களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் களப்பணியில் கம்யூனிஸ்ட்டுகள் நற்பெயர் + நற்பணி = சிவசங்கரன்
காப்பீட்டுத் துறையில் பணியாற்றி உழைக்கும் மக்களின் காப்பாளர்க ளாகக் களம் இறங்கியவர்களில் ஒருவர்தான் தோழர் சிவசங்கரன். நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டி கிராமத்தில் 1943ஆம் ஆண்டு ஒரு எளிய விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். அதே ஊரில் பள்ளிப் படிப்பு. அந்தப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணி யாற்றியவர் அறம் வளர்த்த நாதன் (அவரை முன்பு இத்தொடரில் சந்தித்திருக்கிறோம்). அவர் மாணவர்க ளுக்குப் புத்தகப் பாடத்துடன் சமூகப் பார்வையை ஊட்டினார். பல நூல்களையும் வாசிக்கச் செய்தார். மாணவர் சிவசங்கரன் அவரிடம் பாடம் பயின்றவராக சிவப்பியக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பொதுவாக ஒருவரது இளமை உருவாக்கத்திற்கு குடும்பம், சமூகம், கல்வி ஆகிய சூழல்கள் காரணமாக அமையும். சிவசங்கரனுக்குத் தளம் அமைத்தது கல்விச் சூழல்.
பள்ளியில் கிடைக்கப் பெற்ற சமூகப் பார்வை யோடு, கிராமத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக மாட சாமி (பின்னாளில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றியவர்) என்ற தோழரோடு இணைந்து ஒரு தட்டி போர்டு எழுதி வைத்தார். அதற்காக இருவரை யும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அது வீட்டாருக்குத் தெரிந்துவிடாமல் சிரமப் பட்டு சமாளித்தாராம்! கல்லூரிப் படிப்பு கோவையில். புனே நகரில் வேலை கிடைத்தது. இந்நிகழ்வுகளுக்கி டையே மூலக்கரைப்பட்டி கிராமத்தில் மாடசாமி கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை ஏற்றினார்.
1966இல் சிவசங்கரன் ஆயுள் காப்பீட்டுக் கழக (எல்ஐசி) த்தில் பெரியகுளத்தில் வேலையில் சேர்ந்தார். விரைவிலேயே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க (ஏஐஐஇஏ) உறுப்பினரானார். ஏற்கெனவே செஞ்சிந்தனைகளோடு உடன்பட்டிருந்தவர், சங்கம் அழைப்பு விடுத்த போராட்டங்களில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார்.
கட்சியில் இணைந்தார் 1969இல் நெல்லைக்கு மாற்றப்பட்டார். அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளராக “எஸ்.பீ.வீ.” தோழர் எஸ். பால விநாயகம் பணியாற்றி வந்தார். இளைஞர்களை அரசி யலாக ஈர்ப்பதில் வல்லவரான அவருடன் உரையாடிய சிவசங்கரன் 1970இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார்.
இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு காப்பீட்டுத் துறை உள்ளிட்டு மத்திய அரசு ஊழி யர்களின் 50 சதவீத அகவிலைப்படியை முடக்கியது. அதை எதிர்த்து சங்கம் மேற்கொண்ட முடிவின் அடிப்ப டையில் ரயில்வே, தபால் தந்தி, வருவாய், மின்சா ரம் உள்பட பல்வேறு துறைகளின் தொழிலாளர்களை யும் ஊழியர்களையும் திரட்டி பெருந்திரள் மாநாடு நெல்லையில் நடந்தது.
சிஐடியு அகில இந்தியத் தலைவர் தோழர் பி.டி. ரணதிவே கலந்துகொண்ட அந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதில் சிவசங்க ரன் முக்கியப் பங்காற்றினார். சங்கப் பணிகளோடு நிறுத்திடாமல் நெல்லை நகரத்திலும், மாவட்ட அளவிலும் இதர நடுத்தர வர்க்க ஊழியர்களையும் திரட்டுவதற்கு சிவசங்கரன் அக்கறையோடு முனைந்தார். இந்திய சமூக விஞ்ஞான கழகம் அமைப்பை உருவாக்கி வி.பி.சிந்தன், மைதிலி சிவராமன், வெங்கடேஷ் ஆத்ரேயா, ஆர்.
