மக்கள் விரோத ஒன்றிய பட்ஜெட்; தமிழகத்தின் உரிமைப் போர்!
சென்னை, பிப். 19- தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை பங்கேற்று உரையாற்றினார். மக்கள் நலன், தொழிலாளர் உரிமை மற்றும் மாநில சுயாட்சி ஆகியவற்றை முன்னிறுத்தி அவர் ஆற்றிய உரையின் விரிவான விபரம் வருமாறு: காரல் மார்க்ஸ் சிலையும் நன்றியும் தனது உரையின் தொடக்கத்தில், வரலாற்றின் பக்கங்களில் சென்னைக்கு ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியமைக்காக முதலமைச்சருக்குச் சின்னதுரை தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். “உலக மாமேதை காரல் மார்க்ஸிற்குச் சென்னையில் ஒரு சிலை நிறுவப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட காலக் கோரிக்கையாகும். எமது கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் தற்போதைய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, முதலமைச்சர் அவர்கள் லண்டன் சென்றிருந்தபோது அங்கிருந்த சிலையினையே முன்மாதிரியாகக் கொண்டு, தத்ரூபமான சிலையினை சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் நிறுவியுள்ளார். இதனைத் திறந்து வைத்துச் சிறப்பித்த முதலமைச்சருக்கு, நானும் எனது சக தோழர் நாகை மாலியும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மகளிர் உரிமைத் திட்டமும் தொகுதி முன்னேற்றமும் தமிழக அரசின் சமூக நலத்திட்டங்களைப் பாராட்டிய அவர், குறிப்பாகக் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைப் பற்றிப் பேசுகையில், “தமிழகத்தின் 1.31 கோடி மகளிரின் கைகளில் மாதம் ரூ. 5,000 வழங்கி அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்திருக்கும் முதலமைச்சரின் செயல் பாராட்டுக்குரியது” என்றார். மேலும், தனது கந்தர்வக்கோட்டை தொகுதியில் நிலவிய நீண்ட நாள் கோரிக்கையான ஊராட்சியைப் பேரூராட்சியாகத் தரம் உயர்த்தியதற்கும், இளைஞர்களின் நலன் கருதி மினி ஸ்டேடியம் அமைத்துத் தந்த துணை முதலமைச்சருக்கும் தொகுதி மக்கள் சார்பாக நன்றிகளைப் பதிவு செய்தார். ஒன்றிய அரசின் வஞ்சகப் போக்கும் நிதிப் புறக்கணிப்பும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்துப் பேசியபோது சின்னதுரையின் குரலில் ஆவேசம் தெறித்தது. “சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், உழைக்கும் மக்களை வஞ்சித்துவிட்டுச் சில பெரும் வணிக நிறுவனங்களின் நலனை மட்டுமே பாதுகாக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்” என்று சாடினார். விவசாயத் துறையில் நிலவும் நெருக்கடிகளை உணராமல் உரம், உணவு மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியங்களை ஒன்றிய அரசு வெட்டியிருப்பது விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதல் என்று அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தின் உட்கட்டமைப்புத் திட்டங்களை முடக்கும் நோக்கில் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழைப் போற்றுவதாகக் கூறும் ஒன்றிய அரசு, கீழடி அகழ்வாய்வுப் பணிகளுக்கு ஒரு பைசா கூட ஒதுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஜிஎஸ்டி இழப்பீடாகத் தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ. 9,600 கோடியை நிறுத்தி வைத்திருப்பது, ஜல்ஜீவன் திட்டம், கல்வி மானியம், மற்றும் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதிகளை வழங்காமல் தமிழகத்தை வஞ்சிப்பது போன்ற செயல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று அவர் சாடினார். மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நிதியைப் பாரபட்சமின்றி விடுவிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான நிலைப்பாடு என்று அவர் முழங்கினார். மாநில பட்ஜெட்டிற்கு வரவேற்பு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில், வறுமையை ஒழிக்கும் இறுதிப் போர், பரவலான தொழில் வளர்ச்சி போன்ற இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதைச் சின்னதுரை வரவேற்றார். “இந்தத் திட்டங்களை நிதியமைச்சர் தனது உரையில் மிகுந்த அழகியலுடன் விவரித்தது பாராட்டுக்குரியது. தமிழகத்தின் இந்தத் தனித்துவமான முன்னேற்றப் பாதையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் துணை நிற்கும்” என்று உறுதி அளித்தார். மாற்றுத்திறனாளிகள் போராட்டமும் அரசின் விளக்கமும் மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகையை ரூ. 6,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை அவையின் கவனத்திற்குக் கொண்டு வந்த அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மீது காவல்துறை நடத்திய விதம் கண்டிக்கத்தக்கது என்றார். குறிப்பாகப் பெண் தலைவர் பா. ஜான்சிராணியை நடத்திய விதம் ஏற்புடையதல்ல என்று பதிவு செய்தார். இதற்குப் பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை இந்த அரசு கனிவோடு பரிசீலித்து வருவதாகவும், போராட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஜான்சிராணி தவறி விழுந்தாரே தவிர தாக்குதல் ஏதும் நடக்கவில்லை என்றும் விளக்கமளித்தார். மேலும், 2026-ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதே முதலமைச்சரின் முதல் கையெழுத்தாக இருக்கும் என்று அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். தொழிலாளர் மற்றும் ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள் தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டார் சின்னதுரை: போக்குவரத்துத் தொழிலாளர்கள்: 18 மாத கால நிலுவைத் தொகையை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த அவர், மீதமுள்ள ரூ. 360 கோடியையும் இரு தவணைகளில் வழங்கக் கோரினார். கௌரவ விரிவுரையாளர்கள்: இவர்களுக்கு 11 மாத ஊதியத்திற்குப் பதிலாக 12 மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பி.எஃப் மற்றும் இ.எஸ்.ஐ வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஆசிரியர்கள்: இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கைகளுக்குச் சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றார். அவுட்சோர்சிங் முறை: அரசின் அனைத்துத் துறைகளிலும் அவுட்சோர்சிங் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தொகுப்பூதியப் பணியாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதர பணியாளர்கள்: சாலைப் பணியாளர்களின் 41 மாத காலப் பணி நீக்கத்தைப் பணிக் காலமாக முறைப்படுத்த வேண்டும்; டாஸ்மாக் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தூய்மைப் பணியாளர்களுக்கு அரசாணையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அடுக்கினார். விவசாயம் மற்றும் சமூக மேம்பாடு விவசாயத் தொழிலாளர்களுக்கெனத் தனி நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அவர், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 விலையும், பாலுக்குக் கூடுதல் கொள்முதல் விலையும் வழங்கப்பட வேண்டும் என்றார். விவசாயிகளுக்கு 24 மணி நேரத் தடையற்ற மின்சாரம் வழங்குவதோடு, புதிய மின் இணைப்புகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 17 மாவட்டங்களில் விளையும் மக்காச்சோளத்தை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து விவசாயிகளைக் காக்க வேண்டும் என்றார். நில உரிமை குறித்துப் பேசுகையில், புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் குடியிருப்பவர்களுக்குப் பட்டா வழங்க சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கேட்ட அனைவருக்கும் கூடுதல் நிதி ஒதுக்கி வீடுகள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தின் 68 சமூகங்களுக்குத் தேவையான டி.என்.டி ஒற்றைச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும் என்றும், கூட்டுறவு வங்கிகளை இணைத்து ‘தமிழ்நாடு வங்கி’யை உருவாக்க வேண்டும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
