articles

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! - சாமி. நடராஜன்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!  

“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்  உழந்தும் உழவே தலை”  என்ற வள்ளுவரின் குறள், உலகம் முழுவதும் பல  தொழில்கள்  செய்து இயங்கி வந்தாலும், உழவுத்தொழில்தான் அடிப்படை யானது என்பதை வலியுறுத்துகிறது. உலகம் முழுவதும் வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் உழவர்கள், தங்களுடைய வேளாண் பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில், அறுவடைத் திருநாள் என்ற வகையில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.  இந்தியாவில் குளிர்காலத்தின் இறுதியில், வசந்த காலத்தின் தொடக்கத்தில், அறுவடை மாதத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இவ்விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் மகர சங்ராந்தி என்றும், பீகாரில் சாட் என்றும் அசாம் மாநிலத்தில் போகாலி பிகு (Bihu) என்றும், ஏனைய வட இந்திய மாநிலங்களில் லோரி (Lohri) என்ற பெயரிலும் இவ்விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  ஆடிப்பட்டம் துவங்கி... தமிழ்நாட்டில் வேத காலங்களுக்கு முன்பிருந்தே பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பொங்கல், பழமையான ஒரு பண்பாட்டு விழாவாகும். ஆடிப் பட்டத்தில் பயிர் செய்து, தை மாதத் தொடக்கத்தில் அறுவடை செய்யும் வகையில் உழவர்கள் இதைக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த விழா எந்த மதம் சார்ந்த விழாவாகவும் கொண்டாடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் காலம் காலமாக வேளாண்மைக்கு உதவும் இயற்கைக்கும், உழவர்களின் உழைப்போடு இணைந்து உழைக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.  சங்க இலக்கியங்களில் தைப்பொங்கலின் சிறப்புகள் குறித்துப் பாடப்பட்டுள்ளது: “தைஇத் திங்கள் தன்கயம் படியும்” - நற்றிணை  “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” - குறுந்தொகை  “தைஇத் திங்கள் தன்கயம் போல்” - புறநானூறு பண்பாட்டை அழிக்க முயற்சி நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் அடையாளங்களை அழித்து, ஒற்றைக் கலாச்சாரத்தையும், ஒரு மொழி ஆதிக்கத்தையும் நிறுவுவதற்கான செயல்திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலோடு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் வழிபாட்டுத் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளில் இந்து மதக் கோட்பாடுகளைத் திணிப்பதற்கு கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  குறிப்பாக, தமிழ்நாட்டில் அமைந்துள்ள மலைக் கோவில்களில் காலம் காலமாக கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றும் முறையைத் தமிழ் மக்கள் பின்பற்றி வருகின்றனர். இந்த ஆண்டு மதுரை திருப்பரங்குன்றத்தில், வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்திற்குப் பதிலாக, வேறு பயன்பாட்டிற்கு இருந்த கல் தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் எனத் தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்று, அதைச் செயல்படுத்திக் கலவரத்தைத் தூண்டிட பாஜக மற்றும் மதவாத அமைப்புகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டன. தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் இத்தகைய முயற்சியைத் தடுத்துள்ளது. பல்வேறு ஜனநாயக அமைப்புகளும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்கும் அரசியல் கட்சிகளும் களத்தில் நின்று பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கலவரத் திட்டத்தைத் தடுத்து வருகின்றனர்.  மோடிக்கு தார்மீக உரிமை உள்ளதா? தமிழர்களின் பண்பாட்டுடன் இணைந்துள்ள தமிழ்க் கடவுளான முருகனை, இந்து மதத்தின் அடையாளமாக மாற்றி, அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற்றிட பாஜக முயற்சிக்கிறது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா திருச்சி ஸ்ரீரங்கத்தில் பொங்கல் விழாவில் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடி தில்லியில் பொங்கல் கொண்டாடி தமிழ் மக்களை, கள்ள உள்ளத்தோடு வாழ்த்தியுள்ளார். தேர்தல் ஆதாய நோக்கத்தோடு தமிழின் பெருமைகளைப் பேசியுள்ளார். ஆனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றி, விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளி வரும் மோடிக்கு, விவசாயிகளின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையில் பங்கேற்பதற்கான தார்மீக உரிமை உள்ளதா என்று அவரிடம் தமிழ்நாட்டு விவசாயிகள் கேள்வி எழுப்ப வேண்டும். திடீர்ப் பாசம்; தேர்தல் வேசம் மின்சாரத் திருத்தச் சட்டம் 2025 கொண்டு வந்து, தமிழ்நாட்டில் 23 லட்சம் மின்மோட்டார்கள் மூலம் கட்டணமில்லா மின்சாரத்தைப் பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையைப் பறித்து, ‘இனி ஒரு யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தி னாலும் கட்டணம் செலுத்த வேண்டும்’ என்ற நிலையை உருவாக்கியுள்ள மோடி, எப்படி விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியும்? விவசாயிகளின் உரிமைகளைப் பறித்து, உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலையைக் கொடுக்காத ஒன்றிய அரசு மற்றும் பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் திடீர் பாசம் வந்தவர் போல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக வேடம் போடுகின்றனர் என்பதைத் தமிழ்நாட்டு மக்களும் விவசாயிகளும் நன்கு உணர்ந்துள்ளனர். ஒன்றிய அரசின் விவசாய விரோத, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை எதிர்த்து முறியடிக்கும் வகையில், இந்தத் தைத்திருநாளில் உறுதி ஏற்போம். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்குக் கட்டுப்படியான விலையைப் பெறுவதற்கும், விளைநிலங்கள் பறிபோவதைத் தடுப்பதற்கும், கிராமப்புற உழைக்கும் மக்களாக உள்ள அனைத்துப் பகுதி விவசாயிகளையும் ஒன்று திரட்டுவோம். தமிழ்நாட்டின் அடையாளமாகவும், இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவாகவும், தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் போற்றும் வகையிலும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, தமிழ்நாட்டில் எந்த மத அடையாளமும் இல்லாமல் இதுவரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதிலும் தங்களின் இந்துத்துவா சூழ்ச்சிகளை கட்டமைக்கத்  துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் திட்டத்தை முறியடித்து, “மக்கள் ஒற்றுமைப் பொங்கலை”க் கொண்டாடுவோம். “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற பாரதியின் வரிகளை ஏந்தி அறுவடைத் திருநாளைக் கொண்டாடுவோம்!