articles

எஸ்.ஐ.ஆர் பெயர் நீக்க பட்டியலில் கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக சிபிஐ(எம்) ஆய்வுக்குழு அளித்துள்ள குறிப்பு

எஸ்.ஐ.ஆர் பெயர் நீக்க பட்டியலில் கண்டறியப்பட்ட முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக சிபிஐ(எம்) ஆய்வுக்குழு அளித்துள்ள குறிப்பு

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திங்களன்று நேரில் சந்தித்தார்.  வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களை சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் ஆகியவற்றிற்கு தலைமை தேர்தல் ஆணையம் 2026 ஜன. 18 வரை அவகாசம் அளித்திருந்த நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையின் காரணமாகவும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். எனவே, ஜனவரி 10 முதல் 18 வரை இப்பணிகள் மேற்கொள்வதற்கும், பொதுமக்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொள்வதற்கும் பல்வேறு சிரமங்கள் ஏற்படும் நிலை உள்ளதால் பல லட்சம் வாக்காளர்கள் விடுபடும் அபாயம் உள்ளது  என்பதை குறிப்பிட்டு வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம், இணைப்பு, ஆட்சேபணைகள் மீது முடிவெடுப்பது ஆகியவற்றிற்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள கால அவகாசத்தை குறைந்தபட்சம் 10 நாட்கள் நீட்டித்து 2026 ஜனவரி 28 கால அவகாசம் அளிக்க வேண்டுமென என்று வலியுறுத்தினார். 2026 ஜனவரி 24, 25 தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தவும் கேட்டுக் கொண்டார். மேலும், தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியில் வெளியிடப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியலுக்கும், 2025 ஜனவரியில் வெளியிடப்பட்டிருந்த இறுதி வாக்காளர் பட்டியலுக்கும் இடையில் ஒப்பீடு செய்யும் போது நீக்கப்பட்டவர்கள், இணைக்கப்பட்டவர்கள் ஆகிய எண்ணிக்கையும் சேர்த்து பாகம் வாரியாக/ தொகுதி வாரியாக பரிசீலிக்கும் போது பல குளறுபடிகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதுகிறோம் என்று தெரிவித்த பெ.சண்மும் சிபிஎம் கணினி ஆய்வுக்குழு நடத்திய உண்மை காணும் அறிக்கையில் வந்துள்ள விபரங்களை  குறிப்பாக இணைத்துள்ளதாகவும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டார். அந்தக் குறிப்பு வருமாறு:

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தொடங்கிய எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் முதல் பகுதி முடிந்த பின்னர்  வாக்குச்சாவடி வாரியாக ‘நீக்கப்பட்டோர் பட்டியல்’ வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை கணினி தரவு அடிப்படையில் சில ஊடகங்கள் ஆய்வு செய்து அதிர்ச்சியளிக்கும் விபரங்களை வெளியிட்டனர். எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சார்பில் ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழு ஏற்படுத்தி, ‘நீக்கப்பட்ட வாக்காளர் தொடர்பான பட்டியலை’ முழுமையாக ஆய்வு செய்தோம். அந்த ஆய்வின் விபரங்களை  https://stopsir.cpimtn.org/ என்ற இணையதளத்தில் அனைத்து மக்களின் பார்வைக்கும், பரிசீலனைக்கும் வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட, வாக்குச்சாவடி வாரியான

