapsee Pannu) ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகும்.
மார்ச் 10 அன்று, ஹரியானாவில் கட்டார் தலைமையிலான பாஜக-ஜேஜேபி அரசாங்கத்திற்கு எதிராக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இது தோற்கடிக்கப்பட்டபோதிலும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் அறைகூவலுக்கிணங்க, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அந்த சமயத்தில் பாஜக-ஜேஜேபி சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகளை முற்றுகையிட்டு, இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கோரினார்கள்.
பாஜகவை தோற்கடிக்க வேண்டுகோள்
மார்ச் 12-15 தேதிகளில், சம்யுக்த கிசான் மோர்ச்சா குழுக்கள் மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமுக்கும் சென்றிருக்கின்றன, பேரணிகள் நடத்தி இருக்கின்றன. பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தி, விவசாயிகளுக்கும் மக்களுக்கும்பாஜக-வை அம்மாநிலங்களில் தோற்கடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். மேலும் சம்யுக்த கிசான் மோர்ச்சா இதேபோன்று சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் அனைத்து மாநில விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பாஜக-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
சென்ற வாரம், மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக், வெளிப்படையாகவே, விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். “விவசாயிகள், தில்லியிலிருந்து வெறுங் கையுடன் திரும்பக் கூடாது. என்னுடைய சமீபத்திய பயணத்தின்போது நான் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்தித்து, விவசாயிகளுக்கு எதிராக வன்முறையைப்பயன்படுத்தக்கூடாது என்றும் விவசாயிகளுடன் விளையாடாதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டேன். முதற்கண் அவர்கள் திரும்ப
மாட்டார்கள், அவ்வாறு அவர்கள் திரும்பினால், கடந்த 300ஆண்டுகளில் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அவமரியாதையை அவர்கள் மறக்க மாட்டார்கள்,” என்று அவர் கூறியிருக்கிறார்.
கட்டுரையாளர் : அசோக் தாவ்லே
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 21.03.2021,
தமிழில்: ச.வீரமணி