articles

img

முதலாளித்துவப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும் - ச.லெனின்

முதலாளித்துவப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும் 

புரட்சிகரமான எழுத்துக்களைப் பரவலாக எடுத்துச்செல்லவும் இன்றைய புறச்சூழ லில் முற்போக்குக் கருத்தாக்கத்தை வெகு மக்கள் மத்தியில் விதைத்திடவும் சிவப்புப் புத்தக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 1848இல் மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியி டப்பட்ட பிப்ரவரி 21 ஆம் தேதி ‘சிவப்புப் புத்தக தின’ மாக உலகம் முழுவதும் சர்வதேச இடதுசாரி வெளி யீட்டகங்களால் கடந்த 2020ஆம் ஆண்டு அறி விக்கப்பட்டது. இந்த ஆண்டு மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ எனும் நூல் வாசிக்கப்படு கிறது. இந்நூலை ‘தொழிலாளர்கள் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் அவா’ என்று அந் நூலின் தொடக்கத்திலேயே மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

‘கூலி உழைப்பும் மூலதனமும்’ எனும் மார்க்சின் இந்நூல் 1849 ஏப்ரல் மாதம் முதன்முதலாக வெளி யிடப்பட்டது. ஏங்கெல்சின் பங்களிப்பில் ‘தேவைப் படும் சில மாற்றங்களையும் கூடுதல் விவரங்களையும் சேர்த்து’ ஒரு பிரச்சார நோக்கத்திற்காக 1891இல் மீண்டும் அச்சிடப்பட்டது. அதன்பொருட்டே அதில் மாற்றங்கள் மற்றும் விவரச் சேர்ப்பை ஏங்கெல்ஸ் மேற்கொண்டார். இடைப்பட்ட அக்காலத்தில் பல பதிப்புகள் வெளிவந்திருந்தாலும் தனித்த பிரச்சார வெளியீடாக சுமார் பத்தாயிரம் பிரதிகள் அச்சிடப் படவிருந்த நிலையில் ஏங்கெல்ஸ் இந்த மாற்றங்க ளை மேற்கொண்டார். அதற்கான நியாயத்தையும் முன்னுரையில் அவர் குறிப்பிடுகிறார். ‘மாற்றங்க ளையும் கூடுதல் விவரங்களையும் இந்தப் பதிப்பில் நான் சேர்க்கும்போது, மார்க்சின் மனநிலையிலி ருந்தே செயல்படுகிறேன். இந்தப் பிரசுரம் 1849இல் மார்க்ஸ் எழுதியது போன்று இல்லை. ஆனால், 1891இல் மார்க்ஸ் எப்படி எழுதியிருப்பாரோ ஏறத்தாழ அதே போன்று இருக்கிறது’ என்கிறார் ஏங்கெல்ஸ். இவ்வாறு சொல்வதற்கான முழு உரிமையும் ஏங்கெல்சுக்கு உள்ளதை அறிவுலகம் நிச்சயம் ஏற்கும்.

உழைப்புச் சக்தியை விற்கிறார்

1849 காலகட்டத்தில், தொழிலாளி தனது ‘உழைப்பை விற்கிறார்’ என்று உள்ளது. இது, தொழிலாளி தனது ‘உழைப்பு சக்தியை விற்கிறார்’ என்று 1891இல் வெளியான பதிப்பில் மாற்றப்பட்டது. 1848இல் வெளியான ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யிலும் உழைப்பை விற்கிறார் என்றே உள்ளது. 1859இல் வெளியான ‘அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு கருத்துரை’ மற்றும் ‘மூலதனம்’ எனும் மார்க்சின் படைப்புகளில்தான் ‘உழைப்பு சக்தியை விற்கிறார்’ என்று மாற்றம் பெறுகிறது. அதன் பிறகு அச்சிடப் பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் வெளியான பதிப்பு களில்தான் ‘உழைப்பு சக்தியை விற்கிறார்’ என்கிற அடிக்குறிப்பு சேர்க்கப்பட்டது. ‘உழைப்பை விற்கிறார்’, ’உழைப்பு சக்தியை விற்கிறார்’ என்பதை ‘வெறும் வார்த்தை விளையாட்டாகவோ, சொல் வித்தையா கவோ கூறவில்லை. மாறாக, அரசியல் பொருளாதாரம் முழுமைக்கும் மிகவும் இன்றியமையாத கருது கோள்களுள் ஒன்றைப் பற்றிப் பேசுகிறோம்’ என்று ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.

