நம்பகத்தன்மை நெருக்கடிக்குள்ளான தலைமைத் தேர்தல் ஆணையம்
எது நடக்கக்கூடாதோ அது நடந்து கொண்டிருக்கிறது. கடந்த பதினைந்து நாட்களில், நாட்டின் ஜனநாயகத்தின் மீது பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்கள் கூர்மையானமுறையில் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் மிகவும் அடிப்படையான ஒன்று, பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் செயல்முறை மூலம் ஜனநாயகத்தின் அடித்தளமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் அடித்தளமும் அச்சுறுத்த லுக்கு உள்ளாகி, அடித்து நொறுக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகும்.
இரண்டாவது பரிமாணம், அனைத்து அரசியல் கட்சிகளு க்கும் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் எந்தப்பக்கமும் சாயாது நடுநிலைமையி லிருந்து செயல்பட வேண்டிய அரசமைப்புச் சட்டத்தின் கீழான முக்கிய அமைப்பான தேர்தல் ஆணையம், ஆட்சியாளர்களால் நாசமாக்கப்பட்டிருப்பது நன்கு வெளிச்சத்திற்கு வந்திருப்பதாகும். மூன்றாவது பரிமாணம், தேர்தல் ஆணையம் தான்செய்துவரும் மோசடிகளை மறைப்பதற்காக பொய்களுக்கு மேல் பொய்களாகக் கூறி மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நிற்பதாகும். அனைவருக்கும் வாக்குரிமை மீது முதல் அடி... வயது வந்தோர் அனைவருக்கும் வாக்கு ரிமை என்னும் கொள்கையின் மீதான முதல் அடி ஜூன் 24 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) என்ற அறிவிப்பின் மூலம் தொடங்கியது. ‘சிறப்பு தீவிர திருத்தம்’ குறித்த பல்வேறு அம்சங்களை இந்தப் பகுதியில் இதற்கு முன்பே நாம் தெரிவித்திருக்கிறோம். இருப்பி னும், இதற்கு எதிராக பீகாரிலும், தேசிய அளவிலும் ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் ஆற்றிய எதிர்வினை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ‘சிறப்பு தீவிர திருத்தம்’ தொடர்பாக தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்த காலக்கெடு எந்தவொரு அர்த்தமுள்ள அல்லது விரிவான திருத்தத்திற்கும் மிகக் குறைவு.
எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பிற்கு எதிராக ஜூன் 25ஆம் தேதியிலேயே பீகாரில் போராட்டங்கள் தொடங்கி நாடு முழுவதும் அவை விரைவாகப் பரவின. கலந்தாலோசனை முறை அப்பட்டமாக மீறல் தேர்தல் ஆணையம் சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் இல்லாமல் ஒருபக்கம் சாய்ந்திருப்பது ஆரம்பத்திலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டது. இவ்வளவு பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன், அரசியல் கட்சிகளை தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ கலந்தாலோசிக்க ஆணையம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது நீண்டகாலமாக நிறுவப்பட்ட மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகும். இந்தத் தவிர்ப்பு அசாதாரணமானது மட்டுமல்ல, ஒருதலைப் பட்சமானதுமாகும். எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை, தேர்தல் ஆணையத்திற்கு முன்பாக நேரடியாகத் தெரிவித்தபோது, தேர்தல் ஆணையத்தைப் பாதுகாக்க பாஜக பாய்ந்துவந்திருக்கிறது. முந்தைய முறையிலான ஆவணங்களை ஏற்க மறுப்பு இந்தியாவில் உள்ள குடிமக்கள் எவரும் வாக்களிப்பதற்கு, விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து அனுப்ப தேர்தல் ஆணையம் பரிந்துரைத்திருந்த 11 ஆவணங்களில் ஒன்றை இதுவரை இணைத்து வந்தார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் இதனை இப்போது ஏற்க மறுக்கிறது. மாறாக ஆணையம் இப்போது அறிமுகப்படுத்தி இருக்கும் ‘சிறப்பு தீவிர திருத்த’ செயல்முறை பெருமளவில் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் ஒரு சூழ்ச்சியே என்பது தெளிவாகிவிட்டது. குடியுரிமை ஆதாரம் மையமாக்கப்படுகிறது ‘சிறப்பு தீவிர திருத்தம்’ என்பது தேர்தல் ஆணையத்தின் ஓர் அடிப்படை விலகலைக் குறிக்கிறது.