’நீக்கப்பட்ட பெயர்களின்’ விபரங்கள் அடங்கிய 75,025 பி.டி.எப் கோப்புகள் ஆய்விற்கு எடுக்கப்பட்டன. இதில் (அம்பத்தூர் தொகுதி பாகம் 254, திருவிக நகர் தொகுதி பாகம் 128, ஆம்பூர் தொகுதி பாகம் 180, பென்னாகரம் தொகுதி பாகம் 2, வந்தவாசி தொகுதி பாகம் 60 ஆகியவை இணையத்தில் கிடைக்காத காரணத்தால் அவை விடுபட்டுள்ளன). தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட எண்ணிக்கையில் 2127 வாக்குகள் தவிர மீதமுள்ள 97,35, 705 வாக்குகளை நாம் தரவுகளாக ஆய்வு செய்துள்ளோம்.  இந்த ஆய்வின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் மக்களுக்கு விளக்கம் தர வேண்டிய சில கேள்விகளை முன்வைக்கிறோம். 2025 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுக்கும், டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் மற்றும் நீக்க பட்டியலுக்கும் இடையில் விபரங்கள் ஒத்துப்போகாத நிலைமைக்கு காரணம் என்ன? இந்த ஆண்டின் தொடக்கத்தில், (2025 ஜனவரி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் மொத்தம் 6,36,12,950 வாக்குகள் இருந்தன.

அவற்றை அடித்தளமாக எடுத்துக் கொண்டு புதிய வரைவு பட்டியலின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு முடிவுகளை பரிசீலித்தோம்.  2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு  பட்டியலுக்கும், தற்போதைய பட்டியலுக்கும் இடையில் 92,36,194 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. ஆனால், தற்போதைய நீக்கப்பட்டியலில் 5,01,638 வாக்குகள் கூடுதலாக உள்ளது. கூடுதலாகிய வாக்குகளும், மாயமான வாக்குகளும் எஸ்.ஐ.ஆர் நடைமுறைப்படி டிசம்பர் 2025 வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலும், நீக்கப்பட்ட பெயர் பட்டியலும் கூட்டினால் 2025 ஜனவரி மாதம் பட்டியலில் காணப்பட்ட மொத்த வாக்குகளை காட்டவில்லை. சில தொகுதிகளில் வாக்குகள் கூடுதலாகியுள்ளன. வேறு சிலவற்றில் மாயமாகியுள்ளன. உதாரணமாக, சோழிங்கநல்லூர் தொகுதி விபரங்களை பார்க்கலாம்.        சோழிங்கநல்லூரில் அதிகமாக உள்ள 11,492 வாக்குகள் 2025 ஜனவரி மாதம் பட்டியலில் இடம்பெறாதவை. இதை வாக்காளர் எண்ணிக்கை ‘கூடுதல்’ எனலாம். இதே போல கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 10,568 வாக்குகளும், ஆவடி தொகுதியில் 10,329 வாக்குகளும், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில் 9845 வாக்குகளும், செங்கல்பட்டு தொகுதியில் 9359 வாக்குகளும் கூடுதலாகியுள்ளன.

இவ்வாறான அதிகரிப்பு 205 தொகுதிகளில் நடந்துள்ளது. வாக்காளர் எண்ணிக்கையில் ஜனவரி – நவம்பர் வரையிலான 10 மாத இடைவெளியில் ஏற்பட்டுள்ள கூடுதலுக்கு என்ன காரணம்? மிச்சமுள்ள 29 தொகுதிகளில் ஓட்டுக்கள் மாயமாகியுள்ளன. உதாரணமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் விபரங்களைப் பார்க்கலாம்.  ஆர்.கே நகர் தொகுதியில் 2025 ஜனவரி மாதத்தில் இருந்த மொத்த வாக்குகளில் 56,916 மட்டுமே நீக்கப்பட்டுள்ள  நிலையில், 15,658 வாக்குகள் எங்கே போயின? அவை. இந்த வாக்குகள் வரைவு வாக்காளர் பட்டியலிலும் இல்லை, நீக்கத்திலும் இல்லையே. இப்படி வாக்குகள் திடீரென்று மாயமாகியிருப்பது எப்படி?. இவ்வாறு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியில் 5556 வாக்குகள் குறைவாக உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் 5489 வாக்குகள் குறைவாக உள்ளன. வில்லிவாக்கத்தில் 4062 குறைவு. தேனி மாவட்டத்தில் பல தொகுதிகளை சேர்த்து 7800 வாக்குகள் இவ்வாறு குறைந்துள்ளன. பெரியகுளத்தில் 2459 குறைவு, கம்பத்தில் 2354 குறைவு, ஆண்டிப்பட்டியில் 1285 குறைவு, போடிநாயக்கனூர் தொகுதியில் 1698 குறைவு.  கூடுதலும், மாயமும் காட்டும் சிக்கல் மேற்சொன்ன அடிப்படையில் 205 தொகுதிகளில் 5,52,249 வாக்குகள் அதிகரித்துள்ளன.  

