தோழர் சங்கரய்யா... வரலாற்றின் நாயகர்! - சு.வெங்கடேசன் எம்.பி.,
ஒருவரை வாழ்வில் ஏன் தலைவ ராக ஏற்றுக்கொண்டோம் என்று யோசித்தால், எண்ணற்ற காரணங்கள் நினைவில் அலைமோத வேண்டும். அப்படி அலைமோதும் கார ணங்களில் ஒன்றைக்கூட முழுமையாக எழுதி முடித்துவிடாதபடி தகவல்கள் பெருக் கெடுக்க வேண்டும். அந்தத் திணறலில் நாம் தவித்தால் மட்டுமே அவர் நம் தலைவர். நம் கண்களுக்கு முன்னால் காட்சியளிக்கும் மாபெரும் மனிதர்கள் எல்லோரும் நம் தலைவர்களாக ஆகிவிடுவதில்லை. நம் மனதுக்குள் நிறைந்திருக்கும் மாபெரும் மனிதர்தான் தலைவர் ஆகிறார். அவர், நாம் பின்பற்றுபவராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. நம்முடைய எதிர்ப்புக்கும் விமர்சனத்துக்கும் உரியவ ராகக்கூட இருக்கலாம். காந்தியை முற்றிலும் எதிர்நிலையில் நிறுத்தினாலும், அவரைத்தான் தலைவராக நேதாஜி கொண்டிருந்தார். தலைவர் என்பது அறிவாலும் அரசியலாலும் எதிர்நிலை கொண்டிருந்தாலும்கூட, மனம் வணங்கி நிற்கும் ஓர் இடம். நாம் எதிர்க்கும் இடத்தை அவரது வாழ்வில் கொண்டிருப்பதையும் கடந்துதான் அவர் நமக்குத் தலைவராகிறார். காலத்தாலும் சிந்தனையாலும் அந்த இடத்தைப் புரிந்துகொள்ள நமக்கு அவ காசம் தேவைப்படலாம். அந்தச் சிந்தனை யின் உயரம் மற்றும் மாறுபாடுகளும் சேர்ந்துதான் அந்தத் தகுதியை அவருக்கு அளிக்கின்றன.
காற்றின் பீடம்!
தலைவர் என்று நாம் ஒருவரை ஏற்கும் போதே அவரை வணங்கி நிற்க மட்டும்தான் சமூகம் பழக்கும். ஆனால் கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் இந்த அனுபவம் முற்றிலும் வேறானது. தலைவருக்குரிய பீடங்களை ஒவ்வொரு கணமும் தகர்ப்பதன் மூலம்தான் அவர் தலைவராக உணரப்படு கிறார். கரையில் அமைக்கப்படும் பீடங்கள் தான் உயரங்களின் மூலம் அறியப்படு கின்றன. காற்றின் பீடம், விசையையும் சமத்துவத்தையுமே அடிப்படையாகக் கொண்டது. தோழமை என்பது காற்றின் வேகத்தையும், உயரங்கள் அற்ற உறுதியை யும்கொண்டது. அந்த வகையில் எம் சிந்த னையில் நிறைந்திருக்கும் மாபெரும் தலை வர் தோழர் சங்கரய்யா! எட்டு ஆண்டுக்காலச் சிறை வாழ்க்கை, மூன்று ஆண்டுக்காலத் தலைமறைவு வாழ்க்கை என்பது ஒரு தனிமனிதனின் வரலாற்றுக் குறிப்பாக அமைவது, அரிதினும் அரிதானது. தியாகமும் எளிமையும் அடிப் படையில் கவர்ச்சிக்கு எதிரான மரபணுக் களால் ஆனவை. விடுதலைப் போரில் ஈடுபட்ட தால் பெற்ற வலியையும், வரலாறு கைவிடு வதால் உண்டாகும் வலியையும் சேர்த்துப் பார்ப்பதே அந்தக் கணக்கின் முழுமையைக் குறிப்பதாகும். பிரிட்டிஷாரின் அடக்குமுறைக்கு எதிரான தினசரிப் போராட்டமும், சிறைச் சாலையும் ஒரே நேர்கோட்டில் இருந்தன. சிறைக்குள் இருந்தால், சக காங்கிரஸ்காரர் களையெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளாக மாற்றுகிறார் என்று சொல்லி, தனி அறையில் அவரை அடைத்தது பிரிட்டிஷ் நிர்வாகம்.
