சிஐடியு மே தின பிரகடனம்!
உலகத் தொழிலாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்!
அமைப்பு ரீதியிலான நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கும் முதலாளித்துவத்தின் மூர்க்கத்தன மான தாக்குதல்களுக்கு எதிராகவும், போராடிப் பெற்ற உரிமை களை பாதுகாப்பதற்காகவும், கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் உலகம் முழுவதும் உள்ள பாட்டாளி மக்களுக்கு சிஐடியு, இந்த மே தினத்தன்று தனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற பதாகையை சிஐடியு உயர்த்திப் பிடிக்கிறது. சுரண்டல், பாகுபாடுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டுள்ள தொழிலாளிகளுக்கும், அமைதி மற்றும் நல்லிணக்கம் ஏற்படுத்த பாடுபடும் தொழிலாளர்களுக்கும், சிஐடியு தனது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.
மே 20 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் - செவ்வணக்கம்!
அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை மற்றும் தொழில் வாரி சம்மேளனங்கள் சார்பில், வருகிற மே 20-இல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு சிஐடியு தனது செவ்வணக்கத்தை உரித்தாக்குகிறது. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீது ஆளும் வர்க்கங்கள் தொடுக்கும் கொடூரமான தாக்கு தலுக்கு எதிராக, இந்திய தொழிலாளி வர்க்கம் நடத்த உள்ள மிகப்பெரிய போராட்ட நடவடிக்கைதான் மே 20 பொது வேலை நிறுத்தம். வர்க்க அடிப்படையிலான தொழிற்சங்கம் என்ற முறையில், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் எதிர்தாக்குதல் என்ற புதிய காலகட்டத்தை துவக்கி வைக்கும் இந்த பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்யும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற சிஐடியு முனைப்பாகச் செயல்படுகிறது. தேசிய பொருளாதாரத்தை, நாட்டு மக்களை சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரானது இந்தப் போராட்டம். அடிப்படை ஜனநாயக உரிமைகள், அரசியல் சட்டத்தின் மீதான தாக்குதலுக்கு எதிரானது; போராடிப் பெற்ற தொழிலாளி வர்க்கத்தின் பணியிட உரிமைகளை பாதுகாக்கும் போராட்டம்.
சர்வதேச தொழிலாளி வர்க்க இயக்கம் வாழ்க!
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, வலதுசாரி நவீன பாசிச அரசியல் சக்திகளுக்கு எதிராக, பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தி வரும் உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையின் கீழ், சர்வதேசரீதியான வர்க்க அடிப்படையிலான தொழிலாளி வர்க்க இயக்கத்தை சிஐடியு வாழ்த்துகிறது.
சோசலிச நாடுகளுக்கு வாழ்த்துக்கள்!
சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிக்கின்ற சீனா, கியூபா, வியட்நாம், லாவோஸ், வடகொரியா ஆகிய சோசலிச நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தை சிஐடியு வாழ்த்துகிறது. ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை முறியடித்து, மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்ற, சோசலிசத்தை பாதுகாப்பதற்கு, சோசலிச நாடுகள் எடுக்கும் முயற்சிகளை பெருமையுடன் நாம் கவனத்தில் கொள்கிறோம். 60 ஆண்டுகளுக்கு மேலான, மனிதாபிமானமற்ற அமெரிக்க பொருளாதாரத் தடைகள் மற்றும் முற்றுகைக்கு எதிராக, தீரமுடன் போராடிவரும், கலங்கரை விளக்காக திகழும், நம்பிக்கை மற்றும் உத்வேகம் ஊட்டும் சோசலிச கியூபாவிற்கு சிஐடியு ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூர்க்கத்தனம்!
அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மூர்க்கத்தனமான அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்குதல்கள் மீது சிஐடியு ஆழ்ந்த கவனம் செலுத்துகிறது. டிரம்பின் கீழ் செயல்படும், நெருக்கடி மிக்க அமெரிக்க அரசு வணிக யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. பல நாடுகள் இதற்கு பதிலடி கொடுத்து வருகின்றன. சீனா பன்முக உலகத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தலைமை பாத்திரம் வகிக் கிறது. தெற்குலக நாடுகளின் மக்கள் மீது காப்பு வரிகள் யுத்தம் ஒரு ஆழமான தாக்கத்தை உருவாக்கும்.
காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை - எதிர்த்து நிற்போம்!
போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி, காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் மனித இன படுகொலை மிகவும் துயரமானது. 50 ஆயிரத்துக்கு மேல் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக்கணக்கானோர் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் காயமுற்று உள்ளனர். அனைத்து சர்வதேச சட்டங்களையும் மீறி, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியம் இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு முழு ஆதரவாக உள்ளது. காசாவின் பள்ளிகளை, மருத்துவமனைகளை, ஐநா அகதிகள் முகாம்களை, இஸ்ரேல் அருவருப்பான வகையில் தரைமட்டமாக்கி வருகிறது. நிராயுதபாணிகளான சிவிலியன்களை, பெண்கள், குழந்தைகள் உட்பட கொன்று குவிக்கிறது. இஸ்ரேல் லெபனானின் மீது தாக்குதல் நடத்தி போரை விஸ்தரித்துள்ளது. போர்நிறுத்தம் ஏற்படு வதற்கு முன்னதாகவே 3700 லெபனான் நாட்டினர் கொல்லப்பட்டனர். சிரியா, ஏமன், ஈரான் மற்றும் இராக்கை யும் இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியது. அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஏமனை தாக்குவதில் இணைந்து கொண்டன. இந்த இனப்படுகொலை யுத்தத்தில் ஆயுதங் களை சப்ளை செய்ததன் மூலம் அமெரிக்க ராணுவத் தள வாடக் கம்பெனிகள் மிகுந்த லாபமீட்டி உள்ளன. பாலஸ்தீன சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவாக இந்திய தொழிலாளி வர்க்கம் கரம் கோர்த்து நிற்க வேண்டும் என சிஐடியு அறைகூவி அழைக்கிறது. காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலைக்கு எதிராக, சர்வதேச நிர்பந்தத்தை கொண்டு வரும் வகையில், உலகம் முழுவதும் உள்ள மக்களை திரட்டுகின்ற, ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல, சிஐடியு சூளுரைக்கிறது.
உக்ரைன் யுத்தம் - புவி அரசியல் விளைவுகள்
உக்ரைனில் நடைபெறும் யுத்தம் முக்கியமான புவி அரசியல் சம்பந்தப்பட்டது. அமெரிக்காவும், நேட்டோவும், ஏராளமான ஆயுதங்களை, நிதி வசதியை உக்ரைனுக்கு ஏற்படுத்திக் கொடுத்த போதிலும், உக்ரைன் ரஷ்யாவை பின்னுக்குத் தள்ள முடியவில்லை. ரஷ்யா மீதான வணிகத் தடைகள், ஐரோப்பாவை மிகவும் பாதித்துள் ளன. அங்கு உணவு மற்றும் எரிபொருள் விலைகள் உயர்ந்துள் ளன. ஐரோப்பாவின் துயரங்களுக்கு மத்தியில், அமெரிக்க எரிபொருள் கம்பெனிகள் மிகுந்த லாபம் ஈட்டுகின்றன. ஏகாதிபத்திய முகாமில், சில விரிசல்களை உக்ரைன் குறித்த டிரம்பின் அணுகுமுறை உருவாக்கியுள்ளது.
முற்போக்கு சக்திகளின் முன்னேற்றம்!
உலகம் முழுவதும் பெருவாரியான நாடுகளில் தீவிர வலதுசாரி அரசியல் மேலோங்கி வந்த போதிலும், கொலம்பியா, பிரேசில், மெக்ஸிகோ, உருகுவே, இலங்கை போன்ற பல நாடுகளில் இடதுசாரிகள் மற்றும் முற்போக்கு சக்திகள், வலதுசாரி சக்திகளுக்கு எதிராக, நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக, தொடர்ச்சியாகப் போராடுவதன் மூலம், முன்னேற்றம் கண்டுள்ளன.
