articles

img

வக்ப் வாரிய திருத்தச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும் - எஸ்.நூர்முகம்மது

வக்ப் வாரிய திருத்தச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் வழி நடத்தப்படும் மோடி தலைமையிலான பாஜக அரசு முஸ்லீம் வெறுப்பரசியலின் ஒரு பகுதியாக வக்ப் திருத்தச் சட்டம் 2024 ஐ நாடாளுமன்றத்தில் கொண்டுவந்தது. அதில் பொதுநோக்கம் எதுவும் இல்லாமல் இருந்தது. மாறாக முஸ்லீம் சமூகத்தின் பாரம்பரியமான வக்ப் சொத்துக்களைக் கபளீகரம் செய்வதே அதன் நோக்கமாக இருந்தது. சட்டத் திருத்தத்தின் பயணம் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டதன் பின்னணியில் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் ஒரு நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அது விடப்பட்டது. அக்குழுவில் பாஜக எம்.பிக்களே அதிக எண்ணிக்கையில் இருந்தனர். இக்குழுவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கூறிய கருத்துக்களையோ, திருத்தங்களையோ பதிவு செய்ய மறுத்த குழுத் தலைவர், ஒரு தலைபட்சமான அறிக்கையைச் சபாநாயகரிடம் ஒப்படைத்தார்.  அதன் பேரில் மேலும் சில திருத்தங்களுடன் வக்ப் திருத்தச் சட்டம் 2025 கொண்டுவரப்பட்டது.

இச்சட்டம் 2025 ஏப்ரல் 2 ல் நள்ளிரவு 2 மணிக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா கட்சியின் ஆதரவோடு 288 வாக்குகளுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்த்து 232 பேர் வாக்களித்தனர். மாநிலங்களவையில் ஏப்ரல் 3 ல் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் நோக்கம் முஸ்லீம் சமூகத்திற்கு உரிமையான வக்ப் சொத்துக்களைக் கபளீகரம் செய்வது என்ப தைத்தவிர வேறல்ல என்பது உறுதியானது. உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் இச்சட்டத்திற்கு எதிராக ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. பல இஸ்லாமிய அமைப்புகளும், பல தன்னார்வலர்களும், சிபிஐ(எம்) உள்ளிட்ட சில இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் சார்பிலும் இதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இச்சட்டத்தை முழுமையாகத் தடைசெய்ய வேண்டுமென்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 2025 ஏப்ரல் 17 இல் அன்றைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அவர்கள் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் வழக்கின் அடுத்த வாய்தா வரை மத்திய வக்ப் கவுன்சிலிலும், மாநில வக்ப் வாரியங்களிலும் எவ்வித நியமனங்களும் செய்யப்படாது என்றும், அடுத்த வாய்தா வரை எந்த வக்ப் சொத்தின் அங்கீகார மும் ரத்து செய்யப்படாது என்றும் அளித்த உறுதி மொழியின் பேரில் உறுதிமொழியைப் பதிவு செய்த தோடு, எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் அந்த வழக்கு அடுத்து வரும் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வின் விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டது. சட்டத் திருத்தங்களின் விவரங்கள் இந்த வழக்குகளில் மனுதாரர்கள் வக்ப் சட்டம், 1995 ல் திருத்தம் செய்யப்பட்ட சரத்துகள் 3(r), 3C, 3D, 3E, 9,14, 23, 36, 104, 107, 108, 108A சரத்து கள் 4(ix)(a), 4 (1)(b), 5,10, 12,16,21, 43, 44, 45 ஆகியவற்றை யும், சரத்து 3(r) ல் பயன்பாட்டாளர்களால் அளிக்கப் பட்ட வக்ப்களின் அங்கீகாரம் மறுக்கும் திருத்தம், சரத்து 3c, சரத்து 9,14 இல் செய்யப்பட்ட திருத்தங்க ளையும் எதிர்த்து இந்த மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

