பொன்மலைக்கு என்னை அனுப்பி வைத்தவர்!
திருச்சியில் காவேரி நதிக்கரையில் உள்ள இ.ஆர்.உயர்நிலைப் பள்ளி யில் படித்த போது கே.ஆர். பன்னீர் செல்வம் என்ற மாணவருடன் நெருக்கம் ஏற்பட்டது. அவரது மூத்த சகோதரர் கே.ஆர்.சிதம்பரம் அதே பள்ளியில் படித்தவர். தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட அவர் காந்தி மார்க்கெட் அரு கில் “பாப்புலர் டீ கம்பெனி” என்ற பெயரில் தேயிலைத் தூள் வர்த்தகம் செய்து வந்தார். இளம் வயதிலேயே போராட்டக் குணம் மிக்கவராக இருந்தார். மார்க்கெட் பகுதியில் ரவுடிகளை எதிர்த்து நடந்த சண்டையில் அவரது ஒரு கை துண் டிக்கப்பட்டது.
வாரம் தோறும் அரசியல் வகுப்பு அவரது தம்பி கே.ஆர்.பன்னீர்செல் வம் மூலமாக தேயிலை கம்பெனியின் மாடியில் வாரம் தோறும் அரசியல் வகுப்பு க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த தோழர் பி.ராமச்சந்திரன் அரசியல் வகுப்பு நடத்த தொடர்ந்து வருவார். வகுப்புக்கு வரும் மாணவர்களை வர வேற்று தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை கே.ஆர். சிதம்பரம் அளிப்பார். அப் பகுதியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட நபராக அவர் விளங்கினார்.
அவரை சந்திக்க சிபிஐ தலைவர் ப.மாணிக்கம், நாத்திகம் ராமசாமி, திமுக தலைவர் எல்.கணேசன் போன்றோர் வந்ததை கண்டு நான் வியந்தேன். ஜமால் முகமது கல்லூ ரியில் முதுகலை மாணவராக பயின்று வந்த கே. ராஜமாணிக்கம் வகுப்பு நடந்த மாடி அறையில் தங்கி இருந்தார். பி.ஆர்.சி., நடத்திய பல வகுப்புகளில் அவரும் பங்கேற்றது உண்டு. பின்னாளில் அவர் அரசுப் பணியில் சேர்ந்து ஐ.ஏ.எஸ் அதி காரியாக பதவி உயர்வு பெற்று முதல்வர் கலைஞரின் தனிச் செயலாளராக பணி யாற்றினார். தோழர் பி.ஆர்.சி., மலைக்கோட்டை அடிவாரத்தில் இருந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு சிறு அறையில் தங்கி இருந்தார். அந்த அறைக்கு காலை வேளையில் சென்று சில நேரம் சந்திப் பேன். எனது வீடும் மலைக்கோட்டை தெருவில் தான் இருந்தது. கட்சி அலுவ லகம் சிங்காரத்தோப்பு பகுதியில் இயங்கி யது. இரண்டு சிறிய அறைகள். ஒரு அறை யில் கட்சி அலுவலகம். அடுத்த அறையில் சிஐடியு அலுவலகம் இருந்தது. மாணவர் சங்கம் அமைக்க பேச்சுப் போட்டி... கல்லூரியில் சேர்ந்த பிறகு மாலை நேரங்களில் கட்சி அலுவலகம் செல்வேன். அப்போது மாணவர் சங்கம் அமைக்கு மாறு அவர் எனக்கு ஆலோசனை கூறி னார். சிறு எண்ணிக்கையில் உள்ள மாண வர்களை வைத்து எப்படி சங்கம் துவங்க முடியும்? என்று அவரிடம் கேட்டேன். சங்க துவக்கத்தை விளம்பரப்படுத்த மாண வர்களுக்கான பொதுத் தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தலாம் என ஆலோ சனை கூறினார். போட்டியில் வெல்பவ ருக்கு பரிசுத்தொகையும் தரலாம் என கூறினார். அது குறித்த நோட்டீசை கல்லூரி வாயில்களில் ஒட்டி விட்டு வந்தேன். திருச்சி தமிழ் சங்க கட்டடத்தில் நடத்த பேச்சுப்போட்டியில் சுமார் 50 மாண வர்கள் பங்கேற்றனர்.
