articles

img

ஏழைகளின் மீதான முதலாளித்துவத்தின் போர் - எழுதுகிறார்

ஏழைகளின் மீதான முதலாளித்துவத்தின் போர்

நிச்சயமாக இந்தக் கட்டுரை உங்களை ஆத்திரமடையச் செய்யும். சில மாதங்களுக்கு முன்பு, டிரைகாண்டினெண்டல் ஆய்வு நிறுவனத்தின் குழுவுடன் நான் கொலம்பியாவின் காவ்கா பகுதிக்குப் பயணம் செய்தேன். அங்கு ‘தென்மேற்கு கொலம்பியாவின் மக்கள் ஒற்றுமை இயக்கம்’ (PUPSOC) மற்றும் ‘கோகோ, கசகசா மற்றும் மரிஜுவானா (கஞ்சா)விவசாயிகளின் தேசிய ஒருங்கிணைப்புக் குழு’ (COCCAM) ஆகிய அமைப்புகளைச் சந்தித்தோம். காவ்கா பகுதியில் வாழும் ‘கேம்பசினோ’  (Campesino) எனப்படும் ஏழை விவசாயிகள், கோகோ செடிகளை விரும்பிப் பயிரிடுவதில்லை; மாறாக, நிலப்பறிப்பு மற்றும் அரசின் புறக்கணிப்பால் வேறு வழியின்றி வாழ்வாதாரத்திற்காகவே அதனை வளர்க்கிறார்கள். அவர்களது கடும் உழைப்பு கூட அவர்களுக்கு மிகக் குறைந்த வருமானத்தையே தருகிறது, ஆனால் அந்தப் பயிர்கள் உலகளாவிய ‘துயரத்தின் விநியோகச் சங்கிலியில்’ சிக்கி கோடிக்கணக்கான டாலர் லாபத்தை ஈட்டுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு எமது 97-வது ஆய்வறிக்கை,

ஏழைகளின் மீதான போர்:

போதைப்பொருள், விவசாயிகள் மற்றும் முதலாளித்துவம்’ (பிப்ரவரி 2026) உருவானது. இந்த விநியோகச் சங்கிலியில் நிலவும் முறையான கொடூரத்தை உரைநடையில் விளக்க முடியவில்லை. அந்த ஆத்திரத்தை வெளிப்படுத்த நான் ஒரு நீண்ட கவிதை வடிவை நாடுகிறேன். ஏனெனில், கோபத்தின் உணர்ச்சியின்றி இந்தத் துயரத்தை விவரிக்க இயலாது.

நாகரிகம் எனும் போர்வையில் பசி

அவர்கள் வந்தார்கள், ஆம், அவர்கள் வந்தார்கள் - ஒரு நாள் காலை கடல் திறந்தது ஒரு நீல நிறக் காயம் போல, அங்கிருந்து கப்பல்கள் ஊர்ந்து வந்தன பசியால் கனத்தபடி. அவர்கள் நாகரிகத்தைக் கொண்டு வந்தார்கள் தங்கள் பைகளில், பட்டுத் துணியால் சுற்றப்பட்ட கத்தியைப் போல. நாகரிகம் என்று பெயரிட்டார்கள், ஏதோ ஒரு மலருக்குப் பெயரிடுவது போல. ஆனால் அது பசி. அது வெடிமருந்து. பற்களை விட ஆழமாகத் துளைக்கும் காகித ஒப்பந்தங்கள். அவர்கள் எமது கண்டத்தின் விலா எலும்புகளிலிருந்து தங்கத்தைக் குடித்தார்கள், மனிதர்களின் உடல்களில் சங்கிலிகளை மூச்சாக விட்டார்கள். பூமி, அந்தப் பழங்காலப் பூமி, ஒரு தாயைப் போலப் பொறுமையாக இருந்தவள், அந்நியர்களுக்காகத் தன் நரம்புகளைத் திறக்க கட்டாயப்படுத்தப்பட்டாள். அவர்கள் நிலத்தை எடுத்தார்கள். அவர்கள் உழைப்பை எடுத்தார்கள். பறவைகளின் பாடல்களால் ஈரமான காடுகளை எடுத்தார்கள். மலையிலிருந்த கற்களும் ஏழையாயின, அவர்கள் எல்லாவற்றையும் உறிஞ்சியதால். மிஞ்சியது என்ன? வறுமை, ஒரு உடைந்த கிண்ணத்தைப் போல புழுதியில் கிடந்தது குழந்தைகள் தின்பதற்காக.

