அவசர நிலையில் பி.ஆர்.சி.யின் தீர்க்கதரிசனம்: ஓர் அத்தியாயம்!
வருடம் 1976, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி. நான் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டுத் தேர்வுக்குத் தயார் செய்துகொண்டிருந்தேன். இரவு சுமார் 9 மணி அளவில், ஒரு மாணவர், “கலைஞர் கவர்ன்மென்ட் டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டது!” என்று உரத்த குரலில் சத்தமிட்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலையின் தாக்கம் சுமார் ஒன்றரை வருடங்களாகத் தமிழ்நாட்டில் இல்லை. காரணம், அப்போதைய திமுக அரசு அந்த அவசரகால நடவடிக்கைகளை எதிர்த்து நின்றது. ஆனால், இந்திரா காந்தி கவர்னர் கே.கே. ஷாவை பயன்படுத்தி, திமுக அரசைக் கலைத்தார். இந்தச் செய்தியைக் கேட்டவுடன், எனக்கு முதலில் தோன்றிய விஷயம், திருச்சி உறையூரில் எங்கள் வீட்டில் சனிக்கிழமை மாலை என்ன நடந்திருக்கும் என்பது பற்றிய சிந்தனைதான். திமுக அரசு கலைக்கப்பட்டால், தமிழ்நாட்டிலும் அவசரநிலையின் தாக்குதல் உண்டாகும்; அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரியும். தாயின் கூர்மையான அரசியல் புரிதல் ஜனவரி 31 ஆம் தேதி மாலை, என் அப்பாவும் அம்மாவும் (தோழர்கள் பி.ஆர்.சி.யும், ஜானகி ராமச்சந்திரனும்) மார்க்கெட்டுக்குச் சென்றிருந்தபோதுதான், ஒரு கடையில் ரேடியோவில் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட செய்தி ஒலிபரப்பானது. எதிர்க் கட்சியினரை வேட்டையாடத் தொடங்குவார்கள் என்று தெரிந்து, அவசர அவசரமாக வீட்டுக்குத் திரும்பிய அம்மா, அப்பாவிடம் உடனே வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகப் போகச் சொன்னார். ஆனால் அப்பா, “உடனடியாக அப்படி எதுவும் நடக்காது, நான் நாளை காலை போகிறேன்” என்று சொன்னார். ஆனால் அம்மாவின் கூர்மையான அரசியல் புரிதல் காரணமாக, அப்பாவை உடனடியாகச் சில உடைகளை ஒரு பையில் வைத்து, வீட்டில் இருந்து போகச் சொல்லி வற்புறுத்தி அனுப்பி வைத்தார். அடுத்த நாள், பிப்ரவரி 1 ஆம் தேதி, காலை 4 மணிக்கெல்லாம் ஒரு போலீஸ் பட்டாளம் எங்கள் உறையூர் வீட்டைச் சுற்றி வளைத்துவிட்டது. அம்மா கதவைத் திறந்து பார்த்தபோது, போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுராமலிங்கம் தலைமையில் சுமார் 10-15 போலீசார் நின்றிருந்தனர். எங்கள் கட்சியின் மீது நல்ல எண்ணம் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சேதுராமலிங்கம், அம்மாவிடம் “தோழர் பி.ஆர்.சி. எங்கே?” என்று கேட்டார். அதற்கு அம்மா, “அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை சென்றுவிட்டார். ஒரு வாரம் கழித்துத் திரும்புவார்” என்று சொன்னார். உடனே அவர், “சரி, அவர் வந்தவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பியபோது, அம்மா அவரிடம் “ஆர்.யூ. (உமாநாத்) என்ன ஆனார்?” என்று கேட்டார். அப்போது திரு. சேதுராமலிங்கம் சிரித்துக்கொண்டே, “அவர் தான் போன டிசம்பர் மாதமே தலைமறைவாகப் போய்விட்டாரே” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அப்போது பி.ஆர்.சி. எங்கே போனார் என்று யாருக்கும் தெரியாது. சேதுராமலிங்கம், மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெண்களை விரட்டியபோது, அதை எதிர்த்து போலீஸ் ஜீப்பின் முன் அமர்ந்து போராடியவர் என் தாய் ஜானகி. அதனால் அவர்மீது இன்ஸ்பெக்டருக்கு மரியாதை உண்டு.) தலைமறைவு வாழ்க்கை: ‘சிவா’வின் வருகை நான் இரவு ஹாஸ்டலைச் சென்றடைந்தபோது, என்னைப் பார்த்த சக தோழர்கள், “தோழர் பி.