கோவிந்த ராஜன் உள்ளிட்ட தலைவர்களை அழைத்து கருத்த ரங்குகள் நடத்தினார். அறிவொளி இயக்கத்தில் பங்கேற்றதோடு அதன் தன்னார்வத் தொண்டர்க ளுக்கு கேரளத் தோழர்களை வரவழைத்து வகுப்பு நடத்திடவும் ஏற்பாடு செய்தார். சிவசங்கரன் சங்கத்தின் மதுரைக் கோட்ட முன்ன ணித் தலைவர்களில் ஒருவராக உருவானார். அப்போ தெல்லாம் காப்பீட்டு ஊழியர் மாநாடுகளில் ஆழமான அரசியல் விவாதங்கள் நடைபெறும். முரண்பட்ட கருத்துக்களும் வெளிப்படும். அந்த அவையில் தங்களின் அறிவார்ந்த கருத்துக்களின் வாயிலாக 1980–90களில் புதிதாக நியமனம் பெற்ற ஊழியர்களை தொழிலாளி வர்க்க அரசியலின் பால் ஈர்த்த தலைவர்க ளில் ஒருவர் இவர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னி யாகுமரி, தற்போதைய தென்காசி மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உருவான முன்னணி ஊழியர் கள் அனைவரிடமும் இவரது தாக்கம் இருந்தது. ஒன்று பட்ட மதுரைக் கோட்டத்திலேயே சகோதரத் தொழிற் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சிறப்பாக அமைந்த மையங்களாக திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோ வில், தூத்துக்குடி, கோவில்பட்டி, வள்ளியூர் ஆகி யவை உருவானதில் சிவசங்கரன் உள்ளிட்ட தலை வர்களின் பங்கு முக்கியமானது.
தலைமைப் பண்புகள் திருநெல்வேலி கோட்டம் 1993இல் புதிதாக உரு வாக்கப்பட்டபோது இயல்பாகவே அதன் தலைமைப் பொறுப்பு இவரைத் தேடி வந்தது. அதன் முதல் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய கோட்டத்தை வழி நடத்துவது அவ்வளவு எளிதான பணி அல்ல. தலைமைக்கான அங்கீகாரத்தை கிளை சங்கங்களிடமிருந்து பெறுவதற்கு சிவசங்கரன் ஏற்கெனவே ஈட்டியிருந்த நற்பெயர் பெரிதும் உதவி யது. நிதானம், விருப்பு வெறுப்பற்ற பாங்கு, நிர்வாகத்து டன் சமரசமற்ற அணுகுமுறை போன்ற தலைமைப் பண்புகள் கொண்டவராகத் திகழ்ந்தார். சங்க நிதியைக் கையாள்வதில் நேர்மை, சிக்கனம் என உறுதியாக இருந்தார்.
ஆணாதிக்கப் போக்குகள் மேலோங்கியிருந்த சூழலில் பெண் ஊழியர்களைத் திரட்டுவதிலும், சங்கத்தின் பால் அவர்களை ஈர்ப்பதிலும் இருந்த தயக்கங்களை களையச் செய்தார். புதிய கோட்டம் உருவாவதற்கு முன்பே மகளிர் மாநாட்டை அப்பகுதி யில் நடத்தினார். தென் மாவட்டங்களில் 1990களில் சாதிய மோதல் கள் பரவலாக இருந்தன. அடையாள அரசியல் தொ ழிற்சங்க ஒற்றுமைக்கே சவாலாக இருந்தது. ஊழியர்க ளிடையே சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சங்க நிலைப்பாட்டைக் கொண்டு செல்வது, ஜனநாயக உள்ளம் கொண்டவர்களை சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இணைப்பது என்ற இரட்டைக் கடமைக ளை நிறைவேற்ற வேண்டியிருந்தது. அதனை சிவ சங்கரன் தலைமையில் சங்கத்தின் முன்னணி உறுப்பினர்கள் உணர்வுப்பூர்வமாக மேற்கொண்ட தால் ஊழியர்களின் ஒற்றுமையைப் பெருமளவுக்கு உறுதி செய்ய முடிந்தது. கோட்டச் சங்கத்திற்கு என 2003இல் நெல்லை நகரத்தில் 10 சென்ட் நிலம் வாங்கப்பட்டு அலுவல கம் கட்டப்பட்டது. இதில் சிவசங்கரனின் பாத்திரம் முக்கியமானது. தற்போது சங்கச் செயல்பாட்டிற்கு மட்டுமல்லாமல் அங்குள்ள அரங்கம் தோழமை அமைப்புகளுடைய கூட்டங்கள் நடத்திடவும் பயன்படு கிறது.
மக்கள் பணிகளில் 1980களில் கட்சியின் மாவட்ட மாநாடு திரு நெல்வேலியில் நடைபெற்றது. கட்சி மாவட்ட மையத்தின் கட்டளையை ஏற்று அம்மாநாட்டின் வெற்றிக்காக அயராமல் பணியாற்றினார். மாநாட்டில் அவர் மாவட்டக்குழுவிற்கு தேர்வு செய்யப் பட்டார். அடுத்து மாவட்டச் செயற்குழுவிற்கு தேர்வான சிவசங்கரன் மக்களுக்கான பன்முகப் பணிகளையும் செய்யத் தொடங்கினார். வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், மருந்தாளுநர் உள்ளிட்ட பல சங்கங்களுக்கு வழிகாட்டும் பணியை திறம்படச் செய்தார். நடுத்தர வர்க்க ஊழியர்க ளுக்கும் கட்சி அணிகளுக்கும் அரசியல் வகுப்புகள் எடுத்தார். கட்சி மாவட்ட மையத்தின் பல வேலைக ளையும் மேற்கொண்டார்.