இதுநாள்வரையிலும் வாக்குரிமை என்பது வயதுவந்த அனைவருக்கும் என்ற முறையிலேயே அமைந்திருந்தது. இது தேர்தல் ஆணையத்தால் இதுவரை நன்கு செயல்படுத்தப்பட்டும் வந்தது. இதுவரையிலும் குடியுரிமை பற்றிய ஆதாரம் இந்த ஏற்பாட்டின் மையமாக இருந்ததில்லை. மக்கள் வாக்களிப்பது என்பது பல ஆண்டுகளாக ஒரு நன்கு நிறுவப்பட்ட நடைமுறையாகவே இருந்து வந்துள்ளது. இதன் கீழ் குறிப்பிட்ட ஆட்சேப ணைகளின் அடிப்படையிலும், அத்தகைய விஷயங்களில் தகுதிவாய்ந்த உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளின் சரிபார்ப்பு டனும் மட்டுமே நீக்கங்கள் செய்ய முடியும். எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க மறுத்த ஆணையம் ஜூலை முதல் வாரத்தில், எதிர்க்கட்சிகள் தங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்திக்க முயன்றன. எனினும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாது காப்பதற்கும், தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ என்பது அரசமைப்புச் சட்டத்தையே சவாலுக்கு அழைத்திருப்பதை சரி செய்வதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு உச்சநீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.
பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ‘சிறப்பு தீவிர திருத்தம்’ நடைமுறைக்கு முன்னர் இருந்த 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரிய வந்தபிறகு, இந்த விஷயத்தின் அவசரம் தீவிரமடைந்தது. அதிக எண்ணிக்கையிலான நீக்கங்கள், இறப்புகள் மற்றும் “கண்டுபிடிக்க முடியாத” வாக்காளர்களால் ஏற்பட்டன.
இது, பெரும்பாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர் களைக் குறிக்கிறது. தெளிவான நோக்கத்துடன் புதிய பட்டியல் உருவாக்க... 2025 ஜனவரியில், ஏப்ரல்-மே மாதங்களில் அறிவிக்கப்பட்ட சுருக்கமான திருத்தத்திற்குப் பிறகு மிகப்பெரிய எண்ணிக்கையிலான நீக்கங்கள் குறித்து இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி. இது ஒரு திருத்தம் அல்ல, மாறாக, பெருமளவில் நீக்கங்களை உறுதி செய்யும் தெளிவான நோக்கத்துடன் ஒரு புதிய பட்டியலை உருவாக்குவதாகும். தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையத்தில் ஒரு சேர்க்கை கூட செய்யப்படவில்லை. இந்தச் செயல்பாட்டில், ஆணையம் அறுபத்தைந்து லட்சம் வாக்காளர்களை நீக்கியது மட்டு மல்லாமல், குறிப்பிட்ட காரணங்களுடன் நீக்கப்பட்டவர்களின் பெயர்களையும் வெளி யிட மறுத்துவிட்டது. இந்தப் பயிற்சியின் அருவருப்பான தன்மை தெளிவாகத் தெரிந்து விட்டது. மேலும் உச்சநீதிமன்றம், அதன் இடைக்கால உத்தரவில், டிஜிட்டல் முறையில் படிக்கக்கூடிய வடிவத்தில் காரணங்களுடன் நீக்கல் பட்டியலை வெளியிட ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஆதாரை செல்லுபடியாகும் வசிப்பிடச் சான்றாக ஏற்றுக்கொள்ளவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், கடுமையான சிக்கல்கள் உள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக, குடியுரிமை நிர்ணய செயல்முறைகளைத் தொடங்குவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அதிகாரம் உண்டா என்னும் கேள்வியுமாகும். சிறப்பு திருத்தத்தின் பெயரில்... ‘சிறப்பு தீவிர திருத்தம்’ என்ற பெயரில், தலைமைத் தேர்தல் ஆணையம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டு (NRC) செயல்முறையைக் கொல்லைப்புறக் கதவு வழியாகக் கொண்டுவர முயற்சிப்பதாக ஒரு பரவலான நம்பிக்கை உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களில் இது ஒரு மைய பிரச்சாரமாக இருக்கும் என்பதை பிரதமர் நரேந்திர மோடியே செங்கோட்டையில் தனது சுதந்திர தின உரையில் அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறார். அங்கு அவர் ‘குஸ்பெடி யாக்கள்’ (ஊடுருவலாளர்கள்) என்று அழைக்கப்படுபவர்களுக்கு எதிராக ஒரு புதிய போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். அம்பலப்படுத்திய ஆய்வுகள் சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படை இலக்குகள், ஆய்வுகள் மற்றும் தரவுப் புள்ளிகள் முக்கிய ஊடகங்களில் கூட அம்பலப்படுத்தப் பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலை ஆய்வு செய்திடும் லோக்நிதி-சமூக அறிவியல் மற்றும் மனிதநேயத்திற்கான வளரும் சமூகங்களின் ஆய்வு மையம் (Lokniti-CSDS) மேற்கொண்ட ஆய்வுகள், பீகார் மக்கள், 11 பரிந்துரைக்கப்பட்ட ஆவணங்களை அணுகுவதில் மிகவும் குறைவாகவே இருந்துள்ளனர் என்பதை நிறுவியிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், அத்தகைய சான்றிதழ்களை வழங்குவதற்கு மாநிலத்திற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததேயாகும். மற்றொரு ஆய்வு, வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம்களும், பெண்களும் அதிக அளவில் நீக்கப்பட்டிருக் கின்றனர் என்று காட்டுகிறது. இது அங்கே ஆழமாக வேரூன்றியுள்ள சமூக சமத்துவ மின்மையைப் பிரதிபலிக்கிறது.
நம்பகத் தன்மைக்கு சாவுமணி அடிப்பு இதற்கிடையில், இணையத்தில் கிடைக்கும் தரவுகளிலிருந்து, இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ள ஆவ ணங்களின் அடிப்படையில், பெங்களூரு சட்டமன்றத் தொகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, வாக்காளர்கள் சேர்க்கையில் தில்லுமுல்லுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதிருந்த நம்பகத்தன்மைக்கும் சாவுமணி அடித்து விட்டது. அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் ஆய்வு இதை உறுதிசெய்துள்ளது. இதுவும் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையில் விரைவான சரிவுக்கு மேலும் வழிவகுத்தது. முற்றிலும் அம்பலமான தேர்தல் ஆணையரின் பேட்டி தேர்தல் ஆணையத்தின் மீதிருந்து வந்த கொஞ்சநஞ்ச நம்பகத் தன்மையை யும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகஸ்ட் 17 அன்று அளித்த பேட்டி, முற்றிலுமாக அடித்துவீழ்த்திவிட்டது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒருதலைப்பட்ச மான முறையில் அவர் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் பொய்களின் ஒரு பகுதியை வெளியிட்டார்.
தேர்தல் ஆணையத்திற்கும் பாஜகவிற்கும் இடையிலான வெட்கக்கேடான உடந்தையை இதைவிட வெளிப்படையாக அம்பலப்படுத்த முடியாது. இந்தப் போராட்டம் இப்போது மக்கள் மன்றத்தின் முன் உள்ளது. பீகார் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்காக ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கப்பட்ட ‘வாக்களிக்கும் அதிகார யாத்திரை’ செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் நிறைவடைகிறது. இதற்கிடையில், சுதந்திரமான அரசமைப்புச்சட்டத்தை அகற்றுவதற்கு எதிராகவும், மக்களின் விலைமதிப்பிடற்கரிய உரிமையான வாக்குரிமையைப் பறிப்பதற்காக நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கு எதிராகவும், நாடு முழுதும் மக்களை அணிதிரட்ட வேண்டும். ஆகஸ்ட் 20, 2025
- தமிழில்: ச.வீரமணி