மாறாத நேர்கோடு
அவரோடு சிறைச்சாலையில் சக கைதி களாக இருந்த இராஜாஜி, காமராஜர், பக்த வத்சலம், சத்தியமூர்த்தி எனப் பலரும், பிற்காலத்தில் முதலமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும், அமைச்சர் களாகவும் பொறுப்பு வகித்தனர். அப்போதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் சிறைச்சாலையை நோக்கிய நேர்கோட்டில் எந்த மாற்றத்தையும் செய்து கொள்ளவில்லை அவர். சக கைதிகளாக இருந்தவர்கள் அதிகாரத்தின் உச்சத்தை அடைந்தபோதும், மக்களின் விடுதலைக் காகப் புதிதாக சக கைதிகளை உருவாக்கி, அதே செருக்கோடு அதிகாரத்தை எதிர் கொள்ளும் மனிதர்கள்தான் வரலாற்றின் நாயகர்களாக மாறுகின்றனர். தோழர் சங்கரய்யா வரலாற்றின் நாயகர்!
ஈடு இணையில்லா காட்சி
விடுதலை வேட்கைகொண்ட விஸ்வ நாததாஸின் குரலை அருகிருந்து கேட்டு ணர்ந்தவர், தூக்குமேடை ஏறிய கையூர் தியாகிகளின் வீர முழக்கத்தை அடுத்த அறை யில் இருந்தபடி எதிரொலித்தவர், சிறையில் சிந்திய செங்குருதிகொண்டு மக்கள் போராட்டத்துக்கு இடைவிடாது வடிவம் கொடுத்தவர், மதுரை சதி வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறைச்சாலையி லிருந்து 1947, ஆகஸ்ட் 14-ஆம் நாள் நள்ளிர வில் விடுதலை பெற்று அவர் வெளிவந்த காட்சி, தமிழக விடுதலை வரலாற்றில் ஈடு இணையில்லாத காவியக் காட்சியாகும். வர லாற்றின் உச்ச தருணங்களின்மீது மானுட விடு தலைக்கான தியாகம் காட்சிப்படுமேயானால் அதற்கு இணையான இன்னொன்றை ஒப்பிடவே முடியாது. இருளைக் கிழித்துப் பாயும் ஒளியை, எத்தனை ஆயிரம் முறை கண்டாலும் அது சலிக்கப்போவதேயில்லை. அது கொடுக்கும் மன எழுச்சிக்கும் உற்சாகத் துக்கும் இணையேதுமில்லை. தோழர் சங்கர ய்யாவின் வாழ்க்கையில் பல தருணங் களுக்கு இந்த உணர்வைக் கொடுக்கும் ஆற்றல் உண்டு. பிரிட்டிஷ் சிறைக்கூடங்களில் வைத்து நகக்கண்கள் பிடுங்கப்பட்ட அந்தக் கைகளைத்தான் நாங்கள் பற்றியிருந்தோம் என்ற பெருமிதத்துக்கு இணை இன் னொன்று கிடையாது. வரலாற்றின் குருதியை தொட்டு உணர்வது போன்றது அவரது கைகளைப் பற்றி நிற்பது. அவரிடம் அடுத்தடுத்த தலைமுறை தோழர்கள் வந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இரண்டு தலைமுறைகளுக்கு பதில் சொன்ன அதே பழைய கேள்விகளாகத்தான் அவை இருக்கும். ஆனால், புதிய தலைமுறை வந்து கேட்கும்போது பழைய பதிலில் வரலாற்றின் செறிவோடு, காலம் தந்த அனுபவத்தையும் அதில் ஏற்றித் தந்து அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவார்.