வேடமிட்ட கொள்ளையர்கள்

பிறகு, கொள்ளையர்கள் தங்கள் உடைகளை         மாற்றினார்கள். தங்கள் இரும்புச் சட்டைகளையும், வாள்களையும், ஆக்கிரமிப்பின் சிலுவைகளையும் தூக்கி எறிந்தார்கள். இப்போது அவர்கள் சாம்பல் நிறத்தில் சூட் அணிந்தார்கள். அவர்களது வாய்கள் புதிய சொற்களைக் கற்றன: வளர்ச்சி, ஜனநாயகம், சட்டம் மற்றும் ஒழுங்கு - அழுகிய பிணத்தின் மீது தெளிக்கப்பட்ட வாசனைத் திரவியங்கள் இவை. எப்போதும் அவர்கள் போரை அறிவித்தார்கள் : போதைப்பொருளுக்கு எதிரான போர். பயங்கரவாதத்திற்கு எதிரான போர். ஏழைகளுக்கு எதிரான போர். போர், போர், போர் - அவர்களது பேரரசு அறிந்த ஒரே பிரார்த்தனை இந்தப் போர்தான். முதலாளித்துவத்தின் சாக்கடைகள் அவர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்: போதைப்பொருள் வர்த்தகம் ஒரு தொற்று, தூய்மையான நகருக்கு அடியில் இருக்கும் குற்ற உலகம் என்று. ஆனால் முதலாளித்துவம், ஓ, முதலாளித்துவம்... அதன் மின்னும் வீதிகளுக்கு அடியில் எப்போதும் சாக்கடைகள் உண்டு. அதன் வங்கிகள் அழுக்கு நதிகளின் மீது கட்டப்பட்ட தேவாலயங்கள். மாஃபியா வெளியே இல்லை. போதைப்பொருள் கும்பல் வெளியே இல்லை. ஆயுத வியாபாரி வெளியே இல்லை. அவர்கள் அனைவரும் ஒரே உடலின் இரத்த நாளங்கள். அழுக்குப்பணம் உலையிலிருந்து புகையாக எழுகிறது, அது துவைக்கப்படுகிறது, இஸ்திரி செய்யப்படுகிறது, பிறகு ‘சட்டப்பூர்வமான மூலதனமாக’ திரும்பி         வருகிறது அதிகாரத்தின் மேசையில் மரியாதையாக அமர. இது விபத்து அல்ல. இது அந்த மிருகத்தின் மறைக்கப்பட்ட உறுப்பு. மார்க்ஸ் இதனை ‘ஆரம்பகால மூலதனக் குவிப்பு’     என்றார் - ஆனால் அது ஒருபோதும் முடிவடையவில்லை. நில அபகரிப்பு, மனிதர்களை விற்பது - மூலதனம் தூய்மையாகப் பிறக்கவில்லை. அது உதடுகளில் இரத்தத்துடன் பிறந்தது. அதற்குப் பசிக்கும்போது, தாகம் எடுக்கும்போது, அது மீண்டும் கொள்ளைக்காரத்தனத்திற்குத்     திரும்புகிறது, உலகின் கழுத்தில் சாய்ந்து இரத்தம் குடிக்கும் ஒரு இரத்தக் காட்டேரியைப் போல.

கோகோ: வாழ்வாதாரத்தின்  கடைசி நாணயம்

கொலம்பியாவின் விவசாயிகளைப் பாருங்கள். செய்தித்தாள்கள் அவர்களைக் குற்றவாளிகள் என்கின்றன. அரசு அவர்களை எதிரிகள் என்கிறது. ஆனால் அவர்கள் நகங்களில் மண்ணுள்ள மனிதர்கள், தங்கள் குழந்தைகளின் முகத்தில் பசியைக் கணக்கிடும் பெற்றோர்கள். ஹெலிகாப்டர்கள் வருகின்றன இரும்பு வெட்டுக்கிளிகளைப் போல. ‘கிளைபோசேட்’ விஷம் மழையாகப் பெய்கிறது. இராணுவம் பயிர்களை மிதிக்கிறது சதைகளை மிதிப்பதைப் போல. விவசாயி கோகோ பயிரிடுவது பேராசையினால் அல்ல, முதலாளித்துவம் மற்ற எல்லா கதவுகளையும் அடைத்துவிட்டதால்தான். நிலம் சில கைகளில் குவிந்துள்ளது. சட்டப்பூர்வமான பயிர்கள் நசிந்துவிட்டன. சாலைகள் இல்லை. சந்தைகள் இல்லை. பள்ளிகள் இல்லை. மருத்துவமனைகள் இல்லை. இருப்பது புறக்கணிப்பு மட்டுமே. பிழைப்பதற்கான கடைசி பச்சை நாணயம் கோகோ இலை மட்டும்தான். பண்ணை வாசலில் அவர்கள் ஈட்டுவது ஒன்றுமில்லை- வெறும் ஒரு பிடி மண். ஆனால் அந்த இலை பயணம் செய்கிறது. இரகசிய ஆய்வகங்கள் வழியாக, கடத்தல் பாதைகள் வழியாக, உலகச் சந்தையின் நரம்புகள் வழியாக - அதன் மதிப்பு பலமடங்கு பெருகி ஒரு அரக்கத்தனமான அற்புதமாக மாறுகிறது: ஒரு டாலர் மதிப்புள்ள இலை ஆயிரக்கணக்கான டாலர்களாக மாறுகிறது. இதுதான் முதலாளித்துவம்: மதிப்பு மேலே உறிஞ்சப்படுகிறது, வறுமை கீழே திணிக்கப்படுகிறது. விவசாயி ஏழையாகவே இருக்கிறார். கடத்தல் கும்பல் தலைவன் வன்முறையில் வாழ்கிறான். ஆனால் வங்கிகள் - அந்தத் தூய்மையான வங்கிகள்  உபரிப் பணத்தை காணிக்கையாகப்     பெற்றுக்கொள்கின்றன.