ஆர்.சி. தஞ்சாவூர் எல்ஐசி காலனியில், தோழர் லட்சுமணன் வீட்டில் இருப்பதாகவும், நான் திருச்சியிலிருந்து வந்தவுடன் பி.ஆர்.சி.யைச் சந்திக்கச் சொன்னார்” என்றும் கூறினார்கள். அன்று யாரிடமும் ஒரு சைக்கிள்கூட கிடையாது. நானும் தோழர் மணியும் எல்ஐசி காலனியை நோக்கி, இரவு 9 மணிக்கு மேல் நடக்கத் தொடங்கினோம். அதுபோலச் சூழ்நிலை! திமுக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு, தலை மொட்டை அடிக்கப்பட்டு, தலையில் உதயசூரியன் படத்தை வரைந்த சம்பவங்கள் நிகழ்ந்தன என்று கேள்விப்பட்டோம். அந்த நள்ளிரவில் நான் லட்சுமணன் வீட்டுக்குச் சென்றபோது, என்னைப் பார்த்த பி.ஆர்.சி. திட்டினார். “உன்னை யார் இந்த மாதிரியான சூழலில் உடனே என்னைப் பார்க்க வரச்சொன்னது? காலையில் வந்திருந்தால் போதும்” என்று சொன்னார். பிறகு, ஞாயிறு காலை வீட்டுக்கு அவரைத் தேடி வந்த விஷயத்தைக் கூறினேன். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் தோழர் பி.ஆர்.சி.யை நான்கைந்து மாதங்களுக்குப் பிறகுதான் சந்தித்தேன். ஒரு நாள் மதியம், நானும் என் நண்பன் இளங்கோவனும் மருத்துவமனையில் வகுப்பு முடிந்து வெளியே வந்தபோது, ஒரு மரத்தடியில், அரைக்கைச் சட்டையும் பேண்ட்டும் அணிந்து, தலைமுடியில் எண்ணெய் தேய்த்து, சிறிய முடியை வகிடெடுத்துச் சீவிக்கொண்டு, கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டு இருந்தார். அதைப் பார்த்த எனக்கு, அது தோழர் பி.ஆர்.சி. என்று புரிந்துகொள்ள ஒரு நொடி தேவைப்பட்டது. இளங்கோ பல முறை என் அப்பாவைச் சந்தித்துள்ளான். ஆனாலும் அவனுக்குத் தோழர் பி.ஆர்.சி.யை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருக்கு அவருடைய தலைமறைவு காலத்தில் இருந்த பெயர் சிவா. எல்ஐசி காலனியில் தோழர் லட்மணன் வீட்டுக்குச் செல்லும் வழியில், மருத்துவக் கல்லூரி அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் சிவராமன் வசித்து வந்தார். அதன் காரணமாக, தோழர் லட்மணனின் வீட்டுக்கு வழிசொல்பவர்கள், டாக்டர் சிவராமன் வீட்டைக் கடந்து செல்ல வேண்டும் என்று அடையாளம் காட்டுவது எளிதாக இருந்தது.சுமார் ஒன்றரை வருடங்கள் தோழர் பி.ஆர்.சி. தலைமறைவாக இருந்தார். திடீர் வருகை 1977 ஆம் ஆண்டு இந்திரா காந்தி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தத் தீர்மானம் எடுத்த பிறகு, நம் தோழர்கள் அனைவரும் தலைமறைவு வாழ்க்கையை கைவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது, திருச்சியில் அன்றைய மாவட்டக் கலெக்டர் தேர்தல் தொடர்பாக ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். கலெக்டருக்கு யார் எந்தக் கட்சியினர் என்று தெரியாததால், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ரிப்போர்ட்டரிடம் கேட்டார். அவர் அனைத்து கட்சித் தலைவர்களின் பெயர்களைச் சொல்லத் தொடங்கினார். “பி.ஆர்.சி. – சிபிஎம்” என்று கேட்டவுடன், போலீஸ் டி.எஸ்.பி. தோழர் பி.ஆர்.சி.யை கைது செய்வதாகக் கூறினார். ஆனால், அன்று மாலை சென்னையில் இருந்த உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபிறகு பி.ஆர்.சி. வீடு திரும்பினார். அடுத்த நாள், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் “போலீஸாரால் தேடிக்கொண்டிருந்த தலைமறைவாக இருந்தவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் நடத்திய தேர்தல் தயாரிப்புக் கூட்டத்தில் தோன்றினார்” என்று செய்தி வெளியிட்டது.
