பொருளியல் அரங்கம்
எனது உணவை, உடல் நலத்தை தீர்மானிப்பது யார்?
தொப்பை, சர்க்கரை நோய், இருதய நோய், மன அழுத்தம், அகால மரணங்களை நோக்கி இந்த துரித உணவுகள் நம்மை விரட்டுகின்றன என்று டைம்ஸ் ஆப் இந்தியாவின் (12.01.2026) “Big Food Decides What you eat” என்கிற அருண் குப்தா கட்டுரை விரிவாக பேசுகிறது. உலகப் புகழ் பெற்ற “தி லான்செட்” இதழ் வெளியிட்ட கட்டுரை உலக உணவுச் சங்கிலி மீது ஆதிக்கம் செலுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கோபத்தை உருவாக்கி இருக்கிறது. நவம்பர் 2025 இல் அவர்கள் வெளியிட்ட “அவசர உணவும், உடல் நலமும்” (Ultra Processed Foods and Human Health) என்ற தொடர் கட்டுரைகளே காரணம். இதற்கு “சர்வதேச உணவு மற்றும் பான நிறுவனங்களின் கூட்டணி” லான்செட் தொடர் கொள்கை பரிந்துரைகள் “கிடைக்கிற தரவுகளைக் கடந்து வெகு தூரத்தில் உள்ளன” என்று பாய்ந்து பிராண்டியுள்ளது. இந்த கூட்டணி, பெரிய பெரிய உணவு நிறுவனங்களை உள்ளடக்கியது ஆகும். நாங்கள் “உணவுத் தரத்தை உயர்த்துவதன் மூலம் மக்களின் உடல் நலத்தை மேம்படுத்த போகிறோம்” என்று வேறு அந்த கூட்டணி பிரகடனப்படுத்தி உள்ளது. உண்மையான உணவுகளை நமது டயட்டில் இருந்து அகற்றி, தரமற்ற உணவுகளை நம் மீது திணிக்கிறது என்பதே நடப்பு. லாபம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் இந்த நிறுவனங்களே உடல் நலத்தைப் பாதுகாக்கும் உணவு முறைக்கு பெரும் தடையாக இருக்கின்றன. 2006 இல் துரித உணவுச் சந்தை 0.9 பில்லியன் டாலர்களாக (இன்றைய ரூபாய் மதிப்பில் 8100 கோடி) இருந்தது. 2019 இல் இது 38 பில்லியன் டாலர்களாக (அதாவது ரூ.3,42, 000 கோடிகள்) விரிந்துள்ளது. 40 மடங்கு வணிக விரிவாக்கம் நடந்தேறியுள்ளது. நகரங்கள் மட்டுமின்றி சிற்றூர்கள் நோக்கியும் இதன் வணிக வலை விரிந்துள்ளது. குழந்தைகளும், வளர் பருவ இளைஞர்களுமே இவர்களின் நுகர்வு இலக்குகள். தொப்பைகள் இதே காலத்தில் இரண்டு மடங்குகள் ஆகியுள்ளன. டைப் 2 சர்க்கரை நோய் 10 பேரில் 1 என்ற விகிதத்தில் வயது வந்தவர்களைப் பிடித்துள்ளது. 5 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் பல உடல் நலக் கோளாறுகளை வெளிப்படுத்துகிறார்கள். உண்மைக்கு மாறான உணவு விளம்பரங்களை வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வழி வகைகள் உண்டு. ஆனால் செப்டம்பர் 2023 லிருந்து மார்ச் 2025 வரை ஒரு உணவு விளம்பரத்தின் மீதும் கூட நடவடிக்கை இல்லை. இவர்களின் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்த கொள்கை வகுக்கப்படுமென்று 2017 இல் கூறப்பட்டது. 9 ஆண்டு ஆன பிறகும் எந்த நகர்வும் கண்களில் தென்படவில்லை. உப்பு அதிகம், சர்க்கரை அதிகம், கொழுப்பு அதிகம் என்ற லேபிள்கள் ஒட்டப்படுமென்று அறிவிக்கப்பட்டதெல்லாம் காற்றில் பறந்து காணாமல் போய்விட்டது. நன்றி: “Big Food Decides What you Eat” - அருண் குப்தா - டைம்ஸ் ஆஃப் இந்தியா 12.01.2026
