தேர்தல் சீர்திருத்தம் அவசியம் : சிபிஎம் - ச.வீரமணி
அரசே நிதி அளித்தல்
பல நாடுகளில், தேர்தல்களில் பெரும் பணத்தின் பங்கு மற்றும் அதனுடன் தொடர்புடைய லஞ்சம், பறிமுதல், பரப்புரை மற்றும் நிறுவன ஊழல் சம்பவங்களை பொது நிதி அல்லது தேர்தல்களுக்கு அரசு நிதியளிப்பதன் மூலம் குறைக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஜெர்மனியில், முந்தைய தேர்தல்களில் மத்திய மற்றும் மாநில சட்டமன்றங்களில் உள்ள கட்சிகளின் இடங்கள் மற்றும் வாக்குப் பங்கின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும் ஒரு கூட்டு நிறுவனத்திலிருந்து கட்சிகளுக்கு அரசு நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தவிர, அரசியல் கட்சிகளுக்கு இடையே தொலைக்காட்சி செய்திகளில் விகிதாச்சாரமாகவும் நியாயமாகவும் நேரத்தை உறுதி செய்வது போன்ற மறைமுக மானியங்களும் வழங்கப்படுகின்றன. தினேஷ் கோஸ்வாமி மற்றும் இந்திரஜித் குப்தா குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட படி, தேர்தல்களுக்கு பகுதியளவு அரசு நிதியுதவியை வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. பகுதியளவு அரசு நிதியுதவி, கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு ஒரு “நிதித் தளத்தை” வழங்கும்.
அரசியல் கட்சிகளின் செலவின உச்சவரம்பை திருத்துதல்
இதனுடன் தொடர்புடையது, ஓர் அரசியல் கட்சியால் செய்யப்படும் செலவுகளுக்கு எந்த உச்சவரம்பும் இல்லாதது பற்றிய கேள்வியாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 77ஆவது பிரிவு, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்கு உச்சவரம்பு விதிக்கும் அதே வேளையில், ஒரு அரசியல் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட வேட்பாளருக்கும் அல்லாமல் பொதுக் கட்சி பிரச்சாரத்திற்காகச் செய்யும் செலவினங்களுக்கு அவ்வாறு எவ்விதமான உச்சவரம்பும் கிடையாது. தேர்தல்களின் போது ஒரு கட்சியின் செலவினங்களுக்கு உச்சவரம்பு இல்லாத வரை, வேட்பாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பு அர்த்தமற்றதாகும். இங்கிலாந்து மற்றும் வேறு சில நாடுகளைப் போலவே அரசியல் கட்சிகள் செய்யும் செலவினங்களுக்கு வரம்பை நிர்ணயிக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பொருத்தமான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 77-ஆவது பிரிவின் மற்றொரு குறைபாடு என்னவென்றால், அது ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவினங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட தேதி வரை மட்டுமே உச்சவரம்பை விதிக்கிறது. இருப்பினும், செலவினங்களைச் செய்வதற்கான உண்மையான காலக்கெடு மிக நீண்டது. இந்த முரண்பாட்டை சரிசெய்ய பொருத்தமான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அச்சுறுத்தல் உணர்வு மற்றும் பாதுகாப்பு என்ற சாக்குப்போக்கின் கீழ், சில உயர் பதவியில் உள்ள விஐபிகள், அரசுக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் பிற போக்குவரத்து முறைகளை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இது அவர்களை எதிர்த்துப் போட்டியிடுபவர்களைவிட அவர்களுக்குத் தேவையற்ற நன்மையை - அதாவது கூடுதலான வாய்ப்புகளை அளிக்கிறது.
