articles

இளைஞர்களிடையே சிந்தனைப் புரட்சியை உருவாக்கட்டும்!

இளைஞர்களிடையே சிந்தனைப் புரட்சியை உருவாக்கட்டும்!

மாபெரும் முன்னோர்கள் பற்ற வைத்த தீப்பொறி


ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் மாணவர்களும் இளைஞர்களும் மிகுந்த அரசியல் விழிப்புணர்வோடு இருந்தார்கள். கல்லூரிகளில் அரசு திட்டங்கள் குறித்தும் கொள்கைகள் குறித்தும் தீவிரமான விவாதங்கள் நடக்கும்.  மொழி குறித்தும் பண்பாடு குறித்தும் ஆழ்ந்த கலந்துரையாடல்கள் நடந்தன. அதனால் பல சமூக சீர்திருத்தங்கள் நிகழ்ந்தேறின. பொதுநலமிக்க மாணவர்கள் உருவானார்கள். அவர்கள் அரசின் கொள்கைகளை மாற்றியமைக்கும் முக்கிய சக்திகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள். மாணவர்கள் ஆற்றல் மிகுந்தவர்களாக ஆட்சியாளர்களால் கருதப்பட்டார்கள். தமிழ்நாட்டின் வரலாற்றைக் கட்டமைத்ததில் மாணவர்களுக்கும் பெரும் பங்கு இருந்தது.  இன்றைய தலைமுறையில் சமுகம் பற்றியோ அரசியல் நிகழ்வுகள் பற்றியோ பெரிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லை என்பது வருத்தமளிக்கிறது. இந்த 21ஆம் நூற்றாண்டில் வர்க்க அமைப்பு மாறிவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில் நடுத்தர குடும்பங்கள் பெருகிவிட்டன. ஆனால் பெரும்பான்மையான மக்கள் கிராமங்களிலும் மலைவாழ் பிரதேசங்களிலும் இன்றும் இவை கிடைக்காமல் அன்றாட வாழ்வை ஒரு போராட்டமாகவே எதிர்கொள்கின்றனர்.

எளிதில் கிடைக்கவில்லை இன்றைய உரிமைகள்

நமது உரிமைகள் எளிதில் நமக்கு கிடைக்கவில்லை. அவற்றிக்காக பல்வேறு நிகழ்வுகளும் போராட்டங்களும்  நடந்துள்ளன. நம் வாழ்வில் சிறு செயல்களை செய்வதற்குக்கூட இன்று நமக்கு இருக்கும் உரிமை நூறு வருடங்களுக்கு முன்பு இல்லையென்பதே உண்மை. இந்திய சமுதாயம் பல சாதி சமய வேற்றுமைகளால் துளைக்கப்பட்டிருந்த நிலையில், அந்நிய படையெடுப்புகளால் எளிதில் அடிமையாகிவிட்டது. அன்றைய அரசியல் நெறியென்பது மத நூல்களையும்; அவை கூறும் கோட்பாடுகளையும் மட்டுமே தழுவியிருந்தது. சத்ரிய பிரிவை சேர்ந்தோர் மட்டுமே இராணுவப் படையிலிருக்க வேண்டும் என்று அந்த நெறி கற்பித்தது. கடல் கடந்து செல்ல தடையை விதித்தது. ஆக வெடிமருந்து, வட்டமிடும் கருவி, காகிதம், அச்சு போன்றவற்றை நாம் அறிந்து கொள்ளவில்லை. நமது போர் உத்திகள் பழுதாகிவிட்ட நிலையில் துருக்கியரின் வேகத்திற்கும் விவேகத்திற்கும் நம்மால் ஈடுகொடுத்து வெற்றிபெற முடியவில்லை.