அதே சமயம் (29 தொகுதிகளில்) 52,738 வாக்குகள் மாயமாகியுள்ளன. இவ்வாறு, மொத்தம் 6,04,987 வாக்குகள் பற்றிய விபரங்கள், பழைய கணக்கோடு பொருந்தவில்லை. எஸ்.ஐ.ஆர் நடைமுறையின் முதற்கட்ட பணிகள் அவசர கதியில் நடந்துள்ளன என்பதையும், அந்த நடைமுறைகளை உரசிப்பார்க்கவோ, பிழைகளை சுட்டிக்காட்டி சரி செய்யவோ ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதாலேயே இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. முகவரியில் இல்லாமல், கண்டறிய முடியாமல் நீக்கப்பட்ட வாக்காளர்கள் யார்? முகவரியில் இல்லாதவர்கள் அல்லது இடம் பெயர்ந்தவர்கள் என்ற இரு வகைப்பாட்டில் நீக்கப்பட்டுள்ள பெயர்கள் மிக அதிகமாக இருப்பது ஆபத்தான ஒன்றாகும்.  நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இந்த வகைப்பாடு இரு விதமாக கணக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் துறைமுகம் தொகுதி முழுவதும் இரு வகைப்பாடுகள் இல்லை. அண்ணா நகர், பெரம்பூர், தியாகராய நகர், பாளையங்கோட்டை, மைலாப்பூர், திருநெல்வேலி, கிருஷ்ணராயபுரம், சைதாப்பேட்டை, ரிஷிவந்தியம், கிள்ளியூர் தொகுதியிலும் பெரும்பான்மை வாக்குச் சாவடிகளில் ‘கண்டறிய முடியாதவர்களே’ இல்லை. இது ஏன்? குறிப்பிட்ட தொகுதிகளில், ஆகப்பெரும்பான்மையானவர்கள் அவரவர் முகவரியில் வசித்து, எஸ்.ஐ.ஆர் படிவத்தை பெற்றுக் கொண்டார்களா?. அதிகாரிகளின் முடிவுக்கு தக்க ஊருக்கு ஒரு விதமாக பெயர் நீக்கம் நடந்திருப்பதையே இது காட்டுகிறது. மேலும், இந்த நீக்கங்களை கூடுதலாக ஆய்வு செய்யும்போது மேலும் இரு விதமான பாகுபாடுகள் தெரிகின்றன.

 1) திருமணமாகி, வீடு மாற்றலான பெண்களின் வாக்குகளை நீக்குவது அதிகமாக நடந்துள்ளது. (இதற்காக வாக்காளர் பட்டியலில் கணவர் பெயரை உறவினராக சேர்த்துள்ள பெயர்களின் நீக்கத்தை தனியாக ஆய்வு செய்துள்ளோம்) 2) பொதுவாக வேலை, கல்விக்காக இடம் பெயரும் 23 – 40 வயதினரை விடவும், 41-65 வயதினரில் இந்த காரணம் அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டுமே இயல்புக்கு மாறானது.  ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்களில், ’திருமணம் ஆனவர்கள் நீக்கம் அதிகமாக இருப்பது, அவர்களால் 2003 க்கு முந்தைய எஸ்.ஐ.ஆர் விபரங்களை திரட்ட முடியவில்லை என்பதை காட்டுகிறது. இந்த சிக்கலை அடையாளம் கண்டு, வாக்குரிமை பறிபோவதை தடுத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அவசரகதியான போக்கு பெண்களுக்கு அநீதியை இழைத்துள்ளது.  41-65 வயதில் உள்ள வாக்காளர்களிடம் இடம் பெயர்வு குறைவாகவே நடக்கும். ஆனால், அவர்களே அதிகம் இடம் பெயர்ந்துள்ளதாக நீக்கப்பட்டியல் காட்டுவது இயல்போடு ஒட்டவில்லை. இது வாடகை வீடுகளில் வாழும் எளிய உழைப்பாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை எடுத்துக் காட்டுகிறது.  உதாரணமாக, அண்ணா நகர் தொகுதியில் இடம் பெயர்தலால் நீக்கப்பட்டோர் எண்ணிக்கை, அந்த தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 39 சதவீதம் ஆகும். இந்த விகிதம் சென்னையில் உள்ள தொகுதிகள் எல்லாவற்றிலுமே மிக அதிகமாக உள்ளது.

