articles

பொருளாதார வளர்ச்சியும் சமூக நீதியும்: தமிழகத்தின் பயணமும் சவால்களும்! - த. உதயச்சந்திரன்

பொருளாதார வளர்ச்சியும் சமூக நீதியும்: தமிழகத்தின் பயணமும் சவால்களும்!

ஒரு சமூகம் என்பது சிந்தனையாளர் களால் வழிநடத்தப்படுகிறது. பொருளா தாரத்தைப் பொறுத்தவரை ஆடம் ஸ்மித் முதல் காரல் மார்க்ஸ் வரை சில அறிஞர்கள் தான் இந்த உலகை வழிநடத்துகிறார்கள். ஆனால், அந்தச் சிந்தனைகளை உள்வாங்கிச் செயல்படுத்தும் எங்களைப் போன்ற அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும்போதுதான் ஒரு சமூகம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது. தற்போதைய காலத்தில் இதற்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. சிந்தனையாளர்கள் (Thinkers), செயலாக்கம் செய்பவர்கள் (Executive) மற்றும் குடிமைச் சமூக அமைப்பு கள் (Civil Society Organizations) ஆகிய மூன்றும் இணையும் புள்ளியில் அந்தச் சமூகம்  முதிர்ச்சியடைகிறது. அந்த வகையில் சிந்தனை யாளர்களுக்கும், செயலாக்கும் நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கும், களச் செயல்பாட்டாளர் களுக்கும் இடையிலான உரையாடல் மிக முக்கிய மானது. ஒரு செய்தித்தாளிலிருந்து பிறந்த ஒரு கோடி ரூபாய் காப்பீட்டுத் திட்டம் நிதித்துறையில் இருக்கும்போது பல திட்டங்களை உருவாக்குவதற்கான நிதி ஆதா ரங்களை முன்னுரிமைப்படுத்துவது என்பது ஒரு சவாலான காரியம். பல நேரங்களில் ஒரு சிறிய செய்தித் துணுக்கு கூட ஒரு மிகப்பெரிய திட்டத்திற்குப் பொறியாக அமையும். அதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன். சேலத்தில் பணியாற்றி மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் அவர்களின் மனைவி, அரசு அறிவித்த நிதி கிடைக்கவில்லை என்று செய்தித் தாள் ஒன்றில் குற்றம் சாட்டியிருந்தார். அரசு பொதுவாகப் பாராட்டுச் செய்திகளைப் படிப்பதை விட, அரசுக்கு எதிரான செய்திகளைத் தான் கூர்ந்து கவனிக்கும். அந்தச் செய்தி என்னை மிகவும் உறுத்தியது. மருத்துவக் கல்வி இயக்குநர் அதுபோன்ற வாக்குறுதியைத் தரவில்லை என்பதும், மருத்து வர்களாகச் சேர்ந்து ஒரு தொகுப்பு நிதியை ஏற் படுத்திக் கொடுத்ததும் எங்களுக்குப் புரிந்தது. ஆனால், இது ஏன் ஒரு நிரந்தரத் திட்டமாக மாறக்கூடாது என்று யோசித்தோம். அரசு ஊழி யர்களின் சம்பளக் கணக்கு (Salary Account) இருக்கும் வங்கிகளுடன் நீண்ட பேச்சுவார்த்தை களை நடத்தினோம். எங்களின் நிதி நிர்வாகத்தின் வலிமையை அவர்களுக்கு உணர்த்தினோம். ஆண்டுக்கு சுமார் 92,000 கோடி ரூபாய் சம்பள மாகப் பட்டுவாடா செய்யப்படுகிறது. அதில் பெரும் பகுதி குறிப்பிட்ட ஒரு பெரிய வங்கியில் புழங்குகிறது. ஒவ்வொரு வங்கியாளராகத் தனித்தனியே அழைத்து, ‘சாணக்கிய’ நீதியையும் சற்றே  தந்திரங்களையும் பயன்படுத்தி உரையாடி னோம். அதன் விளைவாகவே, இந்தியாவில் முதல் முறையாகத் தமிழகத்தில் ஒரு புதிய திட்டம் உருவானது. விபத்தில் அரசு ஊழியர் மரணமடைந்தால் ஒரு கோடி ரூபாய், இயற்கை மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் அவர் களது குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு நிதி உதவி என ஒரு விரிவான காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கினோம். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வங்கியின் உயர் அதிகாரிகளுக்கே அந்த வங்கியில் அத்தகைய காப்பீடு கிடையாது. இதில் நாங்கள் நிலைநாட்டிய சமூக நீதி மிக முக்கியமானது. ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி விபத்தில் இறந்தால் ஒரு கோடியும், கடைநிலை ஊழியர் இறந்தால் ஒரு லட்சமும் கொடுப்பது அரசின் நோக்கமல்ல. திருச்சியில் பணியாற்றிய வருவாய் கோட்டாட்சியர் தேவசேனா என்ற பெண்மணி விபத்தில் இறந்தபோது அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தது; அதே போல் ஒரு சத்துணவுப் பணியாளர் இறந்த போதும் அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. இதுதான் பொருளாதார மதிப்பிற்கும் (Economic Value) மனித கண்ணி யத்திற்கும் அரசு அளிக்கும் மரியாதையாக இருக்க வேண்டும். அதைச் செய்தோம். பசிப்பிணி போக்கும் தமிழகத்தின் மரபு தமிழகத்தில் மட்டும் ஏன் இத்தனை நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன என்பதற்கு ‘காலை உணவுத் திட்டம்’ ஒரு சிறந்த உதாரணம். இத்திட்டத்திற்கான அரசாணையை முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்தபோது நான் வரைந்தேன். அதன் முதல் வரியே சங்க இலக்கியப் பாடலான “பசிப்பிணி போக்கும் மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறுமின்” என்பதில் இருந்துதான் தொடங்கியது. கொள்கைகளின் நிறம் மாறினாலும், மக்களின் பசியைப் போக்குவது என்பதில் தமிழகத் தலைவர்கள் அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறார்கள். நீதிக்கட்சி காலத்தில் மதிய உணவுத் திட்டம் சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்டபோது, தணிக்கைத் துறையின் ஆட்சேபனையால் அது நிறுத்தப்பட்டது. பின்னர் காமராஜர் அவர்கள் அதனை மீண்டும் கொண்டு வந்தபோது அதிகார  வர்க்கம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் தனது  கூர்ந்த மதியால் அந்தத் தடைகளை உடைத்தார். அதேபோல், எம்.ஜி.ஆர் அவர்கள் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தபோது, அப்போதைய தலைமைச் செயலாளர் கே.திரவியம் அவர்கள் திங்கள் முதல் சனி வரை எவ்வளவு செலவாகும் என்று விரிவான அறிக்கையை விளக்கி னார். அதைக் கூர்ந்து கேட்ட முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் கேட்ட ஒரே கேள்வி, “குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பசிக்காதா?” என்பதுதான். அந்த ஒரு கேள்வி திட்டத்தையே மாற்றியமைத்தது. இன்று காலை உணவுத் திட்டம் வரும்போதும் பல வாதங்கள் வந்தன. ஆனால், முதலமைச்சரின் முழுமை யான ஆதரவினால் அது சாத்தியமானது. வறுமையின் நிறமும் கிராமப்புற மாற்றமும் வறுமை என்பது இன்று பல பரிமாணங் களைக் கொண்டது. 12 வருடங்களுக்கு முன்னால் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றபோது, அவர்கள் சொன்ன ஒரு செய்தி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தந்தையை இழந்த குழந்தையை விட, தாயை இழந்த குழந்தைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்கள். ஏனெனில், தந்தை இல்லாத குழந்தையைத் தாய் எப்படியாவது வளர்த்து விடுவார்; ஆனால் தாய் இல்லாத குழந்தை அநேக மாக மாற்றாந்தாய் இடம் அல்லது பாதுகாப்பற்ற சூழலுக்குச் சென்றுவிடும். இதுபோன்ற நுணுக்கமான குறியீடுகள் தான் இன்று ‘பன்முக வறுமை குறியீட்டில்’ (Multidimensional Poverty Index) பயன்படுத்தப்படுகின்றன. கிராமப்புற மேம்பாட்டிலும் ஒரு மாற்றத்தைச் செய்தோம். கிராம ஊராட்சியை (Village Panchayat) ஒரு அலகாகப் பார்க்காமல், ஒரு ‘குடி யிருப்பு’ (Habitation) பகுதியை அலகாகக் கொண்டு நிதி ஒதுக்கினோம். தமிழகத்தில் 12,835 ஊராட்சிகள் இருந்தாலும், சுமார் 85,000  குடியிருப்புகள் உள்ளன. விழுப்புரம் போன்ற  மாவட்டங்களில் ஒரு ஊராட்சிக்கு 2 குடியிருப்பு கள் இருக்கும், ஆனால் ஈரோட்டில் 17 இருக்கும். அனைவருக்கும் சமமாக நிதி ஒதுக்கினால் அது நீதியாக இருக்காது. இதனால்தான் குடியிருப்புகளை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்கினோம். இதன் பலனாகவே, கரூரில் உள்ள