அந்த போட்டியில் மாணவர் வேலுச்சாமி முதல் பரிசு பெற்றார். இன்றும் வேலுச்சாமி அரசியல் அரங்கில் பணியாற்றி வருகிறார். மாணவர்களை ஈர்க்கும் வகையில் சங்கப் பணிகளை நடத்துவதற்கு அவர் அற்புதமான வழிகாட்டுதலை தந்தார். ஜமால் முகமது கல்லூரி மாணவர்களுக்காக உண்ணாவிரதம் திருச்சி ஜமால் முகமது கல்லூரி யில் இளங்கலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பழிவாங்கப் பட்டனர்.அதனை எதிர்த்து அப்துல் ரகுமான் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்துல் ரகுமான் பி.ஆர்.சி., நடத்திய வகுப்பில் பங்கேற்றவர். உண்ணாவிரதச் செய்தி பத்திரிகைகளில் விரிவாக வெளியானது. இரவு நேரத்தில் மாணவர்களை பாது காக்க சுப்ரமணியபுரம் பகுதியில் இருந்த தோழர்கள் லாந்தர் விளக்குடன் உண்ணா விரதப் பந்தலுக்கு வந்தனர். தோழர் பி.ஆர்.சி அறிவுறுத்தலின் பேரில் வந்த தாக அந்த தோழர்கள் கூறினர்.
பிறகு கல்லூரி நிர்வாகம் நாடாளுமன்ற உறுப்பி னர் அனந்தநம்பியாருடன் தொடர்பு கொண்டு மாணவர் பிரச்சனைக்கு சுமூக மாகத் தீர்வு கண்டது. மாணவர் சம்மேளன மாநாட்டுக்கு... 1968 ஆம் ஆண்டு மதுரையில் தமிழ் நாடு மாணவர் சம்மேளன துவக்க மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு பிரதிநிதி களாக செல்ல நிதித் தேவை பிரச்சனை யாக இருந்தது. திருச்சி நகரில் தனியார் பேருந்து நிர்வாகம் நடத்தி வந்த சோம சுந்தரம் ரெட்டியாரை அணுகுமாறு பி.ஆர்.சி., ஆலோசனை வழங்கினார். மதுரை மாநாட்டுக்குச் செல்லும் மாண வர்களின் பெயரை எழுதிக்கொண்டு வா என அவர் கூறினார்.மறுதினம் அவரிடம் சென்று மாணவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் காகிதத்தை கொடுத்தேன்.
அந்த காகிதத்தின் கீழே “இவர்களை மதுரைக்கு அழைத்துச் சென்று மீண்டும் திருச்சிக்கு வர ஏற்பாடு செய்ய வும்” என்று எழுதி கையொப்பம் இட்டுத் தந்தார். அக்கடிதம் மூலம் மாநாட்டுக்கு இலவசப் பயணமாக மதுரை வந்து திருச்சி திரும்பினோம். சோமசுந்தரம் ரெட்டியார் தலைவர் பி.ராமமூர்த்திக்கு நெருங்கிய நண்பர் என்பதை தோழர் பி.ஆர்.சி., பிறகு என்னிடம் கூறினார். 1969 ஆம் ஆண்டில் மாநில அளவிலான மாணவர்க ளுக்கான அரசியல் பயிற்சி முகாம் வைகை அணை வளாகத்தில் நடைபெற்றது. அதில் தலைவர்கள் எம்.ஆர்.வெங்கட் ராமன், ஏ.பாலசுப்ரமணியம், பி.ஆர்.சி., என்.சங்கரய்யா, ஆர்.ராமராஜ், ஏ.அப்துல் வஹாப் ஆகியோர் பங்கேற்றனர். தொழிலாளர் கூட்டத்தில் பேச... கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது புதுக்கோட்டை அருகில் இருந்த காவேரி மில் தொழிலாளர் கூட்டத்தில் பேச என்னை அனுப்பி வைத்தார். மறுதினம் கல்லூரி முதல்வர் அறையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.
