articles

img

பாஜக - அதிமுக கூட்டணி: ஆர்.எஸ்.எஸ் சதித்திட்டம்! - என்.குணசேகரன்

பாஜக - அதிமுக கூட்டணி: ஆர்.எஸ்.எஸ் சதித்திட்டம்!

தமிழகத்தில் நடக்க விருக்கும் சட்ட மன்றத் தேர்தல் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியைத் தீர்மானிக்கிற தேர்தல் மட்டுமல்ல; இந்தத் தேர்தல் ஒரு சித்தாந்தப் போராட்டமாகவும் அமைய உள்ளது. தமிழ்நாட்டின் மதச்சார்பின்மை, பன் முகப் பண்பாட்டு சித்தாந்தங்களை தொடர்ந்து பாதுகாப்பது குறித்த கேள்விகளை முன்நிறுத் தும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. தமிழக மக்களின் பன்முகத்தன்மை கொண்ட வாழ்க்கை நெறிகளைப் போற்றி வளர்க்கும் மதச்சார்பின்மை சித்தாந்தத்தைப் பாதுகாப்பது இந்தத் தேர்தலில் மிகப் பிரதான மான கடமை. இந்தக் கடமையை நிறைவேற்று வதில் இடதுசாரிகள் பங்கேற்றுள்ள திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி முழுமூச்சாகச் செயல்படும்.

தமிழகத்தினுடைய அனைத்து ஜனநாயக எண்ணம் கொண்டோர், தமிழக நலனில் அக்கறை கொண்ட மக்கள் அனைவரும் திரண்டு இந்தக் கடமையாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.  வர்க்க ஒற்றுமையே  பாதுகாப்பு அரண் மதச்சார்பின்மை தழைத்தோங்குகிற ஒரு  சமுதாயத்தில்தான் முன்னேற்றமும் வளர்ச்சி யும் சாத்தியமாகும். கம்யூனிஸ்டுகள் பார்வை யில் சோசலிச லட்சியம் மத, சாதி வேறுபாடுகள் கடந்த வர்க்க ஒற்றுமை வழியாகவே சாத்திய மாகும். மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, வர்க்க ஒற்றுமை அனைத்துக்கும் சவாலாக இன்றைக்கு பாஜக-அதிமுக கூட்டணி உள்ளது. பாஜகவின் நோக்கம் தமிழகத்தை இந்துத்துவா பிடியில் கொண்டு வருவதுதான். இந்தப் பயணத்தில் உதவுவதற்கான கைத்தடி களாக அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

நீண்ட கால சதி கடந்த ஐந்தாண்டு காலமாக மதச்சார் பின்மை கொள்கையில் உறுதிப்பாடு கொண்ட ஆட்சியாகவும் திமுக ஆட்சி செயல்பட்டு வந்துள் ளது. அதனை அகற்றி இந்துத்துவ சக்திகள் கோலோச்சுகிற ஒரு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்கிற அரசியல் சூழ்ச்சி கொண்டு பாஜக, ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்காகவே, அந்த அணியில் பெரிய கட்சியான அதிமுக இருந்தாலும் பாஜகவே கூட்டணிக் கட்சிகளை அணி சேர்க்கிற பேரத்தை  நடத்தி முடித்தது. இதற்கு ஐ.டி, சிபிஐ, அமலாக்கத்  துறை மிரட்டல் அஸ்திரங்களையும் மொத்தமாக பயன்படுத்தியது. மோடியும், அமித் ஷாவும் அமையவிருக்கும் ஆட்சி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று பேசியது; முதலமைச்சர் கனவோடு இருக்கும் எடப்பாடியை முத லமைச்சர் வேட்பாளராக அறிவிக்காமல் விட்டது மட்டுமல்ல, அதிமுக என்ற பெயரைக் கூட மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் சொல்லாமல் அவமானப்படுத்தியது; இவை அனைத்தும் பாஜக-வின் உள் நோக்கத்தை வெளிப்படுத்தி யுள்ளது. பாஜக இந்த கூட்டணியை பல உத்திகளைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளதை தனியாகப் பார்க்க முடியாது.