உலகளாவிய நெருக்கடி ஆழமடைகிறது!
முதலாளித்துவம் அமைப்பு ரீதியான நெருக்கடி யை சந்திக்கக்கூடிய இக்காலகட்டத்தில், பல கண்டங்களில் ராணுவ சதிகளும், ஆயுத மோதல்களும் அதி கரித்து வருகின்றன. உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. அசமத்துவம், வறுமை, வேலையின்மை, பசிக் கொடுமை மற்றும் போசாக்கின்மை வளர்ந்து வருகின்றன. உலக நெருக்கடி ஆழமடைந்து வருகிறது. எல்லையற்ற கடன் சுமையில் உலகம் நுழைகிறது. நெருக்கடியின் முழுச் சுமை களையும் தொழிலாளிகள் மீது, தெற்குலக நாடுகளின் மக்கள் மீது, சுமத்துவதற்கு ஏகாதிபத்திய சக்திகள் முயல்கின்றன.நெருக்கடியினால் தொழிலாளி வர்க்கத்தின் துயரங்கள் அதிகரித்து வந்த போதிலும், நவீன தாராளமய முத லாளித்துவ அமைப்பின் திவால் தன்மையை கூட்டாக எதிர்த்து போராட, ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி உள்ளது. நவீன தாராள மயக் கொள்கைகளின் தாக்குதலுக்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவுகளின் எதிர்ப்பும் வளர்ந்து வருகிறது.
உலகெங்கும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள்!
கடந்த ஆண்டு பல நாடுகளில் தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் பிரம்மாண்டமான வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் நடைபெற்றன. ஒரு சில மாத இடைவெளியில், கிரீஸ் நாடு இரண்டு பெரும் திரள் வேலை நிறுத்தங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வேலை நிறுத்தங்கள் அந்நாட்டை நிலைகுலையச் செய்தன. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படு கொலைகளுக்கு எதிராக உலகம் முழுவதும், பல லட்சக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருவது உத்வேகம் அளிக்கிறது. அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் அரசியல் நிகழ்ச்சிப் போக்கு கள், நிலையற்ற தன்மைகளை சிஐடியு கவனத்தில் எடுத்துக் கொள்கிறது.
இந்திய தொழிலாளி வர்க்க இயக்கம் எதிர்கொள்ளும் சவால்கள்!
சம கால முதலாளித்துவத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியினால் எழக்கூடிய வரலாறு காணாத சவால் மிக்க சூழ்நிலைமையை இந்திய தொழிலாளி வர்க்க இயக்கம் சந்திக்கிறது என்பதை சிஐடியு உணர்ந்துள்ளது. ஆளும் வர்க்கத்தின் பதில் நடவடிக்கைகள் மென்மேலும் மூர்க்கத்தனமாகவும் எதேச்சதிகாரமாகவும் உள்ளது. திட்டமிட்ட வகையில் மக்களின், கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஜனநாயக உரிமைகளைப் பறித்து வருகிறது; பணி யிடங்களிலும், தேசிய அளவிலும் தொழிலாளி வர்க்கத்தின் மீது இத்தகைய தாக்குதலை நடத்துவது, பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் முத்திரையாக உள்ளது. அது நவீன பாசிச குணாம்சங்களை வெளிப்படுத்தி வருகிறது
. மக்களவை தேர்தல் முடிவுகள் - மக்களின் எதிர்ப்பின் வெளிப்பாடு!