நேற்று நீ எங்கே போய் இருந்தாய் என கல்லூரி முதல்வர் கேட்டார். விவரத்தை தெரிவித்தேன். படிக் கின்ற வேலையை மட்டும் பார் என்று என்னை அவர் எச்சரித்தார். தோழர் பி.ஆர்.சியிடம் இந்த விவரத்தை கூறிய போது “இந்த வயதிலேயே நீ போலீஸ் வளையத்திற்குள் வந்து விட்டாய்” என்று கூறினார். அன்று திருச்சி மாவட்டம் என்பது புதுக்கோட்டை, கரூர், பெரம்ப லூர், அரியலூர் என பரந்த பகுதிகளை உள்ளடக்கியது. பல இடங்களுக்கும் மாணவர் சங்கப்பணிக்காக அவர் என்னை அனுப்பி வைப்பார். இளைஞர் முழக்கமும் மைதிலி பாராட்டிய நாடகமும் மாணவர் சங்கப்பணிகளுக்குப் பிறகு வாலிபர் சங்க பணிகளை எனக்கு அவர் தந்தார். திருச்சி தேவர் மன்றத்தில் சோசலிஸ்ட் இளைஞர் முன்னணி என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் இளைஞர் முழக்கம் என்ற பெயரில் மாத இதழும் வெளியிடப்பட்டது. மாநாட்டில் கம்யூனிச சித்தாந்தத்தை கருப்பொருளாக வைத்து ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதற்கான நிதியை பிரபல பல் மருத்துவர் சிற்றம்பலம் தந்து உதவினார். அந்த நாடகத்தில் நான், கே.வி.எஸ்.இந்துராஜ், ரேடியோ பாலன், பி.ஆர்.சியின் மூத்த மகன் கோபிநாத் உள்ளிட்டோர் நடித்தோம். மாநாட்டில் பங்கேற்ற மைதிலி சிவராமன் நாட கத்தை பார்த்து பாராட்டினார். தோழர் பி.ஆர்.சி மாவட்டச் செயலா ளராக இருந்த போது 1970 வாக்கில் தோழர் கே.வரதராசன் நெல்லையில் இருந்து அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு திருச்சி வந்தார்.
தோழர் பி.ஆர்.சி-க்கு வலதுகரமாக இருந்து கட்சிப்பணிகளை ஆர்வமுடன் செய்தார். அவர்கள் இரு வரும் ஆலோசனை நடத்தி என்னை பொன் மலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டிஆர்இயு தொழிற்சங்கத்தின் தொழி லரசு பத்திரிகையின் பணி எனக்கு தரப்பட்டது. தோழர் கே.வி., அவர்களுடன் ஒரு ஐந்து ஆண்டு காலம் திருச்சி நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நடந்த களப்பணி களில் நானும் பங்கேற்றேன். 1973 ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தல் பணிக்கு கே.வி., அவர்களுடன் இணை ந்து பணியாற்ற பி.ஆர்.சி. என்னை அனுப்பி வைத்தார். அனந்தநம்பியாருக்குக்காக மேடைப் பேச்சு... 1974 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு ரயில்வே தொ ழிற்சங்கப்பணிகள் தீவிரமடைந்தன. அப்போது நடந்த தொழிற்சாலை வாயிற் கூட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் பேசும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. தோழர் அனந்தநம்பியார் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதால் அவரால் அதிக நேரம் பேச முடியாது. நான் பேச நினைப்பதை யெல்லாம் தோழர் பரமேசுவரன் பேசு வார் என்று கூறி மேடையில் கடைசி வரை அமர்ந்திருப்பார். தொழிற்சாலை வாயிற் கூட்டங்களில் திரண்ட தொழிலா ளர் கூட்டங்கள் எனக்கு புதிய உற்சா கத்தை தந்தன. தோழர் பி.ஆர்.சி., என்னை சரியான இடத்திற்குத்தான் அனுப்பி வைத்தார் என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.
