ஜனநாயகத்தைப் பாதுகாக்க
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பல் பாசு, மத்திய செயற்குழு உறுப்பினர் முரளிதரன் ஆகியோர் தேர்தல் ஆணையர்கள் மூவரையும் சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது அளித்த குறிப்பினை பின்னர் அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனர். அந்தக் குறிப்பு விரிவாக இங்கு தரப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை விவாதங்களுக்கு அழைக்க இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது. அரசியல் கட்சிகளுடனான இந்த ஈடுபாடும் ஆலோசனைகளும் ஒரு வழக்கமான நிகழ்வாக மாறும் என்று நாங்கள் நம்புகிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல்களை நடத்துவது தொடர்பான பல பொருத்தமான பிரச்சனைகளையும், ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் மற்றும் ஆழப்படுத்துதல் குறித்தும் பல கேள்விகளை நீண்ட காலமாகவே எழுப்பி வருகிறது. கடந்த சில ஆண்டு களாகவே நாங்கள் எழுப்பி வரும் பிரச்சனைகளை மீண்டும் இங்கே வலியுறுத்திக் கூறுகிறோம். தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பைப் பொறுத்தவரை, அதற்குள்ள வரையறை களை நாங்கள் புரிந்துகொண்டுள்ளபோதிலும், முடிந்தவரை கொள்கை களை நேர்மறையாக மாற்றிட அதன் அதிகாரங்களையும் அதிகாரத்தையும் பயன்படுத்தும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எனவே, பெரிய பிரச்சினைகளை விவாதங்களுக்கு முன்னிலைப்படுத்தவும் நாங்கள் சுதந்திரம் எடுத்துக் கொள்கிறோம். தேர்தல் சீர்திருத்தங்கள் விரிவானதாக இருக்க வேண்டும் என்றும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் நிதி, ஊழல், பெரு நிறுவனக் கட்டுப்பாடு, பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவம், தேர்தல் நிறுவனங்களின் பாரபட்சமற்ற மற்றும் சுயேச்சையான தன்மை, ஊடகங்களின் பங்கு போன்ற பிரச்சனைகளையும் சரி செய்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.
பகுதி விகிதாச் சாரப் பிரதிநிதித்துவம்
தற்போது நடைமுறையில் உள்ள சாதாரண பெரும்பான்மை வாக்கு விகிதம் - அதாவது ஒரு வாக்கு கூடுதலாக பெற்றாலும் பெரும்பான்மை என கருதப்படும் தேர்தல் நடை முறை - (the first-past-the-post system), அரசியல் கட்சிகளால் பெறப்படும் வாக்குகளின் எண்ணிக்கையின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப நாடாளு மன்ற/சட்டமன்றங்களில் அதன் எண்ணிக்கை இடம்பெறவில்லை என்பதை நிரூபித்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட பெரும்பாலான தேர்தல்களில், வாக்குப் பங்கிற்கும் தொகுதிப் பங்கிற்கும் இடையிலான விகிதத்தில் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதை அனுபவம் காட்டுகிறது. கணிசமான வாக்குப் பங்கைப் பெறும் கட்சிகள் அதே விகிதாச்சார அளவில் இடங்களைப் பெறத் தவறிய நிகழ்வுகளும், குறைந்த வாக்குப் பங்கைப் பெற்ற கட்சிகள் அதிக இடங்களைப் பெற்ற நிகழ்வுகளும் ஏராளமாக உள்ளன. 2014 ஆம் ஆண்டு முதன்முறையாக, வெறும் 31 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக, மக்களவைத் தேர்தல்களில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றது. அதற்கு நேர்மாறாக, 19.3 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வெறும் 44 இடங்களைப் பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில், பாஜக 36.56 சதவீத வாக்குகளைப் பெற்று 240 இடங்களைப் பெற்றது, அதே நேரத்தில் காங்கிரஸ் 1.89 சதவீத வாக்குகளை மட்டுமே அதிகரித்து 2014 உடன் ஒப்பிடும்போது 55 இடங்களை கூடுதலாகப் பெற்றது. இதேபோன்றே சில மாநிலங்களின் நிலைமைகளைப் பார்ப்போம்: 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி 9.39 சதவீத வாக்குகளைப் பெற்றது, ஆனால் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை. ஆனால் அதே சமயத்தில் 9.46 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 6 இடங்களை வென்றது. ஒடிசாவில், 45.34 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக 20 இடங்களை வென்றது, அதே நேரத்தில் 37.53 சதவீத வாக்குகளைப் பெற்ற பிஜு ஜனதா தளம் ஒரு இடத்தைக் கூட வெல்லவில்லை. 12.52 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 1 இடத்தை மட்டுமே வென்றது. ஆந்திராவில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 39.61 சதவீத வாக்குகளைப் பெற்று 4 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்த அதே சமயத்தில் தெலுங்குதேசம் கட்சியோ 37.79 சதவீத வாக்குகளைப் பெற்று அதைவிட நான்கு மடங்கு அதிக இடங்களை, அதாவது 16 இடங்களை, வென்றது. தில்லியில் பாஜக 54.35 சதவீத வாக்குகளைப் பெற்று 7 இடங்களைக் கைப்பற்றிய போதிலும், 24.17 சதவீத வாக்குகளைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சியோ, 18.91 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சியோ ஓர் இடத்தைக்கூட பெற முடியவில்லை. 