பதினெட்டாவது மக்களவை தேர்தல் முடிவுகள், பாஜக- ஆர். எஸ். எஸ் கூட்டு அறுதிப் பெரும் பான்மை பெற முடியவில்லை. அடிப்படை வர்க்கங்களின், விவசாயிகளின், குறிப்பாக தொழிலாளி வர்க்கத்தின் தொடர்ச்சியான எதிர்ப்பியக்கமே, இதற்குக் காரணம். நாடாளுமன்றத்தில் பலம் குறைந்த போதிலும், கார்ப்பரேட் மதவாதக் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு, நவீன தாராள மயக் கொள்கைகளை, அனைத்துத் துறை களிலும், பொருளாதார மற்றும் சமூக நிர்வாகங்களில், சர்வாதிகார நடவடிக்கைகள் மூலமாக வேகமாக அமலாக்கி வருகிறது. தொழிலாளி வர்க்கத்தை கிட்டத்தட்ட அடிமை நிலைக்குத் தள்ளும், சட்டத்தொகுப்புகளை அமலாக்கு வதற்கான முயற்சிகள், இத்தகைய வெறித்தனத்தின் ஒரு வெளிப்பாடு. சட்டத் தொகுப்புகள் நிறைவேற்றி ஐந்து ஆண்டு கள் ஆன போதிலும், அரசினால் இவைகளை அமலாக்க முடியாமைக்கு காரணம், தொழிலாளி வர்க்கம் பல்வேறு மட்டங்களில், அரங்கவாரியாக, தேசிய வாரியாக, தொடர்ச்சியாக வலுவாக நடத்திய எதிர்ப்புப் போராட்டங்களே.
தொழில் உறவுகள் மோசமடைகின்றன!
திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத துறைகளில் தொழில் உறவுகள் மிகவும் மோசம் அடைந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன தொழில்நுட்பமானது, தொழிலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு எதிராக, லாபத்தை உயர்த்துவதற்காகச் செயல்படுகிறது. தொழிலாளர்கள் பெற்றுள்ள அனைத்து பணியிட உரிமைகளையும் பறித்து, சங்கமற்ற பணியிடங்களை உருவாக்குவது அரசின் நோக்கம். தொழிலாளருக்கான செலவினத்தை குறைப்பது மட்டுமல்ல, கிட்டத்தட்ட ஒரு அடிமை நிலையை உருவாக்கு வது, தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடக்கூடிய தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்வதாகும். சட்டத் தொகுப்புகள் இந்த திசை வழியில் செயல்படுகின்றன. நிரந்தர வேலை வாய்ப்பு என்பது கடந்த காலத்துடன் முடிந்துவிட்டது. தற்பொழுது பெருமளவிலான பணிகளில் வெளியிட முகமை, அப்ரண்டீஸ், பயிற்சியாளர்கள், வேலை பழகுபவர்கள் போன்றவர்களே நியமிக்கப்படுகின்றனர். தொழிலாளர் சட்ட ங்களில் இருந்து தொழிலாளர்களை தள்ளி வைப்பதற்காக, நூதனமான வார்த்தை ஜாலங்களை அரசு கையாள்கிறது.
விவசாயிகள் மீதான தாக்குதல்கள்!
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு புழக்கடை வழியாக கொடூரமான விவசாயச் சட்டங்களை திரும்பவும் நுழைக்கப் பார்க்கிறது. இவற்றை விவசாய இயக்கம், வரலாறு படைத்த போராட்டம் மூலமாக வாபஸ் பெற வைத்தது. புதிய விவசாயச் சந்தைக் கொள்கை என்பது இத்தகைய மோசடித்தனமான நடவடிக்கைகளின் வெளிப்பாடு. நமது நாட்டு விவசாயச் சந்தையை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு, அந்நாட்டிடம் வெட்கமில்லாமல் ஒன்றிய அரசு சரணாகதி அடைந்து வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் எல்லாம் வனங்கள், சுரங்கங்கள், நிலம் மற்றும் கடல் உள்பட நமது இயற்கை ஆதாரங்களை ஏகபோக முதலாளிகளும் அவர்களது கள்ளக் கூட்டணியும் ஆதாயம் அடையும் வகையில் எடுக்கப்படுகின்றன. இவைகள் எல்லாம் சுற்றுப்புறச் சூழல் மீது நாசகரமான தாக்குதலை ஏற்படுத்துகிறது. நாசகரமான வகையில் பருவநிலை மாறுதலைக் கொண்டு வருகிறது.