பெல் (BHEL) நிறுவனம் திருச்சியில் உருவான போது சிஐடியு சங்கத்தை அமைப்பதில் தோழர் பி.ஆர்.சி., தனிக் கவனம் செலுத்தினார். சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பிலும் தொழிற்சாலை வாயிற்கூட்டங்களிலும் சிஐடியு மீது எதிர்த்தரப்பினர் தரக்குறைவான வார்த் தைகளைப் பயன்படுத்துவார்கள். தோழர்கள் உமாநாத், அனந்தநம்பி யார், பி.ஆர்.சி., வி.பி.சிந்தன் ஆகியோர் பெயர்களைக் குறிப் பிட்டு “தொழிற்சங்கம் நடத்துவதற்கு உங்களுக்கு ஒரு தமிழன் கூட கிடைக்கவில்லையா” என கேலி பேசுவார்கள். அதற்கு பதிலளிக்கும் தொழிற்சாலை வாயிற்கூட்டங்களுக்கு பி.ஆர்.சி என்னை அனுப்பி வைப்பார். அனந்த நம்பியாரும், உமாநாத்தும், வி.பி.சிந்தனும் தமிழக தொழிலாளர்களுக்காக அடிபட்டு மிதிபட்டு ரத்தம் சிந்தியதை எழுச்சியோடு கூறுவேன். மறுநாள் பி.ஆர்.சி தொலைபேசியில் அழைத்து எனக்கு பாராட்டுத் தெரிவிப்பார். தீக்கதிருக்கு அனுப்பி வைத்த கே.வி அவசரநிலைக் காலத்தில் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப் பட்டது. தோழர்கள் பி.ஆர்.சி-யும், கே. வரதராசனும் தலைமறைவாகச் சென்ற னர். நான் கைதாகி சிறை சென்றேன். தலை மறைவு காலத்தில் பல ரகசியக் கூட்டங்க ளை நடத்தி சிறந்த ஊழியர்களை உரு வாக்கிய பெருமை பி.ஆர்.சி., கே.வி., ஆகியோருக்கு உண்டு. அவசரநிலை காலத்திற்கு பிறகு நடந்த கட்சி மாநாட்டில் மாவட்டச் செயலாளராக கே. வரதராசன் தேர்வு செய்யப்பட்டார். நான் மாவட்டக்குழுவில் இணைக்கப்பட்டேன் பொன்மலையில் பணியாற்றி வந்த என்னை, 1978 ஆம் ஆண்டு “தீக்கதிர் பணிக்கு மதுரைக்கு போடா” என்று தோழர் கே.வி., அனுப்பி வைத்தார்.
அண்மையில் தமுக்கம் அரங்கில் நடந்த அகில இந்திய மாநாட்டில் பாரதி புத்தகாலய அரங்கு திறப்பு நிகழ்ச்சியில் மகிழ்வோடு பங்கேற்றேன். 53 ஆண்டுக ளுக்கு முன்பு 1972 இல் தமுக்கத்தில் நடந்த கட்சியின் அகில இந்திய மாநாட்டு க்கு தோழர் பி.ஆர்.சி., என்னை தொண்ட ராக அனுப்பி வைத்தது அப்போது நினை வுக்கு வந்தது. கரூரில் கேரள முதல்வர் இ.கே.நாயனார் பங்கேற்ற கூட்டத்தில் மொழிபெயர்ப்புப் பணிக்காக சென்றி ருந்தேன். அப்போது நாயனார் அவர்களி டம் பி.ஆர்.சி “இவனை நான் தான் கட்சிக்கு கொண்டு வந்தேன்” என்று கூறியதை கேட்டதும் எனக்கு பரவசம் ஏற்பட்டது. தனது சுய சரிதை நூலிலும் பி.ஆர்.சி., என்னை கட்சிக்கு கொண்டு வந்த நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். தோழர் பி.ஆர்.சி., அவர்களின் ஆழ்ந்த மார்க்சிய ஞானமும், மலர்ந்த முகமும், பாச உணர்வும் தோழ மையும், எளிமையும் கட்சி ஊழியர்க ளுக்கு என்றும் புத்துணர்வைத் தரும்.