சென்னை தவிர பிற தொகுதிகளை பார்த்தால் கோவை தெற்கு, திருப்பூர் வடக்கு தொகுதிகளில் 21%, மதுரை தெற்கு 20%, சிங்காநல்லூர் 19.4 % என்ற அளவில் உள்ளது. கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி இடம் பெயர்தல் இருக்கும் தமிழ் நாட்டில், நகரமயமான பகுதிகளில் இவ்வகை நீக்கம் மிக அதிகமாக இருப்பது உழைக்கும் மக்களுக்கு எதிரான பாகுபாட்டின் வெளிப்பாடு ஆகும். இதனை தவிர்க்க தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதுவும் சென்னையில் பல இடங்களில் அரசே மாற்று இடங்களில் குடியமர்த்திய உழைப்பாளி மக்கள் தங்கள் வாக்குரிமையை இழந்திருப்பதை கள ஆய்வில் உறுதி செய்ய முடிந்தது. தமிழ்நாட்டின் இறப்பு விகிதம் மற்றும் சராசரி ஆயுள் விபரங்களோடு தேர்தல் ஆணையத்தின் நீக்கப்பட்டியல் விபரங்கள் ஒத்துப்போகாத நிலை எதனால் ஏற்பட்டுள்ளது? இறப்பு காரணமாக நடந்த நீக்கங்கள் வயதுவாரியாக   வயது            இறப்பு எண்ணிக்கை        18-22        9,484        23-40        1.81 லட்சம்         41-65        9.81 லட்சம்        65-75        6.85 லட்சம்        75+        8.37 லட்சம்      

மொத்த இறப்பு நீக்கங்கள்    26,94,177      இந்த இறப்பு விபரங்களில் 41-65 வயது வரம்பிலேயே அதிகமான இறப்புகள் காணப்படுகின்றன. அதை விட குறைவான வயதிலும் கூடுதல் இறப்புகள் உள்ளன. இந்த மரணங்கள் ஒரு சில ஆண்டு இடைவெளியில் நடந்திருந்து, தாமதமாக அவர்களுடைய பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும் கூட விபரங்கள் இயல்போடு பொருந்தவில்லை. ஆண், பெண் இறப்பு விகிதத்திலும் இந்த வேறுபாட்டை பார்க்கலாம். தமிழ்நாட்டின் சராசரி ஆயுள் 70- 75 வயது என இருக்கும்போது 23 வயதில் இருந்து 65 வயதுக்குள்ளாக மிக அதிகமாக நீக்கங்கள் நடந்திருப்பது எதனால்? சில ஆண்டுகள் முன் இந்த மரணங்கள் நடந்திருப்பதாக கருதினாலும், அது இன்னும் மிக இளவயது மரணங்களின் எண்ணிக்கையே ஆகும், அதற்கான சாத்தியம் என்ன? ஒவ்வொரு தொகுதியிலும் எடுத்து பார்க்கும்போது ‘இறப்பு காரணமாக நீக்கம்’ – வயது, சராசரி இறப்பு விகிதம், சராசரி ஆயுள் போன்ற அம்சங்களில் மிகவும் வினோதமான சித்திரத்தை காட்டுகிறது. தமிழ்நாட்டிலேயே மிக அதிகமாக இறப்பு காரணமாக நீக்கப்பட்டோர் எண்ணிக்கை உள்ள தொகுதிகள் பின்வருமாறு: காங்கேயம் (26,477) தாராபுரம் (24730) பல்லடம் (24571) பல்லாவரம் (23685)  சோழிங்கநல்லூர்  (22742) மொத்த வாக்குகளில் இறந்தோர் சதவீதம் என்ற அடிப்படையில் இந்த தொகுதிகள் மேற்கு மண்டலத்திலேயே அதிகமாக உள்ளன.  காங்கேயம் (9.88 %) தாராபுரம் (9%) மடத்துக்குளம் (7.08%) அவினாசி (7.07) திண்டுக்கல் (6.94) தமிழ்நாட்டின் பின் தங்கிய பகுதிகள், வறட்சியான பகுதிகள் இப்பட்டியலில் வரவில்லை. எனவே, இறப்பு காரணமான நீக்க விபரங்கள் இருமுறை ஆய்வு செய்யப்பட வேண்டும்.  அவ்வாறே, பெண்களின் இறப்போடு