நீண்ட கால சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இது அமைந்துள்ளது. வகுப்புவாதத்தின் கறைபடிந்த வரலாறு நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் கண்ணை உறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மாநிலம் தமிழ்நாடு. 1980-களில் மண்டைக்காடு கல வரத்திலிருந்து, தற்போதைய திருப்பரங்குன்றம் வரை அவர்கள் ஒரு நெடிய சதித் திட்டத்தோடு தமிழ்நாட்டில் தங்களது சமூகப் பிளவு வேலை களைச் செய்து வந்துள்ளனர். 1982-இல் மண்டைக்காடு துப்பாக்கிச்சூடு நடந்து 8 கிறிஸ்தவ மீனவர்கள் கொல்லப்பட்ட மோதல் நிலைமையைப் பயன்படுத்தி, கிறிஸ்த வர்களால் நடத்தப்பட்ட பள்ளிகள், தேவால யங்கள், மருத்துவ நிலையங்கள் மீது தாக்கு தல் நடத்தி, 680 மீனவ குடிசைகளைத் தீக்கிரை யாக்கினர். இதன் தொடர்ச்சியாக இந்து உணர்வை ஆழமாக்கி இரு சமூகத்தினரிடையே பகைமையை வளர்த்தனர். மண்டைக்காடு கலவரத்திற்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் சமய வகுப்புகள் என்கிற பெயரில் இந்து அடையாள உணர்வை வேரூன்றச் செய்யும் வேலையை அவர்கள் செய்தனர். அதன் விளைவாக ஏராளமான ஊழியர்கள் அவர்களுக்குக் கிடைத்தனர். இது, 1984 சட்டமன்றத் தேர்தலில் பத்மநாப புரம் தொகுதியில் தனியாக நின்று இந்து முன்னணி வேட்பாளர் வெற்றி பெற உதவியது. அப்போது ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார்: “இப்போது தமிழ் உணர்வை இந்து உணர்வு மாற்றியமைத்துள்ளது”. ‘திராவிட மண்ணில் இந்து தேசிய அரசியலுக்கான ஒரு புது யுகத்தின் தொடக்கம்’ என்றெல்லாம் பேசி தங்களது நோக்கங்களை வெளிப்படுத்தினர். இந்த நோக்கம் இன்றைக்கும் தொடர்கிறது. பத்மநாப புரம் வெற்றி பற்றி பேராசிரியர் அருண்குமார் குறிப்பிட்டார்: “.. மாநிலத்தில் தேர்தல் அரசிய லில் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க திராவிட / தமிழ் அரசியலின் இடத்திற்கு மதவாத / வகுப்பு வாத அரசியலைக் கொண்டுவர வேண்டும் என்ற உந்துதலை இவ்வெற்றி பாஜகவுக்கு தந்தது.” வெறுப்பு அரசியல் வாக்கு வங்கி முன்பு தனியாகத் தேர்தலில் நின்று ஆதிக்க நிலைக்கு வந்து விடலாம் என்று நினைத்தார்கள். தமிழக மக்கள் பாஜகவை வேண்டா வெறுப்பாக ஒதுக்கிய நிலையில் தங்க ளது உத்தியை மாற்றிக் கொண்டு திராவிடக் கட்சிகளோடு இணைந்து தேர்தல் வெற்றிகளை ஈட்ட முயற்சிக்கின்றனர்.

இந்து தேசியம் எனும் வெறுப்பு அரசியல், இந்து உணர்வை வெறித் தனமாகத் தூண்டி இந்து வாக்கு வங்கியை உருவாக்குவது என்ற வகையில் ஆர்எஸ்எஸ் பரி வாரங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்துள்ளன. இதற்காகத் தேடித் தேடிப் பிளவைத் தூண்டும் பிரச்சனைகளை கையிலெடுத்து மதவெறிப் பிரச்சாரத்தையும் போராட்டங் களையும் நடத்தி வருகின்றனர். அடையாளத்தை அழிக்கும் ‘ஆலிங்கன’ உத்தி திராவிடக் கட்சிகளைப் பின்னுக்குத்தள்ளி இந்துத்துவா மேலாதிக்கம் செலுத்துகிற ஒரு நிலையை உருவாக்க வேண்டும் என்பது  அவர்களுடைய நோக்கம். இது ஒரு ‘திரு தராஷ்டிர ஆலிங்கன’ உத்தி. மகாராஷ்டிரா, அசாம், பீகார் போன்ற பல மாநிலங்களில் இதர  பெரிய கட்சிகளோடு சேர்ந்து அந்தக் கட்சி களின் தொண்டர்களையும் அணிகளையும் தங்கள் பக்கம் இழுத்து அந்தக் கட்சிகளை அடை யாளம் தெரியாமல் அழிக்கிற வேலையை அவர்கள் செய்தனர். இது அவர்களுக்குக் கைவந்த கலை. அதையே தமிழகத்தில் பின்பற்ற அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் இதேபோன்று நீண்ட காலம் அவர்கள் முயற்சி செய்தனர். கோவை குண்டு வெடிப்பு அவர்களுக்கு முக்கிய தருணமாக அமைந்தது.

