தீக்கதிரின் நீண்டகால பொது மேலாளர்! தோழர் ஏ.அப்துல் வகாப்
1938இல் மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்தவர். உத்தம பாளையத்தில் மாணவர் சங்கம் அமைத்திட காரணமானவர்களில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இளம் வயதிலேயே இணைந்து செயல்பட்டவர். கட்சி யின் பத்திரிகையான ‘ஜனசக்தி’யில் பணியாற்றியவர். பின்னர் கட்சியின் கேரள மாநிலக்குழுவின் வேண்டுகோளின் பேரில் இடுக்கி மாவட்டம் சென்று அங்கு தமிழ் மக்களிடையே - குறிப்பாக தோட்டப் பகுதியில் பணியாற்றியவர். 1963இல் கட்சியில் கருத்து வேறுபாடு தீவிரமான போது தேசியக் கவுன்சிலில் இருந்து வெளி யேறிய 32 தோழர்களின் முடிவைப் பின்பற்ற கையொப்ப மிட்ட 52 தமிழக தோழர்களில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது பேரில் இவரும் ஒருவர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவிலும் மாநில செயற்குழுவிலும் பணியாற்றியவர். கட்சியின் ஏடான தீக்கதிரில் பொது மேலாளராக நீண்டகாலம் பணியாற்றியவர். முதுமைக் காலத்தில் கட்சியின் மதுரை மாவட்டக் குழுவிலும் பின்னர் தேனி மாவட்டக் குழு விலும் செயல்பட்டவர். சோவியத் யூனியனுக்கு சென்று வந்தவர். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் ஷரியத் சட்டப் பிரச்சனை வந்த போது, ஷாபானுவும் ஷரியத் சட்டமும் எனும் பிரசுரம் எழுதியவர். வாழ்நாள் இறுதி வரையில் கட்சியோடு இணைந்திருந்தவர். அமைதியான அழுத்தமான தோழர் ஏ.அப்துல் வகாப். இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தவர்.
