மகளிர் கடன் சுமை அதிகரிப்பு - நுண் நிதி நிறுவனங்களின் கொள்ளை
மகளிரின் கடன் சுமை அதிகரித்து வருவது குறித்தும் இதில் நுண் நிதி நிறுவனங்கள் (Micro finance institutions), சிறு நிதி நிறுவனங்கள் (Small Finance banks), தனியார் வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களின்(NBFCs) பங்கு குறித்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடந்த ஓராண்டாக ஆய்வு செய்து வருகிறது. 21 மாநிலங்களில் 100 மாவட்டங்களில் 9,000 விளிம்புநிலை மகளிரை சந்தித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் வெளிவந்த தகவல்கள் கடன் பெற்ற மகளிரின் வாக்குமூலங்களாகும். ஆகஸ்ட் 23-24ஆம் தேதிகளில் புதுதில்லி ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெறும் தேசிய பொதுக் கலந்தாய்வில் (National Public hearing) இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 600 மகளிர் இந்த கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். இந்த ஆய்வறிக்கையின்போது, மாதர் சங்க செயற்பாட்டாளர்கள் பல்வேறு குடும்பங்களைச் சந்தித்துள்ளனர். கடன் சுமை தாளாமல், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பல்வேறு பெண்கள்
தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நுண்நிதி நிறுவனங்களின் கடன் வசூலிப்பு முகவர்கள் கடனை வசூலிக்க பல்வேறு விதமான முறையற்ற செய்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் கடன் பெற்ற பெண்கள் பல்வேறு விதமான தாக்குதல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர். பலர் தங்கள் சொத்துக்களை இழந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிலர் இந்தக் கலந்தாய்வில் பங்கு பெறும் நடுவர்களிடம் தங்கள் குறைகளை முறையிட்டு நியாயம் கேட்கவுள்ளனர். இந்த ஆய்வறிக்கைக்கான பணியின் போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு கிடைத்த தகவல்களில் சில: • இந்தியாவில் குறைந்த வருமானம் பெறும் வறிய குடும்பங்கள் முறைசாரா வழியில் அதிகவட்டிக்கு கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. • இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையமான சிஎம்ஐஇ (Centre for Monitoring Indian Economy) வெளியிட்டுள்ள தகவலி ன்படி, 2018-2019ஆம் ஆண்டிலிருந்து 2022-23ஆம் ஆண்டுகளில் பொருளாதார ரீதியாக நலிந்த
பிரிவினர் முறையான நிறுவனங்களில் கடன் பெறும் விகிதம் 4.2%ஆக குறைந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மாதம் ரூ.15,000க்கும் குறைவான வருமானம் பெறுபவர்கள். மேற் குறிப்பிட்ட ஆண்டுகளில் இந்த வர்க்கத்தினர் முறைசாரா கடன் நிறுவனங்களிடம் (சீட்டுக் கம்பெனிகள், கந்துவட்டிக்காரர்கள், நண்பர்கள்) பெறும் கடன்களின் விகிதம் 5.8% ஆக அதிகரித்துள்ளது. • 1969ஆம் ஆண்டு 18%ஆக இருந்த கிராமப்புற வங்கிக் கிளைகள் 1990களில் 60% வளர்ந்தது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் கிராமப்புற வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை வெறும் 29% ஆக குறைந்துள்ளது. இந்த இடைவெளியை வங்கிசாரா நிதி நிறுவனங்களும் நுண்நிதி நிறுவனங்களும் பயன்படுத்திக்கொண்டு மிக அதிக வட்டியில் கடன் அளிக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் வட்டி வரம்பு நீக்கம் • இந்திய ரிசர்வ் வங்கி வட்டி வரம்பிற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இதனால் மிகை வட்டியில் கடன் அளிக்கும் நிறுவனங்களும் கந்துவட்டிக்காரர்களும் அதிகரித்துள்ளனர். • இந்தியாவில் நுண்நிதி