வாக்குப்பதிவு தரவுகளில் முரண்பாடு
வாக்குப் பதிவு தரவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது வலைத்தளத்தில் புள்ளிவிவரங்களை சரியான நேரத்தில் புதுப்பிப்பதில் காட்டிய தாமதம் இதற்குக் காரணம். 2024 மக்களவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்குப் பிறகு, இந்தத் தரவை அதன் வலைத்தளத்தில் புதுப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு 11 நாட்களும், இரண்டாம் கட்டத்திற்கு நான்கு நாட்களும் ஆனது. வாக்குப்பதிவு முடிவில் வெளியிடப்பட்ட ஆரம்ப தரவுகளுக்கும், பல நாட்கள் தாமதத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட இறுதித் தரவுகளுக்கும் இடையில் முரண்பாடு இருக்கும்போது சந்தேகங்கள் வலுவடைகின்றன. ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு முடிந்த மாலை 7.00 மணி நிலவரப்படி, முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களில் சுமார் 60 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியதாக தேர்தல் ஆணையம் தற்காலிகமாக மதிப்பிட்டுள்ளது. ஏப்ரல் 30 அன்று பதிவேற்றிய இறுதித் தரவுகளில், இந்த எண்ணிக்கை முறையே 66.14 மற்றும் 66.71 சதவீதத்தைத் தொட்டது. சில மாறுபாடுகள் சாத்தியமில்லை என்பது யாருடைய வாதமும் இல்லை என்றாலும், ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, படிவம் 17C இன் பகுதி 1 ஐ தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு வசதியாக விதிகளில் திருத்தம் செய்ய முடிந்தால் அது தான் பொருத்தமான தாக இருக்கும். மேலும், முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் பகுதி 2ஐயும் பதிவேற்றலாம். சதவீதங்களுக்குப் பதிலாக சரியான புள்ளி விவரங்களைக் கொடுப்பது, இது தொடர்பான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட உதவும். இது தொடர்பாக, ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் மகாராஷ்டிராவில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட விகிதாச்சாரத்திற்குப் பொருந்தாத அதிகரிப்பு குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. 2024 நவம்பரில் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 9,77,93,350 ஆக இருந்தது. ஆனால் முன்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது இது 9,28,90,445 ஆக இருந்தது.
‘கிரிமினல் பின்னணி’ கொண்டவர்கள் என்ற அறிவிப்பு பலன் அளித்ததா?
போட்டியிடும் வேட்பாளர்கள் “கிரிமினல் பின்னணியை” வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, மக்களின் தேர்வுகளில் செல்வாக்கு செலுத்தத் தவறிவிட்டது என்பது தெளிவாகிறது. இதனால் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இரண்டும் செய்த செலவு அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை, இந்த வெளிப்படுத்தலில் பெரும்பாலானவை, அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளே, கடுமையான குற்றங்களுடன் எந்த தொடர்பும் இல்லாதவை. குறிப்பாக இந்த வெளிப்படுத்தல் பல ஊடகங்களிலும் பல முறையும் செய்யப்பட வேண்டியிருக்கும் போது, எங்களைப் போன்ற கட்சிகளுக்கும், போதுமான நிதி இல்லாத மற்றவர்களுக்கும், இது ஒரு பெரிய சுமையாக மாறியுள்ளது. இது தேர்தல்களின் போது தங்களை வளப்படுத்திக்கொள்ள “அதிக விலை நிர்ணயம்” செய்யும் ஊடக நிறுவனங்களுக்கு மட்டுமே உதவுகிறது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (Association for Democratic Reforms) அறிக்கையின்படி, வெற்றி பெற்ற 543 வேட்பாளர்களில், 251 பேர் (46 சதவீதம் பேர்) தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்துள்ளனர். இவர்களில் 170 பேர் (31 சதவீதம் பேர்) பாலியல் வன்கொடுமை, கொலை, கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள். வாக்காளர்களுக்குத் தெரிவிக்கும் நீதிமன்றத்தின் நோக்கம் தவறான இடத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது.வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது அவர்களைப் பற்றிய தகவல் பற்றாக்குறையால் அல்ல. கொலை, பாலியல் வன்கொடுமை அல்லது பிற கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அவர்கள் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்கள் வேறு அம்சங்களில் உள்ளன. இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அப்போதிருந்து பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், அதன் உத்தரவைத் திருத்தக் கோரி, தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையத்தை சீர்திருத்தம் செய்தல்