முதலாளித்துவ உலகில் தொழிலாளி, தனது உழைப்பு முழுமையையும் விற்பதில்லை. உழைப்பை விற்கிறார் என்று எடுத்துக்கொண்டால், தொழிலாளி முழுமையாக தன்னையே விற்றுவிட்டதற்கு ஒப்பாகும். அந்த வகையில் அதற்குமேல் அவரது உழைப்பே அவரது உடைமையாக இல்லாமல் போய்விடுகிறது. மாறாக உழைப்பு சக்தியை விற்கிறார் என்பது ஒரு தொழிலாளி, தன்னை முழுமையாக விற்பதாக அல்லாமல் ‘குறிப்பிட்ட கூலிக்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கோ ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்து முடிப்பதற்கோ தனது உழைப்பு சக்தியை விற் கிறார்’ என்று பொருள்படும்.

இன்றைய முதலாளித்துவச் சமூகத்தில் உழைப்பு சக்தி என்பது விற்கப்படும் ஒரு பொருளாக (சரக்காக) உள்ளது. விற்கப்படும் மற்ற பொருட்களைப்போல் அல்லாமல் அது புதிய மதிப்பை உருவாக்கும் சிறப்புக ளைக் கொண்டுள்ளது. உண்மையில் ‘தொழிலாளி வர்க்கம்தான் (அவர்களின் உழைப்பு சக்திதான்) அனைத்து மதிப்புகளையும் உற்பத்தி செய்கிறது.

கூலி அடிமை முறை

உழைப்பு சக்தி என்பது, ‘மனிதனின் சதையையும் ரத்தத்தையும் தவிர வேறு சேமிப்புக்கு இடம் இல்லாத தனித்துவம் கொண்ட’ பொருளாகும். அந்த உழைப்பு சக்தியை முதலாளியிடம் விற்று தொழிலா ளிக்குக் கிடைக்கப்பெறுவதையே கூலி என்கிறோம். இப்போது இருப்பதுபோன்று முந்தைய எல்லாக் காலத்திலும் உழைப்பு சக்தியை இவ்வாறு விற்பதற் கான சுதந்திரம் இருந்ததில்லை. அடிமைச் சமூகத்தில், ஒரு அடிமை தனது உழைப்பு சக்தியை மட்டும் விற்ப தற்கான சுதந்திரம் அவருக்கு இல்லாத நிலையில், தனது உடைமையாளரிடம் தன்னை முழுமையாக விற்கும் நிலையிலேயே அவர் இருக்க வைக்கப் பட்டார். அடிமை என்பவர் தன்னளவில் ஒரு விற்பனைப் பொருளாக உள்ளார். நவீன காலத்தில் தொழிலாளி தன்னை முழுமையாக விற்பதற்கு மாறாக தன்னு டைய உழைப்பு சக்தியை மட்டுமே விற்கிறார். அதற்கான கூலியைப் பெற்று தனது உழைப்பு சக்தியை மீட்டுருவாக்கம் செய்து கொள்கிறார். மீண்டும் தனது உழைப்பு சக்தியை விற்கவேண்டிய நிலையிலேயே அவர் உள்ளார். ‘தொழிலாளி, தொடர்ந்து தொழிலாளியாக இருக்கும் வகையில் அவரைப் பராமரிப்பதற்கு’ வழங்கப்படுவதே கூலியா கும். முந்தையது ‘அடிமை முறை’ எனில் இது ‘கூலி அடிமை முறை’ ஆகும்.

தொழிலாளியின் உழைப்பு சக்தியைக் கொண்டு ஏகத்துக்கும் பொருட்களை உற்பத்தி செய்து, முதலாளி லாபம் அடையும் அதேநேரம், தொழிலாளி யோ தனக்காக உற்பத்தி செய்துகொண்டது தனது வாழ்வாதாரத்துக்கான கூலியை மட்டுமே. ஆன போதும், முதலாளித்துவச் சமூகத்தில் தனது உழைப்பு சக்தியைக் கட்டாயம் விற்றே வாழ்வை நகர்த்தவேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். தொழிலாளி, ஒரு முதலாளிக்கோ ஒரு நில உடை மையாளருக்கோ உரியவராக இல்லாதபோதும் தனது உழைப்பு சக்தியை யாரேனும் ஒரு முதலாளிக்கு விற்றே ஆகவேண்டும். அதாவது, அடிமை முறையில் தனது உடைமையாளரிடமிருந்து அடிமை விலக முடியாது. அந்த உடைமையாளருக்கு உரியவராகவே அடிமை உள்ளார். இங்கு, தொழிலாளி ஒரு முதலா ளியிடமிருந்து விலகி வேறொரு முதலாளியிடம் வேலை க்குச் செல்ல முடியும். ஆனால், முதலாளித்துவ வர்க் கத்திடமிருந்து அவர் விலக முடியாது. தனி முதலா ளிக்கு உரியவராக அத்தொழிலாளி இல்லாதபோதும், முதலாளித்துவ வர்க்கத்திற்கே உரியவராக உள்ளார்.