நிறுவனங்களின் நிலை குறித்து ‘நபார்டு’ வெளியிட்டுள்ள அறிக்கை இது குறித்து எச்சரித்துள்ளது. பல்வேறு தனியார் கடன் கொடுப்பவர்கள் வளர்வதும், வட்டி மீதான வரம்பை ஆர்பிஐ நீக்கியதும் பல்வேறு பகுதிகளில் கடனை அதிக ரித்துள்ளது. இது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனை என்றும் பயனாளர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி ஒரு குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்குமாறு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்றும் ‘நபார்டு’ கூறியுள்ளது. நபார்டு எச்சரிக்கை • நுண்நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் முறை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பொறுப்புணர்வுடன் கடன் அளிக்கும் நிறுவனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு பரவலாக்கப்பட வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள் கண்டிப்புடன் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று ‘நபார்டு’ கூறியுள்ளது. தரவுகள் திருட்டு அதிகரிப்பு • கடன் செயலிகளும் வங்கி சாரா நிதி நிறுவனங் களும் நம் தரவுகளை திருடுகின்றன. இந்த கடன் செயலிகளை பயன்படுத்திய பலரின் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த துஷ்பிரயோகம் சமீபத்திய ஆய்வின்படி 61% அதிகரித்துள்ளது. • இந்தியக் குடும்பங்களில் அதிகரித்துள்ள கடன், சொத்து வாங்கி குவிப்பதற்காக பெறப் பட்ட கடன் அல்ல. அன்றாட செலவினங் களுக்கே மக்கள் கடன்பெறும் நிலையில் வாழ்நிலை உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், தேக்கம் அடைந்துள்ள ஊதியம், பொதுத்துறை வங்கிகளை திரும்பப் பெற்றது போன்ற நடவடிக்கைகளால் கடன் முதலைகளின் ஆடுகளமாக ஏழை குடும்பங்களின் வாழ்க்கை மாறியுள்ளது. மக்களின் வறுமையை இந்நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டு அவர்களிடம் சொற்ப வருமானத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. 25 சதவீதம் முதல் 200 சதவீத வட்டி • கடன் செயலிகளை பயன்படுத்தியவர்கள் பின்வரும் தகவல்களை பகிர்ந்துள்ளனர். •
45% பயனர்கள் 25% வட்டி விகிதத்தில் கடன் பெற்றுள்ளனர். • 10% பயனர்கள் 50-100% வட்டி விகிதத்தில் பெற்றுள்ளனர். • 20% பயனர்கள் 100-200% வட்டி விகிதத்தில் கடன் பெற்றுள்ளனர். • இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களின் வரம்பை நிர்ணயிப்பதில்லை என்று எடுத்த முடிவு ஏழை மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்த சிக்கல் குறித்து தேசிய அளவில் கிடைத்த தகவல்கள், இந்த நெருக்கடியை முடுக்கிவிட்ட அரசின் கொள்கைகள், இதற்கான மாற்றினை முன்வைத்த சில மாநில அரசுகளின் நடவடிக்கைகள், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரச்சாரங்கள், போராட்டங்கள் ஆகியவை குறித்தும் இந்தக் கலந்தாய்வில் விவாதிக்கப்படும். இந்தக் கலந்தாய்வில் நடுவர்களாக நீதியரசர் மதன் பி லோகுர், பிரபல பொருளாதார நிபுணர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக், பத்திரிகையாளர் பமீலா ஃபிலிபோஸ், வழக்கறிஞர் கீர்த்தி சிங் மற்றும் தொழிற்சங்கவாதிகள் தாமஸ் ஃப்ராங்கோ (பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்கத்தின் மேனாள் பொதுச் செயலாளர்) மற்றும் ப்ரியவர்த் (துணை பொதுச் செயலாளர்). ‘நபார்டு’ தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர். சிறப்புச் செய்தியாளர் : மனோன்மணி