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரமும் சுயாட்சியும், அரசமைப்புச் சட்டத்தின் ஒரு சுயேச்சையான அமைப்பாக அதன் பங்கை வலுப்படுத்த ஒரு திறவுகோல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது. இந்தப் புரிதலின் அடிப்படையில்தான், 2023ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கட்சி வரவேற்றது. ஓர் அரசமைப்புச்சட்ட அமர்வு, அதன் தீர்ப்பில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. எனினும், உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அரசாங்கம் ஒரு சட்டத்தை இயற்றியதன் மூலம் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது; இதன் மூலம் இந்தியத் தலைமை நீதிபதிக்கு பதிலாக “பிரதமரால் பரிந்துரைக்கப்படும் ஒரு அமைச்சர்” நியமிக்கப்பட்டார். இது அரசு நிர்வாகத்தின் பெரும்பான்மை கருத்தே எப்போதும் மேலோங்கும் என்பதை உறுதி செய்கிறது. இது, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற தன்மையையும் சுதந்திரத்தையும் அழிக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் சுயாட்சி, அதன் பொறுப்புணர்வின் தேவையுடன் செழுமைப்படுத்தப்பட வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலை நடத்தியது குறித்தும், அதன் பாரபட்சமற்ற நம்பகத்தன்மை அரிக்கப்படுவது குறித்தும் கவலைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் சிலர் கூட வெளிப்படையாக தங்கள் கவலையை வெளிப்படுத்தும் அளவுக்கு இது மிகவும் பேசப்பட்டது. இது கவனிக்கப்பட்டு சரிசெய்யப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் தேர்தல் நடத்தை விதிகள்
மற்றும் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் ஆலோசனைகள் அமல்படுத்தப்படாதது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. 2024 மக்களவைத் தேர்தல்களின் போது, தேர்தல் ஆணையம் அதன் சி விஜில் (cVigil) செயலி மூலம் ஆயிரக்கணக்கான புகார்களைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சட்டவிரோத விளம்பரப் பலகைகள், பதாகைகள், மதுபான விநியோகம், பரிசுப் பொருட்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய புகார்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கவனிக்கப்பட்டன. மதம் மற்றும் சாதி அடிப்படையில் பிரச்சாரம் செய்த அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களைத் தடுக்கவோ அல்லது தண்டிக்கவோ இயலாமை மற்றும் பிரச்சாரம் மற்றும் பிரச்சாரத்திற்காக வழிபாட்டுத் தலங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தடுமாறிக் கொண்டிருப்பது தெரிந்தது. பிரதமர் மோடியின் வெளிப்படையான வகுப்புவாத பிரச்சாரத்திற்காக அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பல புகார்களை கவனத்தில் கொள்ள ஆணையம் ஆரம்பத்தில் மறுத்தது அப்பட்டமாகத் தெரிந்தது. தேர்தல்களின் போது பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பிறர் பதவியை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் நடந்துள்ளன. தேசிய சின்னங்களும் கட்சி சார்ந்த நோக்கங்களுக்காக வெளிப்படையாக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆளும் கட்சி தேர்தல் ஆதாயங்களுக்காக தற்போது ‘ஆபரேசன் சிந்தூர்’ போன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நம்பகத் தன்மையை மீட்டெடுக்க, தேர்தல் நடத்தை விதிகள் சரியான நேரத்தில் அமல்படுத்துவது உறுதி செய்யப்பட வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையம் பாரபட்சமற்றதாக இருப்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சிகளும் மற்றும் பொதுமக்களும் அது அவ்வாறுதான் இருக்கிறது என்பதையும் உணரும் விதத்தில் நடந்துகொள்ள வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட்