மூர்க்கத்தனமான தனியார்மயக்கொள்கைகள்!
மிகவும் மூர்க்கத்தனமாக ஆட்சியாளர்கள் தனியார் மயக் கொள்கைகளை அமலாக்கி வருகிறார்கள். குறிப்பாக மின்சாரம், நிலக்கரி, இதர சுரங்கங்கள், துறை முகம், வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் தனியார்மயம் தலைவிரித்தாடுகிறது. பொதுத்துறையை பாதுகாப்பதற்கும், இந்திய மக்களின் நலன்களை பாதுகாப்பதற்கும், இத்த கைய கேந்திரமான துறைகளில் உள்ள தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். அவர்களை சிஐடியு வாழ்த்துகிறது. பல முனை ஊக்கத்திட்டங்கள் என்ற போர்வையில், தேசிய கஜானாவிலிருந்து, முதலாளித்துவ வர்க்கங் களுக்கு நேரடியாக மானியம் பல்வேறு வகைகளில் வழங்கப்படு கிறது. இதற்கு மேலும் வசதியாக, நவீன தாராளமயத்திற்கு எதி ரான எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கான முயற்சியாக, மக்க ளின் ஜனநாயக, அரசியல் சட்ட உரிமைகள் பறிக்கப்படு கின்றன. மக்களின் கூட்டு கண்டனப் போராட்டங்களை, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், பண மோசடிச் சட்டம் போன்றவைகளுடன், பாரதிய நியாய சன்கிதா போன்ற புதிய சட்டங்கள் மூலமாகவும் ஒடுக்க முயற்சிக்கின்றனர்.
கார்ப்பரேட் குற்றங்கள் குற்றங்களல்ல என்கிறது அரசு!
அதே நேரத்தில், மோடி அரசு பாய்லர் சட்டம், வனச் சட்டம், தேயிலைச் சட்டம், ரப்பர் சட்டம், மருந்து துறை சட்டங்கள் உள்பட 41 சட்டங்களின் கீழ் கார்ப்ப ரேட்டுகள் புரியும் 180 குற்றங்களை குற்றங்கள் அல்ல என்று அறிவித்துள்ளது. ஜன விசுவாஸ் சட்டத்தின் கீழ் இத்தகைய சரத்துகள் நுழைக்கப்பட உள்ளன. இந்த சட்டங்களை மீறும் பொழுது வழங்கப்பட்டு வந்த சிறைத் தண்டனைகள் ரத்து செய்யப்படுகிறது. ஓரளவு அபராதம் கட்டினால் போதும். சமீபத்திய யூனியன் பட்ஜெட்டில், மேலும் 100 கிரிமினல் குற்றங்களை, குற்றங்கள் அல்ல என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கேள்வி கேட்பார் இல்லாமல், தொழிலாளர் சட்டங் களை இஷ்டம் போல் மீறுவதற்கான லைசன்ஸ் இது. ஷ்ரம் சமாதன் மற்றும் ஷ்ரம் சுவிதா இணையங்களில் புகார் கொடுத் தால், ஆய்வு மேற்கொள்வது என்ற நடைமுறை கைவிடப்படுகிறது.
தொழிலாளர் போராட்டங்கள் குற்றமாக்கப்படுகின்றன!