ஒரு நரிக்குறவர் காலனிக்கு முதல் முறையாகக் குடிநீரும் மின்சாரமும் கிடைத்தது. பெண்களின் கண்ணியமும் பொருளாதார மேம்பாடும் மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவசப் பேருந்து பயணம் குறித்துச் சில எதிர்மறை விமர்சனங்கள் எழுகின்றன. லண்டன் கிங்ஸ்  காலேஜ் ஆய்வாளர்கள் இங்கு வந்து இத்திட்டங்கள் பற்றி  நடத்திய ஆய்வில் ஒரு முக்கியமான அம்சம் வெளிப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை என்பது வெறும் பணமல்ல; அது அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம். 15-ஆம் தேதி அந்தப் பணம் வங்கியில் சேரும்போது அந்தத் தாய்மார்கள் அடையும் மகிழ்ச்சி அளப்பரியது. அதேபோல், இலவசப் பேருந்து பயணம் பெண்களின் கண்ணியம் (Dignity) சார்ந்தது. தனது பிறந்த வீட்டிற்குச் செல்வதற்குக் கூடக் கணவனிடம் காசு கேட்டு அனுமதி வாங்க வேண்டிய நிலையில் இருந்த ஒரு சமூகத்தில், இந்தப் பேருந்து பயணம் ஒரு பெண்ணுக்குத் தரும் சுதந்திரம் மிகப்பெரியது. இதை ‘இலவசம்’ என்று விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை; பயனாளி தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். உலகெங்கிலும் பொதுப்  போக்குவரத்து மானியத்தில்தான் இயங்குகிறது. 100 வருடங்கள் கடந்த லண்டன் டியூப் முதல் நியூயார்க் மெட்ரோ வரை அனைத்தும் மானியம்  பெறுபவைதான். சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கு நாம் 62,000 கோடி  ரூபாய் செலவு செய்கிறோம். அப்படியிருக்கை யில் ஏழை எளிய மக்களுக்கான பேருந்துப் பயணத்திற்கு மானியம் அளிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? தமிழகத்தின் எதிர்காலச் சவால்கள் தமிழகம் தற்போது ஒரு முக்கியமான மக்கள் தொகையியல் மாற்றத்தை (Demographic Shift) எதிர்கொள்கிறது. பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது, அதே சமயம் மக்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்து வருகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகை குறையத் தொடங்கும். முதியவர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நமக்குக் கிடைத்துள்ள இந்த 10 ஆண்டு கால வாய்ப்பை (Window of opportunity) நாம் மிகச் சரியாகப்  பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் தீவிர மாக உழைத்துப் பொருளாதார வளர்ச்சியை எட்டி னால் மட்டுமே ‘நடுத்தர வருமானப் பொறியில்’ (Middle Income Trap) இருந்து தப்ப முடியும். குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. வளர்ச்சியைப் பேசும் அதே வேளையில், பண்பாட்டையும் அறிவையும் நாம் பேண வேண்டும். டிஜிட்டல் யுகத்தில் நூலகங்கள் தேவையா என்று சிலர் கேட்கிறார்கள். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு 20 லட்சம் மக்கள் வந்து சென்றிருக்கிறார்கள்; கீழடி அருங்காட்சியகத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வருகிறார்கள். இதிலிருந்தே புரிகிறது, நம் சமூகம் அறிவை நோக்கித் துடிக்கிறது என்பது. ஒரு சமூகம் முதிர்ச்சியடைய வேண்டு மெனில் அந்தச் சமூகத்தில் உரையாடல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். விவாதங்களும், சிந்தனைகளும், செயல்பாடு களும் இணைந்து செயல்படும்போது மட்டுமே நாம் விரும்பும் ஒரு மேன்மையான தமிழகத்தை உருவாக்க முடியும். தமிழ்நாடு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய ‘மாற்றத்தின் பாதையில் தமிழ்நாடு’ (Tamil Nadu  in Transition) எனும் நூல் வெளியீட்டு விழா 2026 ஜனவரி 5 அன்று சென்னையில் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.உதயச்சந்திரன் ஆற்றிய உரையின் பகுதிகள்.