சென்னையில் பிப்ரவரி 17 ஆம் தேதிய நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.68 எனவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.84.83.க்கு விற்கப்படுகிறது. 2020 மே முதல் வாரத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் முறையே ரூ. 72.28 மற்றும் ரூ.65.71ஆக இருந்தவை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்னும் கூட உயரலாம் என்ற ஆருடமும் உலவவிடப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் கம்பெனிகளே நிர்ணயித்துக் கொள்வதற்கான அதிகாரம் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பரிமாற்ற மதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும் பெட்ரோல், டீசல் விலையின் மீது விளைவுகளை ஏற்படுத்துகின்றன.மேற்படியான காரணங்களினால் மட்டுமே விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதா என்பதே ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய கேள்வி. முதலில் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பார்ப்போம்.
பன்னாட்டுச் சந்தை
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 60.21 அமெரிக்க டாலராக இருந்தது. இது 2020 மார்ச் மாதத்தில் 46.75 டாலராக குறைந்து, ஏப்ரல் மாதத்தில் 20.31 டாலராக மேலும் சரிந்தது. பின்னர் படிப்படியாக உயர்ந்து 2021 ஜனவரியில் 48.52 டாலரில் துவங்கி 27ஆம் தேதிய நிலவரப்படி 52.17 டாலர்களாக உயர்ந்துள்ளது. உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் பல்வேறு தரங்களின் அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தளவில் இந்திய தொகுப்பு முறையில் (Indian Basket) சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிர்ணயிக்கப்படுகிறது.கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களில் பதப்படுத்தப்பட்ட கச்சா எண்ணெய்யின் புளிப்புத் தரம் (ஓமான் மற்றும் துபாய் சராசரி) மற்றும் ஸ்வீட் கிரேடு (பிரெண்டட் ) ஆகியவற்றின் சராசரியை கொண்ட தொகுப்பை குறிக்கிறது.
அதன்படியே பார்த்தாலும் 2020 ஜனவரி துவக்கத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 65.33 அமெரிக்க டாலராக இருந்தது. மார்ச் மாதத்தில் 24.26 டாலராகவும், ஏப்ரல் மாதத்தில் 17.66 டாலராகவும், அக்டோபர் மாதத்தில்40.53 டாலராகவும் இருந்தது. படிப்படியாக உயர்ந்து 2021 ஜனவரி துவக்கத்தில் 51.00 டாலராகவும் பிப்ரவரி துவக்கத்தில் 57.01 டாலராகவும், 15ஆம் தேதி 62.88 டாலராகவும் உயர்ந்துள்ளது. உலக அரசியலில் ஏற்படும் மாற்றங்களும் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு இறுதியில் சீனா மீதான அமெரிக்காவின் பனிப்போர் மற்றும் ரஷ்யா கச்சா எண்ணெய் உற்பத்தியை இலக்குக்கும் அதிகமாக உற்பத்தி செய்தது போன்றவை பன்னாட்டு சந்தையில் அமெரிக்காவிற்கு நெருக்கடியை உருவாக்கியது. அதேபோல ரஷ்யாவும் சவூதி அரேபியாவும் செய்து கொண்ட உடன்பாடு காரணமாக ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பின் எண்ணெய் உற்பத்தி இலக்கிலிருந்து விலகி இரு நாடுகளும் கூடுதல் உற்பத்தி செய்தன. இதுவும் பன்னாட்டு விலையில் சரிவை ஏற்படுத்தியது. கோவிட் 19 காரணமாக உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கத்தால் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்ததால் விலையிலும் சரிவை சந்தித்தன. இதையடுத்து ஒபெக் நாடுகளுடைய உடன்பாடு எட்டப்பட்டு சராசரி உற்பத்தி தொடர்கிறது.
பொதுவாக கச்சா எண்ணெய் விலையின் ஏற்ற இறக்கம் பெருமளவில் நிகழ வாய்ப்பில்லை என உலக எரிசக்தித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 12.12.2019 அன்று ரூ.70.57 பைசாவாக இருந்தது. இது 1.3.2020 அன்று ரூ.72.18 ஆகவும், 16.4.2020 அன்று அதிகபட்சமாக ரூ.77.58 ஆகவும், 1.5.2020ல் ரூ.75.07 ஆகவும் இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து 2021 பிப்ரவரி முதல் வாரத்தில் ரூ.72.79 பைசாவாக உள்ளது.மேற்கண்ட இரு விபரங்களின் படி கடந்த ஓராண்டு காலத்தில் கச்சா எண்ணெய் விலை கொரோனாவைத் தொடர்ந்து சரிந்து வருவதையும் ரூபாய் மதிப்பு சற்றே உயர்ந்துள்ள நிலையிலும் இருந்து வந்துள்ளது. இவைகளின் விலை மற்றும் ரூபாய் மதிப்பின் ஏற்றத் தாழ்வான போக்குகள் பெட்ரோல் டீசல் விலைகளில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை கீழே உள்ள அட்டவணை 1 வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
அட்டவணை -1
நாள் கச்சா அமெரிக்க 1 லிட்டர் பெட்ரோல் டீசல்
எண்ணெய் டாலருக்கு கச்சா விலை விலை
விலை நிகரான எண்ணெய் 1 லி. 1 லி.