தேய்மானத்தை ஈடுசெய்துகொள்ளும்

தொழிலாளருக்கு கொடுக்கப்படும் கூலி அவரது உழைப்பு சக்தியை ஈடேற்றுவதற்காக மட்டு மல்லாமல், அவரது குடும்பத்தைப் பராமரிக்கவும் சேர்த்தே வழங்கப்படுகிறது. இதற்கான உள்ள டக்கம் மிக எளிது. முதலாளித்துவம் தனது தொ ழிற்சாலையில் உற்பத்திக்குப் பயன்படுத்தும் உற்பத்தி சாதனத்துக்குத் தேய்மானம் என்று ஒரு பகுதியைத் தனது செலவுக் கணக்கில் சேர்த்துக் கொள்ளும். அதாவது, குறிப்பிட்ட காலத்தில் எந்தி ரத்துக்கு ஏற்படும் தேய்மானம் எனும் இழப்பைச் செலவில் வைத்துப் புதிய எந்திரம் வாங்குவதற்கான செலவின்போது ஈடு செய்துகொள்ளும். அதையே மனித சக்திக்குப் பொருத்தினால், தனக்கான அடுத்த தலைமுறை தொழிலாளிக்கான செலவையும் சேர்த்தே அது தொழிலாளிக்குக் கூலியாக கொடுக்கி றது எனலாம். ‘உழைப்பு சக்தியின் உற்பத்திச் செலவு என்பது தொழிலாளியின் வாழ்வாதாரத்துக்கும் இனப்பெருக்கத்துக்குமான செலவு ஆகும். இதற்கான செலவின் விலையே கூலி ஆகிறது.’

கூலி என்பது அவரது உழைப்பு சக்திக்கு ஈடாகக் கொடுக்கப்படுவதாக முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் சொன்னாலும், அது பொய்யான வாதம் என்பதை மார்க்ஸ் தனது ‘உபரி மதிப்பு’ எனும் கண்டு பிடிப்பின் மூலம் அம்பலப்படுத்தினார். தொழிலாளி யின் உழைப்பு சக்தி முதலாளிக்குப் பெற்றுத் தரும் ஆதாயத்தோடு ஒப்பிட்டால் தொழிலா ளிக்குக் கிடைக்கும் கூலி மிக சொற்பமானதே. கொ டுக்கப்படும் கூலிக்கு மேலாகத் தொழிலாளர்களி டமிருந்து பெறப்படும் கூடுதல் உழைப்பே உபரி உழைப்பாகும். அந்த உபரி உழைப்பின் வெளிப்பாடே உபரி மதிப்பை உருவாக்குகிறது. தொழிலாளர்களு க்குக் கொடுக்கப்படாத கூலியினால் உருவான அந்த உபரியே முதலாளிகளின் லாபம். இவ்வாறு ‘திரட்டி வைக்கப்பட்ட உழைப்பே மூலதனமாகும்.’ இதுவே புதிய உற்பத்திக்கான சாதனமாகிறது.

‘மூலதனத்துக்கு முன்தேவை கூலி உழைப்பு; கூலி உழைப்புக்கு முன்தேவை மூலதனம். ஒன்று மற்றதன் இருப்புக்குக் காரணமாகிறது’, ‘தற்போதுள்ள உழைப்பு சக்தியுடன் முதலாளித்துவம் பரிவர்த்தனை செய்துகொள்வதன் மூலம், மூலதனம் தன்னைப் பன்மடங்கு பெருக்கிக்கொள்கிறது’ என்பதை மார்க்ஸ் இந்நூலில் தெளிவுபடுத்துகிறார். ‘நாளுக்கு நாள் அதிகரிக்கும் இந்த மனித உழைப்பின் உற் பத்தித் திறன், இறுதியாக ஒரு மோதலுக்கு வழி வகுக்கிறது. இந்த மோதலில் இன்றைய முதலாளித்து வப் பொருளாதாரம் சிதைந்தழிந்தே தீரும்’ என்று அதை வழிமொழிகிறார் ஏங்கெல்ஸ்.