ஏழைகளின் மீதான போர்

எப்போதாவது ஒரு ஊழல் வெடிக்கிறது. எச்எஸ்பிசி (HSBC) வங்கி ஒரு பில்லியன் டாலர்     பணத்தைச் சலவை செய்கிறது. அவர்கள் அபராதம் கட்டுகிறார்கள் - அது வாயை அடைக்க வீசப்படும் ஒரு சல்லிக் காசு. எந்த வங்கி அதிகாரியும் சிறைக்குச் செல்வதில்லை. சிறைக்குச் செல்ல முடியாத அளவுக்கு அவர்கள்         பெரியவர்கள். தொட முடியாத அளவுக்கு அவர்கள் புனிதமானவர்கள். ஏனெனில் பணச்சலவை என்பது தற்செயலானது     அல்ல. அது இக்கட்டமைப்பின் ஒரு பகுதி. போர் ஒருபோதும் வங்கிப் பெட்டகங்களை எட்டாது. அது விவசாய நிலங்களை மட்டுமே எட்டுகிறது. போதைப்பொருளுக்கு எதிரான போர் என்பது உண்மையில் போதைப்பொருளுக்கு எதிரானது அல்ல. அது ஏகாதிபத்தியத்தின் ஆயுதம். ஆக்கிரமிப்பிற்கான ஒரு ஒழுக்கமூட்டும் போர்வை. ‘பிளான் கொலம்பியா’ (Plan Colombia) விவசாய நிலங்களை இராணுவமயமாக்கியது. இன்று அதே தந்திரம் வெனிசுலா மீது ஏவப்படுகிறது - மதுரோ மீது ‘நார்கோ - டெரரிசம்’ (போதை     பயங்கரவாதம்) குற்றச்சாட்டுகள் தோட்டாக்களைப் போலத் தயாரிக்கப்படுகின்றன. ஆதாரங்கள் தேவையில்லை, பிரச்சாரமே எல்லாம். மழைக்காடுகள் எரிகின்றன. அமேசான் காடுகளில் விஷம் தெளிக்கப்படுகிறது, ஆனால் வடபுலத்தின் எண்ணெய், பணம் மற்றும்     சுரண்டல் போதைக்கு எந்தப் பெயரும் சூட்டப்படவில்லை. “கொல்லும் செடியை அழி!” என்று அவர்கள்     கூச்சலிடுகிறார்கள். ஆனால் அவர்களது போர்தான் அனைவரையும்     கொல்கிறது. அமைதி எங்கே தொடங்கும்? அமைதி அழிப்பதில் தொடங்குவதில்லை. இராணுவமயமாக்கலில் தொடங்குவதில்லை. சிறைகளில் தொடங்குவதில்லை. அமைதி கண்ணியத்தில் தொடங்குகிறது: நிலச் சீர்திருத்தம், உறுதிப்படுத்தப்பட்ட பயிர்கள், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், உரிமைகள். கிராமப்புற வாழ்க்கையை மறுசீரமைப்பதில்தான் அமைதி இருக்கிறது. ஏனெனில் பிரச்சனை கோகோ இலை அல்ல. பிரச்சினை இந்த அமைப்பு. போதைப்பொருளுக்கு எதிரான போர் என்று     முதலாளித்துவம் சொல்வது உண்மையில் ஏழைகளுக்கு எதிரான போர். அதனை முடிவுக்குக் கொண்டுவரச் சீர்திருத்தம்     போதாது, இந்த அமைப்பை உடைக்க வேண்டும் - இரத்தம் படிந்த கடலுக்கு அப்பால் ஒரு புதிய விடியலாக வேறொரு உலகம் எழவேண்டும். தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.