மறுபுறத்தில் போராடிப் பெற்ற உரிமைகளை நிலை நாட்டுவதற்காக தொழிலாளிகள் கூட்டு நட வடிக்கையில் ஈடுபட்டால், அவை குற்றங்களாக கருதப்படு கின்றன. தொழிலாளர்கள் மற்றும் அவர்களது சங்கங்கள் கூட்டாக புகார் தெரிவித்தால் கூட அது பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 111 பிரிவு படி திட்டமிடப்பட்ட கிரிமினல் குற்ற மாகக் கருதப்பட்டு, ஜாமீன் இல்லாத சிறைத் தண்டனை வழங்குவதற்கு இட்டுச் செல்கிறது. ஏற்கனவே பல மாநிலங் களில் தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர் குறை களை நிர்வாகத்திடம் அல்லது தொழிலாளர் துறையிடம் முறையிட்டாலே, போலியான கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். சட்டத் தொகுப்புகள் அமலாவதற்கு முன்னதாகவே, வழக்கமான தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆன கேட் கூட்டங்கள், துறை வாரியான கூட்டங்கள், நோட்டீஸ் விநியோகம், மகஜர் சமர்ப்பிப்பது போன்றவைகள் எல்லாம் அரசுத் துறைகளில், அரசு நிறுவனங்களில் குறிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளிகள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
வேலையின்மை அதிகரிப்பு - உண்மை ஊதியம் வீழ்ச்சி!
நாடு வரலாறு காணாத வேலையின்மையை சந்தித்து வருகிறது; உண்மை ஊதியம் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு மதிப்புக் கூட்டலில் ஊதியத்தின் பங்கு 18.9%, ஆனால் 2023-ல் இது 15.9% ஆக குறைந்தது. இதே காலகட்டத்தில் லாபத்தின் பங்கு 38.7 சதவீதத்தில் இருந்து 51.9% ஆக உயர்ந்தது. தீவிர வறுமை மற்றும் போசாக்கின்மை அதி கரித்து வருகிறது. வேலைவாய்ப்பு, உணவு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவும் பல்வேறு மாநிலங்களில் ஆளும் பாஜகவும் ஊழலை நிறுவனமாக்கி உள்ளன. ஏழை எளிய மக்களின் கடன் சுமை எச்சரிக்கத்தக்க வகையில் உயர்ந்து வருகிறது. தனியார் நுண் நிதி நிறுவன கம்பெனிகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன. கடன் வாங்கியவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். இத்தகைய தாக்குதல்கள், கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவது என சிஐடியு உறுதி அளிக்கிறது.
வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைக்கும் மதவாத சக்திகள்!
ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்துவா சக்திகள் மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்துவதை சிஐடியு கவனத்தில் கொள்கிறது. நவீன தாராளமயத் தாக்குதலுக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தை இது பலகீனப்படுத்தும். வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும். மோடி தலைமையிலான அரசு, நிர்வாகம் மற்றும் சட்டப்பூர்வமான ஆட்சி செயல்முறைகளை இஷ்டம் போல் மாற்றுகிறது. மொத்த கல்வி அமைப்பை, உள்ளடக்கம் உள்பட மாற்ற முயற்சிக்கிறது. மதவெறி, சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கும் வகையில் கல்வி அமைப்பு மாற்றப்படுகிறது. சிறுபான்மை மக்கள் மத்தி யில் மதவாத அடிப்படைவாத சக்திகள் முனைப்பாகச் செயல் படுகின்றன. சித்தாந்த ரீதியாக, அரசியல்ரீதியாக, சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக, மதவாத சக்திகளுக்கு எதிராக தெருக்களில் இறங்கி சிஐடியு போராடும். உழைக்கும் மக்க ளின் வர்க்க ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை சிஐடியு பாதுகாக்கும்.
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரிப்பு!
நவீன தாராளமய நுகர்வு கலாச்சாரம், ஆணா திக்கம் ஆகிய இரண்டும் சேர்ந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடுக்கும் வன்முறைகளை சிஐடியு கவனத்தில் கொள்கிறது. பழைய பத்தாம்பச லித்தனம், பிற்போக்குத்தனமான நடைமுறைகள், சாதிய ஒடுக்கு முறை மற்றும் இதர வகையிலான பாகுபாடுகளும், சமூ கத்தில் தலை தூக்கி வருகின்றன. இத்தகைய சீரழிந்த கலாச்சாரத்தை எதிர்த்து சிஐடியு உறுதியாகப் போராடும். விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறை, சமத்துவ கோட்பாடு கள் அடிப்படையில், தொழிலாளி வர்க்க கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்ல சிஐடியு சூளுரைக்கிறது.