2024 சட்டமன்றத் தேர்தலில், ஆந்திராவில் 39.37 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 11 இடங்களுக்குள் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அதே சமயத்தில் அதைவிட 6 சதவீதம் மட்டுமே கூடுதலாக வாக்குகளைப் பெற்ற தெலுங்கு தேசம் 135 இடங்களை வென்றுள்ளது. வெறும் 2.83 சதவீத வாக்குகளைப் பெற்ற பாஜக 8 இடங்களைப் பெற்றது. ஒடிசாவில், பாஜக-வைவிட சற்றே கூடுதலாக பிஜு ஜனதா தளம் வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், அவை பெற்ற சட்டமன்ற இடங்கள் கூர்மையான வேறுபாட்டைக் காட்டுகின்றன. பிஜு ஜனதாதளம் 51 இடங்களை மட்டுமே வென்றுள்ள அதே சமயத்தில் அதைவிடக் குறைவான வாக்கு சதவீதத்தைப்பெற்ற பாஜகவிற்கு 78 இடங்கள் கிடைத்துள்ளன. இந்தக் கருத்தை அடிக்கோடிட்டுக் காட்ட இந்த உதாரணங்கள் போதுமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். தொகுதிகள் முழுவதும் பரந்த அடித்தளத்தைக் கொண்ட சிறிய கட்சிகள், தங்கள் வாக்குப் பங்கை கணிசமாகக் கொண்டிருந்தாலும், ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் போகலாம் என்பதும் வெளிப்படையானது. வாக்குப் பங்கில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும், இடங்களின் எண்ணிக்கை யில் வியத்தகு மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இந்த முரண்பாடுகளையும், மக்கள் தீர்ப்பை சிதைப்பதையும் சரிசெய்யும் நோக்கத்துடன், பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை நாங்கள் ஆதரித்து வருகிறோம். இந்தச் சூழலில், சட்ட ஆணையம் முன்னர் அளித்த பரிந்துரைகளில் ஒன்றை நாம் குறிப்பிடலாம். மக்களவையின் தற்போதைய 543 இடங்கள் நேரடித் தேர்தல்கள் மூலம் நிரப்பப்படும் அதே வேளையில், பகுதி விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை கூடுதலாக 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று அது பரிந்துரைத்திருந்தது. மாநில சட்டமன்றங்களிலும் இதேபோன்ற விரிவாக்கம் நடைபெற வேண்டும். இதை முதல் கட்டத்தில் முயற்சிக்கலாம்; பின்னர் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் இடங்களின் பங்கை விரிவுபடுத்தலாம். முன்மொழியப்பட்டுள்ள தொகுதிகளின் எல்லை மறுவரையறை செயல்படுத்தப்படும் விதம் குறித்து பல சிக்கல்கள் மற்றும் கவலைகள் உள்ளன. அவற்றை நாம் இங்கு ஆராயப் போவதில்லை.
ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடத்துவதற்கு எதிர்ப்பு
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற கருத்தை நாங்கள் எதிர்க்கிறோம். இது மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசை உருவாக்குவதை நோக்க மாகக் கொண்டது என்று நாங்கள் உறுதியாகக் கருதுகிறோம். “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டமானது, மக்களவைத் தேர்தலுடன் இணைக்கும் பொருட்டு சில சட்டமன்றங்களின் ஆயுளைக் குறைப்பதாகும். மேலும், ஒரு மாநில அரசு கவிழ்ந்து சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால், நடத்தப்படும் இடைக்காலத் தேர்தல் சட்டமன்றத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே இருக்கும். “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பது, அரசமைப்புச் சட்டத்தின் இரண்டு அடிப்படை அம்சங்களை – ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சிக் கோட்பாட்டை – அரித்து வீழ்த்துகிறது. உச்சநீதிமன்றம் கேசவானந்தபாரதி வழக்கில், அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றுவதற்கு நாடாளு மன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்து
ஷஷாங்கா ஜே. ஸ்ரீதரா (எதிர்) பி.இசட். ஜமீர் அகமது கான் வழக்கில் உச்ச நீதிமன்றம், ஓர் அரசியல் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள், பொதுமக்களுக்கு நேரடி அல்லது மறைமுக நிதி உதவியை விளைவிக்கும் என்ற வாதத்தை நிராகரித்த அதே வேளையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளுக்கான பட்ஜெட் செலவுகளை எந்த ஆதாரங்களில் இருந்து ஈடுகட்டுவார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவது போல் தோன்றினாலும், உண்மையில் இது அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை மக்களுக்கு சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமைக்கு எதிரானதாகும். எந்தவொரு அதிகாரம், அமைப்பு அல்லது நிறுவனத்தின் தலையீட்டின் மூலம் கருத்து தெரிவிக்கும் உரிமையில் எந்தவொரு மீறலும் அரசியல் கட்சி அமைப்பின் வேரையும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களையும் வெட்டிவீழ்த்திடும். இந்த நோக்கத்திற்காக எந்தவொரு சட்டத்தையும் இயற்றுவதற்கு நாங்கள் முன்பே எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். இவை ஏற்கெனவே ‘அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் வழிகாட்டுதலுக்கான மாதிரி நடத்தை விதிகளின்’ ‘பொது நடத்தை’ பகுதியில் வழங்கப்பட்டுள்ளன.