ஒன்றிய வக்ப் கவுன்சிலில் மொத்தமுள்ள 22 உறுப்பினர்களில் 12 பேர் முஸ்லீம்கள் அல்லாத வர்களும், 10 பேர் முஸ்லீம்களாகவும் இருக்க வகை செய்யும் விதத்தில் சட்டத் திருத்தம் அமைந்தி ருந்தது. மாநில வக்ப் வாரியங்களில் மொத்தமுள்ள 11 உறுப்பினர்களில் 7 பேர் முஸ்லீம் அல்லாதவர்க ளையும், 4 முஸ்லீம்களாகவும் நியமிக்க வகை செய்யப்பட்டிருந்தது. மாநில அரசின் கீழ் பணியாற்றும் இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் தலைமைச் செயல் அலுவலராக நியமிக்கப்படவும் இச்சட்டத் திருத்தம் வகை செய்தது. அவர் முஸ்லீமாக இருக்கத் தேவையில்லை. அரசுச் சொத்து என்று ஒரு சொத்து அறியப்பட்டாலே அது வாரியச் சொத்து  அல்ல என்று அத்திருத்தம் கூறுகிறது. ஒரு சொத்து  அரசுச் சொத்தா அல்லது வக்ப் சொத்தா என்பதை வக்ப் தீர்ப்பாயத்திற்கு பதிலாக மாவட்ட ஆட்சியரே முடிவு செய்வார். அதுவே இறுதியானது. அதன் அடிப்படையில் தீர்ப்பாயம் விசாரித்து முடிவு கூறுமுன்னரே வருவாய்த் துறை ஆவணங்களில் அது அரசுச் சொத்து எனப் பதிவு செய்யப்பட்டுவிடும். இத்திருத்தத்தின்படி ஒவ்வொரு வக்ப் சொத்தும் பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்பட்டது. வாய்மொழி நன்கொடை தடை செய்யப்பட்டது. ஒரு பதிவுக்கான மனுவின் பேரிலான முடிவை மாவட்ட ஆட்சியரே செய்வார். முஸ்லீம் அல்லாதோர் வக்ப்புக்குத் தானம் செய்வது இயலாது. இத் திருத்தங்கள் வக்ப் சொத்துக்களைக் கபளீகரம் செய்வதற்கானது என்றும், இது பாரபட்சமானது என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர்.

உச்சநீதிமன்றத்தின்  இடைக்காலத் தீர்ப்பு இது குறித்த வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தற்போது இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில் முழுச் சட்ட திருத்தங்களையும் அல்லது வக்ப் திருத்தச் சட்டம் 2025 ஐ முழுமையாகத் தடை செய்ய இயலாது என்று அறிவித்தது. ஆனால் ஒருவர் 5 ஆண்டுகள் முஸ்லீமாக வாழ்ந்திருந்தால் மட்டுமே வக்ப் தானம் செய்ய இயலும் என்ற திருத்தம் சரத்து 3(r) ஐ நீதிமன்றம் தடை செய்தது. மேலும் உபசரத்து (3) மற்றும் (4) 3c யின்படி வருவாய் ஆவணங்களில் திருத்தம் செய்யப்படும் என்ற திருத்தமும் தடை செய்யப்பட்டது.

ஒன்றிய வக்ப் கவுன்சிலில் மொத்தமுள்ள 22 உறுப்பினர்களில் 4 முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மிகாமலும், மாநில வக்ப் வாரியங்களில் மொத்த முள்ள 11 உறுப்பினர்களில் 3 முஸ்லீம்கள் அல்லாத வர்க்கு மிகாமலும்தான் நியமிக்க வேண்டுமென்று தீர்ப்பு கூறியது. இயன்றவரையில் வக்ப் வாரியத் தலைமைச் செயலாளர் அல்லது பணி நிமித்தம் செயலராக முஸ்லீம்களையே நியமிக்க வேண்டு மென்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வக்ப் சொத்தா அல்லது அரசுச் சொத்தா என்பதை முடிவு செய்வார் எனும் திருத்தமும் தடை செய்யப் பட்டது. எதிர்காலம் என்ன? இது இடைக்காலத் தீர்ப்பு மட்டுமே. வக்ப் சட்டங்களில் செய்யப்பட்ட ஒரு தலைபட்சமான சில திருத்தங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது பொதுவாக வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் வக்ப் வாரியங்களுக்கு முஸ்லீம்களாக 5 ஆண்டுகள் வாழ்பவர் மட்டுமே தானம் செய்ய இயலும் என்பதும் ரத்து செய்யப்பட்டுள்ளதும், முஸ்லீம்கள் அல்லாதோரைப் பெரும்பான்மை யினராக உறுப்பினராக்கி வாரியத்தின் நோக் கத்தையே சிதறடிக்கும் திருத்தங்களும் மாற்றிய மைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் இத்திருத்தங்களைக்கூட ஒன்றிய அரசும், பாஜக தலைமையிலான மாநில அரசுகளும் எப்படி அமலாக்கும் என்பதும், இதையும் தங்கள் விருப்பப்படி வியாக்கியானம் செய்து தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப் பார்களோ என்ற கவலையும் எழுப்பப்படுகிறது. சங் பரிவாரத்தைச் சார்ந்தவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. இதை முழுமையாகத் தடை செய்யாதது குறித்து முஸ்லீம் அமைப்புகள் பல தங்களது அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றன. இறுதித் தீர்ப்பு எப்போது வரும், எப்படி வரும் என்பதெல்லாம்கூட தொக்கி நிற்கின்றன.

இருந்தும் அனைத்து மக்களின் கருத்தையும் இத்தகைய மதவெறிச் சட்டங்களுக்கு எதிராக அணிதிரட்டுவதும், ஆர்.எஸ்.எஸ் சார்பு மோடி அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவதன் மூலமே சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்க இயலும். அத்தகைய பணியை மதச்சார்பற்ற சக்திகள் முன்னெடுக்க வேண்டும். சிறுபான்மையினரும் அதற்குத் துணையாக நிற்க வேண்டும். அதுவே இத்தகைய பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.