சட்டமன்றத் தேர்தலில் தோழர் ஏ. நல்லசிவன் அம்பாசமுத்திரம் தொகுதியிலும் தோழர் ஆர்.கிருஷ் ணன் வாசுதேவநல்லூரிலும் போட்டியிட்டபோது நடுத்தர வர்க்க ஊழியர்களிடம் நிதி திரட்டுவது, தேர்தல் பணிகளுக்கு தோழர்களை சம்பந்தப்பட்ட தொகுதி களுக்கு அனுப்பி வைப்பது போன்ற பொறுப்புகளை நிறைவேற்றினார். புத்தகாலயக் கிளை பாரதி புத்தகாலயம் நூல்கள் விற்பனைக்கான கிளையை வங்கி ஊழியரும் தமுஎகச தலைவர்களில் ஒருவருமான தோழர் நாறும்பூநாதன் தொடங்கினார். இக்கிளை நிதி நெருக்கடியால் செயலிழந்தபோது சிவசங்கரன் தலையிட்டு உதவிகள் கிடைக்கச் செய்து சங்க அலுவலகத்திலேயே பாரதி புத்தகாலய விற்பனை நிலையத்தை அமைத்தார்.
அதற்கு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களைப் பொறுப்பாக்கி இயங்கிடச் செய்தார். இன்றளவும் அந்த விற்பனை நிலையம் சிறப்பாக செயல்படுவதற்கு அடித்தளமிட்டவர் சிவசங்கரன். ஏஐஐஇஏ கோட்டப் பொதுச் செயலாளராகப் பொ றுப்பேற்ற சிவசங்கரன் துறை உறுப்பினர்களிடையே தொழிலாளி வர்க்க அரசியலைக் கொண்டு சென்ற தோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் காப்பீட்டுத்துறை ஊழியர்களிடையே கட்சியைக் கட்டும் பணியைச் செயல் முனைப்போடு மேற்கொண்டார். இப்போது காப்பீட்டுத்துறை அரங் கத்தில் உள்ள பல முன்னணித் தோழர்களும் தங்களை அரசியலாக உருவாக்கியதில் சிவசங்கரன் முக்கி யப் பங்காற்றியதைக் குறிப்பிடுகிறார்கள். சங்கத்தின் பெருமைமிகு மரபுகள் அடிப்படையில் பதவி உயர்வை அவர் நாடாததும், எந்த பதவியில் நியமனம் பெற்றாரோ அந்த பதவியிலேயே 2003இல் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீட்டிலும் சக தோழராக பல குடும்ப வேலை களைத் தன்னுடைய இணையருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.எஸ்.செண்பகம், இவரது இல்லம் சென்று இவரது கட்சிப் பணிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது இவருடைய இணையர் பார்வதி,, “சமையல் முதல் எல்லா வேலைகளிலும் எனக்கு இவர் உதவி செய்வார். இன்று காலையில் கூட இவர்தான் காஃபி போட்டுக் கொடுத்தார்,” என மகிழ்வோடும் நெகிழ்வோடும் கூறியிருக்கிறார். தோழர் பார்வதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் பணியாற்றியவர். அதன் மாவட்டப் பொருளாளராகவும் செயல்பட்டவர்.
சிவசங்கரன் - பார்வதி தம்பதியருக்கு ஒரு மகள், ஒரு மகன். இருவரும் தங்கள் பெற்றோரின் இயக்கப் பணிக ளுக்குத் துணையாக இருந்துள்ளனர். 83 வயது நிரம்பிய தோழர் சிவசங்கரன் இன்றும் கட்சி உறுப்பி னராக தன்னால் இயன்ற பணியை இயக்கத்திற்காகச் செய்து வருகிறார். பள்ளிப் பருவத்திலேயே சமூகப் பார்வையைப் பெற்று, காப்பீட்டுத்துறை ஊழியராகச் சேர்ந்து, சங்கத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சிவசங்கரன். மாநிலமெங்கும் இவரைப் போன்ற தோழர்கள் ஆற்றிய மகத்தான பணியினால்தான் இப்போதும் அச்சங்கம் துடிப்போடு முன்னணிப் பாத்திரம் வகிக்கிறது. தான் செயல்பட்ட களங்களில் அரசியல் பணிகளைத் திறம்பட மேற்கொண்ட அமைப்பாளராக, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு சிறந்த முன்னுதாரணத் தோழராக சிவசங்கரன் பதித்துள்ள களப்பணித் தடம் பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.