பேரலுக்கு இந்திய விலை சென்னை சென்னை
(இந்திய ரூபாய் (1 பேரலுக்கு நிலவரப் நிலவரப்
தொகுப்பு) 159 லி.) படி படி
டாலரில் ரூ. ரூ.
12.12.2019 65.33 70.57 28.99 76.57 69.81
1.3.2020 24.26 72.16 14.01 74.51 67.86
1.6.2020 37.57 75.07 15.90 75.54 68.22
1.8.2020 42.98 74.92 20.08 83.80 78.86
2.12.2020 47.53 73.66 22.04 86.51 78.06
1.1.2021 51.00 73.09 23.44 86.51 79.21
5.2.2021 57.91 72.79 26.51 89.39 82.33
17.2.2021 62.99 72.78 28.82 91.68 84.83
1.3.2020ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் முந்தைய கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பில் முறையே 63 சதவிகிதம் குறைந்தும் ரூபாய் மதிப்பில் 2.25 சதவிகிதம் அதிகரித்தும் இருந்தன. ஆனால் பெட்ரோல் விலையின் மாற்றம் வெறும் 2.7 சதவிகிதம் குறைவு மட்டுமே.
2.12.2020 ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் முந்தைய ஆண்டு கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பில் முறையே 20 சதவிகிதம் குறைந்தும் ரூபாய் மதிப்பில் 4.4 சதவிகிதம் அதிகரித்தும் இருந்தன. ஆனால் பெட்ரோல் விலை 13 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது கூடுதலாக பெட்ரோலுக்கு விலை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெயரளவிற்கு மட்டுமே குறைக்கின்றன. அப்படியானால் இந்த லாபங்கள் எங்கே சென்றன?
மோடி அரசின் வஞ்சனை
இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருட்களின் விலைகளை மத்திய அரசே நிர்ணயித்து வந்தது. எண்ணெய் நிறுவனங்களின் லாப நட்டம் மத்திய அரசின் பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டு வந்தது. தாராளமயமாக்கல் கொள்கை அமலாக்கத் துவங்கிய பின்னணியில் பெட்ரோல், டீசல் விலைக் கொள்கையிலிருந்து மத்திய அரசு வெளியேற வேண்டும் என்ற முடிவினை மேற்கொண்டது. ஆனால், மோடி அரசு மட்டுமே சர்வதேச எண்ணெய் விலையை காரணம் காட்டி கூடுதலாக கொள்ளையடிக்கும் வழியாக தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.2014 மன்மோகன்சிங் தலைமையிலான ஐமுகூட்டணி அரசு பதவியிலிருந்து வெளியேறும் போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.9.48. இது ஜனவரி 2016ல் ரூ.21.48 ஆகவும், 2021 ஜனவரியில் ரூ.32.98 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்சமயம் முன்மொழியப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.00 கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதேபோல டீசலுக்கான கலால் வரி 2014ல் ரூ.3.56 ஆக இருந்தது 2016ல் ரூ.17.33 ஆகவும், 2021 ஜனவரியில் ரூ.31.83 ஆகவும், தற்போதைய பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2.50 பைசாவும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.4.00ம் அதிகரித்துள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை நிர்ணயம்
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்விலைகளை கீழ்கண்டவாறு விலையை தீர்மானிக்கின்றன. (தில்லி விலையில்)
பெட்ரோல் டீசல்
உற்பத்தி செலவு 31.82 33.46
போக்குவரத்து 0.28 0.25
மத்திய கலால் வரி 32.90 31.90
விநியோகஸ்தர் கமிசன் 3.68 2.51
தில்லி அரசின் வாட் வரி 20.61 11.68
நிகர விலை லிட்டருக்கு 89.29 79.70
(பிப்.15ஆம் தேதிய - பெட்ரோல் ஆராய்ச்சி மற்றும் திட்டக்குழு விலை நிர்ணய தகவல்)
மேற்படி கணக்கின்படி உற்பத்தி செலவிற்கு நிகராக மத்திய அரசு கலால் வரியினை வசூலிக்கிறது. இது தவிர மாநில அரசுகளின் வரிகளும் கூடுதல் சுமையினை சுமத்துகின்றன. தமிழகத்தின் எடப்பாடி அரசும் மாநில மக்கள் மீது அக்கறை உள்ளது போல காட்டிக் கொண்டாலும் உண்மையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ.24 வரையிலும், டீசலுக்கு ரூ.17 வரையிலும் வரியாக வசூலிக்கிறது. கூடுதல் வரி வசூலிக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியினை சுமத்தும் நாடுகளில் முதல் இடத்தில் இந்தியா உள்ளது. உற்பத்தி விலையிலிருந்து 69 சதவிகிதம் வரியினை சுமத்துகிறது. அமெரிக்கா 14 சதவிகிதம், கனடா 33, ஜப்பான் 47 எனவும், இத்தாலி 64 சதவிகிதம், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் முறையே 63 சதவிகிதம் வரியாக சுமத்துகின்றன.