தொடர்ந்து இஸ்லாமிய மக்களுக்கு விரோதமான பிரச்சாரத்தை முன்னெடுத்து, இந்து வெறியுணர்வைத் தூண்டி தங்களுடைய தளத்தை விரிவுபடுத்த முயற்சித்தனர். தொழி லாளர்கள் மத்தியில் இடதுசாரி தொழிற்சங்கங் கள் வலுவாக இருப்பது அவர்களுக்குத் தடையாக இருந்தது. எனவே, அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் ஊடுருவி அவர்களிடமும் இந்து அடையாள உணர்வை கட்டியமைக்கும் வேலையைச் செய்தனர். குறிப்பாக ஆட்டோ உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்கள் மத்தியில் சங்கங்களை ஏற்படுத்தி தங்கள் செல்வாக்கை அதிகரிக்க முயற்சித்து வந்தனர். இப்படிப்பட்ட சூழலில் பல மாவட்டங்களில் தங்கள் அமைப்பை ஏற்படுத்துவதற்கு மிஸ்டு கால், சமூக விரோதிகளை அணி சேர்ப்பது என பல வகைகளில் அவர்கள் ஆள் திரட்டினர். இந்த நீண்ட கால முயற்சிகளின் தற்போதைய கட்டம்தான் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி. தேசிய ஜனநாயக கூட்டணி என்கிற பெயரை முன்னிறுத்த முயற்சிக்கின்றனர். இதன் வழியாக இந்துத்துவாவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துவிடலாம் என்று கனவு காண்கின்ற னர். இந்த முயற்சி தமிழகத்தில் வெற்றிபெறாது. விழிப்புணர்வே  வெற்றிக்கான வழி எனினும் தமிழக மக்கள் உறுதியாகவும், விழிப்புடனும் இருந்து இந்தச் சதிகளை முறிய டிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி முழுமையாகத் தோல்வி அடைவது தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்தது.

 சில வெற்றிகளைப் பெற்றால் கூட அவர்கள் அரசியல் தளத்தில் பெற்ற அந்தச் செல்வாக்கை பயன்படுத்தி கலாச்சாரம், கல்வி, சித்தாந்தம் என பல துறைகளில் செயல்பட்டு சமூகப் பிளவு, கலவரம் என்ற பாதையில் பயணப்பட்டு தமிழ்நாட்டின் உயரிய மதநல்லிணக்க மாண்பு களை அழித்துவிடுவார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய பாஜக அரசை இந்துத்துவ - கார்ப்பரேட் கூட்டணி அரசு என்று தொடர்ந்து அடையாளம் காட்டி வரு கிறது. அவர்களது 12 ஆண்டுக்கால ஆட்சியில் உழைக்கும் மக்கள் வறுமை, வேலையின்மை, வாழ்க்கைத்தர வீழ்ச்சி போன்ற இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடுகிறது.

உழைக்கும் மக்கள் நலனைப் பாது காக்க தமிழக சட்டமன்றத்தில் இடதுசாரிகள் பலம் அதிகரிப்பது அவசியம். கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் லெஃப்ட்வியூ இணையத்தில் எழுதிய கட்டுரையில் இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்ப்பதற்கான பொருத்தமான அணுகு முறையை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்துத்துவ-கார்ப்பரேட் ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் சரியான வழிமுறை என்பது, நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளாலும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது இந்துத்துவ விழுமியங்கள் மற்றும் சித்தாந்தங்கள் திணிக்கப்படுவதாலும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் வர்க்கங்களையும் அணிதிரட்டுவதே ஆகும்.” அரசியல் சாசன விழுமியங்களை மீட்போம்! எதிர்வருகிற தேர்தலில் மக்களையும், சுரண்டப்படுகிற வர்க்கங்களையும்,

ஒடுக்கப்படுகிற மக்களையும் ஒன்று திரட்டி பாஜக - அதிமுக கூட்டணியை முறியடிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அயராது பாடு படும். எதிரணிக்கு கிடைக்கும் தோல்விக்கு அகில இந்திய தாக்கம் உண்டு. அரசியல் சாசனத்தின் மூன்று அடிப்படைகளான மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி ஆகியவற்றை பாஜக காலில் போட்டு மிதித்து வருகிற நிலையில் அந்த விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்.