பண பலத்தின் பங்கு (Role of Money Power) அதிகரிப்பு
தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் பணத்தின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் மிக முக்கியமான ஒரு பிரச்சனையாகும். மக்களின் கொள்கைகளையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் அதிக பணம் உள்ளவர்கள் அதிகளவில் தங்கள் இடங்களைப் பிடிப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) அறிக்கையின்படி, 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 93 சதவீதம் பேர் “கோடீஸ்வரர்கள்” ஆவார்கள். பணபலம் சமமான நிலையை சீர்குலைத்து, ஜனநாயக அரசியலின் இன்றியமையாத அம்சமான சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் முழு செயல்முறையையும் சீர்குலைத்து வருகிறது. நிதி பலம், தேர்தல் ஆதாயமாக மாறுகிறது என்பது தெளிவாகிறது, எனவே வலுவான நிதி ஆதாரங்களைக் கொண்ட கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் களில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. கருப்புப் பணம், லஞ்சம் மற்றும் கூடுதல் சலுகைகள் பரவலாக உள்ளன, இது அத்தகைய வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்திற்கு நிதியளிக்க உதவுகிறது. இந்திய சட்ட ஆணையத்தின் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கை கடுமையாக விமர்சித்தது. அதே நேரத்தில், “ஒழுங்குபடுத்தப்படாத, அல்லது அரைகுறையாக கண்காணிக்கப்பட்ட தேர்தல் நிதி இரண்டு வகையான நிதி குவிப்பதற்கு வழி வகுக்கிறது: முதலாவது, கடுமையான சோதனைக் குள்ளாக்கப்படாமல் தவிர்க்கும் நோக்கத்துடன் தொழில்துறை / தனியார் நிறுவனங்களின் பெயரில் பணத்தைப் பயன்படுத்துதல்; இந்த நிதியை அவர்கள் தேர்தல்களுக்கு நிதியாக அளிப்பது; அதன் மூலம் ஆதாயங்களைப் பெறுவது; இரண்டாவது, ‘மிக ஆழமான நிதி குவிப்பு நடைபெறும் நிகழ்வுகள்; அதாவது, அளவில்லாத அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பெரும் கார்ப்பரேட்டுகள் - அவற்றின் ஒழுங்காற்று அமைப்புகளை மட்டுமல்ல; ‘பொது நலனுக்காகவே’ இவ்வாறு செய்யப்படுகிறது என சாதாரண மக்களின் கருத்துக்களையுமே மாற்றி, அவர்களையும் சேர்த்துக் கைப்பற்றுகிற உத்தி - ஆகிய இரண்டும் ஆபத்தானவை என சுட்டிக்காட்டியுள்ளது. பிப்ரவரி 2024 இல், உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தபோது, இந்தத் திட்டம் “வெளிப்படையாக தன்னிச்சையானது” என்று கூறியது. ஏனெனில் வரம்பற்ற நிதி “தேர்தல் செயல்பாட்டில் நிறுவனங்களின் கட்டுப்பாடற்ற செல்வாக்கிற்கு” வழிவகுக்கும். மேலும் அது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் கொள்கையை மீறும். இந்தத் திட்டத்தின்மூலம் தேர்தல் பத்திரங்களை அளித்த நபர்கள், அவ்வாறு தேர்தல் பத்திரங்கள் அளித்ததன் மூலம் “சட்டமன்ற/ நாடாளுமன்ற உறுப்பினர்களை மிக எளிதாக அணுகிட” வாய்ப்பு பெற்றிருக்கலாம்; இது “கொள்கை வகுப்பில் செல்வாக்கு செலுத்தும்” அளவிற்கு ஒரு பிரதிபலன் ஏற்பாட்டை உருவாக்குகிறது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.