சாதியெனும் கொடிய நஞ்சு

ஆனால் அடுத்த ஆயிரமாண்டுகள் கழித்தும் இந்த வேற்றுமை சமுகத்தில் நீங்கவில்லை. சாதியென்னும் கொடிய நஞ்சு படர்ந்து கொண்டேயிருந்தது. ஜோதிபா பூலே, ராஜாராம் மோகன் ராய், இராமானுஜர், வள்ளலார் போன்ற சமூக சீர்திருத்தாளர்கள் இதனை எதிர்த்தனர். அன்று இருந்த ஆங்கிலேயர்களும் சீர்திருத்தத்தில் பங்களித்தனர். ஆனால் சமூகத்தில் இருக்கும் வேற்றுமை அவர்கள் ஆட்சிசெய்வதை எளிதாக்கியது. இந்த சாதிய கட்டமைப்பை உடைத்ததில் பெரும்பங்கு ஆற்றியவர்கள் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரும் தெற்கில் தந்தை பெரியாரும் தாம்.  நீதிக்கட்சி நடத்திய போராட்டத்தின் காரணமாக அனைவரும் கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடைத்தது. அனைவரும் காலணி அணிந்தனர். எல்லா தெருக்களிலும் அனைவரும் பயணிக்க முடிந்தது.  பொதுமக்களை சித்திரவதை செய்து பெருத்துக்கிடந்த ஜமீன்களையும் முதலாளிகளையும் முதுகு வளைந்து உழுபவனுக்கும் தொழிலாளிகளுக்கும் சம உரிமைகளைப் பெற்றுத்தந்த இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்.

வர்க்கப் போராட்டம்

கார்ல் மார்க்ஸ் கூறுகிறார், “சரித்திரத்தில் எல்லாப்  போராட்டங்களும் வர்க்கப் போராட்டமேயென்று. இந்த வர்க்கங்கள் எல்லா நாடுகளிலும் இருந்தன. ஐரோப்பாவிலிருந்த நிலபிரபுத்துவ முறையை போன்றது தான்  நமது சாதிய கட்டமைப்பு. பிரான்சில் ஏற்பட்ட புரட்சியில் அங்கிருந்த வர்க்கங்கள் உடைந்தன. இது போன்று பலநாடுகளில் பல்வேறு புரட்சிகள் வெடித்தன. ரஷ்ய ஜார் மன்னனை கவிழ்த்து அங்கிருந்த வரக்கங்களை உடைத்து உலகிற்கே புரட்சியைக் கற்பித்த புரட்சிதான் போல்ஷ்விக் புரட்சி. அதற்குத்  தலைமை தாங்கிய மாபெரும் புரட்சியாளர் லெனின் அவர்கள்.

 மாபெரும் புரட்சியாளர்கள்

அர்ஜென்டினாவில் பிறந்து கியூபாவின் விடுதலைக்காகப் போராடியவர் சேகுவேரா. இவர் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைத்து பல்வேறு நில மற்றும் விவசாய சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தவர். வியட்நாம் என்னும் சிறிய நாடு அமெரிக்கா என்னும் ஜாம்பவானை வீழ்த்த புரட்சியை ஏற்படுத்தியவர் ஹோ சி-மின். இந்த தலைவர்கள் அடுத்த தலைமுறைக்கு அவர்களது சிந்தனைகளை புகுத்தினர். இளைஞர்களுக்கு போராட்டத்தின்  இன்றியமையாமையை கற்பித்தனர். அவர்களை தன்வசம் ஈர்த்து சமுதாயத்திலிருந்த ஏற்றத்தாழ்வுகளை தட்டிக்கேட்க ஒரு தீப்பொறியினை பற்ற வைத்துச் சென்றனர். இந்த மாபெரும் மனிதர்களின் கோட்பாடுதான் உலகெங்கும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

தேவை சிந்தனைப் புரட்சி

அந்த காலத்தில் கம்யூனிஸ்ட்களும் திராவிட இயக்கத்தினரும் பல பேச்சுப்  பட்டறைகளை நடத்தியும் மக்களைச் சந்தித்தும் இளைஞர்களைப் படிக்க வைத்தும் அரசியல் சிந்தனையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இன்றைய உலகில் மாணவர்களுக்கு ‘பொதுத்தேர்வுகளும் போட்டித்தேர்வுகளுமே முக்கியம் என்னும் சிந்தனையை பெற்றோர் உருவாக்கி விட்டனர்.  அரசியல் விழிப்புணர்வையும், சமூகச் சிந்தனையையும், பகுத்தறிவையும் சேர்த்து அவர்களுக்கு கற்பிக்க வேண்டியது இன்றியமையாதது. இந்த மறுமலர்ச்சி ஏற்பட்டால்தான் சமூகத்தில் நடக்கும் தவறுகளை மாணவர்கள்  தட்டிக்கேட்பார்கள். அவர்களிடம் சிந்தனைப் புரட்சி  ஏற்பட்டால் மட்டுமே சமுதாயத்திலிருக்கும் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்படும். அந்த நாள் வரும்போதுதான் உலக சபைகளில் இந்தியாவின் கொடி உயரப் பறக்கும்.