மாசு கூடக் கூட காசு ; இரும இரும லாபம்
டிசம்பர் 2025 இல் மட்டும் ஒரே மாதத்தில் 1950 கோடி ரூபாய்களுக்கு நுரையீரல் நோய் மருந்துகள் விற்பனை ஆகி இருக்கின்றன என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளர் ரூபாலி முகர்ஜி தெரிவித்துள்ளார். இது மருத்துவச் சந்தையில் சாதனை அளவாகும். இது வரை இவ்வளவு விற்பனை ஒரே மாதத்தில் நிகழ்ந்தது இல்லை என்கிறார்கள். இது 2024 டிசம்பர் விற்பனையை விட 10 சதவீதம் அதிகம். 2023 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகம். “பார்மா ராக்” என்ற நிறுவனத்தின் ஆய்வு இந்த அதிகரிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதை உறுதி செய்கிறது. அக்டோபர் - டிசம்பர் காலாண்டு அதிக மாசு பரவல் கொண்ட காலாண்டாக இருக்கிறது. இந்த காலாண்டில் நெஞ்சக தெரபி ரூ. 5620 கோடிகளுக்கு நடந்துள்ளது. ஃபோராகார்ட் என்ற ஆஸ்துமா மருந்துதான் குளிர்கால மாதங்களில் அதிகம் விற்பனையாகும் மருந்து. டிசம்பரில் இது 90 கோடி ரூபாய்களுக்கு விற்பனையாகி அதிக விற்பனை வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது தவிர ஸ்டீராய்ட் இன்ஹேலர்கள் விற்பனையும் அமோகம். மாசு கூட கூட காசு. இரும இரும லாபம்.
கார்பன் உமிழ்வு : “பெரிய” குற்றவாளிகள்
உலக மக்கள் தொகையின் மிக ஏழ்மையான 50 சதவீதம், தனியார் சொத்துடன் தொடர்புடைய கார்பன் உமிழ்வுகளில் வெறும் 3 சதவீதத்திற்கே காரணமாக இருக்கின்றனர். ஆனால் மேல்தட்டு 10 சதவீத மக்கள் 77 சதவீத உமிழ்வுகளுக்கும், அதிலும் மிகப் பணக்கார மேல் தட்டு 1 சதவீதம் மட்டும் உலகளாவிய கார்பன் உமிழ்வுகளில் 41 சதவீதத்திற்கு பொறுப்பாக உள்ளனர். இது, கீழ்த்தட்டு 90 சதவீத மக்கள் சேர்ந்து உமிழ்வதற்கான அளவின் இரட்டிப்பாகும். வேறு வார்த்தைகளில் கூறினால், கார்பன் உமிழ்வுகளுக்குப் பெரும்பாலும் காரணமாக இருப்பவர்கள் பணக்காரர்களே. ஆனால் காலநிலை மாற்றத்தின் சுமையை சமமில்லாமல் சுமப்பவர்கள் ஏழைகள்தான். வெப்பநிலை உயர்வும் கடல் மட்ட உயர்வும் காரணமாக, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உடனடியாக பாதிக்கப்படுகிறது. தெருக்களில் உழைக்கும் தொழிலாளர்கள், பல்வேறு கட்டுமானத் தளங்களில் பணிபுரிபவர்கள், விஷப்பொருள் ரசாயனங்களும் வாயுக்களும் வெளியேறும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள்—இவர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்வதோ அல்லது காற்றுத் தூய்மைப்படுத்திகளைப் பயன்படுத்தி மாசுபாட்டிலிருந்து தப்பிப்பதோ போன்ற தேர்வுகள் இல்லை. மோசமான காற்றுத் தரத்தாலும் காலநிலை மாற்றத்தாலும் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் இவர்கள்தான். சுதீப் தத்தா கட்டுரை : பீப்பிள்ஸ் டெமாக்ரசி - டிசம்பர் 22 - 28, 2025