கடந்த காலங்களில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்துள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே அதிகரித்து வரும் சந்தேகங்களுக்கு மத்தியில், விவிபேட் எந்திரங்களை அறிமுகப்படுத்துவதையும் ஆதரித்தது. பொதுமக்களின் சில பிரிவினரிடையே இன்னும் சந்தேகங்கள் நீடிக்கின்றன. எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தற்போதைய வரிசையின்படி: முதலில் வாக்குச்சீட்டு அலகு, அதைத் தொடர்ந்து விவிபேட் மற்றும் வரிசையில் கடைசியாக கட்டுப்பாட்டு அலகு என உள்ளது. ஒரு வாக்காளர் தனது வாக்குரிமையைப் பயன்படுத்தியவுடன், அவர்களின் விருப்பம் விவிபேட்-இல் காட்டப்படும். ஆனால் கட்டுப்பாட்டு அலகில் உண்மையில் பதிவு செய்யப்படுவது அவர்கள் விரும்பியது தானா? என்பதில் சந்தேகம் உள்ளது. கட்டுப்பாட்டு அலகிற்குப் பிறகு விவிபேட் இறுதியில் வைக்கப்பட வேண்டும் என்று நாங்களும் இன்னும் பலரும் பரிந்துரைத்து வருகிறோம். இது, செயல்முறையின் நேர்மை குறித்து நிலவும் சந்தேகங்களைப் போக்கும். இது முக்கியமானது, ஏனெனில் விவிபேட் அறிமுகம் இந்த அமைப்பில் ஒரு முக்கியமான மற்றும் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘விவிபேட்’-க்கு முந்தைய நாட்களில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் புனிதமான தன்மைக்கு மிகப்பெரிய பாதுகாப்பு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ‘சிப்’ சரிபார்ப்புக்காக வைக்கப்படுவதற்கு முன்பு வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களைப் பற்றி அதில் எதுவும் இல்லை என்ற அடிப்படையில் இருந்தது. விவிபேட் இவை அனைத்தையும் மாற்றியுள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள், அவற்றின் அந்தந்த சின்னங்கள் மற்றும் வாக்குச்சீட்டு எந்திரத்தில் தோன்றும் பெயர்களின் வரிசை பற்றிய முன் அறிவின் கூறுகளை அறிமுகப்படுத்துகிறது. உண்மையான செயல்பாட்டின் அடிப்படையில், வாக்குச்சீட்டு எந்திரத்தில் பெயர்கள், சின்னங்கள் மற்றும் வரிசையை அறிமுகப்படுத்துவது தனியார் நிறுவனங்களின் ஈடுபாட்டுடன் விவிபேட் செயல்பாட்டுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதை பிற உண்மைச் சான்றுகள் காட்டுகின்றன. எனவே, விவிபேட் முதலிலேயே கையாளப்பட்டு ‘முறைகேடு செய்யப்பட்டு, பின்னர் கட்டுப்பாட்டு அலகுடன் இணைக்கப்பட்டால், வாக்குப் பதிவு செய்வதில் வாக்காளர் அறியாமல் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. இந்த வெளிச்சத்தில், நாங்கள் பின்வருவனவற்றைப் பரிந்துரைக்கிறோம்: அ) மூன்று அலகுகளின் வரிசையை மீண்டும் மாற்றிய மைத்தல், வாக்குச்சீட்டுப் பிரிவில் பயன்படுத்தப்படும் வாக்காளர்களின் தேர்வு மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தின் கட்டுப்பாட்டு அலகுக்குள் சென்று, அங்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் விவிபேட்-க்கு அனுப்பப்படுவதை உறுதி செய்தல். ஆ)ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பதிவு செய்யப்பட்ட தரவுகள் விவிபேட்-உடன் நூறு சதவீதம் பொருந்த வேண்டும். இ) போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் விவிபேட்-இன் செயல்பாடு தொடர்பான எந்தவொரு வடிவமைப்பு, உற்பத்தி, பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் நடவடிக்கைகளிலிருந்தும் தனியார் விற்பனையாளர்கள் விலக்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும். இதுதொடர் பான வழிகாட்டுதல்களை மறுவடிவமைப்பு செய்திட வேண்டும்.
ஊடகங்களின் பங்களிப்பு
ஊடகங்களை கையில் வைத்துள்ள பெரும் கார்ப்பரேட்டுகள், குழுமங்கள் ஆளும் கட்சிகளுக்கு உதவுகின்றன என்பது வெளிப்படையானது. 2014க்குப் பிந்தைய சூழ்நிலையில் இது குறிப்பாக இந்தியாவில் வெளிப்படுகிறது. இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதை மோசமாக பாதிக்கிறது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீதான நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நிகழ்வுகளும் உள்ளன. இப்போதெல்லாம் மிகவும் செல்வாக்கு மிக்க பங்கை வகிக்கும் சமூக ஊடகங்கள் உட்பட இந்தத் துறையில் பொருத்தமான ஒழுங்குமுறை வழிமுறைகள் அவசியம். தனியார் துறைக்கு அலைக்கற்றைகள் திறக்கப்பட்ட பிறகு, செய்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துவது தனியார் ஊடகங்கள்தான். எனவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கு தனியார் ஊடகச் சேனல்களில் நேரம் ஒதுக்குவது பொருத்தமானதாக இருக்கும்.