தனித்துவம் மிக்க தலைவர்கள்
இலக்கிய மரபை, விடுதலைப் போராட்ட மரபோடு பொருத்திய பணியினை மகாகவி பாரதி தொடங்கிவைத்தான். அதனை அடுத்த கட்டத்துக்கு முன்னகர்த்தியவர்கள் கம்யூ னிஸ்ட்டுகள். ப.ஜீவானந்தமும் அவரின் தொடர்ச்சியாக தோழர் சங்கரய்யாவும் அப்பணியினை நிகழ்த்திக் காட்டினார்கள். இயக்கத்துக்குள் நிகழ்ந்த தத்துவார்த்தப் போராட்டமும், அமைப்புச் செயல்பாடு களும் அவர்கள் இலக்கியம் சார்ந்த பணி களைச் செய்யும் இடவசதியை ஏற்படுத்த வில்லை. ஆனால் மார்க்சிய செவ்வியல் இலக்கியங்களையும், சங்க இலக்கியங் களையும் கற்றுத் தேர்ந்தவர்களாக அவர்கள் இருந்ததால் மொழி, பண்பாடு போன்ற வற்றில் வந்த சிக்கல்களை மிகச்சிறப்பாகக் கையாண்டு தனித்துவம் மிக்கத் தலைவர் களாக விளங்கினார்கள். குறிப்பாக 1967-ஆம் ஆண்டு, ஆட்சி மொழிச் சட்ட பிரச்சனையின்பால் தமிழக சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது, தோழர் சங்கரய்யா எடுத்துவைத்த சிந்தனை என்பது, மொழி சார்ந்து செயல்படும் ஒவ்வொருவரும் அவசியம் படித்தறிய வேண்டிய பாடநூலாகும். சங்கரய்யா என்ற மாமனிதரின் ஆளுமையால், தான் கொண்டுவந்த தீர்மானத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்தார் முதலமைச்சர் அண்ணா. இருமொழி, மும்மொழி சார்ந்து இன்று நடந்துகொண்டிருக்கும் தேசம் தழுவிய விவாதத்தின் பின்னணியில் மீண்டும் படித்தறிய வேண்டிய ஆவணமாக அது இருக்கிறது.
நுட்பமான மனிதர் எங்கள் தலைவர்!
தனிப்பட்ட முறையிலும், தோழர்களின் நலன் மற்றும் அக்கறை சார்ந்த விஷயத்திலும் அவரின் நுட்பமான விசாரிப்புகள் நம்ப முடியாத ஆச்சர்யம்கொண்டவை. கொரோனாவின் முதல் அலையின்போது என் தாயும் தந்தையும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதனை அறிந்து தொலைபேசியில் அழைத்து விசாரித்தார். அப்போது, “நீ இன்னும் ஆழ் வார்களைத் திட்டுகிறாயா?” என்று கேட்டார். நான் ஒரு கணம் திகைத்துவிட்டேன். எமது திருமணத்தை தோழர் சங்கரய்யா தான் நடத்தி வைத்தார். நானும், என் இணையரும் மணமேடையில் இருக்க, மேடையில் எங்களுக்கு இருபுறமும் நின்றி ருந்த எங்கள் பெற்றோர்களிடம் “உங்களுக்கு இந்தக் காதல் திருமணம் சந்தோஷம் தானே?” என்று கேட்டார். என் தாயார், “சந்தோஷம் தான், ஆனால்…” என்று எதையோ சொல்ல வந்து, சொல்லாமல் நிறுத்தினார். அருகில் இருந்த எனக்குச் சற்றே ‘திக்’ என்றிருந்தது. “பரவாயில்ல... என்ன விஷயம் சொல்லுங்க?” என்றார் சங்கரய்யா. நல்ல வாய்ப்பு கிடைத்ததென்று என் தாயார், “இவன், ஆழ்வார்களைத் திட்டு றான். திட்டக் கூடாதுன்னு சொல்லுங்க” என்றார். சொல்லி முடித்த கணத்தில், “இவன் கம்யூ னிஸ்ட், ஆழ்வார்களைத் திட்டமாட்டான். ஆழ்வார் பாசுரங்கள் மட்டுமல்ல, எந்த இலக்கியத்தையும் காலத்தோடு பொருத்திப் பார்த்துதான் புரிஞ்சுக்கணும்” என்று சொல்லியபடி என்னைப் பார்த்தார். “ஆமாம் தோழர்...” என்று தலையசைத்தேன். இது நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் தாயாரின் உடல்நலத்தை விசாரித்த அடுத்த கணத்தில், “நீ இன்னும் ஆழ்வார்களைத் திட்டுகிறாயா?” என்று அவர் கேட்டபோது, நான் உறைந்துபோனேன். “நான் ஏன் தோழர் ஆழ்வார்களைத் திட்டப் போறேன்... வடக்கே கொடும் சமஸ்கிருதம் இருப்பதால், திருவரங்கன் செந்தமிழ் மணக்கும் தென்திசையில் தலைவைத்துப் படுத்துள்ளான் எனப் பாடிய பாட்டுக் காரர்கள் அல்லவா...” என்று பதில் சொல்ல வாயெடுத்தேன். ஆனால், இருபத்தைந் தாண்டுகளுக்கு முன்பு என் தாய் சொன்ன சொல்லின்மேல் நின்று அவர் கேட்ட கேள்வி, என்னை எதையும் சொல்லவிடாமல் நிறுத்தி யது. கண்ணில் நீர்பெருகியபடி, மனம் அவரை வணங்கியது. நீர் எம் தலைவன்! நன்றி : ஜுனியர் விகடன் (30.04.25)