பெட்ரோல், டீசல் மூலம் வருவாய்
பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருவாய் விபரம்:
பெட்ரோலியப் பொருட்களின் மூலம் பெற்றவரி வருவாய் ரூ. கோடியில்
வருடம் மத்திய அரசு மாநில அரசு
2013-14 106097 129045
2014—15 126025 160526
2015—16 209354 160114
2016-17 273325 189957
2017-18 276168 206601
2018-19 279847 227396
2019-20 287540 220840
பெட்ரோல் ஆராய்ச்சி மற்றும் திட்டக்குழு
மேற்கண்ட பட்டியல்படி 2013-14ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியின் இறுதியாண்டில் மத்திய அரசிற்கு கிடைத்த வரி வருவாய் ரூ.1,06,097 கோடி. இவ்வருவாய் 2016-17 ஆம் ஆண்டில் ரூ.73.325 கோடியாகவும், 2019-20ஆம் ஆண்டுகளில் ரூ.2,87,540 கோடியாகவும் உயர்ந்தது. அதாவது கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு வரியை உயர்த்தியதன் மூலமாக 114 சதவிகிதம் வருவாய் உயர்ந்துள்ளது. அதேசமயம் மாநிலங்களின் வருவாய் 78 சதவிகிதம் உயர்ந்துள்ளது.கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக் கடன்களை ரத்து செய்து, வரிச் சலுகைகளை அள்ளித் தரும் மோடி அரசு மறுபுறம் அத்தியாவசிய எரி பொருட்களின் மீது கடுமையான வரியினை சுமத்தி வருவாயை ஈட்டுகிறது.
தாராளமயத்தின் விளைவுகளே!
1990க்குப்பின் பின்பற்றப்பட்டு வரும் தாராளமயக் கொள்கையின் விளைவாக மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக லாபநோக்கத்துடன் செயல்படும் கம்பெனிகளாக மாற்றப்பட்டன. எண்ணெய் தொகுப்பு நிதியின் மூலம் சர்வதேச எண்ணெய் விலை குறையும் போது கிடைக்கும் லாபத்தை சேர்த்து வைத்து விலை உயரும்போது அதை எடுத்து சரி செய்யும் நடைமுறை நீண்ட காலங்களாக இருந்து வந்தது, முதலில் கைவிடப்பட்டது.
அடுத்து மத்திய அரசின் பட்ஜெட் மூலமாக வழங்கப்பட்டு வந்த எண்ணெய் மானிய உதவிகளும் படிப்படியாக நிறுத்தப்பட்டன. பொது விநியோகத்திற்காக வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணெய் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டது. இறுதியாக விலைகளை தீர்மானிக்கும் கொள்கையினையும்முன்பு காங்கிரஸ் அரசும், பின்னர் மோடி அரசும் கைவிட்டன.
மாற்று வழி
உலக அளவிலான பொருளாதார நெருக்கடியினால் திணறிக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாப்பதற்காக இந்திய தொழிற்துறை மற்றும் சந்தைகளை திறந்து விடுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இந்திய தொழிற்துறை மீண்டும் சீரடையும் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கப்பட வேண்டும். குறிப்பாக பெட்ரோலியப் பொருட்களின் மீதான தற்போதைய கட்டுப்பாடற்ற வரி விதிப்பை மாற்றி ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்பட வேண்டும்.
கட்டுரையாளர் : எஸ்.ஏ.மாணிக்கம்