நாடு முழுவதும் வர்க்க அடிப்படையிலான போராட்டங்கள்!
போராடிப் பெற்ற உரிமைகள் மீது மற்றும் கலாச் சார, சமூகத்துறைகளில் வரலாறு காணாத தாக்குதல்களை சந்திக்கக்கூடிய இந்த தருணத்தில், வர்க்க அடிப்படையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதியினரை திரட்டிப் போராடுவது குறித்து சிஐடியு பெருமை கொள்கிறது. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், அநீதி களை எதிர்த்தும் எண்ணற்ற போராட்டங்கள் நாடு முழுவதும் தொழிற்சங்கங்களால் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் சாம்சங் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளி வர்க்கத்திற்கு உத்வேகம் அளித்துள்ளது; இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கும் அது மிகுந்த உத்வேகத்தை அளித்துள்ளது. மின்சார ஊழி யர்களின் வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் வர்க்கத்தை திரட்டுவதில் புதிய அளவுகோல்களை நிறுவியுள்ளன. மின்சா ரம் தனியார்மயத்தால் பாதிக்கப்படும் மக்களின் பேராதரவு, ஒருமைப்பாடு மின் ஊழியர்களுக்கு கிடைத்து வருகிறது. பல நிறுவனங்களில் நடைபெற்ற ஒப்பந்தத் தொழிலா ளர்களின் சில வெற்றிகரமான போராட்டங்கள் நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளன. ஆளும் வர்க்கத்தின் தொழில் உறவுகளை சீரழிக்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த முடியும் என்பதற்கான சான்று இது. சரியான திசைவழியில் வர்க்கப் போராட்ட இயக்கத்தை நடத்துவதன் மூலமாக, அரசின் ஒப்பந்த மயக் கொள்கைகளை முறியடிக்க முடியும். திட்டத் தொழிலாளர்களான அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவுத் திட்ட தொழிலாளிகள் பல்வேறு மாநிலங்களிலும், அகில இந்திய அளவிலும், தொடர்ச்சியாக தீர்மானகரமான பல போராட்டங்களை நடத்தி பல சாதனைகளை புரிந்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் குதித்து வரு கின்றனர். தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்புகளின் ஒருங்கிணை ந்த, ஒன்றுபட்ட நடவடிக்கைகள் குறித்து சிஐடியு மகிழ்ச்சிகொள்கிறது.
கேரள அரசுக்கு வாழ்த்து
மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை அம லாக்கி வரும் கேரளா இடது ஜனநாயக முன்னணி அரசை சிஐடியு வாழ்த்துகிறது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் அரசியல் சட்ட விரோத, பாகுபாடான பழி வாங்கும் நடவடிக்கைகளை எதிர்கொண்டு, தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் கேரளா அரசை வாழ்த்துகிறோம்! இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக பல முனைகளில் இருந்து வரும் அவதூறுகளுக்கு எதிராக அரசு எடுத்து வரும் முயற்சிகளை சிஐடியு ஆதரிக்கிறது. பாஜக குண்டர்களின் கொடூரமான தாக்குதலை எதிர்த்துப் போராடும் திரிபுராவின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்கள், மக்களுக்கு சிஐடியு உறுதியான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது. மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸின் வன்முறையை எதிர்கொண்டு, போராட்டங்களை நடத்தி வரும் உழைக்கும் மக்களை சிஐடியு வாழ்த்துகிறது.
சோசலிச சமுதாயமே இறுதி இலக்கு
சிஐடியு தனது அமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டவாறு, இந்த நாசகர முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிந்து, சோஷலிச சமுதாயத்தை உருவாக்குவதே இறுதி இலக்கு! தோழர்களே, உறுதியுடன் போராடிக் கொண்டே இருப்போம்! - தமிழில் : ஆர்.சிங்காரவேலு