, ஆண்களின் இறப்பு விகிதம் 17-20 சதவீதம் கூடுதலாக இருப்பது இயல்பு என கொண்டால், பல தொகுதிகளில் இந்த விகிதம் இயல்புக்கு மாறாக தென்படுகிறது.   திருப்பூர் (வடக்கு) (67) சோழிங்கநல்லூர் (65) பல்லடம் (64) திருப்பூர் (தெற்கு) (64) மதுரவாயல் (62) திருத்துறைப்பூண்டி, காட்டுமன்னார் கோயில், எடப்பாடி, கலசப்பாக்கம், பாலக்கோடு, செஞ்சி போல சில தொகுதிகள் தவிர மற்றவை மிக அசாத்தியமாக உள்ளன. 1)ஸ்ரீவைகுண்டம் (8) 2) போளூர் (15) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இறப்பு விகிதம் தமிழ்நாட்டின் சராசரிக்கும் குறைவாக உள்ளது. இது எப்படி? ஒவ்வொரு தொகுதியிலும் என்ன நிலை? எங்களுடைய ஆய்வில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நிலைமைகளை தனித்தனியாக ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளோம். ஆனால் இந்த ஆய்வினை துல்லியமாக்கிட வாக்குச் சாவடி வாரியாக மொத்த வாக்குகளை எஸ்.ஐ.ஆர் ஆய்வுக்கு முன் மற்றும் பின் என தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

 மேலும், புதிதாக இணைக்கப்படும் வாக்காளர் விபரங்களை, இதே போல கணினி ஆய்வு தரவு பரிசோதனைக்கு ஏற்ற முறையில் வழங்க வேண்டும். அவற்றை பரிசோதிக்க உரிய அவகாசம் வழங்கப்பட வேண்டும். முடிவாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர் – நியாயப்படுத்தவே முடியாத பிழைகளோடு நடப்பதை எங்கள் ஆய்வுத் தரவுகள் ஆதாரப்பூர்வமாக காட்டுகின்றன. இவற்றை விவாதித்து சரி செய்யவும், நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் உரிய அவகாசமும் தரப்படவில்லை. அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்படவில்லை.  இன்னும் சில நாட்களில், பல கோடி வாக்குகளை மொத்தமாக நீக்கவும், சேர்க்கவும், பரிசீலிக்கவும் செய்யவுள்ளது தேர்தல் ஆணையம். இவ்வளவு குறுகிய காலத்தில், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின் நியாயத் தன்மையை பரிசோதிக்கும் வல்லமை எந்தவொரு தனிப்பட்ட அமைப்பிற்கும் இல்லை.  எனவே, எஸ்.ஐ.ஆர் நடைமுறையே எளிய வாக்காளர்களுக்கு எதிராக அமைவதை உணர்ந்து அவசர கதியான அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) கோருகிறது.